வலைப்பதிவும் வலைக்குறிப்பும்
by வெங்கட் • December 29, 2004 • அறிவியல்/நுட்பம் • 6 Comments
கடந்த சில நாட்களாகத் தமிழ் வலைக்குறிப்பு விக்கியைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இந்த நிலையில் நண்பர்களிடமிருந்து ஒரு சிறு பின்னூட்டம் தேவைப்படுகிறது. Blog என்ற சொல்லுக்கு இணையாகத் தமிழில் நான் ஆரம்பம் தொட்டே வலைக்குறிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்திவருகிறேன். வேறு சிலர்கள் வலைப்பதிவு என்று பயன்படுத்துகிறார்கள். சொல்லப்போனால் வலைக்குறிப்புகள் முதலில் பிரபலமாக்கப்பட்ட பொழுது வலைப்பூக்கள் என்று சொன்னார்கள். இது கவித்துவமாக இருக்கிறது என்றும் முன்வைக்கப்பட்டது. இதன் அபத்தம் குறித்து அப்பொழுது சுட்டிக்காட்டினேன். மாலன், கண்ணன் உட்பட சிலர் வலைப்பூ என்ற வார்த்தையில் மும்முரமாக இருந்தார்கள். இப்பொழுது வலைக்குறிப்பு தொடர்பான தொழில்நுட்பங்களைத் “தமிழிலேயே” விளக்க அமைக்கப்பட்டுவரும் இந்த விக்கியில் எதைப் பயன்படுத்துவது என்று குழப்பம்.
என்னுடைய பழைய குறிப்பையும் அதுதொடர்பான வாதங்களையும் பார்க்க:
என்னைப் பொருத்தவரையில் தொழில்நுட்ப வார்த்தைகளைப் பயன்படுத்தும்பொழுது ஆகக்கூடியவரையில் துல்லியமாக இருக்க முயற்சிப்பது முக்கியம். ஏனென்றால் அது நேற்று, இன்று கடந்து நாளையும் பொருத்தமாக இருக்க வேண்டும். தமிழில் நுட்பங்களை எழுதத் தீவிர முயற்சி எடுப்பவர்களுக்கு இதன் அவசியம் புரியும். நானறிந்தவரை
பதிவு – Register, Record
குறிப்பு – Note, Log
உதாரணமாக, திருமணத்திற்கு நாள் குறிக்கிறோம் (அதன் நிச்சயமற்றதன்மை புரியும்; வைத்திருக்கும் நாள் மாறக்கூடும்). நாம் திருமணத்தை அலுவர் முன்னிலையில் பதிவு செய்கிறோம்(உறுதியானது). அதைப் பதிவு செய்பவர் பதிவாளர். இதேபோல சொத்தைப் பதிவு செய்கிறோம். நாம் ஒருவர் பேசும்பொழுது குறிப்பெடுத்துக் கொள்கிறோம். கிடங்கில் வேலை செய்யும் பணியாளர் மொத்தம் எத்தனை மூட்டை என்று குறித்துக் கொள்கிறார். பின்னர் அது பேரேட்டில் பதியப்படுகிறது.
Weblog or blog என்பதன் வரையறை : நொடியில் தோன்றும் எண்ணத்தை வலையில் போடுவது. அந்த வகையில் அது அதிகமாகச் சிந்தித்துச் செய்யப்படும் “வரலாற்றுப் பதிவு” அல்ல. அது உரத்த “சிந்தனைக் குறிப்புதான்”. இணையத்தில் தீர்க்கமாகப் பதிந்து வைக்க பிற வசதிகள் இருக்கின்றன. உதாரணமாக – வலைப்பக்கங்கள். பதிவு என்ற பயனாக்கத்தில் blog-ன் உடனடித்தன்மை விடுபட்டுப் போகிறது.
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் அறிவியல் சோதனைகளைச் செய்யும் பொழுது வரும் எண்களைக் குறித்துக் கொள்வேன். பின்னர் அந்தக் குறிப்புகளை வகைப்படுத்தி, கணக்கீட்டின்பின் பதிவேட்டை ஆசிரியரிடம் சமர்ப்பிப்பேன். என்னிடம் குறிப்பேடு (Observation book, Log Book) பதிவேடு (Record Notebook) என்று இரண்டு இருந்தன. நானறிந்த வகையில் குறிப்புக்கும் பதிவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
இந்த வலைக்குறிப்பு விக்கி அமைப்பதின் பின் நின்று உதவியாக இருக்கும் காசியிடம் இதுபற்றி விவாதித்தபொழுது “பல மாதங்களாகப் பலர் வலைப்பதிவு என்று பயன்படுத்துகிறோம். இப்பொழுது இதை மாற்ற வேண்டாம்” என்று சொல்கிறார். எனக்கு இது போதுமான விளக்கமாகத் தோன்றவில்லை. இதை மறுபரிசீலனை செய்யத் தேவையிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது;
- இப்பொழுது தொழில்நுட்பங்களை விளக்க அமைக்கப்படும் விக்கி முழுவதும் தமிழில் அமைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் இதைத் துவக்கமாகப் பயன்படுத்த முடியும்.
- பரந்துபட்ட தமிழ் உலகில் நூறுபேர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகவும் மெலிதான வாதம். அதே போல சிலர் வலைக்குறிப்பு என்றும் பயன்படுத்தி வருகிறோம். பயனுக்காகச் சிலர் பயன்படுத்தி வந்தாலும் நாம் இன்னும் இதையெல்லாம் நுட்பமாகத் தமிழில் விளக்கத் தலைப்படவில்லை. இன்னும் புத்தகங்களிலோ, பாடநூல்களிலோ இது நுழையவில்லை.
- நான் சொன்னதுபோல நுட்பம் குறித்த வரையறைகள் காலங்கடந்தும் நிலையிலிருக்க வேண்டும். இன்றைய சௌகரியத்திற்காகவோ, மாற்றத்தைச் செய்ய சோம்பேறித்தனத்திற்காகவோ காலம் கடந்த தீர்க்கமான வரையறைகளைத் துறக்கக் கூடாது.
- வலைக்குறிப்புதான் தீர்க்கம் என்றில்லை. நான் குறிப்பு என்ற வார்த்தையின் பொருத்ததைச் சொல்லியிருக்கிறேன். நானறிந்த வரையில் பதிவு என்ற வார்த்தையின் பொருத்தத்தை யாரும் சொல்லவில்லை. நான் கேட்கும் பொழுதெல்லாம், மழுப்பலாகவே பதில் கிடைத்திருக்கிறது. சொல்லும் ஒரே பதில் “இப்ப போயி மாத்த வேணாமே”. இதுபோன்ற பழக்கம் செய்வதைத் திருந்தச் செய்ய முயற்சிக்கும் நமக்குத் தேவையா?
- இவை இரண்டையும் விடுத்த இன்னும் பொருத்தமான வார்த்தை இருக்கக்கூடும். அப்படி ஏதாவது உங்களுக்குத் தோன்றுகிறதா?
எனவே இது குறித்து உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். இதை ஒரு வாக்கெடுப்பாகக் கூட நடத்த முடியும். ஆனால் வலையில் நடத்தப்படும் வாக்கெடுப்புகளில் எனக்கு நம்பிக்கையில்லை. எனவே இதை ஒரு விவாதமாகவே முன்வைக்கிறேன். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
விரிவாக இதனுள் இன்னும் நுழைந்து சிந்திக்க வில்லை. எனினும் முதற் பார்வையில் ஒன்றைக்கூற விரும்புகிறேன். வலைப்பதிவர் என்ற சொல்லளவுக்கு வலைக்குறிப்பர் பொருத்தமாக இருக்குமா?
குறிப்பு: பலவற்றுள் ஒன்றையோ சிலவற்றையோ தெரிவிக்கும்போது –> 'முக்கியமாக; சிறப்பாக'; தேர்தெடுத்த; ஏதேனும் ஒரு காரணம் கருதி 'சுட்டிக்காட்டுதல்'
பதிவு: ஒரு பரப்பில் ஒன்று பதிந்ததன் அடையாளம்; தடயம்; ஒன்றைப் பெறுவதற்காக விபரங்களைக் குறித்துத் தருதல். (நன்றி: க்ரியா)
குறிப்பு என்றாலே 'சிறு குறிப்பு வரைக' நினைவுக்கு வருகிறது! பதிவு என்றால், ஒரு எழுத்து வாக்கியமாக இருக்கலாம்; பத்து பக்க அனுபவமாக இருக்கலாம். எனக்கு இன்றும் வலைப்பதிவுகள் வெபுலாகை அருகில் நிறுத்துவதாகத் தோன்றுகிறது.
எது எப்படியோ, வலைக்குறிப்புகளை 'வ.க்கு', வாக்கு என்று ஆக்கினால் வெப்லாக்கு என்பதற்கு எகனை மோனையாகாவும் இருக்கும்; நாலைந்து கீ தட்டல்களிலேயே வாக்கு சொல்ல முடியும்
வெங்கட்,
//"பல மாதங்களாகப் பலர் வலைப்பதிவு என்று பயன்படுத்துகிறோம். இப்பொழுது இதை மாற்ற வேண்டாம்"// என்றது உண்மை. ஆனால் பல மாதங்களாகப் பயன்படுத்துவதால் மட்டுமே அப்படிச் சொல்லவில்லை. 'எனக்கு வலைப்பதிவு என்பதுதான் சரியாகப் படுகிறது. என்றுமே மாற்றுக்கருத்தை ஆராயவேண்டும்தான், அதற்காக வேண்டுமானால் 'வலைக்குறிப்'பை இன்னுமொரு பரிசீலக்கலாம்தான், ஆனால் இன்று 'வலைப்பதிவு' நிலைபெற்றுவிட்ட வலிமையைப் பார்க்கையில் இந்த ஆராய்ச்சிகூடத் தேவையில்லை' என்பதால்.
நிற்க.
இன்று தமிழ் வலைப்பதிவுகள் எழுதப்படும் பாணியைப் பார்க்கையில் அன்று இருந்ததைவிட இன்று அதிகமாகவே 'வலைப்பதிவுகள்' பொருந்துவதாகவும் எனக்குத் தோன்றுகிறது.
உங்கள் வழிக்கே வருகிறேன்:-)
record:
An account, as of information or facts, set down especially in writing as a means of preserving knowledge.
Something on which such an account is based.
Something that records: a fossil record.
Information or data on a particular subject collected and preserved: the coldest day on record.
The known history of performance, activities, or achievement: your academic record; hampered by a police record.
journal:
A personal record of occurrences, experiences, and reflections kept on a regular basis; a diary.
An official record of daily proceedings, as of a legislative body.
Nautical. A ship's log.
Accounting.
A daybook.
A book of original entry in a double-entry system, listing all transactions and indicating the accounts to which they belong.
A newspaper.
A periodical presenting articles on a particular subject: a medical journal.
The part of a machine shaft or axle supported by a bearing.
log:
A usually large section of a trunk or limb of a fallen or felled tree.
A long thick section of trimmed, unhewn timber.
Nautical.
A device trailed from a ship to determine its speed through the water.
A record of a ship's speed, its progress, and any shipboard events of navigational importance.
The book in which this record is kept.
A record of a vehicle's performance, as the flight record of an aircraft.
A record, as of the performance of a machine or the progress of an undertaking: a computer log; a trip log.
இந்த மூன்றில் log- ஐ விடவும் record & joiurnal நாம் *செய்துகொண்டிருப்பதற்கு* அருகில் வருவதை. *weblog* என்ற சொல்லில் வரும் *log*ஐ விடவும், நாம் உண்மையில் செய்துகொண்டிருப்பது *record* மற்றும் *journal* தான் என்பது என்னளவிலான புரிதல்.
அந்த உணர்வை 'வலைப்பதிவு' தருகிறது, 'வலைக்குறிப்பு' தரவில்லை, என்பது என் எண்ணம்.
காசி சொல்வது போன்ற உணர்வே எனக்கும் வருகிறது,
வலைப் பதிவு – எதைப்பற்றி வேண்டுமானாலும் (வெப்லாக்)
வலைக் குறிப்பு – முக்கியமானதைப் பற்றி(வெப்னோட்??) குறிப்பு கூர்மையுடையது. பதிவு, விரிவாய் எதைப்பற்றி எந்த பாணியிலும் செய்வது; டைரி போன்றது
வெங்கட், உங்கள் பின்தொடர்புச்சுட்டி இன்னும் வேலை செய்யவில்லை.
என்னுடைய கருத்து:
வலைப்பூ கவித்துவமாய் இருக்கிறதே என்றாலும் நுட்பத்தைச் சரியாகக் குறிக்காமல் இருக்கிற காரணத்தால் அது வேண்டாம் என்னும் கருத்தோடு நானும் உடன்படுகிறேன். மற்ற இரு சொற்களான வலைப்பதிவு, வலைக்குறிப்பு இரண்டும் சரியே. நானும் இது நாள் வரை மாற்றி மாற்றி இரண்டையும் பாவித்து வந்திருக்கிறேன். என்னுடைய முதல் பதிவிலும் இது பற்றி எழுதி இருக்கிறேன். ஆனால், இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டுமெனில், வலைப்பதிவே சரியாக இருக்கும் என்று எனக்கும் தோன்றுகிறது.
மேலும்…
குறிப்புகளானது பிற்பாடு கட்டுரை அல்லது நூல் எழுதுவதற்கு உதவலாம். ஆனால் இங்கு எழுதப்பட்டுக்கொண்டிருப்பவை குறிப்பு ரகங்களாகத் தெரியவில்லை. எனவே, வலைப்பதிவென்றே தொடரலாம் என நினைக்கிறேன். வலைக்குறிப்பு என்று சொல்வதற்கும் ஆட்சேபனையில்லை.