மூன்றாவது வலை – 4
by வெங்கட் • February 29, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
(இந்தத் தொடரில் இன்னும் ஒன்றிரண்டு கட்டுரைகள் கழித்து பின்தொடர்தல் பற்றி எழுத வேண்டும். இந்த சமயத்தில் பத்ரி அவருடைய வலையில் பின்தொடரும் வசதியை உண்டாக்கியிருக்கிறார். உதாரணத்துக்குப் பயன்படுத்த சரியான வாய்ப்பு!)
இந்தப் பகுதியில் ஆர்எஸ்எஸ் செய்தியோடை எப்படி தொழிற்படுகிறது என்று பார்க்கலாம். என்னுடைய வலைக்குறிப்பில் Syndicate this site (XML) என்று ஒரு இணைப்பு இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். என்னுடைய வலையில் நான் குறித்தவுடன், என்னுடைய நிர்வாக நிரலி, மூவபிள்டைப் என்னுடைய வலைக்குறிப்பை இற்றைப்படுத்தும் அதே நேரத்தில் வேறு ஒரு கோப்பையும் இற்றைப்படுத்திவைக்கிறது. அந்தக் கோப்பை http://www.tamillinux.org/venkat/myblog/index.rdf என்ற முகவரியில் பார்க்கலாம். (இதை நேரடியாகப் பார்க்க முற்பட்டால் உங்கள் உலாவி இதைப் படிக்க முடியவில்லை என்று சொல்லிவிடக்கூடும். எனவே, இந்தப் பக்கத்தை உங்கள் கணினியில் சேமித்து ஒரு உரை தொகுப்பி (நோட்பேட்) மூலம் திறந்து பார்க்க வேண்டும்). இதில் முக்கியமானவை இரண்டு பகுதிகள்; ஒன்று, இந்தச் செய்தியோடையின் தலைப்பு. இதில் எந்தப் பக்கத்தின் ஓடை இது, அதன் பெயர் என்ன, போன்ற விபரங்கள் இருக்கும்.
<channel rdf:about=”http://www.tamillinux.org/venkat/myblog/”><title>Venkat’s Weblog</title>
<link>http://www.tamillinux.org/venkat/myblog/</link>
இரண்டாவதாக, இந்தச் செய்தியோடையில் இருக்கும் ஓடைகளின் முகவரிகள், உதாரணமாக
<items>
<rdf:Seq><rdf:li rdf:resource=”http://www.tamillinux.org/venkat/myblog/archives/000233.html” />
<rdf:li rdf:resource=”http://www.tamillinux.org/venkat/myblog/archives/000232.html” />
<rdf:li rdf:resource=”http://www.tamillinux.org/venkat/myblog/archives/000231.html” />
.
.
.
</rdf:Seq>
</items>
இனி ஒடைகளில் இருக்கும் செய்திகளின் முதல் சில வரிகள்,
<item rdf:about=”http://www.tamillinux.org/venkat/myblog/archives/000233.html”>
<title>மூன்றாவதுவலை – 3 </title>
<link>http://www.tamillinux.org/venkat/myblog/archives/000233.html</link>
<description>
இணையத்தின் ஆரம்பகாலங்களில் வலைத்தளங்கள்தனிப்பட்ட தங்கள் இருப்புக்கு மாத்திரமே முக்கித்துவம் அளித்துவந்தன. இந்த இடத்தின் இணையம் என்ற சொல்லையும் வரையறுப்பது நல்லது. முதன்முதலில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும், இராணுவ ஆராய்ச்சிக் கூடங்களும் தங்கள் கணினியை ஒன்றுடன் ஒன்று பிணைக்கத் தொடங்கின. அப்படி இணைக்கப்பட்ட கணினிகளின் தொகுப்பு ஆங்கிலத்தில் Internet என்று அழைக்கப்பட்டது. தமிழில்இதற்குச் சரியானபெயர்…
</description>
<dc:subject>Technology</dc:subject>
<dc:creator>venkat</dc:creator>
<dc:date>2004-02-22T23:01:53-05:00</dc:date>
</item>
இவ்வளவுதான், இதை வைத்துக்கொண்டு என்னுடைய வலையில் சமீபத்தில் என்ன புதிதாக வந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கப் பல வழிகள் உண்டு. இவற்றை அடுத்த பகுதியில் விவரிக்க முற்படுகிறேன். இப்பொழுது உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று;
இந்தப் பக்கம் இணையத்தின் மூலமாகவே ஓடைகளைத் திரட்டும் முயற்சி. (இன்னும் பல நிரலிகள் யுனிகோடு தமிழில் ஓடைகளைச் சரியாகத் தயாரித்து அளிப்பதில்லை. எனவே, குழப்பமாகத் தெரிகின்றன). என்னுடைய மூவபிள்டைப் எழுதும் செய்தியோடை எக்ஸ்எம்எல் மொழியில் இருக்கிறது. இந்த மொழியில் உருவத்தைவிட உள்ளடக்கம்தான் முக்கியம்.
இரண்டாம் வலை உருவாக முக்கிய காரணம், html என்னும் மீயுரை வடிவம் தயாரிக்கப்பட்டதே. இது சுவிட்சர்லாந்து நாட்டிலிருக்கும் துகள் இயற்பியல் (Particle Physics) ஆராய்ச்சிக்கூடமான செர்ன் (CERN) என்னும் இடத்தில் டிம் பெர்னர்ஸ்-லீ என்பவரால் உருவாக்கப்பட்டது. பெர்னர்ஸ்-லீதான் இணையத்தின் தந்தை என்று அறியப்படுபவர். இவர் இந்த மீயுரை வடிவத்தை உருவாக்கியதோடு இல்லாமல், அந்த வடிவத்தை கணினிகளில் காட்ட உலாவியன்றையும் தயாரித்தார்.
மீயுரை வடிவத்தில் ஒரு கோப்பு கணினித் திரையில் எப்படியெல்லாம் காட்டப்பட வேண்டும் என்று வரையறுக்கப்படும். உங்கள் உலாவியில் View > Source போய்ப் பார்த்தால் மீயுரைக் கோப்பின் முழுக்கட்டளை வடிவமும் தெரியும். அந்தக் கட்டளைகளைப் புரிந்து கொண்டு மோஸிலா, இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் போன்ற உலாவிகள் தடித்த எழுத்துக்களிலோ, சாய்ந்த எழுத்துக்களிலோ கோப்பை உங்களுக்குக் காட்டுகின்றன. மீயுரையின் முழுப்பெருமையும் எழுத்தின் வடிவத்தில் மாத்திரம் இல்லை. கோப்பிலிருக்கும் ஒரு வார்த்தைக்கு மேலதிகத் தகவல் (அது வேறு இணையப்பக்கமாக இருக்கலாம், இறக்கிக் கொள்ள வசதியான கோப்ப்பாக இருக்கலாம், ஒரு படமாகவோ, ஒலிக்கோப்பாகவோ இருக்கலாம்) அடிக்கோடு போட்டுக் உணர்தி, நேரடியாக இணைக்கும் வசதிதான் மீயுரை வடிவங்களில் முக்கியம்.
இரண்டாம் வலையின் மீயுரை வடிவங்களில் பக்கம் தெரியும் விதம், இணைப்புகள் இரண்டும் மாத்திரம்தான் சிறப்பு. ஆனால் மூன்றாம் வலையின் ஆதாரமாக எக்ஸ்எம்எல் வடிவத்தில் கோப்பின் உள்ளடக்கத்திற்குத்தான் முதன்மை மதிப்பு. மேலே காட்டியது செய்தியோடைப் பகுதியில் தடித்த எழுத்தா, சாய்ந்த எழுத்தா போன்ற வடிவ வரையறைகள் கிடையாது. எனவே, இந்த எக்ஸ்எம்எல் தரவை பல்வேறு சிறப்பு நிரலிகளைக் கொண்டு வேண்டிய வடிவில் புரிந்து கொள்ள முடியும்.
இதற்குச் சில உதாரணங்களை அடுத்ததாகக் காட்டுகிறேன்.
இன்னம் சிலர் இப்பொழுது trackback கொண்டுவந்துள்ளனர். செல்வராஜ், பாலாஜி.
கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் பாலாஜி சொல்லி நானும் டிராக்பேக் வசதியைச் சேர்த்துவிட்டிருக்கிறேன் ..