மூன்றாவது வலை – 3
by வெங்கட் • February 22, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
இணையத்தின் ஆரம்பகாலங்களில் வலைத்தளங்கள் தனிப்பட்ட தங்கள் இருப்புக்கு மாத்திரமே முக்கியத்துவம் அளித்து வந்தன. இந்த இடத்தின் இணையம் என்ற சொல்லையும் வரையறுப்பது நல்லது. முதன் முதலில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும், இராணுவ ஆராய்ச்சிக்கூடங்களும் தங்கள் கணினியை ஒன்றுடன் ஒன்று பிணைக்கத்தொடங்கின. அப்படி இணைக்கப்பட்ட கணினிகளின் தொகுப்பு ஆங்கிலத்தில் Internet என்று அழைக்கப்பட்டது. தமிழில் இதற்குச் சரியான பெயர் சூட்டப்படவில்லை. 1998-99 வாக்கில் இவற்றைபற்றி எழுதும்பொழுது இன்டர்நெட் என்ற சொல்லுக்குத் தமிழினையாக “ஊடுவலை” என்ற சொல்லை முன் வைத்தேன். ஆனால் பல நண்பர்கள் இதன் முக்கியத்துவத்தை உணரவில்லை. இணையம் என்ற வார்த்தை பரவலாகி வரும்பொழுது ஊடுவலை என்ற சொல் தேவையா என்று கேட்டார்கள். இணையம் என்பது ஆங்கிலத்தில் Web அல்லது World Wide Web என்பதற்கு இணையான சொல். தமிழில் சிலர் இதற்கு வைய விரி வலை என்று பயன்படுத்தினார்கள். இந்த வைய விரி வலையும், இணையமும் ஒரே கருத்தைத்தான் குறிக்கின்றன. இது ஊடுவலையில் பிணைக்கப்பட்ட கணினிகளை எளிதாகப் பயன்படுத்த உண்டான இடைமுகம். அதாவது கணினிகளின் தொகுப்பு ஊடுவலை; அந்த ஊடுவலையின் பயனர் முகப்பு இணையம். இப்பொழுது மூன்றாவது வலை பற்றி எழுதும்பொழுது ஊடுவலை, இணையம் இவற்றை மாறுபடுத்திச் சொல்ல வேண்டியது முக்கியமாகிறது. ஊடுவலையாய் கணினிகள் இணைந்தது முதல் வலை, அது இணையமாய் இடைமுகம் பெற்று சராசரி பயனர்களுக்குத் தயாரானது இரண்டாவது வலை. இப்பொழுது நான் விவரிக்கும் சாத்தியங்கள் எல்லாம் மூன்றாவது வலையின் ஆரம்ப கட்டங்கள்.
மூன்றாவது வலையின் முக்கிய குணாதிசயம் என்ன? ஒற்றை வார்த்தையில் சொன்னால் ‘புத்திசாலித்தனம்’. இரண்டாம் வலையான இணையம் வெறும் தகவல் தொகுப்பு மாத்திரமே. இந்தத் தகவல் கிடங்கில் எந்தவிதமான வார்த்தைகளுக்கும் அர்த்தம் கிடையாது. நீங்கள் தகவலைத் தேடும்பொழுது வெறும் வார்த்தைகளை மாத்திரமே தேடுகிறீர்கள். கண்ணுக்குத் தெரியாமல் விரிந்துகொண்டிருக்கும் மூன்றாவது வலையின் விசேடம், வலையில் தேங்கும் பொருள்களுக்கு அர்த்தம் கற்பித்தல். அதாவது, வெறும் வார்த்தைக் குவியலைத் தாண்டி வலையில் இருக்கும் தரவுகளுக்கு அர்த்தம் தருவது. இணையத்தைத் தோற்றுவித்த டிம் பெர்னர்ஸ்-லீ இப்படிச் சொல்கிறார்;
“The Semantic Web is an extension of the current web in which information is given well-defined meaning, better enabling computers and people to work in cooperation.”
மூன்றாவது வலையில் சாத்தியங்களை நேரடியாக எழுதினால், அறிவியல் புனைகதை போலத்தான் இருக்கும். எனவே, மெல்ல விரிந்துவரும் அதன் பல கூறுகளைப் பார்க்கலாம்.
முதலாவது – ஆர் எஸ் எஸ் செய்தியோடை. இது காவியுடை அணிந்த சாமியார்கள் மசூதிகளை உடைக்க அனுப்பும் தகவல்களைப் பற்றியோ, சாமியாரிணிகள் அயோத்தியில் பிரியாணி விற்பதைத் தடை செய்வதைப் பற்றியதோ இல்லை. ஆர் எஸ் எஸ் என்பது Really Simple Syndication என்பதன் சுருக்கம். முன்பு சொன்னதுபோல் ஆதிகால இணையத்தளங்களுக்குத் தங்கள் இருப்பு மாத்திரமே முக்கியமானதாக இருந்தது. தங்களைப்பற்றிய தகவல்களை அறிவித்தால் போதும் என்று இருந்தார்கள். ஆனால் இப்பொழுது நிலவரம் மாறிவருகிறது. உதாரணமாக, வலைமூலம் விமானப் பயணச்சீட்டுகள் விற்கும் ஒரு நிறுவனத்திற்கு பயணிகளுக்கான தட்ப-வெப்ப நிலை குறித்த தகவல் முக்கியம். அதாவது, நான் அடுத்தவாரம் ப்ளோரிடா செல்லவிருந்தால் நான் பயணச்சீட்டைப் பதிவு செய்யும்பொழுது அடுத்த புதன் கிழமை, ஜாக்ஸன்வில் நகருக்கான முன்னறிவிப்பு என்ன என்பதை என் பயணச்சீட்டு பதிவு செய்யும் பக்கத்தின் ஒரு மூலையில் போட்டால் எனக்கு அது மிகவும் உதவியாக இருக்கும். அப்படிப் போடப்படும் தகவல்களை பயண நிறுவனம் கொடுக்க வேண்டுமென்றால் அது தினசரி காலை theweathernetwork.com தளத்திலிருந்தோ, அதைப்போன்ற வேறொரு தளத்திலிருந்தோ தருவித்து, அன்றைக்கு ஜாக்ஸன்வில் பக்கத்துடன் இணைக்கலாம். ஆனால் இப்படி உலகெங்கிலும் இருக்கும் நகரங்களுக்கு ஏற்றபடி பயண நிறுவனம் தினசரி தங்கள் வலைப்பக்கங்களை மாற்றியமைப்பதன் அபத்தம் உங்களுக்கு எளிதாகப் புலப்படும். இதைப் போக்கவந்த வசதிதான் செய்தியோடை, அல்லது ஆர் எஸ் எஸ் செய்தியோடை. இந்த வசதிமூலம் பயணச்சீட்டு இணையப் பக்கமும் தட்பவெப்பநிலை சொல்லும் இணையப் பக்கமும் ஒன்றோரு ஒன்று இணைகின்றன. பயணச்சீட்டுப் பக்கம் வெப்பநிலை சொல்லி உங்களுக்குத் தேவையான மேலதிகத் தகவலைச் சொல்லி உங்களுக்கு உதவுகிறது. அதே போல நீங்கள் theweathernetwork.com பக்கத்திற்குப் போய் ஜாக்ஸன்வில்லின் அடுத்த வார முன்னறிவிப்பைப் பார்க்கும் சமயம், நீங்கள் பயணிக்கவிருப்பதாக ஊகித்து அது குறைந்த விலைப் பயணச்சீட்டு பற்றிய தகவலை மூலையில் ஒரு பெட்டியில் போட்டு உங்களை பயண நிறுவனத்திற்கு வழிநடத்தும். இப்படியாக மூன்றாவது வலையில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைய பக்கங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து அவற்றின் பயனை அதிகரிக்க முடியும்.
இது எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்க்க என்னுடைய முதன்மை வலைப்பக்கத்தைப் பார்க்கவும். அதில் வலது பக்கத்தில் Venkat’s Weblog என்று தலைப்பிட்டு என்னுடைய வலைக்குறிப்பின் கடைசி பத்து குறிப்புகளைப்பற்றிய தகவல் கிடைக்கும். இது ஒவ்வொருமுறையும் நான் வலைக்குறிக்கும்பொழுது தானாகப் புதுப்பிக்கப்படுவது. அதாவது என்னுடைய தளத்திற்கு வருபவருக்கு நான் சமீபத்தில் என்ன வலைக்குறித்தேன் என்பதை உணர்த்தி அவரை என் வலைக்குறிப்பு பக்கம் இழுக்கும் வசதி. இதன் தொழில்நுட்ப இரகசியத்தை அடுத்த தவணையில் விவரிக்கிறேன்.
நான் இப்பொழுதைக்கு ஹாலோஸ்கேனில் டிராக்பேக் வசதியைச் செய்துள்ளேன். சற்றே சுற்றிவளைத்துச் செய்யவேண்டியதென்றாலும் இப்பொழுதைக்கு ஆரம்பித்துவிட்டேன். “மூன்றாவது வலை” கட்டுரைக்கு ஒரு சுட்டி கொடுத்து அவற்றை உங்கள் டிராக்பேக்கோடு தட்டிவிட்டுள்ளேன்.
ட்ராக்பேக்கெல்லாம் தெரியவில்லை. நானும் என எண்ணங்களை இங்கே பதித்திருக்கிறேன்:
http://kasi.thamizmanam.com/index.php?itemid=45