• மடை திறந்து

    by  • November 18, 2004 • இசை • 8 Comments

    ஒரு வகையில் இந்தப் பாடலைக் கொண்டு துவக்குவது Cliche ஆக இருக்கலாம். ஆனால் அதைப் போன்ற தயக்கங்களை எல்லாம் தாண்டி இதுதான் நான் அறிமுகப்படுத்தும் முதல்பாடல்.

    எனக்குப் பிடித்த இசை என்று அறிமுகப்படுத்தும் பொழுது – நூறு சதவீதம் எனக்குப் பிடித்தது இப்படித்தான் இருக்கும் என்று காட்ட வேண்டுமல்லவா? பாடலைக் கேளுங்கள்

    மடை திறந்து
    இசை: இளையராஜா,
    பாடியவர் – எஸ்.பி. பாலசுப்பிரமணியம்,
    பாடலாசிரியர் – வாலி
    படம் – நிழல்கள் (1980)

    என் அபிமான இசையமைப்பாளரின் இசையில் என் மனம் கவர்ந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியது. என்னைப் பொருத்தவரை தமிழ்த் திரையிசை உலகில் ஒரு மைல்கல் இந்தப் பாடல். துவக்கத்தில் வரும் அந்த வயலின்கள், கிட்டார், ட்ரம்ஸ் அந்த நாட்களில் தமிழ் அறியாதது. ஒருவகையில் இது இளையராஜாவின் அடிமனதிலிருந்து எழுந்த மெட்டு. அந்த மாபெரும் இசைக்கலைஞனின் சுவாச மூச்சு இப்படித்தான் வந்திருக்க வேண்டும்.

    இந்தப் பாடலைப் பற்றி பலரும் பல முறையும் எழுதிவிட்டார்கள். பொங்கிவரும் ஆரம்ப இசை, பேஸ் கிட்டாரின் பிண்ணனி, கோரஸ் குரல்கள், அலையலையாய் எழும்பும் வயலின்கள், இடையில் வரும் லீட் கிட்டாரின் ஆக்கிரமிப்பு, இப்படி இந்தப் பாடலைச் சொல்லிமுடியாது. இடைவெளியில் மேலெழும்பிச் செல்லும் கோரஸ் பெண்கள் குரல் அதற்கு எதிரிடையாகச் செல்லும் (Counterpoint) எஸ்.பியின் மடைதிறந்து வரிகள் அற்புதங்களில் ஒன்று.

    பாடலுக்கு மெட்டெழுதுவதா மெட்டுக்குப் பாட்டெழுதுவதா என்று காலமாக விவாதித்திருக்கிறார்கள். ஆனால் மெட்டுடன் பாட்டு இணைந்துவருவ்தை இங்கே பார்க்க முடியும். திரையிசையின் உன்னத பாடலாசிரியர்களில் ஒருவர் வாலி.

    புதுராகம் படைத்ததாலே நானும் இறைவனே
    விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் இராச்சியம்
    அமைத்தேன் … நான்..

    பலமுறை என்னுடைய வெளிநாட்டு நண்பர்களிடம் பாப்புலர் இந்திய இசையை வரையறுக்க இந்தப் பாடலை நான் போட்டுக் காட்டியிருக்கிறேன். ராக், பாப், மேற்கத்திய கிளாஸிக்கல் இசை, கர்நாடக இசை, நாட்டார் இசை என்று எல்லாவற்றுக்கும் இருக்கும் எந்த வரையறையும் திரையிசைக்குக் கிடையாது. தடையேதும் இல்லாமல் எல்லாவற்றின் கூறுகளையும் ஒரே பாட்டில் கையாள முடியும். இதன் வீச்சை முழுவதும் செயல்படுத்திக் காட்டியவர் இளையராஜா. அதேபோல குரலில் எல்லா சாத்தியங்களையும் தொட்டவர் பாலசுப்ரமணியம்.

    எஸ்.பி.பியைப் பற்றி – இன்னொரு நாள் விரிவாக.

    8 Responses to மடை திறந்து

    1. Icarus Prakash
      November 19, 2004 at 12:16 am

      மடை திறந்து என்ற பாடல் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். துள்ளல் என்பார்களே, அந்தத் துள்ளலை பாட்டில் முழுசாகக் காணலாம் ( பல விதமான முகபாவங்களுடன், இளையராஜா, வாயசைப்பார்), அதே துள்ளலை எஸ்பிபியினிடத்தும் கேட்கலாம். மிகச் சுமாரான படத்தில், மிக அற்புதமான இசை என்பதற்கு முழு உதாரணம் இந்தப் படம். தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்களுக்குப் பிறகு பாரதிராஜா, ஆறாவதாக எடுத்து தோல்வி கண்ட படம் இது. வேலைவாய்ப்புகள் அருகி இருந்த அக்காலங்களின், திரைக்கதைகளின் முக்கிய Protagonist ஆக, வேலை வாய்ப்பில்லாத இளைஞன் தான் இருப்பான், நிழல்கள் போல . அந்தப் படத்தின் முக்கிய ஜீவநாடியே இசைதான். வீணை வாசிக்க கற்றுக் கொள்ள, வீட்டுக்குப் போகும் போது, அவர் இறந்து விட்டார் என்பதை குறிப்பால் உணர்த்தும் அந்த ஒரு காட்சியும் , அதற்கான பின்னணி இசையும் தான் , அது பாரதிராஜா படம் என்பதைச் சொன்னது. இந்தப் படத்திலே போய் இவ்வளவு நல்ல பாட்டா என்று அடிக்கடி நொந்துகொள்ளும் பல பாடல்களில் மடை திறந்து… பாட்டும் ஒன்று….

      காலம்…. கனிந்தது… கதவுகள் திறந்தது… என்று எஸ்பிபி, குரலை அநாயசமாக உசத்தும் போது, ஜிவ்வென்று இருக்கும். தலை தானாக ஆடும். மேஜை மீது விரல்கள் தானாக நடனம் ஆடும்… அனுபவித்து உணார்ந்திருக்கிறேன். விடுமுறைக்குப் பிறகு வரும் முதல் நாளிலேயே… ம்ம்ம்ம்ம்… மனசுக்கு நிறைவான விஷயம். நன்றி வெங்கட். ( அதே படத்தில் உமாவின் 'தூரத்தில் நான் கண்ட உன் முகம்' பாட்டு பற்றி உங்கள் அபிப்? )

    2. November 19, 2004 at 12:19 am

      என்னை பொறுத்தவரையிலும் `மடை திறந்து' பாடல் தமிழிசையில் ஒரு மைல்கல்தான்.அதே போல பற்பல சாத்தியங்களை உள்ளடக்கி ஒரு flowவாக இசைஞானியிடமிருந்து வெளிவந்த பாடல் இன்னொரு பாடல் `இளமையெனும் பூங்காற்று..' என்று எனது கருத்து.

      இந்திய (திரை)இசை குறித்து என்னிடம் விசாரிக்கும் வெளிநாட்டவர்களுக்கு நான் மீண்டும் மீண்டும் போட்டு காட்டும் ஒரு பாடல் `ராக்கம்மா கையதட்டு..'. அதன் தொடக்க இசையை கேட்டு ஸ்தம்பித்து போகாதவர்களை நான் அறியவில்லை.

      பல பரிமாணக்களில் விரிந்து எண்ணற்ற சாத்தியங்களை உள்ளடக்கிய, `தென்றல் வந்து தீண்டும் போது..' பற்றி நீங்கள்(தான்) எழுதி படித்ததாக நினைவு.

    3. November 19, 2004 at 12:22 am

      இகாரஸ் அந்த `செடிமறைவில்..' கொஞ்சம் உதவ கூடாதா? அப்பறம் அது யார் உமா? தூரத்தில் நான் கண்ட உன்முகம் ஜானகி அல்லவா?

    4. Icarus Prakash
      November 19, 2004 at 12:49 am

      RV : ayoo sorry… t'was a slip . thUratthil .. was by SJ and not umaramanan. " sedi maRaivinil coming shortly…

    5. November 19, 2004 at 6:31 am

      தளரும் நேரங்களில் மீட்டெடுத்துக் கொள்ளவென்றே சில பாட்டுக்கள் கிளம்பும், மனதிலுறுதி வேண்டும் மாதிரி. அவற்றில் இதுவுமொன்று. நன்றி.

    6. karthikramas
      November 19, 2004 at 10:15 am

      சின்ன வயசில், முதல் இரண்டு வரிதான் ஞாபகத்தில் இருக்கும், பிறகு எல்லாமே, டடடா, டாட டட டா('மடை திறந்து' மெட்டிலேயே).. அதே போன்று இன்னொரு பாடல், 'சொர்க்கம் மதுவிலே'.
      அப்போதெல்லாம், 'சொர்க்கம் மதுவிலே' – வின் அர்த்தம் கூட தெரியாது. :)

    7. Vasikar Nagarajan
      November 19, 2004 at 10:23 am

      If you could give any links available to hear the songs, it will be great. Thanks.

    8. Vasikar Nagarajan
      November 19, 2004 at 10:29 am

      Oops .. you have given the link… sorry

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *