புலி வருது, புலி வருது… வந்தேவிட்டது
by வெங்கட் • March 29, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
மூன்று வருடங்களாகப் பயமுறுத்திக்கொண்டிருந்த புலி வந்தேவிட்டது. கிட்டத்தட்ட ஆர்வங்களெல்லாம் இழந்துபோய் இன்னொரு இந்தியத் தோல்வியாக மூட்டைகட்டி மூடிவைத்துவிட்ட நேரத்தில் சிம்ப்யூட்டர் வந்திருக்கிறது.
மூன்று வருடங்களுக்கு முன்னால் கைக்கணினி உலகில் நான்கே நிறுவனங்கள் (பாம், காஸியோ, ஹெச்பி, காம்பாக்) இருந்த காலத்தில் பெங்களூரிலிருந்து வெளியிடப்பட்ட சிம்ப்யூட்டரின் ஆரம்பகால அறிவிப்புகள் என்னுள் பல கனவுகளை உண்டாக்கியது என்னமோ உண்மைதான். நான் படித்த பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் தயாரிப்பு, என் மனதிற்குப் பிடித்தபடி நம்மவர்கள், நமக்காக உருவாக்கிய திறமூலத் தொழில்நுட்பம் (லினக்ஸ் அடிப்படையிலானது), உள்ளூர்மயமாக்கப்பட்ட வடிவம் (இந்தி, தமிழ், கன்னடம்) இப்படி என்னைக் கனவில் மிதக்கவிட்டது சிம்ப்யூட்டர். என்னை மட்டுமல்ல, உலகின் தலைசிறந்தத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான மாஸாசூஸெட்ஸ் இண்ட்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கூட அதன் ‘டெக்னாலஜி ரிவ்யூ’ இதழில் உலகின் தலைசிறந்த ஏழு நம்பிக்கையூட்டும் தொழில்நிறுவனங்களில் ஒன்றாக சிம்ப்யூட்டரைத் தயாரிக்கவிருந்த பிக்கோபீடா நிறுவனத்தைச் சிலாகித்தது.
நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு இப்பொழுது பிக்கோபீட்டா நிறுவனம் அமிடா-சிம்யூட்டர் என்று பெயரிடப்பட்ட கைக்கணினியை நேற்று விற்பனைக்கு வெளியிட்டிருக்கிறது. இந்தக் கைகணினிகளில் இதுவரை சந்தையிலிருக்கும் கணினிகளில் சராசரியாகக் கிடைக்கக்கூடிய அனைத்துப் பயன்பாடுகளும் உள்ளன (மின்னஞ்சல், நாட்காட்டி தொடங்கி, எம்பி3 இயக்கி, இணைய உலாவி…). அவற்றைவிடச் சில உயர்ந்த தொழில்நுட்பங்களும் அடக்கம் (USB host controller, Handwritten notes, Accelerated input methods..). இவற்றின் முழுப்பயன்பாடுகளின் பட்டியல் இங்கே கிடைக்கிறது.
உயர்தொழில்நுட்ப உலகில் தயாரிப்புச் சுழல் மிகவும் குறுகியது. சென்ற வாரம் ஒரு நிறுவனத்திற்கு ஒரு புதிய திட்ட வரைவிற்காகச் சென்றிருந்தேன். அதன் தொழில்நுட்ப அதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, “ஒரு கருவிக்கான கரு உதித்தவுடன் கிட்டத்தட்ட ஆறுமாதங்களில் ஒரு முன்மாதிரி வடிவம் தயாராகிவிடவேண்டும். பின்னர் அதை வைத்துக்கொண்டு தயாரிப்புப் பணவுதவியை அடுத்த ஆறுமாதங்களில் பெற்றாக வேண்டும். அந்த ஆறுமாதங்களில் முன்மாதிரியை முழுநேர உற்பத்திக்குத் தயாரானதாக மாற்றிக்கொண்டிருக்க வேண்டும். பணம் கிடைத்த ஆறு மாதங்களில் கருவி சந்தையில் விற்பனைக்கு வந்தாக வேண்டும்” என்று உயர்தொழில் வளர்நிலைகளை வரையறுத்தார். இது மிகவும் உண்மை.
சிம்ப்யூட்டர் அறிவிப்பு வந்தபொழுது அதில் சொல்லப்பட்ட பல தொழில்நுட்பங்கள் சந்தையில் இல்லை. ஆனால் இப்பொழுது இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடக்கூடிய விஷயங்கள் கைக்கணினியில் பொதிக்கப்படுகின்றன. உதாரணமாக, சோனி க்ளியே வில் ஒரு மெகாபிக்ஸெல் காமெராகூட இருக்கிறது. இடைப்பட்ட இந்த நேரத்தில் சந்தையிலும் பல மாறுதல்கள் நடந்தேறியிருக்கின்றன. இரண்டு மாபெரும் நிறுவனங்களான காம்பாக்கும், ஹெச்பியும் இணைந்திருக்கின்றன. முரட்டு வேகத்தில் சந்தைப்படுத்த வல்ல டெல் கைக்கணினிகளை விற்கிறது. படைப்பு உன்னதத்தில் உச்சங்களைத் தொடும் சோனியின் க்ளியே காண்பவரைச் சொக்கவைக்கிறது, ஏன் திறமூலத் தொழில்நுட்பத்தில் லினக்ஸ் அடிப்படையிலான கைக்கணினிகள் பல இப்பொழுது சந்தையில் இருக்கின்றன. (லினக்ஸ் அடிப்படையிலான ஷார்ப் ஸாரஸ் கணினியின் வடிவமைப்பு சோனியுடன் போட்டியிடுகிறது). இந்த நிலையில் கிட்டத்தட்ட பல் பிடுங்கப்பட்ட கிழட்டுப் புலியைப் போல சிம்ப்யூட்டர் சந்தைக்கு வந்திருக்கிறது. டெல்லும், பாமும் இடைப்பட்ட நாட்களில் கைக்கணினிகளின் விலையை அடிமட்டத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றன.
நம்மை நாமே தேற்றிக்கொள்ளலாம், சிம்ப்யூட்டரின் இலக்கும் சந்தையும் இந்தியாதான் என்று. ஆனால் ஒரு உலகத் தரத் தொழில்நுட்பத்தை உரிய காலத்தில் சந்தைப்படுத்தத் தவறிவிட்டோம். உலகச் சந்தைப்போட்டியில் ஜப்பானியர்களிடமும் கொரியர்களிடமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறையவே இருக்கிறது.
* * *
எது என்னவோ, முற்றிலும் இந்திய ஆய்வுக்கூடத்திலிருந்து உலகத் தரத்திற்கு (கட்டாயம் சிம்ப்யூட்டர் உலகத் தரமானதுதான்) இணையான தொழில்நுட்பம் முதிர்ச்சி அடைந்து விளைபொருள் வடிவில் சந்தைக்கு வருவது என்பதே பெரிய அதிசயம்தான். இது எவ்வளவு தடவை கடந்தகாலத்தில் நடந்திருக்கிறது? இவ்வளவு பரபரப்பாக இந்தியர்களுக்கு இணையான கணினி விற்பன்னர்கள் உலகிலேயே இல்லையென்றும், சிலிக்கன் பள்ளத்தாக்கின் விதியே நம் கையில் இருப்பதுபோலவும் உளறிக்கொண்டிருக்கிறோம். ஆனால் மென்கலன் உலகில் இந்தியாவின் பெயர் சொல்லும் ஒரு சிறு பகிர்கலன்கூடச் (shareware) சந்தையில் கிடையாது என்பதுதான் சர்வநிச்சயமான உணமை. சிம்ப்யூட்டர் இந்தியரகளால் இந்தியாவிற்கென தயாரிக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்தத் தொழில்நுட்பம். இந்தத் தருணம் ஒவ்வொரு இந்தியனுக்கும் சிலிர்ப்பைத் தரவேண்டும்.
பாராட்டுக்கள்.
தலைப்பப் பாத்ததும் ரஜினி அரசியலுக்கு வந்துட்டாரோன்னு நெனச்சிட்டேன்
பத்தாயிரம் ரூவா குடுத்து வாங்குவாங்கங்றீங்க?
நம்ம மக்களுக்கு பர்மா பசார்ல வாங்கித்தானே பழக்கம்