• பிணம் தரும் ஓட்டு

    by  • March 5, 2004 • பொது • 0 Comments

    உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடான இந்தியாவிடமிருந்து அமெரிக்க அதனுடைய ஜனநாயகத்திற்குத் தொடர்ச்சியான பாடங்களைக் கற்றுக் கொண்டுவருகிறது.

    பல விஷயங்கள் இருந்தாலும் இரண்டை முன்னிருத்த வேண்டும்; 1. நடிகர்கள் 2. பிணங்கள்

    எனக்குத் தெரிந்து எம்ஜிஆர் ப்ரூக்ளின் மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஜெயித்த பொழுது எங்கள் ஊரில் இப்படி சுவரொட்டினார்கள் “ஆந்திர, அமெரிக்க வழிகாட்டி புரட்சித் தலைவர்”. சிறுவயதில் எனக்கு உடனே பிடிபடவில்லை. ஆனாலும் “இப்பிடி நம்ம தலைவர் ஏதோ பெருசா சாதிச்சிருக்கார் போலருக்கே” என்று மிரண்டு போனேன். ஒரே நாளில் உறைத்தது; ஆந்திராவில் – ராமராவ், அமெரிக்காவில் ரொனால்ட் ரேகன் – இரண்டுக்கும் முன்னோடி தமிழகத்தின் தனிப்பெருந்தலைவர் ராமச்சந்திரன். ஆக, ஒரு நடிகரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என்று அமெரிக்கர்கள் இந்தியாவிடமிருந்து (அதிலும் நம்ம தமிழகத்திடமிருந்து) பாடம் பெற்றுக்கொண்டார்கள். பெற்றுக் கொண்ட பாடம் இப்பொழுது அர்னால்ட் ஸ்க்வார்ஸ்நெகர் வரை நன்றாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நம்மூரிலும் எல்லா நதிகளிலும் நீர் நிறையவே ஓடியிருக்கிறது; ஜெயலலிதா, அமிதாப்பச்சன், ஜெயபாதுரி, சுனில்தத், ஹேமாமாலினி, ஜெயப்பிரதா, இன்னும் எத்தனையோ பேர் தொடர்ந்து கோலோச்சி வருகிறார்கள். “என் வழி – தனி வழி” என்று ரஜினி குழப்பமாகச் சொன்னால்கூட உடனே தமிழகம் மிரண்டுபோகிறது. இதே நிலைதான் இப்பொழுது அமெரிக்காவிலும், யாராவது ஒரு நடிகர்/நடிகை இப்பொழுது அரசியல் சம்பந்தமாக ஏதாவது பேசினாலும் எல்லோரும் உடனே அமோக ஆதரவை அள்ளித்தரத் தயாராக இருக்கிறார்கள்.

    * * *
    இரண்டாவது விஷயம் இன்னும் கேவலமானது. இது நடந்தபொழுது நான் இன்னும் சிறியவன், எனவே முழு விபரங்கள் நினைவில் இல்லை. ஆனால் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் குண்டடிபட்டு செத்துப்போன இரண்டு மாணவர்கள் (ஒருவர் பெயர் சுகுமாரன் என்பது நினைவிருக்கிறது), பிணத்தின் படத்தைப்போட்டு கருணாநிதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. நன்றாகவே வேலை செய்தது என்று நினைக்கிறேன். அந்தத் தேர்தலின் முக்கிய பரபரப்பே அந்த சுவரொட்டிகள்தான்.

    பின்னர் தொடர்ச்சியாக எல்லா தேர்தல்களிலும் கட்டாயம் பிணங்களின் படங்கள் இடம்பெறத் தொடங்கின. ஈழத்தமிழர்களின்/போராளிகளின் படத்தைப் போட்டால் இங்கே ஓட்டு கிடைக்குமா -ம் சிவகாசிக்கு ஆள் அனுப்புங்கள். இன்னும் எம்ஜியார் பிணம், ராமாராவ் பிணம், மண்டல்கமிஷனில் எரிந்துபோன பிணங்கள், சதியில் எரிந்த தெய்வம், குண்டு வெடித்துச் சிதறிய ரஜீவ் காந்தியின் பிணம், பின்னர் அவருக்குக் குண்டுவைத்த சிவராசன் பிணம். இதைத் தவிர கணக்கிலடங்கா உள்ளூர் பிணங்கள், இப்படித் தொடர்ச்சியாக பல பிணங்கள் இந்தியா ஜனநாயகத்தின் போக்கை நிர்ணயித்து வருகின்றன. சாவுகளுக்குப் பஞ்சமில்லை; ஓட்டுகளுக்கும்தான்.

    இப்பொழுது இந்தப் பாடத்தை அமெரிக்காவில் நன்றாகக் கற்றுக் கொண்டு நடத்திக் காட்டுகிறார்கள். நேற்றைக்கு வெளியான அமெரிக்கா ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் (இளையர்) மறு தேர்தல் பிரச்சாரத்தின் முதல் நான்கு விளம்பரங்களிலும் பிணங்கள்தான் கதாநாயகர்கள்.

    கேமராவை நோக்கி நடந்துவரும் புஷ் இளையரின் பின்னனில் நியூயார்க் இரட்டைக் கட்டங்களின் சிதைந்த படம். தொடந்து தீயணைப்பு படையினர், பின்னர் அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்டு தூக்கி வரப்படும் ஒரு பிணம். (பாடம் நன்றாகவே கற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது, ஜெயலலிதாவின் தேர்தலுக்கு உதவ வந்த எம்ஜியார் பிணம்கூட அதிமுக கொடி போர்த்தப்பட்டதுதான்; ரஜீவ் பிணத்தின் மேல் மூவர்ணக் கொடி,…), துக்கத்தில் தவிக்கும் உறவினர்களின் முகங்கள். இதன் இறுதியில் “Safer. Stronger. President Bush: Steady Leadership in Times of Change.” என்ற விளம்பர வாசகம்.

    ஓரளவுக்கு இது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், இப்படிக் கீழ்த்தரமாக இருக்கும் என்று பலரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், இரட்டைக் கட்டிடங்களின் அழிவுக்குக்குப் பிறகு “இதைவைத்துக் கொண்டு எந்த வகையிலும் அரசியல் ஆதாயம் பெறமுயற்சிக்க மாட்டோம்” என்று உத்தரவாதம் அளித்திருந்தார் புஷ். இன்னும் ஒருபடி மேலேபோய், புஷ்ஷின் தகவல் நிர்வாக உதவியாளர் கரேன் ஹ்யூஸ் இந்த விளம்பரங்கள் கலைரீதியாகவும், அழுத்தம் திருத்தமாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று புளகாங்கிதமடைந்திருக்கிறார். சந்தேகத்திற்கு இடமின்றி இது தியணைப்புப் படையினர் (இவர்களின் கூட்டமைப்பு புஷ்க்கு எதிராகப் போட்டியிடவிருக்கின்ற செனட்டர் கேரியை ஆதரிப்பதாகச் சொல்லிவிட்டது), விபத்தில் மரணமடைந்தவர்கள் உறவினர்களிடையேயும் பலத்த எதிர்ப்பையும், வெறுப்பையும் பெற்றிருக்கிறது.

    ஆனால், புஷ் தரப்பு கிட்டத்தட்ட உறுதியாகச் சொல்லிவிட்டது: “இந்த விளம்பரங்கள் கட்டாயம் தொடரும். மக்களுக்குக் கடினமான நேரத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்”. இந்த விளம்பரங்களுக்குக் கிடைக்கவிருக்கும் எதிர்ப்பையும் அவர்கள் கட்டாயம் கணக்கிலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, பரபரப்பாக மக்கள் செப்டம்பர் 11ஐப் பற்றி அதிகம் பேசப்பேச அது புஷ்க்கு ஆதரவை அதிகரிக்கும். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால்; மக்கள் தற்பொழுதைய பிரச்சனைகளான தொடரும் மத்தியக் கிழக்குப் போர்கள், வேலைவாய்ப்புக் குறைவு, சரிந்துவரும் டாலர் மதிப்பு, குறைந்துவரும் அரசாங்க நிதிமூலம், தொடர்ச்சியான புஷ்ஷின் பொய்கள், இன்னும் புஷ்ஷின் அடிப்படை முட்டாள்குணம் எல்லாம் மறக்கப்படும்/ மன்னிக்கப்படும் என்பது அவர்களின் கணிப்பு.

    பிணங்களுக்கு அமெரிக்க மண்ணில் என்ன மதிப்பிருக்கிறது என்பதைக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    - – -

    0 Responses to பிணம் தரும் ஓட்டு

    1. செமா
      March 5, 2004 at 2:12 pm

      வெங்கட்

      “பிணம் தரும் ஓட்டு” சொடுக்கினால் Object Not Found – Error 404 வருகிறது.

    2. prabhu
      March 5, 2004 at 10:39 pm

      எதிர்பார்த்ததுதான்….வணிகத்தில் விளம்பரதாரர்கள், எந்தவிதமான தங்களது விளம்பரத்தையும் நியாபபடுத்தும் பொழுது…அரசியலிலும் அது சகஜமாகி விடும். ஏனெனில், விளம்பரங்களை வடிவமைக்கும் மற்றும் ஆலோசகர்கள் இரண்டு துறையிலும் ஒன்றே!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *