• நிறக்குருடு – தகவமை ஒளியிய&#

    by  • June 16, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    என்னுடைய குவாண்டம் கணினி புத்தகத்தில் வருங்காலத்தில் முக்கியமான தொழில்நுட்பங்களில் ஒன்றாக தகவமை ஒளியியலைப் (Adaptive Optics) பற்றிய ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். சாதாரணமாக நல்ல பார்வை உள்ளவர்களுக்கும் தகவமை ஒளியியல் நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கண்ணாடிகளைத் தருவதன் மூலம் அவருடைய பார்வைய உயர்த்த முடியும் என்பது ‘அதிபார்வை’ என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கட்டுரையின் முக்கிய தகவல். அதாவது, இது நாள் வரை நாம் இயற்கையாக மனிதனின் பார்வைத் திறன் என்று அறிந்திருந்ததை இன்னும் கொஞ்சம் நீட்டித்து கண்ணின் செயல்பாட்டை மேம்படுத்துவது.

    color cones அந்தக் கட்டுரையின் கதாநாயகர் டாக்டர் டேவ் வில்லியம்ஸ் (ரோச்செஸ்டர் பல்கலைக்கழகம்) குழுவிலிருந்து இப்பொழுது இன்னும் சில முன்னேற்றங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. நிறக்குருடு (Colour Blindness) உள்ள மனிதர்களுக்கு சாதாரணமான மனிதர்களின் விழித்திரை கூம்புகளில் (Retinal Cones) இருப்பதில் மூன்றில் ஒரு பங்கு சிதிலமடைந்திருப்பது தகவமை ஒளியியல் கருவிகளைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மனிதனின் வண்ணம் காணும் திறனுக்கு அவன் விழித்திரையில் (Retina) இருக்கும் கூம்புவடிவ செல்கள்தான் காரணம். (இன்னொரு வகை விழித்திரை செல்கள் தடி வடிவம் (Rod Cells) கொண்டவை, இவை குறைந்த வெளிச்சத்தில் பார்க்க உதவுகின்றன. குறைந்த வெளிச்சத்தில் எல்லாமே கிட்டத்தட்ட கறுப்பு-வெளுப்பைப் போலக் காட்சியளிப்பதைக் கண்டிருக்கிறீர்களா?). கூம்புச் செல்கள் ஓரளவுக்கு அதிக வெளிச்சத்தில்தான் செயல்படும். இந்தக் கூம்புச் செல்களில் மூன்று வகை உண்டு. இவை குறைந்த, நடு, உயர் அலைநீள வண்ணங்களை உணர்கின்றன. (படத்தில் முறையே S, M, L-Cones என்று காட்டப்படிருக்கின்றன) கூம்புச் செல்களுள் சில பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறக்குருட்டு உண்டாகிறது.

    ஆனால், பார்வை குறைந்து நிறைய நாளான பிறகுதான் நாம் இதை உணர்கிறோம் (கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்). இன்றைக்கு மருத்துவத்தில் இருக்கும் நோய்காணும் தொழில்நுட்பங்களும் இதை ஆரம்பகட்டத்தில் அறிய ஏற்றவையாக இல்லை. இப்பொழுது ரோச்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடித்திருக்கும் கருவியைக் கொண்டு ஆராயும் பொழுது பார்வை மங்கியவர்களுக்கு ஏற்கனவே மூன்றில் ஒருபங்கு கூம்புச் செல்கள் சிதிலமடைந்திருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.

    வேறு வார்த்தைகளில் சொன்னால், இப்படி முற்றிய நிலையில் இல்லாமல் ஆரம்பகட்டத்திலேயே இதை இனிமேல் அடையாளம் காணமுடியும்.

    என்னுடைய கணிப்பின்படி வருங்காலத்தில் தகவமை ஒளியியல் நம்முடைய கண் மருத்துவத்தையும், காட்சி சாதனங்கள் (தொலைக்காட்சி, சினிமா போன்றவை) முற்றாக மாற்றியமைத்து மேம்படுத்தித் தரவிருக்கிறது.

    இது பற்றிய செய்தி

    பேரா. டேவிட் வில்லியம்ஸ் ஆய்வகத்தின் இணையதளம்.

    0 Responses to நிறக்குருடு – தகவமை ஒளியிய&#

    1. Kumaraguru
      June 17, 2004 at 11:10 pm

      Dr.Venkat, I guess you’ve heard about the recent breakthrough in deterministic quantum teleportation with *atoms* (not photons). [ http://www.nature.com/nature/links/040617/040617-1.html ]

      This is certainly a big news. I would like to hear more on it from the scientist in you!!!. Hope, you write an interesting piece on this subject (Quantum entanglement, Quantum teleportation, Quantum cryptography). :-)

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *