• நாய் வண்டி – 2

    by  • March 28, 2004 • நகைச்சுவை • 0 Comments

    pet_stroller_suv.png வீட்டில் வளர்ப்பு மிருகங்களை வைத்துக்கொள்வது காலம் காலமாக எல்லா சமூகங்களிலும் இருந்துவருகிறது. தற்கால வளர்ச்சியடைந்த சமூகக் (ஐரோப்பா, வடஅமெரிக்கா, குறிப்பாக) குடும்பங்களில் வளர்ப்புப் பிராணிகளின் இடம் மிகவும் முக்கியமானது. எனக்குத் தெரிந்து ஒரிரண்டு குடும்பங்களில் குழந்தைகளுக்குப் பதிலாக நாயையும், பூனையையும் வளர்த்து வருகிறார்கள். இதில் குறிப்பாக பிரெஞ்சு பேசும் என்னுடைய நண்பர் ஒருவர் குடும்பத்தில் அவருடைய நாய்க்குச் செலவிடும் பணம், நான் என்னுடைய குழந்தை ஒருவனுக்குச் செலவிடுவதைவிட அதிகம். சென்ற கோடையில் ஒரு முழுப்பயணிக்கான செலவில் அவருடைய நாய் Pet Taxi என்று சொல்லப்படும் எடுத்துச்செல்லும் கூண்டில் பஹாமாஸ் பயணித்து வந்தது. காலை மாலை வேளைகளில் நாய்களை அழைத்துச் செல்பவர்கள் கையில் கூடவே ஒரு பாலித்தீன் பையைக் கொண்டு செல்வதைப் பார்க்கலாம். Stoop and Scoop என்பது எங்கள் உள்ளூர் விதி. சராசரியாக நாயுடன் நடப்பவர்களின் நடையும் முகபாவனைகளும் காலகட்டத்தில் அவர்கள் நாயைப் போலவே ஒருங்கமைகிறது என்பது புள்ளியியல் நிதர்சனம். வளர்பிராணிகளை (சிலருக்கு அவர்கள் செல்லத்தைப் பிராணி என்று சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது, அதற்கு, மன்னிக்கவும், அவன்/அவள் பெயரைச் சொல்லித்தான் விளிக்க வேண்டும்) இந்த நாடுகளில் பராமரிக்கும் முறைகளைப் பார்த்தால் நமக்குத் தலையைச் சுற்றும். அதற்கு டிசைனர் துணிகள், முப்பத்தாறுவித ஊட்டச் சத்துக்கள் பொதிந்து, “பாப்பா விரும்பிடுமே இதன் மொறமொறப்பை” என்று விளம்பரப்படுத்தப்படும் நம்ம ஊர் பார்லே குளுகோஸ் பிஸ்கெட்டெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் high protein, low-carb diet, calcium-rich milk, free from genetically modified ingredients, என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படும் பிராணி உணவுகளின் ஒரு மாதச் செலவிட என்னுடைய எம்.எஸ்.ஸி படிப்பிற்கு என் அப்பா குறைவாகத்தான் செலவழித்திருப்பார் என்பது நிச்சயம்.

    இப்பொழுது “வந்ததே உன்னதம், செல்லப்பிராணி உலகில்” என்று புதிதாக உதயமாகியிருப்பதுதான் தலைப்பில் இருக்கும் ‘நாய் வண்டி’. சுருக்கமாக, நடத்தி அழைத்துச் சொல்லும்பொழுது இருக்கும் கொசுத்தொல்லை, நடப்பதால் உண்டாகும் கால்வலி இவற்றிலிருந்து நாய்களைக் காப்பாற்ற வடிவமைக்கப்பட்டதுதான் இந்த வண்டி. கூடவே, அதன் எஜமானனின் சமூக அந்தஸ்தைப் பறைசாற்றிக் கொள்ளவும்தான். இதன் விசேட அம்சங்களை இப்படி விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்;

    1. நகரத்தின் நெரிசல்களுக்கும், பூங்காக்களுக்கும், ஏன் சிக்கல் நிறைந்த மலைப்பாதைகளுக்கும், காடுகளுக்கும், கடற்கரைகளுக்கும் ஏற்றது.

    2. இதன் எட்டங்குல அகன்ற சக்கரம் எல்லா திசைகளிலும் எளிதாக வலிக்க ஏற்றது.

    3. எடையற்ற இதன் அடைகூட்டினைத் தனியாகப் பிரித்து வாகனப்பயணங்களில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்லமுடியும்.

    4. உங்கள் செல்லம் இடுப்பு மற்றும் மூட்டு உபாதைகளால் அவதிப்படும் நேரத்தில் எளிதில் மிருகவைத்தியரிடம் அழைத்துச் செல்ல உதவியானது.

    5. துருப்பிடிக்காத, நீடித்த உலோகத்தினாலும், உயர்ந்த ABS பிளாஸ்டிக்கினாலும், நீர்த்தடையுள்ள பிரத்தியேகத் துணிகளினாலும் செய்யப்பட்டது.

    6. அடைகூடு காற்றோட்டமுள்ள வலையிடப்பட்ட துணியாலானது, தேவையான சமயங்களில் உங்கள் செல்லத்தின் தனிமைக்கு ஏற்றதும் கூட.

    7. தவிர்க்க முடியாத நேரங்களில் சலவைத்துணி சுமக்கவும், மளிகை சாமன் வாங்கிவரவும் பயன்படுத்தலாம்.

    8. அதி சௌகரியமான ஒரு அங்குல, துவைத்துத் தூய்மையாக்க வல்ல மெத்தையும் உண்டு.

    9. வண்டியின் பின்புறப்பையில் வண்டியின் சாவி, கழுத்துப்பட்டை, தண்ணீர் பாட்டில் போன்றவற்றை வசதியாக எடுத்துச் செல்லலாம்.

    10 எளிதில் இயக்கவல்ல முன்/பின்புறக் கதவுகள்.

    இதையெல்லாம் படிக்கும்பொழுது அத்வானியின் பாரத் உதய் யாத்ரா நினைவில் வருவது தவிர்க்க முடியாததாகிறது. ஒரே ஒரு வித்தியாசம், இதில் பயணிக்கும் நாய் அத்வானியைப் போலக் கூழைக் கும்பிடு போடவேண்டிய அவசியமில்லை.

    * * *

    நான் சிறியவனாக இருக்கும்பொழுது ஒரு செல்லநாய் இருந்தது. தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும், வேளாவோளைக்கு வீட்டிற்கு முன்வந்து நிற்கும். என் அம்மா இருக்கும் சாப்பாட்டில் அதற்கும் ஒரு கவளம் எடுத்துவைப்பாள் (அது மோர்க்குழம்பு, மிளகு ரசம், பழைய சாதம் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்), “ம். கொட்டிக்க வந்துட்டியா, தின்னு தொலை” என்று சொல்லிவிட்டு தரையில்தான் போடுவாள், அவுக் அவுக்கென்று எச்சில் ஒழுகத் தின்றுவிட்டு, வாசலில் இரண்டு நிமிடம் நின்றுவிட்டு மறைந்துபோய்விடும். என்றைக்காவது இரண்டாவது காட்சி சினிமா பார்த்துவிட்டு வந்தால் அது என் வீட்டு வாசலில் சுருண்டு படுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதற்கும் எங்களுக்கும் இதைத்தவிர வேறு எந்தவிதமான நெருக்கமும் கிடையாது. என்றாலும் எங்கள் தெருவில் அதற்குப் பெயர் “வாத்தியார் வீட்டு நாய்”. நாங்கள் அனந்தபத்மநாபன் என்று பெயரிட்டுச் செல்லமாக பன் என்று அழைப்போம்.

    ஒரு நாள் வாத்தியார் விட்டு நாய், காய்ந்துகிடக்கும் காவிரியின் மணல் பரப்பில் மலத்தை முகர்ந்துகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டேன். அன்று இரவு, “டேய், இதக்கொண்டுபோய் அந்தக் கடங்காரனுக்குப் போட்டுட்டுவா, கையழிஞ்சு போறத்துக்குள்ள கத்தித் தீத்துடும் சனி” என்று சொன்ன அம்மாவிடம், “அம்மா, அத வீட்டுக்கிட்ட உடாத, மத்தியானம் டபீர் படித்தொறைக்குப் பக்கத்துல கக்கூஸ மோந்துண்டு நின்னுன்டுருந்தது” என்று சொன்னேன். “ஆமாண்டா, பெரிய இவன், கண்டுட்டான், நாய்ன்னா பீயத் திங்காம என்ன செய்யும், அதுக்காக நாம போட்ற கவளத்தை நிறுத்த முடியுமா” என்று கடிந்துகொண்டாள். சரியாகப் புரியாவிட்டாலும், அதன் குரைப்பை நிறுத்தலாம் என்று அம்மா கொடுத்த சோற்றைப் போய்ப் போட்டுவிட்டு வந்தேன்.

    பல வருடங்கள் கழிந்த்து, இப்பொழுது என் அம்மாவின் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிகிறது. மனிதனுக்கு குழந்தைக்கு மாற்றாகவோ, குழந்தைக்குப் பொம்மையாகவோ வேண்டியிருக்கிறது என்பதற்காகக் கயிற்றால் கட்டிப்போடுகிறோம். கட்டும் கயிறு முதலில் மணிக்கயிறாக மாறுகிறது. கழுத்துப்பட்டை நல்ல தோலால் செய்திருக்க வேண்டும், அதில் உலோகப் பொத்தான்கள் பதித்திருக்க வேண்டும் என்று தொடருகிறது. பின்னர், அது low-carb, high calcium உணவாகப் பரிணமிக்கிறது.

    எட்டங்குலச் சக்கர வண்டியில், உலோகக்கலவைக் கைப்பிடியில், நீரில் நனையாத துணியை உடுத்திக்கொண்டு, நடைக்கு ‘இழுத்துச்’ செல்லப்படும் நாய்…?

    * * *

    பரிணாமத்தில் மனிதன் இறுதியல்ல என்பதை தீர்மானமாக நம்புபவன் நான். நாளை தங்கக் கம்பி போட்ட இழுவண்டி மனிதனுக்குக் கிடைக்கக்கூடும்.

    0 Responses to நாய் வண்டி – 2

    1. Thangamani
      March 30, 2004 at 12:02 pm

      உங்கள் நாய்க் கட்டுரைகள் நன்றாக இருக்கின்றன. நகைச்சுவையும் கிண்டலும் சிரிப்பை வரவழைக்கின்றன. இக்கட்டுரை காட்டும் பக்கம் உண்மையென்றாலும், செல்லப் பிராணிகள் நம்மீது வைக்கும் அன்பும், சிலர் அவற்றின் மீது வைக்கும் அன்பும் எதற்கும் குறைந்ததல்ல.

    2. Muthu
      March 31, 2004 at 11:45 am

      //இதையெல்லாம் படிக்கும்பொழுது அத்வானியின் பாரத் உதய் யாத்ரா நினைவில் வருவது தவிர்க்க முடியாததாகிறது. ஒரே ஒரு வித்தியாசம், இதில் பயணிக்கும் நாய் அத்வானியைப் போலக் கூழைக் கும்பிடு போடவேண்டிய அவசியமில்லை. //

      ஏனோ தெரியவில்லை … உங்களின் நாய் முதல் பாகம் வண்டி படித்தபோது தேர்தல் ஞாபகம் வந்தது ..

      அதைத்தான் எழுதியிருக்கிறீர்களோ என அவ்வப்போது

      சந்தேகம் வந்தது … :)

    3. ismail kani -þŠÁ¡Â¢ø ¸É¢
      April 1, 2004 at 3:31 am

      நாய்கள் சோறுக்காக (கும்பிடு போடாமல்)குரைக்கின்றன. யாத்திரை வண்டியில் வரும் அரசியல்வாதிகள் கும்பிடு போட்டு, ஓட்டுக் கேட்டு குரைப்பார்கள்.

      =இஸ்மாயில் கனி

      கும்பகோணம்

    4. வெங்க&#297
      April 3, 2004 at 8:37 pm

      தங்கமணி – நான் செல்லப்பிராணிகளின் மீது காட்டும் அன்பைக் குறைத்துச் சொல்லவில்லை. பல சமயங்களில் நாய்க்குப் பட்டாடை அணிவித்து நடத்திச் செல்லும்பொழுது கூடவே நம்முடைய விழுமியங்களையும் (கம்பத்தைக் கண்டால் கால் தூக்காதே) அதன்மேல் சுமத்துகிறோம் அல்லவா. தங்கக் கம்பியாலான சிறையல்லவா?

      மறுபுறம் என்னுடைய அம்மா சொன்னதை நினைத்து எனக்கு இன்றைக்கும் பெருமையாக இருக்கிறது. ‘அது நாய், நாயாகவே இருந்துவிட்டுப் போகட்டும் (மலத்தை முகர்த்தல் எந்தத் தவறுமில்லை). என்னுடைய வீட்டுக்கு வரும்பொழுது அதை வாயிலில் நிறுத்தி என்னிடமிருக்கும் சோற்றில் ஒரு கவளத்தை அதற்குத் தருவேன்’. – எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் அந்த ஜீவனிடம் என் அம்மா காட்டிய அன்பு எனக்கு இன்னும் ஒருபடி மேலே உயர்ந்ததாகத் தெரிகிறது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *