நாத்திகம் பயில் ?
by வெங்கட் • May 21, 2004 • பொது • 0 Comments
என்னுடைய நண்பன் அருள்செல்வன் வலைக்குறிப்பில் “நாத்திகம் பயில்” என்று தலைப்பிட்டு நாத்திகத்தின் தேவையைக் காட்டியிருக்கிறார். அது தொடர்பாக என்னுடைய கருத்துகள்.
* * *
அருள் சொல்லியிருப்பதில் பல உண்மைகள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் 99% “கட்டமைக்கப்பட்ட ஆத்திகத்தினால்” (சமயம், மதம், சடங்கு) விளைபவை. இறையுணர்வுக்கு எதிரானது நாத்திகம் என்று கொண்டால் உங்கள் கூற்றுகள் முற்றறுதி உண்மையல்லன. ஒரே ஒரு விஷயம்;
>எந்த முன்முடிபுகள் மிக்க சுமைதாங்கி களையும் அவனுக்கு அது அளிப்பதில்லை. அவன் சுமையை அவன் தான் சுமக்க வேண்டும். இரக்கம் கொண்டு கடைத்தேற்ற யாரும் எதுவும் இல்லை.
மாத்திரமே கடவுளின் இருப்பு/இன்மையை சதவீதத்தில் மனிதருக்குள்ளே மாற்றிக்கொண்டே இருக்கிறது. விழைவுகளுக்கு அப்பால் வினைகளின் விளைவுகள் நீளும்பொழுது விதியைத் துணைக்கழைக்கவும் சாய்ந்துகொள்ளத் தோள் தேடவும் தோன்றுகிறது. ஆனால், இயலாமையின் ஊன்றுகோல்தான் இறையுணர்வு என்று சுருக்கிவிட முடியாது. “காயேனுவாஸா மனஸேந்திரியேவா… ஸர்வம் ஸகலம் ப்ரம்மார்ப்பணமஸ்து” (மெய்யாலும் மனத்தாலும் செய்யப்படும் காரியங்கள் எல்லாவற்றையும் இறைவனுக்கே அர்பணிக்கிறேன்)என்பதுதான் இறையுணர்வின் உண்மையான வரையறை என்று என் அயலில் இருந்த ஒரு பெரியவர் சொல்லுவார். இந்தக் கூற்றை சற்றே மாற்றிப்பார்த்தால் மெய்யாலும் மனத்தாலும் செய்யப்படும் அனைத்திற்கும் நானே பொறுப்பாகிறேன் என்று சொல்வது நாத்திகம். நம்முடைய ஞானமார்க்கத்தில் “அஹம் ப்ரம்மாஸ்மி” என்றும் வருகிறது. எனவே நானோ பொறுப்பாகிறேன் என்று சொல்வதும் எல்லாம் இறைவனே என்று சொல்வதும் ஒன்றாகிப்போகிறது. நாத்திகமும் ஆத்திகமும் ஒரு புள்ளியில் ஒருங்கி ஒடுங்கிப்போகின்றன. புள்ளியில் ஒடுங்கும் அனைத்திற்கும் ஈர்ப்புவிசை அளவிலடங்காதது. எனவேதான் நீங்கள் சொன்னபடி முழுமையான நாத்திகனாவது கடினமான செயலாக இருக்கிறது.
நிறுவனமாக்கப்பட்ட ஆன்மிகத்தைப் போலவே, நிறுவனமாக்கப்பட்ட நாத்திகமும் நீங்கள் சொல்லியிருக்கும் உன்னதத்தை அடையவிடாமல் தடுக்கின்றன. விடுபட்ட இறையுணர்வும் பல உன்னதங்களுக்கு வழிகாட்டுகிறது. ஆனால் “விடுபட்ட இறையுணர்வு” என்பது ஒரு சொல்முரண்தானே
. இந்த நிலையிலும் ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் பெரிதும் வித்தியாசமில்லாமல் போய்விடுகிறது.
மனித குலத்தின் இரண்டு ஈடு இணையற்ற கண்டுபிடிப்புகள் கடவுளும் பணமும். இரண்டிலும் நூறு சதவீத இருப்பையும், இன்மையையும் கைக்கொள்ளல் இயலாத காரியமாகவே தோன்றுகிறது. (இதைப் பற்றி தனியாக).
I hate to say this; Everyone is an agnost, only the percentage varies in time between and within individuals.
(நானும் கடந்த பத்து வருடங்களாக Agnost க்குத் தமிழ்ப் பதத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன். இல்லை இப்படியரு கருத்து நம் தர்க்கப் பரம்பரையில் வரையறுக்கப்படவில்லையா?)
Agonist – என்பதற்கு அஞ்ஞானி என்ற சொல் பொருத்தமானது என்று தோன்றுகிறது.
கடவுள் இருக்கிறார் என்பவர் – ஆத்திகர் (theist)
கடவுள் இல்லையென்பவர் – நாத்திகர் (atheist)
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைச் சொல்லமுடியாது என்பவர் – agnost (அஞ்ஞானி ? )
கோவிந்த தாமோதர மாதவேதி!!!
தோ வந்துட்டேன்.. தோ வந்துட்டேன்..
ஜெயஜெய ராதா, ஹர ஹர கிருஷ்ணா
வாங்கோ வாங்கோ மாதவம்
வரத்துக்கு எதுக்கு தாமதம்!!
மசாலாவிலிருந்து கொஞ்சம், தொடர்த்தன்மை இல்லை என்று நினைத்தால் மன்னிக்கவும்
1.ஞானிகள் எல்லோரும் கடவுளுக்கு ப்ரோ? அது ஏன்?
அல்லது ஓரிறைக் கொள்கைக்காவது -ப்ரோ.
அதாவது இறையின் மீதும், இறைக்கொள்கை மீதும் சார்புடையவர்களாக எளிதில் காணலாம்.
யாரை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். பக்கம் பக்கமாக எழுதியிருப்பார்கள் அல்லது இறையைப் பற்றி நிறைய விளக்கங்களைப் பேசி, அவற்றை அருகிலிருப்ப்வர்கள் எழுதியிருப்பார்கள்.
மதம் இங்கு சம்பந்தமேயில்லை. உதாரணம், மாணிக்கவாசகர்(சைவர்), ஆண்டாள்(வைணவர்,பெண்),
ஏசுபிரான்(பேசி பிறர் எழுதியவை, கிருத்தவர்), புத்தரும் , மகாவீரரும் அவ்வாறே, நிறைய பேசியவர்கள். அது போலவே முகம்மது ஸல் அவர்களும்.
2. நாத்திகர்களில் யாரவது ஞானி உண்டா? அப்படியே உண்டு என்று சொன்னால், அவர் வாழ்வின் மிக உயர்ந்த நிலையாகிய , விடுபட்டத் தன்மையை இந்த அளவுக்கு பேசியோ எழுதியோ உள்ளனரா, என்பது மிகவும் யோசிக்க வேண்டிய கேள்வி. ஆனால் அவசியக் கேள்வி.
நாத்திக சிந்தனையாளர்கள், இந்த சாதாரண தினசரி வாழ்வைப் பற்றி பக்கம் பக்கமாக பேசுவார்கள். எழுதியுமிருப்பார்கள். அதற்கு ஒரு பெரிய சிந்தனையாளன் தேவையில்லை என்பது என் தெளிபு. ஏன்? பல உதாரணங்களைக் காட்டலாம். கடவுள் அடிப்படையை சாதரணமாய் எற்றுக் கொண்ட எத்தனையோ மிகப்பெரும் பணக்காரர்களை காட்டலாம். எனவே சாதாரண வாழ்வில் வெற்றி பெற (அதாவது வெற்றி என்று உலகத்தால் அழைக்கப்படும் அளவுக்கு பணத்தைப் பெற) நாத்திக சிந்தனை அவசியமே இல்லை என்றாகிறது. இன்னொரு அதி முக்கியமான விஷயம், இதற்கு ஆத்திகமும் அவசியமற்றது.
எனவே என்னால் இப்படிச் சொல்ல முடியும். நாத்திகம் மனதை பண்படுத்தும் அளவுக்கு ஆத்திகத்தால் செய்ய முடியும். ஆனால் பிரச்சினை அதுவல்ல.
இந்த சாதாரண வாழ்வியல் சாராத கேள்விகளுக்கு விடைகாண, கடவுள் தத்துவத்தால் முயல்கிறது ஆத்திகம். ஆனால் விடை கண்டுவிட்டதா? என்ற கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது? இதே கேள்வியை நாத்திகமும் ஆத்திகத்தை குறைசொல்ல மிக ஆதாரப்பூர்வமாய் உபயோகித்துக் கொள்கிறது. எனவே வாழ்வியல் சாராத, அதி அமானுஷ்ய கேள்விகளுக்கு விடை தெரியாத ஒரு கூத்தை எடுத்துக் கொண்டால், அதில் ஆத்திகரும் நாத்திகரும் ஒரே இடத்தில் தான் நிற்கின்றனர். இவர்களுக்குள் இவர்கள். இருக்கு இல்லை என்று அடித்துக் கொள்வது , பார்த்து ரசிக்க கூடிய ஒரு அற்புதக் காட்சி.
3.அதி அமானுஷ்யம் என்பது பேயோ பிசாசோ அல்ல. வெளி காலம் என்று பேசப்படும், வாழ்வியல் சாராத ஆனால் மனித அறிவுக்கு என்றுமே சவாலைத் தரக் கூடிய
விடயங்களாம்.
4. ஆனால் , நான் மேலே சொன்ன, ஞானிகள் என்று நத்திகர்களாலும் ஒத்துக் கொள்ளக் கூடியவர்கள், இந்த காலம், வெளி போன்றவற்றை வெகு எளிதில் எடுத்து தமது பாடல்களிலும் உரைகளிலும் கையாண்டிருப்பதைக் வெகு இடங்களில் காணலாம். உதாரணம், திருமூலர்.
எனவே திருமூலர் செய்ததைச் செய்தால் நாமும் அந் நிலைக்கு செல்ல முடியும் என்பது வாத்துக்கு ஒத்துக் கொள்ளகூடியதாம். ஆனால் சிக்கல் அவர் என்ன செய்தார் என்று நமக்கு தெரியாதது தான்.
5.விடை தேட முயல்பவர்கள் , இவர்களை விட ஒரு தட்டு மேல். இவர்களுக்கும் விடை கிடைத்ததா? என்ற கேள்வி இவர்கள் சாகும் வரையில் இவர்கள் இதயத்தில் இருந்து , இவர்கள் செத்தாலும், கேள்வி மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும்.
மற்றவை விரைவில்…
//அதி அமானுஷ்ய கேள்விகளுக்கு விடை தெரியாத ஒரு *கூத்தை* எடுத்துக் கொண்டால், //
அதி அமானுஷ்ய கேள்விகளுக்கு விடை தெரியாத ஒரு *கூட்டத்தை* எடுத்துக் கொண்டால்,
பத்தி 4 -ல்
//என்பது வாத்துக்கு//
*என்பது வாதத்துக்கு *
:- )