தமிழும், ஜப்பானும் ரஜினி ஊ
by வெங்கட் • August 20, 2004 • ஜப்பான் • 0 Comments
கொஞ்சம் கொஞ்சமாக இந்த ரஜினி ஆர்வம் தமிழ்-தமிழர்கள்-தமிழ்நாடு என்ற மொழி-குழு-இடம் பற்றிய ஆவலாக மாறியது. இதற்கு முக்கிய காரணம் – வியாபாரிகள். இவர்களைப் பற்றி கொஞ்சம் விலாவரியாகப் பார்க்க வேண்டும்.
முத்து திரைப்படத்தை முதலில் ஜப்பானுக்கு அனுப்பிவைத்தவர்கள் சிங்கப்பூர், மலேஷியாவில் அந்தப் படத்தின் உரிமையைப் பெற்றிருந்தவர்கள்தான். 1998-99 வாக்கில் புள்ளிவணி குமிழி உச்சத்திலிருந்தபொழுது ஜப்பானியர்களுக்கு ஏன் இந்தியர்களை வைத்துக்கொண்டு அமெரிக்கா எழுதும் மென்கலன்களுக்கு அதிகவிலை தரவேண்டும், அந்த இந்தியர்களையே இங்கே கொண்டுவந்து மென்கலன் துறையை வளர்க்கலாமே என்ற அபிப்பிராயம் எழுந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மென்கலன் புரியும் இளைஞர் பட்டாளம் ஜப்பானுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. கையில் அதிகமான பணமும் கவலைகளற்ற மனமும் கொண்ட மென்கலன்காரர்களுக்குப் பொழுதுபோக்கு மிகவும் முக்கியம் (இவர்கள் ஒரிஜினல் இந்திய ஏற்றுமதி சரக்கான கல்வித்துறை, ஆராய்ச்சிக்காரர்களிலிருந்து மிகவும் வித்தியாசமானவர்கள். வயது குறைவு, குடும்பபாரம் குறைவு, பணம் அதிகம்). இவர்களுக்கு இந்திய சாப்பாடும், சினிமாவும் மிகவும் முக்கியம். இவர்களுக்குத் தீனிபோடத்தான் முத்து டோக்கியோ வந்தார். சிங்கப்பூர் வியாபாரிகள் இது இரண்டு மூன்று நாட்கள் ஓடும் என்றுதான் எதிர்ப்பார்த்தார்கள். ஓடியவரை ஆதாயம்தானே.
ஆனால் படம் பிய்த்துக் கொண்டுபோகத் தொடங்கியதும் இந்த வியாபாரிகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதே நிலைமை ஹாலிவுட் படத்திற்கு வந்திருந்தால் அது வேறு விதமாக மாறியிருக்கும். உடனடியாக, சீரமைக்கப்பட்ட வகையில் படம் சம்பந்தப்பட்ட நெறிப்படுத்தப்பட்ட வியாபாரச் சரக்குகள் (Franchised merchandise) வியாபாரம் தொடங்கும். உதாரணமாக ஸ்பைடர்மேன் போன்ற படங்களையட்டி டி-சட்டைகள், சாவிக்கொத்துகள் தொடங்கி, கணினி குறுவட்டுகள், எக்ஸ்-பாக்ஸ் விளையாட்டுகள் போன்று எல்லா வகையிலும் அந்தப் பிரபலத்தை வைத்துக் கொண்டு என்ன கறக்கமுடியுமோ அதைக் காம்பில் இரத்தம் வர நுகர்வோரிடமிருந்து கறந்துவிடுவார்கள்.
நம் வியாபாரிகளுக்கு அந்தக் கறவைத் தந்திரம் எல்லாம் தெரியாது. எனவே, இவர்களை ‘ஒத்திக்கப்பா’ என்று சொல்லிவிட்டு, ஜப்பானியர்களே இதைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். ஜப்பானுக்குள்ளேயே இதையட்டி வரைமுறையில்லாமல் பல குட்டி வியாபாரிகள் “ரஜினி பிராண்டை”ப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். எல்லா முன்னேறிய நாடுகளிலுமே மக்களுக்கு வீசியெறி பணம் (Disposable income) இருக்கும். இவர்கள் மொத்த வருமானத்தில் அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகள் மிகவும் குறைவுதான். உதாரணமாக தலா ஐயாயிரம் அமெரிக்க டாலர்கள் என்று சம்பாதிக்கும் கணவன்-மனைவி மக்டோனால் போய் மூக்குபிடிக்கச் சாப்பிட்டால் இருபது டாலர்கள் செலவழியும். இந்த வீசியெறி பணத்தைக் குறிவைத்துதான் சந்தைகள் செயல்படுகின்றன. இன்றைக்கு சுருட்டை முடி பாஷன், நாளைக்கு மொட்டைத் தலை என்று மாறும். மயிரைச் சுருட்டி ஒருவர் பணம் சம்பாதிப்பார், மறுநாள் அதைச் சிரைத்து இன்னொருவர் பணம் பண்ணுவார். ஜப்பானில் இது கொஞ்சம் அதிகமாகவே உண்டு.
போன பகுதியில் நான் போட்டிருந்த பெண்கள் படத்தைப் பார்த்தாலே தெரியும், கட்டைச் செருப்பு, செம்பட்டைத் தலைமயிர், லுங்கிபோன்ற உடை இதில் எதுவுமே ஜப்பானுக்குச் சொந்தமில்லை. இந்தக் கட்டைச் செருப்பையும், தலைமயிருக்குப் பூசும் கலரையும் போலத்தான் ஜப்பானியர்களுக்கு ரஜினிகாந்த்.
வியாபாரம் அமோகமாகத் தொடங்கியது, ரஜினி படம்போட்ட டி-சட்டைகள், தொப்பிகள், சினிமா போஸ்டர்கள், பெண்கள் செல்பேசியில் தொங்கவிட சிறு ரஜினி பொம்மைகள், சட்டையிலும் பையிலும் குத்திக்கொள்ள ரஜினி பேட்ஜ்கள், ரஜினி படம்போட்ட செருப்புகள், கைப்பைகள், வியர்வை துடைக்கும் கைக்குட்டைகள், தலையில் கட்டிக்கொள்ளும் பந்தானாக்கள் என்று புற்றீசல் புறப்பட்டதுபோல திருவிழாக்கடை சாமான்கள் விற்கத் தொடங்கின.
இதில் இன்னொருபடி மேலேபோய் ஜப்பானில் மிகவும் பிரபலமான அஸாகி டிவியில், பெரும்பாலும் ஜப்பானியர்கள் மாத்திரம் குடிக்கும், சற்றே கசப்பான பச்சைத் தேயிலை (Green Tea) விற்பனைக்கு சங்கவியையும் இன்னொரு நடிகரையும் (இவர் மேஜர் சுந்தரராஜனின் பையனா என்று தெரியவில்லை, வானமே எல்லை என்ற பாலச்சந்தர் படத்தில் நடித்திருந்தார்) பரதநாட்டிய உடையில் டோக்கியோ நகரில் ஆடவைத்து விளம்பரம் எடுத்தார்கள். “பறவை போன்றது உள்ளம்; அது சிறகை விரிக்கிறதே..” என்று தொடங்கி இருவரும் ஆட, இருபத்தேழாவது நொடியில் தமிழிலிருந்து ஜப்பானிய மொழிக்குத் தாவி “… ஓச்சானோ நொமிமாஸ்” (… (பிராண்ட்) பச்சைத் தேயிலையைக் குடிக்கிறோம் (நாங்கள்)” என்று முடியும் விளம்பரம் சில நாட்களுக்குத் தொலைக்காட்சியில் வந்துகொண்டிருந்தது. இதைத் தவிர அஸாகி தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மதியம் இரண்டுமணி வாக்கில் வரும் ஒரு பெயர் தெரியாத ஒருமணி நேர அரட்டை நிகழ்ச்சி கிட்டத்தட்ட தமிழ்நாடு, தமிழ் மக்களைப்பற்றியது என்றாகிப்போனது. இந்த நிகழ்ச்சிகளில் 99 சதவீதம் கோடம்பாக்கத்தைச் சுற்றியே எடுக்கப்பட்டிருக்கும். அங்கே எப்படி தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள், குழுவில் ஆடும் 74 பேருக்கும் எப்படி சாம்பார் சாதம் தயாரிக்கப்படுகிறது, அது எவ்வளவு காரமாக இருந்தது போன்ற விஷயங்களே இதில் விவாதிக்கப்படும்.
இந்த வியாபாரங்களால் முழுவதும் பயனடைந்தவர்கள் ஜப்பானியர்கள்தான். இந்தியாவிற்கு சுற்றுலா வருமானம் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அந்த வருமானம் ஜப்பானியர்கள் திரைப்படம் (நத்து) எடுத்து, பொம்மைவிற்று, தொலைக்காட்சியில் பேசிப் பெற்றதற்கு (பெறுவதில்) உறைபோடக் கூடக் காணாது. இந்தியர்களை வைத்து மென்கலன் வியாபாரத்தில் அமெரிக்கா கொழிப்பதைப் போல, ரஜினியை வைத்து வியாபாரம் செய்பவர்கள் ஜப்பானியர்கள். வழக்கம்போல இந்தியர்கள் புறங்கையை நக்கிக் கொண்டு பல்லிளித்துக் கொண்டு நிற்கிறார்கள். எனக்குத் தெரிந்த வகையில் மொத்த ரஜினிமேனியாவில் நன்றாகப் பணம் பார்த்தவர்கள் இரண்டே இரண்டு இந்தியர்கள்தான். கோடம்பாக்கத்தில் நடன இயக்குநர்களிடம் உபக்கிரகங்களாக இருந்த இரண்டு இளைஞர்கள் டோக்கியோ வந்து நடனப்பள்ளி துவக்கினார்கள். அவர்களுக்கு நல்ல வருமானம். (படத்தைப் பார்க்கவும்).
இந்தக் குறுநில வியாபார மன்னர்களில் சிலர், அடுத்த கட்டத்திற்குத் தாவினார்கள். தமிழகம் என்ற அற்புதத்தை ரஜினி சினிமா வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்தால் போதுமா, அந்த அனுபவத்தை நேரடியாகப் பெறவேண்டாமா?
விளைவு ஜப்பானியர்களுக்கான தமிழகச் சுற்றுலாக்கள்…
(தொடரும்).