ட்சூனாமி – பொதுமக்களின் சந்தேகங்கள்
by வெங்கட் • December 29, 2004 • பொது • 5 Comments
நேற்று பின்னிரவு இங்கே கனேடிய பல்கலாச்சார வானொலி (Canadian Multicultural Radio, FM 101.3 in Greater Toronto Area) ட்சுனாமி, நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் பற்றிய சில அறிவியல் விளக்கங்களுக்காக என்னை நேரடி ஒலிபரப்புக்கு அழைத்திருந்தது. தொடர்ச்சியாக ஒலிபரப்படும் இந்த இந்த வானொலியின் ஆசிய அழிவுபற்றிய நிகழ்ச்சிகளில் பொருளாதாரம், மருத்துவம் போன்ற பல துறைகளிலிருந்தும் பலரை அழைத்து இந்த இயற்கைப் பேரழிவைப் பற்றி விழிப்புணர்வு தரும் செய்திகளை ஒலிபரப்புகிறார்கள்.
அந்த நிகழ்ச்சியில் என்னிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளை நான் முற்றிலும் எதிர்ப்பார்க்கவில்லை.
- கடற்கரையில் சுவர்களைக் கட்டுவதன் மூலம் ட்சுனாமியின் அழிவைத் தடுக்க முடியுமா? ஹாலந்தில் இப்படிக் கட்டியிருக்கிறார்களாமே?
- இந்தியா உட்பட பல நாடுகள் கடலுக்கடியில் அணுகுண்டு சோதனைகள் நடத்துவதால்தான் இப்படி கடல் கொந்தளித்திருக்கிறது என்பது உண்மையா?
- பிராந்தியத்தில் இருக்கும் பிற நாடுகளில் அறிவியல் முன்னேற்றம் இல்லை என்று சொன்னால் நம்பலாம். அணுசக்தி, விண்வெளித்துறை, கணினி உள்ளிட்ட துறைகளில் உலக அளவில் முன்னேறியிருக்கும் நாடான இந்தியா ஏன் முன்னெச்சரிக்கை எடுக்கவில்லை.
- அணுசக்திக்கு இவ்வளவு செலவழிக்கும் இந்தியா ஏன் அழிவைத் தடுப்பதைப் பற்றிச் சிந்திக்கவில்லை.
- பூமி அதனுடைய சுழற்சிப் பாதையிலிருந்து விலகியிருக்கிறது என்கிறார்களே? இதனால் தொடர்ச்சியாக அழிவு வரும் என்று சொல்வது உண்மையா?
- இன்னும் நிலநடுக்கம் வந்து கொண்டிருக்கிறதே, இன்னொரு பாரிய அலை வந்து அடிக்காதா?
உடனடியாகப் பதில் சொல்ல, என்னை ஒரு கனம் சங்கடத்தில் ஆழ்த்திய சில கேள்விகள் இவை. நிகழ்ச்சிக்கு அழைக்கும் பொழுது இந்த அனர்த்தங்களின் பின்னால் இருக்கும் அறிவியல் பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னார்கள். (அழைத்து அடுத்த அரைமணி நேரத்தில் வானலையில் இருக்க வேண்டிய கட்டாயம்). ஆனால் அணு சோதனை, கடற்கரைச் சுவர்கள் என்று பலவழிகளும் சிந்தித்துக் கேள்விகள் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கடலடி அணு சோதனைகளுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று விளக்குவது பெரும்பாடாகிவிட்டது.
நாளை (30 டிசம்பர்) இரவு 7 மணி முதல் 10 மணி வரை தமிழ் விஷன் தொலைக்காட்சியில் செய்திக் கண்ணோட்டம் என்ற நிகழ்வில் இதேபோன்ற ஒரு பலதுறை சம்பந்தப்பட்டவர்களின் கலந்துரையாடல் ஒளிபரப்பப்பட இருக்கிறது. வேலைப்பளு காரணமாக அனேகமாக என்னால் பங்கேற்க முடியாது என்று நினைக்கிறேன். கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கமுடியும்.
அணுசக்தி-இந்தியா-மக்கள் மயப்படுத்தப்பட்ட அறிவியல் முன்னேற்றம். இந்த சாமனியனின் சிந்தனை மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அதனாலேயே இந்திய (பாகிஸ்தான்) அணுகுண்டுகளுக்கு இந்து (முஸ்லீம்) அணுகுண்டுகள் என்பதற்குமேல் மக்கள் மயப்படுத்தப்பட்ட அறிவியல் என்ற அளவில் எந்த மரியாதையும், தகுதியும்,குறியீடும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்திய அறிவியல் மக்கள் வழிப்படுத்தப்பட்ட ஒன்றல்ல; மக்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை பாரிய அளவில் துய்ப்பது அறிவியல் சமூகமாக வளர்ந்துவருவதைக்குறிப்பதாகாது. சிட்டுக்குருவி லேகிய வித்தைகளை சித்த மருத்துவம் என்று சொல்வதுபோல அணுகுண்டுகள் வெடித்தல், அணு உலைகள் நிறுவதல் போன்ற மக்களுக்கு உதவாத வஸ்தாது வேலைகளை நமது அரசு அறிவியல் முன்னேற்றம் என்று சொல்லிவருகிறது. அல்லது ஓட்டுப்பொறுக்கும் வித்தைகளில் ஒன்றாக விவசாயம், கலை இவற்றைத் தொடர்ந்து இப்போது அறிவியல் மாயஜாலங்களில் அரசுகள் ஆர்வம் செலுத்துகின்றன. ஆனால் மக்களுக்கு அறிவியலை கொண்டு செல்வதில் இருக்கும் காலியிடத்தை, கும்பகோண விபத்து, போலிச்சாமியார்கள், இந்த சுனாமி பயங்கரம், மத அடிப்படைவாதத்துக்குக் கிடைக்கும் ஆதரவு இவை பட்டவர்த்தனமாக காட்டுகிறதாகவே நினைக்கிறேன்.
வணக்கம்
நீங்களா அந்த வானொலியில் அவ்வளவு விரிவாக விளக்கம் கொடுத்தீர்கள். மிக மிக அவசியமான கேள்விகளூம் மிக திறமையாக நீங்கள் விளக்கியவிதமும் என்னை கவர்ந்தது . நானும் அதனை கேட்டு என் மனதில் இருந்த சந்தேகங்களை தீர்த்து கொண்டேன். உங்கள் விளக்கத்துக்கு நன்றி. மேலும் இது போன்ற அறிவு பூர்வமான செய்திகள் எம் மக்களை சென்றடைய உங்கள் கருத்துக்கள் வானொலிகளிலும் இணையத்தளங்களிலும் வரவேண்டும்.
[உங்கள் கட்டுரைகளை சூரியன் இணையத்தில் படித்திருக்கிறேன் ]
நன்றி
கவிதன்
where can I find your explanations online?
வெங்கட், வானொலி நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு இருந்தால் அதற்கு சுட்டி கொடுங்கள்.
அந்த வானொலியில் ஒலிப்பதிவு இல்லை. ஆனால் அதில் நேற்றும் கலந்து கொண்டு தனது கருத்துக்களை வழங்கினார். அந்த வானொலி கனடிய நேரப்படி இரவு 9 மணியில் இருந்து காலை 9 மணிவரை தமிழ் ஒலிபரப்பாக 103.3 அலைவரிசையிலும் இணையத்தின் வழியும் கேட்கமுடியும். அதற்கு நீங்கள்
சி.ரி.ஆர் 103.3FM
இந்த வானொலி கவிதைதோட்டத்தில் மூன்றுநாட்களாக நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
கவிதைதோட்டம்