ஜோதிடம் என்னும் பம்மாத்த
by வெங்கட் • January 5, 2004 • பொது • 0 Comments
சில நாட்களுக்கு முன்பு ராயர் காபி கிளப்பில் ஜோசியம், மூட நம்பிக்கைகள் பற்றி ஒரு பேச்சு வந்தது. தற்பொழுது நம் ஊரில் சீன ஜோசியம் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதுமாதிரி சமாச்சாரங்கள் வந்தால் நம் மக்கள் உடனே பற்றி கொள்வார்கள். பின்னர் கொஞ்சம் நாளைக்கு (அடுத்த முட்டாள்தனம் கிளைக்கும்வரை) இது எல்லோரையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும். இது தொடர்பாக நடந்த கருத்தாடலில், நண்பர் பிரபு இந்த சோதிடங்கள் நம்புவோருக்கு மன ஆறுதலைத் தரக்கூடும் என்றும் அந்த வகையில் இவை பரவாயில்லை என்றும் தொனிக்க எழுதியிருந்தார் அவருக்கு நம்பிக்கை கிடையாது என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனாலும் இது போன்ற விஷயங்களில் எல்லாம் விஞ்ஞானம் என்று நுழைக்கக் கூடாது என்று சொல்கிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் சொன்னது;
பிளாசிபோ எபக்ட் போல இந்த வாத்து பலன்களிலும் ஒருவித பலன் இருக்கத்தான் செய்கிறது. தருவாலா டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆஸ்தான சோசியர். இந்தியாவின் தலைசிறந்த சோசியர் என தன்னை கூறிக் கொள்வார். அவரைப் பற்றிய செய்திகள் அடிக்கடி பாம்பே டைம்ஸில் வரும். இன்று வருட பலன்கள் எழுதியிருக்கிறார். காலையில் எனது மனைவியும் மகளும் விழுந்து விழுந்து படித்தனர். நான்காவது படிக்கும் மகள் இப்படியாவது செய்தித் தாளை படிக்கட்டுமே என நினைத்தேன். அலுவலகம் கிளம்புகையில் மேசையில் விரிந்திருந்த அந்தப் பக்கம் கண்ணில் பட்டது. லேசாக, எனது பலனையும் பார்த்தேன். வேலை மாறுதல் நல்லவிதமாக அமையும். நிலம், வீடு வாங்குவதில் நல்ல பலன் இருக்கும்…இரண்டுமே நான் நினைத்திருந்த ஒன்று. இன்று முழுவதும் ஏதோ சந்தோஷமாகவே உணர்வேன். ஆனால் மனைவி கண்களில் காலையில் கிளம்பும் போது அருளே இல்லை…ஒரு வேளை கலியாணம் கை கூடி வரும் என்று எனது ராசி பலனில் முதலில் எழுதியிருந்ததை படித்திருப்பார்களோ?
)
(நேற்று பேராசிரியர் ராமசேஷனுக்கு இரங்கல் எழுதும் பொழுதும் ஜோதிடத்தைப் பற்றிய எண்ணங்கள் வந்தன)
என்னைப் பொறுத்தவரையில் ஜோசியம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டியது. அதனால் எந்த வகையிலும் நன்மை கிடையாது (சில சமயம் என்னுடைய பாட்டியின் பலனைப் படிக்கும் போது ஸ்த்ரீ சம்போகம் என்று வந்தால் குபீரெனச் சிரிப்பு வரவழைப்பதைத் தவிர). இதை இப்படிப் பார்க்கலாம்.
ஒரு பதிநான்கு வயதுப் பையன் இருக்கிறான். அவனைப் பார்த்து ஜோசியர்
(அ) இவனுக்கு நல்ல ஜாதகம், இவன் நிறைய மார்க்கு வாங்குவான் என்று சொன்னால்;
(1) அவன் கடின உழைப்பாளியாக இருந்தால் – “நமக்குத்தான் நெறையா மார்க்கு கெடைக்குமே, நாம ஏன் படிக்கனும்” என்று டேக் இட் ஈஸி பாலிஸி என்று சொல்லிக் கொண்டு குட்டிச் சுவராகப் போவான்.
(2) அவன் கடின உழைப்பாளியாக இல்லாவிட்டால் – கேட்கவே வேண்டாம். படிக்கத் தேவையே இல்லை என்று உறுதியாக நம்பத் தொடங்குவான்.
(ஆ) இவனுக்கு ஜாதகம் சரியில்லை. என்ன படித்தாலும் மார்க்கு கிடைக்காது என்று ஜோசியர் சொன்னால்;
(1) அவன் கடின உழைப்பாளியாக இருந்தால் – தன்னுடைய தோல்விக்கெல்லாம் ஜோசியத்தின்மேல் முடிச்சுப் போடத் தொடங்கி அவனுடைய ஊக்கத்தை இழக்கத் தொடங்குவான்.
(2) சோம்பேறியாக இருந்தால் – “என்னத்தப் படிச்சு என்னத்தக் கண்டோம், எப்புடிப் படிச்சாலும் மார்க்கு வராதுன்னு சோசியர் சொல்லிப்புட்டார்” என்று குட்டிச் சுவரில் போய் உட்கார்ந்து கொள்வான்.
இதுவே பையனுக்குப் பதிலாகப் பெண்ணாக இருந்தால் (நம்மூரில்) இன்னும் மோசம், அது படிப்பை உடனடியாக நிறுத்துவதில் போய் முடியும். (நல்ல மார்க்கு வாங்கினா மேற்கொண்டு படிக்க வைக்க வேண்டும் (அல்லது) என்னத்தப் படிச்சு என்ன காணப்போகுது இந்தப் பொட்டப் புள்ள, ஜோசியரே படிப்புவராதுன்னு சொல்லிப்புட்டார்) சராசரி தாய், “எம் புள்ள ஜாதகத்துல எழுதியிருக்கு, அவன் நல்லா வருவான்னு” என்று சொல்லிக் கொண்டு பையனின் விலகலை எல்லாம் கண்டிக்காமல், எடுத்துச் சொல்லாமல் நல்ல வழிகாட்டாமல் போவாள்.
இதே போல நீண்ட ஆயுசு, பணக்கார மாப்பிள்ளை (ஏ புள்ள! ஒனக்கு என்னத்துக்குப் படிப்பு, ராசா மாதிரி ஒத்தன் வந்து ஒன்ன கண் கலங்காமப் பாத்துப்பான்டீ) என்று எல்லா வகைகளிலும் ஜோசியம் எதிர்மறையாகவே வேலை செய்யும்.
கடின உழைப்பை ஜோதிடம் ஒரு நாளும் பரிந்துரைப்பதில்லை. அதிக பட்சமாக அது பரிகாரங்களைத்தான் சொல்கிறது. (“பையனுக்குப் படிப்பு வராது, ஆனா எடது கை சுண்டுவெரல்ல வைடூரிய மோதெரம் போட்டுக்கிட்டு பரிச்ச எளுதினா மார்க்கு கொட்டும்”). இப்படிப் பரிகாரங்களை நாடும் மனம், ஒருக்காலத்திலும் நேர்வழி செல்லாது. வெற்றிக்கும் தோல்விக்கும் தனது கிரகங்களின் நிலையைச் சுட்டிக் கொண்டு உழைப்பை உதாசீனப்படுத்தும்.
கடின உழைப்புக்கு மாற்று மருந்து சொல்லும் எதையும் என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
இதைத் தவிர கிரகங்கள் நிலையைக் கணிப்பதில் நம் ஜோதிடர்கள் பல தவறுகளைச் செய்கிறார்கள் என்பது இன்றைக்கு ஓரளவு அறிவியல் தெரிந்த எவருக்கும் புரியும். அப்படியே அவர்கள் கணிப்பில்தான் பிழை, ஆனால் கிரகங்கள் மனிதனிம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன என்று வைத்துக் கொள்வோம், ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூன்று குழந்தைகள் நம் நாட்டில் பிறப்பதாகச் சொல்கிறார்கள். நான் பிறந்த அதே நேரத்தில் பிறந்தவர்கள் இந்த நேரத்தில் கணினி முன் உட்கார்ந்து தட்டிக் கொண்டிருப்பார்கள் என்று நம்புவதில் உள்ள அபத்தத்தைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரசியல் தலைவர்கள் ஜோதிடத்தை நம்புவதால் ஏற்பட்ட விபரீதங்களை நாம் நன்றாகப் பார்த்திருக்கிறோம். (அம்மா ஜெயலலிதாவின் மஹாமகக் குளியலை மறக்க முடியுமா?)
அறிவியல் நோக்கு உள்ளவர்கள் ஜோதிடம் போன்ற மடத்தனங்களை ஒரு போதும் நம்ப மாட்டார்கள். பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் மூட நம்பிக்கைக்குச் சராசரி மனிதர்கள் பலியாகும்போது, இனியும் அறிவாளிகள் ஒதுங்கி நிற்காமல் மடத்தனத்தை எதிர்கொள்ள வேண்டியது முக்கியமாகிறது. ஜோதிடம் பம்மாத்து என்று நம்பினால், உங்களுக்குத் தெரிந்தவர்களிடமாவது அதை எடுத்துச் சொல்லுங்கள்.
அட நீங்க வேற. இங்கெ தமிழ்ச்சங்கத்துல இத (கூடவே ஜாதகத்தையும்) மையமா வச்சி ஒருத்தர் ஒரு அருமையான கட்டுரை எழுதியிருந்தார். சங்கத்தலைவர் நடுவுல பூந்து, ‘பெரும்பாலான மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்’-னு சொல்லி 2 மணி நேரம் விவாதம்! கடையில நாசூக்கா, வழ வழா கொழ கொழா-ன்னு வர்ற மாதிரி நாந்தான் மாத்தி எழுதினேன். அப்புறமாத்தான் ஓகே ஆச்சு
இதெல்லாம் தீராத வியாதி. மூட நம்பிக்கைக்கு எல்லையே இல்லை. எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான் (என்ஜினீயர் தான்), கார்ல முதல்ல ரிவர்ஸ் கியர் போடவே மாட்டான். சரி அத விட்டுத்தள்ளுங்க, இடது கைல indicator போட மாட்டான்! எங்கெ போய் முட்டிக்க?
நான் எழுதியது in the lighter vein. எனினும் கூறுகிறேன். உதாரணத்திற்கு நான் சார்ந்த கிறிஸ்தவ மதத்தையே எடுத்துக் கொள்கிறேன். பல சமயங்களில் பிரசங்கிகள்…விஞ்ஞானத்தை மதக் கோட்பாடுகளில் இழுப்பார்கள். ‘இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்தச் சம்பவம் நடந்திருக்க சாத்தியக் கூறுகள் இருக்கிறது’ என்று. அதே சமயம், அவர்கள் கூறும் வேறொரு விஷயம் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டு இருக்கிறது என்றால், ‘மதம் தர்க்கத்திற்கு உட்பட்டதல்ல. உணர்வு பூர்வமானது. விஞ்ஞான பூர்வமாக அணுகத் தேவையில்லை’ என்று மாற்றியடிப்பார்கள். இது அனைத்து மதப் போதகர்களுக்கும், ஜோதிடர்களுக்கும் பொருந்தும். எங்கோ எப்போது வெளியான விஞ்ஞான ஆய்வறிக்கையை எடுத்துக் கொள்வார்கள்…’பாருங்கள் கோள்களின் புவியீர்ப்பு விசை ஒன்றையன்று பாதிக்கிறது. எனவே, ஜோதிடம் விஞ்ஞான பூர்வமானது’ என்று பேசுவார்கள். அதே சமயம் முழுமையான விஞ்ஞான ஆய்வுக்கு ஆட்படமாட்டார்கள். எனவே, ஜோதிடங்கள், மதங்கள் ஆகியவற்றை விஞ்ஞான பூர்வமாக ஆய்ந்து நேரத்தை செலவழிப்பதை விட அவற்றை அப்படியே விடுவது நல்லது என எண்ணினேன்.
மேலும் மாலன் கூறிய ஆங்கிலப் பெயர்களை மாற்றியமைக்கும் ஜோதிடம் இருக்கிறது. ஏன் தமிழ்ப் பெயர்களுக்கு அந்தச் சக்தி இல்லையா என்ற கேள்வி அடிப்படையானது. ஜோதிடத்தை நம்பாவதவர்களுக்கு இந்தச் செய்கை, மன்னிக்கவும் ‘மடத்தனமாக’ தோன்றும். ஆனால், சமுதாயத்தில் மேலான அந்தஸ்தில் இருப்பவர்களே இதை நம்புகிறார்கள். எனவேதான் இப்படி எழுதுவதால் நாம் நமக்குள் ரசித்துக் கொள்ள முடியுமே தவிர பெரிய பலன் விளையாது என்று நம்புகிறேன். ஆனால் ஒன்று…பலர் (நானும் சிலசம்யம்) எதற்கு வம்பு? அதையும் செய்து வைப்போமே? என்ற எண்ணத்திலேயே செய்ல்படுகிறார்கள் என்றும் நான் நினைக்கிறேன். இறுதியாக, ஒரு சந்தேகம். இது குறித்து இயற்பிலளாரான தாங்கள் பின்னர் எழுதலாம். இந்த பிரபஞ்சத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் ‘இயற்பியலின் அடிப்படை விதிகள் ஒன்றாகத்தான் இருக்கும்’ எனப்படித்தேன். இன்றுள்ள இயற்பியல் விதிகள் இறுதியானதுதானா? கோள்களின் இயக்கம் பற்றி எப்படி விதிகள் உருவானது என்பதைப் படித்ததில் இருந்து இந்த சந்தேகம். அணுதான் அடிப்படை என்றார்கள்….இல்லை என்றானது. ஒளியின் வேகத்துக்கு மிஞ்சிய வேகமில்லை என்றார்கள்…இப்போது இருப்பதாக அறிகிறேன். சரிதானா? நான் கூறுவது சரியான தகவல் என்றால் விஞ்ஞான விதிகளின் படி ஜோதிடத்தை அறுதியிட முடியுமா?
வெங்கட், கரெக்டா சொன்னீங்க. ஜோதிடம் ஒரு பம்மாத்து. அதை யாரும் நம்பவே கூடாது. அட, நீங்க சொன்னது சரி-ன்னு சொல்லற மாதிரி இதைப் படிக்கும்போது பக்கத்திலே எங்கேயோ ஒரு மணி அடிக்குது!
பிரபு, நான் சொல்வதும் உங்கள் கருத்தை அடியொட்டித்தான்,
>எனவே, ஜோதிடம் விஞ்ஞான பூர்வமானது’ என்று பேசுவார்கள். அதே சமயம் முழுமையான விஞ்ஞான ஆய்வுக்கு ஆட்படமாட்டார்கள்
அப்படி சந்‌தர்ப்பத்திற்கு ஏற்றபடி மாறிக் கொள்பவர்களை பிற இடங்களில் வெறுக்கிறோம். உதாரணமாக, அரசியல்வாதிகளைப் பற்றிய விமர்சனங்கள். (கருனாநிதியின் தோளில் சுர்ஜித்சிங் மீண்டும் கையைப் போட்டால் அதன் மேல் எத்தனை விமர்சனங்கள் வருகின்றன). அதே பத்திரிக்கைகளில் (உதாரணம், துக்ளக்)ஜோதிடர்களையும் இன்னபிற மூட நம்பிக்கைகளையும் பற்றிய விமர்சனங்கள் வருவதில்லை. இது போன்றவர்களின் ஏமாற்றுத்தனத்தை நம்மாலான அளவிற்கு கிழிக்க வேண்டும்.
இது நமது சமுதாயத்தைப் பீடித்திருக்கும் புற்றுநோய். சோதிடர்களின் வாக்குப்படியே பாராளுமன்றம் நடக்கிறது, அவர்கள் குறிக்கும் திதியில் தேர்தல்கள் நடக்கின்றன, சினிமாக்கள் துவங்குகின்றன, வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன. வீட்டில் ராகுகாலம் பார்ப்பதில் தொடங்கி நாட்டில் தேர்தல் நடத்துவது வரை எல்லாம் இந்த இரட்டை வேடக்காரர்களின் கையில் விட்டுவிட்டு நாம் ஏன் ஒதுங்கிப் போக வேண்டும்?
உண்மைதான், அடிப்படை அறிவியல் விதிகள் நாமறிந்த பிரபஞ்சத்தின் எல்லா மூலைகளில் ஒன்றாகத்தான் இருக்கின்றன.
>அணுதான் அடிப்படை என்றார்கள்….இல்லை என்றானது. ஒளியின் வேகத்துக்கு மிஞ்சிய வேகமில்லை என்றார்கள்…இப்போது இருப்பதாக அறிகிறேன். சரிதானா? நான் கூறுவது சரியான தகவல் என்றால் விஞ்ஞான விதிகளின் படி ஜோதிடத்தை அறுதியிட முடியுமா?
அறிவியலில் முற்றறுதி உண்மை (absolute truth) என்று ஒன்று கிடையாது. அறிவியல் சோதனைகள் தொடர்ச்சியாக நம் புரிதலின் ஆழத்தை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அறிவியல் முறைகள் ஒரு தொடுகோடாக உண்மைக்கு நம்மை இட்டுச் செல்லுகின்றன. சொல்லப்போனால் தீர்க்கமான உண்மை என்பது அறிவியலில் வரையறுக்க முடியாது. அது நம்பிக்கையின் பாற்பட்டது. அறிவியலின் முக்கிய அடிப்படையே சந்தேகிப்பது.
என்னுடைய “காமம் செப்பாது கண்டது மொழிமோ” கட்டுரையைப் படித்தீர்களா? (http://www.tamillinux.org/venkat) முகப்புப் பக்கத்திலிருந்து கிடைக்கும். இதில் அறிவியல் வழிமுறைகள் என்ன என்பதை நான் விளக்க முற்பட்டிருக்கிறேன்.
மற்றபடி ஜோதிடத்தை பொய்ப்பிக்க சமகால அறிவியலெல்லாம் தேவையில்லை. அதில் self-consistent logic கிடையாது என்பதால் வெறும் ஏரணத்திலேயே (logic) அடிபட்டுப் போகும். ஜோதிடம் ஏமாற்று வேலை என்று சொல்ல இன்னொரு ஜோதிடனே போதும்
.
என் அனுபவத்தில் படிக்காதவர்களை விட படித்தவர்கள் தான் இதில் அதிகப் பைத்தியமாக இருக்கிறார்கள். அவர்கள் கற்பனைத்திறனுக்கு ஈடு கொடுக்கும்விதமாய் வாஸ்து/எண்ஜோதிடம்/நவமணி என்று இந்த ஆக்டோபஸ் விரிந்துகொண்டே தான் போவதாகத் தெரிகிறது. இந்த தேவையற்ற செயலை விமரிசிப்பதில் என்ன தவறு? இவற்றில் விழுந்து தன்னை ஏய்த்துக்கொள்ளும் மக்களுக்கு தன்னையே கேள்வி கேட்டுக்கொள்ள ஒரு தூண்டுதலாகவாவது இருக்கட்டுமே.
>>>
கடின உழைப்புக்கு மாற்று மருந்து சொல்லும் எதையும் என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
>>>
அதே காரணத்தால் தான் எனக்கும் இவற்றின் மேல் வெறுப்பு. தெய்வ நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் அதுதான் வேறுபாடு என்று தோன்றுகிறது.
வெங்கட், தங்களது காமம் செப்பாது என்ற கட்டுரையினைப் படித்த தாக்கம்தான் எனது எதிர்வினைகள். பல சமயங்களில் ஜோதிடர்கள் பத்திரிக்கைகளில் நாட்டு நடப்புகளைப் பற்றியும், பிரபலமானவர்களைப் பற்றியும் கணிப்புகளை வெளியிடுவார்கள். பெரும்பாலும் எந்த மாதிரியும் அவைகளை interpret செய்யலாம் என்றாலும் சில ‘நச்’ என்று இருக்கும். ஆனால் அவைகள் பல மாதங்கள் கழித்து நிறைவேறும் என்று கூறுவதால்…பின்னர் யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் பலித்து விட்டால் போச்சு! நான் அப்போதே சொன்னேனே என்பார்கள். இவற்றையெல்லாம் தொகுக்கலாம் என்று இருக்கிறேன். ஆனால் தனியாக ஒரு வலைப்பதிவு வேண்டும் போல:-)
தற்போது நவீனமாகிவிட்டனர். ‘கணிப்புகள் பொய்ப்பதுமுண்டு. ஆனால் பெரும்பாலும் பலிப்பதுண்டு’ என்று கூறுகிறார்கள். சரிதான் என்று நாமும் கேட்டுக் கொள்கிறோம். ஸ்டாக் அனலிஸ்ட், பொலிடிகல் அனலிஸ்ட், கிரிக்கட் அனலிஸ்ட் போல இவர்கள் சர்வத்துக்கும் அனைத்துக்குமான அனலிஸ்ட்:-))
ஜோதிடம் என்பது ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே ஆரம்பிக்கப்பட்ட ஒரு முயற்சி .. அதை வைத்து இன்றும் ஏமாற்றும் வேலையில் இருப்பவர்கள் நிறைய பேர் என்பதை மறுப்பதற்கில்லை .. அன்றைய ஜாதகம் , ஜோதிடம் இதெல்லாம்தான் மொத்த வானவியலின் அடிப்படை என்பதை யாரும் மறுக்க முடியாது .. அது சரியான முறையில் இன்று பயன்படுத்தப்படவில்லை, மேலும் இடைச்செறுகல்கள் நிறைய உள்ளன என்பதே உண்மை .. விருப்பமுள்ளோர் இங்கே பார்க்கலாம்..http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=824 அதற்காய் அத்தனையும் பம்மாத்து என்றும் சொல்லி விடமுடியாது.. அது ஒரு வளராத துறை அவ்வளவே.