• ஜாவா-வைத் திறத்தல்

    by  • February 28, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    சன் மைக்ரோஸிஸ்டத்தின் ஜாவா திறமூலம் ஆக்கப்படுமா? தற்சமயம் கணினி உலகில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுவரும் கேள்விகளில் இதுவும் ஒன்று.

    பல மாதங்களாகவே இது அவ்வப்பொழுது தலைகாட்டிவிட்டு அமிழ்ந்து போகும் கேள்விதான். என்றாலும் இப்பொழுது இந்தக் கேள்வி மிகவும் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. வழக்கம்போல் திறமூல போதகர் எரிக் ரேமண்ட்-தான் இந்தக் கேள்வியை எழுப்பினார். சில நாட்களுக்கு முன்னால் அவருடைய திறமூலப் பக்கங்களில் “ஜாவாவைத் திறந்துவிடுங்கள்” என்று தலைப்பிட்டு சன் மைக்ரோஸிஸ்டத்திற்கு ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டார். இது வழக்கமாக திறமூலப் பிரியர்களின் விருப்பம், கனவு என்று ஒதுக்கிவிடமுடியாது. இன்றைக்குத் திறமூல வளர்ச்சிக்கு ரேமண்டின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு கட்டத்தில் நெட்ஸ்கேப் (அப்பொழுது மைக்ரோஸாப்டுக்கு இருந்த ஒரே பயம் நெட்ஸ்கேப்தான்), ஹெச்பி, ஐபிஎம் என்று பல பெரிய நிறுவனங்களை திறமூல வழிமுறைகளில் திருப்பிவிட்ட பெருமை ரேமண்டைச் சாரும். அந்த வகையில் அவருடைய இந்தத் திறந்தக் கடிதம் உரிய கவனத்தைப் பெற்றிருக்கிறது. சன்னுக்கு ஜாவாவைத் திறந்துவிடுவதில் இருக்கும் சிக்கல்களைச் சமாளிக்க திறமூல நிறுவனம் எல்லா உதவிகளையும் செய்யும் என்றும் சொல்லியிருக்கிறார். இதன் எதிரொலியாக ஐபிஎம் உடனே சன் ஜாவாவை திறமூலம் ஆக்க முயன்றால் தன்னாலான உதவிகளை ஐபிஎம் வழங்கும் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. இன்னும் ஒருபடி மேலே போய் சன்-ஐபிஎம் இருவருமாக இணைந்து ஒரு திறந்த ஜாவா திட்டத்தை முன்னின்று நடத்தவேண்டும் என்று அறிவித்திருக்கிறது.

    * * *

    இனி, இந்த விஷயத்தில் என்னுடைய கருத்துக்கள்

    (முதலில் ஒரு எச்சரிக்கை; எனக்கு ஜாவா நிரல் எழுதத் தெரியாது, ஒரு காலத்தில் என்னுடைய வழக்கமான ‘கவன ஒருங்கின்மைச் சிக்கலால்’ (Attention Dificiency Disorder) உந்தப்பட்டு ஜாவா-வில் எப்படிக் குப்பை பொறுக்கப்படுகிறது என்று மேய்ந்தது நினைவிருக்கிறது (1997?), பிறகு ‘ஒடிஸியும் மணிப்புரி நடனமும் – ஒரு ஒப்பாய்வு’ என்பதைப்போலத் தலைப்பிடப்பட்டு ஒரு புத்தகம் கிடைத்தவுடன் என்னுடைய ஜாவா விருப்பங்களே குப்பைக்குப் போய்விட்டன. என்றாலும் எனக்கு இன்றைய கணினி உலகில் ஜாவாவின் முக்கியத்துவம் நன்றாகத் தெரியும்).

    ஜாவா கணினி உலகின் அற்புதமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இன்னும் ஜாவாவின் முழுப்பயன்களும் முழுதாகத் துய்க்கப்படவில்லை. இதற்குக் காரணம், சன் நிலைமையில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் சரிவு. ஜாவா அடிப்படையில் சன்-மைக்ரோஸிஸ்டம் நிறுவனத்தால் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப்பட்டாலும், திறமூலம் எழுதுபவர்களிடையே ஜாவாவிற்கு நிறைய வரவேற்பு இருக்கிறது. எனக்குத் தெரிந்து மைக்ரோஸாப்ட் தளத்திற்கு நிரல் எழுதுபவர்கள் ஒரு கட்டத்தில் மைக்ரோஸாப்ட்டின் இறுக்கமான கட்டுப்பாடுகளாலும், அதன் கொடுமையான வர்த்தக நிர்ப்பந்தங்களாலும் இனி மைக்ரோஸாப்ட் தளத்திற்கு எழுதுவதில்லை என்று முடிவெடுத்தபொழுது அவர்கள் கைக்கொண்ட கருவி ஜாவா. (உதாரணத்திற்கு நான் ஆரம்பகாலங்களில் பெரிதும் பயன்படுத்திய இலவச ஹெச்டிஎம்எல் நிரலியான அரக்னோ·à®ªà®¿à®²à®¿à®¯à®¾ வடிவமைக்கும் திரு. பால் லூட்டஸ் , இவருடைய தளத்தில் எப்படி மைக்ரோஸாப்ட் நிர்ப்பந்தங்களால் தான் அதிலிருந்து அந்நியப்பட்டுப் போனேன் என்பதை விவரித்திருப்பார்).

    இன்றைய நிலையில் ஐபிஎம்-மின் முயற்சியால் நிறைய ஜாவா பயன்கள் திறந்த வடிவில் கிடைத்துவருகின்றன. எனவே, ஐபிஎம்க்கு இந்த இணைத்திட்டத்தில் ஆர்வம் இருப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை. இன்னொருபுறம் லினக்ஸ் உலகிலிருந்து நிறையப் பெற்றுக்கொண்டுதான் சன் தன்னுடைய ஜாவா மேசைத்திட்டதை அமைத்துவருகிறது. எனவே லினக்ஸ் மற்றும் திறமூல உலகிற்கு சன் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. ஜாவாவைத் திறந்துவிட்டால் ஆர்வத்துடன் தளையறு மென்கலன் எழுதும் நிரலர்கள் அதில் அற்புதமான கருவிகளை வடிவமைப்பார்கள் என்பது நிச்சயம். அடிப்படையில் இயக்குதளக் கட்டுப்பாடுகள் ஜாவாவில் கிடையாது என்பதால் பலரும் திறமூலங்களை எழுத வருவார்கள். ஜாவா மேசைத்தளத்தில் தன்னுடைய வருங்காலத்தைப் பிணைத்துக்கொண்டிருக்கும் சன்-க்கு இது மிகவும் பயன்தரும். இதைப் பற்றி சன் நன்றாக அறியும்; சில ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் NFS என்ற கோப்பு அமைப்பை வடிவமைத்தபொழுது அதன் அடிப்படைகளைத் திறந்துவிட்டார்கள். அது தளையறு மென்கலன் உலகில் எப்படி ஆர்வமுடன் தழுவப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது என்பது இப்பொழுது வரலாறு.

    இன்னொரு பக்கத்தில் மைக்ரோஸாப்ட் தன்னுடைய ஏகபோகத்தை இன்னும் பெருக்கிக் கொண்டே செல்ல முயற்சிக்கிறது. அதனுடைய டாட்நெட் திட்டம் கணினி உலகை ஒட்டுமொத்தமாகத் தன்னுடைய வர்த்தகக் கட்டுப்பாட்டில் வளைத்துப்போடும் முயற்சி. இதற்குப் பதில் சொல்ல தளையறு உலகில் மோனோ (பெயரைக் கவனிக்கவும்) என்ற திட்டம் வளர்ந்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்னரே சன் இனிமேல் தன்னுடைய மேசை வடிவமான CDE இனிமேல் வளர்க்கப்படாது என்றும் அதன் வருங்கால மேசைத்தளம் லினக்ஸில் பரவலாகப் பயன்படுத்தப்படும் க்னோம்-தான் என்றும் தெளிவாக அறிவித்துவிட்டது. லினக்ஸ் உலகில் மோனோ திட்டமும் க்னோமும் ஒன்றாக இணைந்து உருவாகிவருகின்றன. இந்த நிலையில் க்னோமை நம்பும் சன் மோனோவைத் தவிர்க்க முடியாது.

    வேறொரு வகையில் மோனோவும் ஜாவாவும் ஒன்றுக்கொன்று போட்டியாக இருந்துவிடக்கூடும். ஊர் ரெண்டுபட்டால் மைக்ரோஸாப்ட் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்தானே. எனவே, சன் தன்னுடைய வருங்காலத்தை வளர்த்தெடுக்க ஜாவாவைத் திறந்துவிட்டு திறந்த உலகில் சேருவதுதான் நல்லது. அந்த நிலையில் ஜாவாவும் மோனோவும் ஒன்றிணைய டாட்நெட்டுக்கு உண்மையிலேயே ஒரு மாற்று உருவாகும் சாத்தியம் இருக்கிறது.

    அடிப்படையில் சன் மிகத் திறமைவாய்ந்த கொந்தர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம். அதே போல சன் மைக்ரோஸிஸ்டம் நிறுவனத்தின் வர்த்தகத் திறமையும் மிகவும் அதிகம். மைரோஸாப்ட் ஒரு தாதா என்றால் சன் ஒரு பேட்டை ரௌடி. அந்த நிலையில் மைக்ரோஸாப்ட்டின் ஒற்றைப்பட உலகத்திற்கு ஒரு மாற்று கிடைப்பதில் பலருக்கும் (என்னையும் சேர்த்துத்தான்) ஆர்வமிருக்கிறது.

    * * *
    சில மணி நேரங்களுக்கு முன்னால் நான் படித்த தகவலின் படி சன், ஐபிஎம்மின் கூட்டுத் திட்டத்தைப் பரிசீலித்து வருவதாகச் சொல்லியிருக்கிறது. வருகின்ற வியாழன் வாக்கில் ஐபிஎம்மின் திறந்த அழைப்பிற்குத் தன்னுடைய பதில் வரும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது.

    * * *

    இனி என்னுடைய ஊகம்; சில நாட்களுக்கு முன்னால் ஜாவா-வைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் கொஸ்லிங் மீண்டும் சன்னின் ஜாவா பிரிவுக்குத் தலைமைதாங்க வந்திருக்கிறார். வந்த நேரத்தில் தனிப்பட்ட முறையில் ஜாவா திறந்தவிடப்பட வேண்டும் என்பதில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதே நேரத்தில் ஒரு நல்ல வர்த்தக நிறுவனத்திற்கு ஜாவாவைப் பயன்படுத்தும் தன் வாடிக்கையாளர்களுக்கு அதை நெறிப்படுத்தி பிழையின்றி பாதுகாத்துத் தரவேண்டிய அவசியம் இருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

    இன்னொரு புறம் சன் தலைவர் ஸ்காட் மெக்நீலி “திறந்த ஆணைமூல உலகம் சன்னின் நண்பன்” என்று பெருமையாக அறிவித்திருக்கிறார். (இந்த அறிவிப்புத்தான் எரிக் ரேமண்டை நாங்கள் உங்கள் நண்பன் என்பதை ஜாவாவைத் திறந்துவிடுவதன் மூலம் நிரூபியுங்கள் என்று அழைப்புவிடுக்க வைத்திருக்கிறது).

    இவை எல்லாவற்றையும் பார்க்க வரும் வியாழனன்று சன் என்ன சொல்லவிருக்கிறது என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது. பெரும்பாலும் சன் ஜாவாவை ஐபிஎம்முடன் இணைந்த கூட்டு திறந்த ஆணைமூலத் திட்டமாக மாற்றலாம். குறைந்த பட்சம் இரட்டை உரிமை முறையில் (வணிகத்திற்குத் தனி உரிமம், இன்னொருபுறம் நிரலர்கள் சமூகத்திற்கு க்னூ பொது அனுமதி என்று தளையற்ற வசதி) ஜாவாவைத் திறந்து விடக்கூடும்.

    இதில் எது நடந்தாலும் இந்த வருடத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *