சங்கம்
by வெங்கட் • April 13, 2004 • பொது • 0 Comments
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழில வலைக்குறிப்புகள் (blogs, weblogs) பிரபலமடைந்து வருகின்றன. கிட்டத்தட்ட இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட வலைக்குறிப்புகள் இப்பொழுது வழமையாகப் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. சில வலைக்குறிப்புகளில் தினம் பலதடவைகள் எழுதப்படுகின்றன. வலைக்குறிப்புகளின் பிரபலம் அதை ஆக்கபூர்வமான முறைகளில் பயன்படுத்துவதைக் குறித்த விவாதங்களை பல்வேறு தளங்களில் தோற்றுவித்திருக்கின்றது. மதுரைத் திட்டம், முதுசொம் போன்ற தன்னார்வத் திட்டங்களுக்கு வலைக்குறிப்புகளை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று யோசனைகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன. வலைக்குறிப்புகளின் பலம் எதுவோ அதுவேதான் அதன் பலவீனமும் கூட. தனி நபர்கள் மனதில் தோன்றிய நிமிடத்தில் உடனே வலையில் ஏற்ற வழிதருவது வலைக்குறிப்பு. அதே கருத்தில் தொடர்புள்ள வலைக்குறிப்புகள் எழுதப்படும்பொழுது இன்றைய தொழில்நுட்பம் தானாக முதல்குறிப்பில் சுட்டியிட்டு அதனைப் பின்தொடர்பவர்களுக்கு அழைத்துச் செல்ல உதவுகிறது. ஆனால் விரைவில் தகவல் பெருகும்பொழுது அதனை வகைப்படுத்த முடியாமை வலைக்குறிப்புகளின் மிக முக்கியமான பலவீனம். பொதுத் திட்டங்கள், தன்னார்வலர்களின் கூட்டு முயற்சி என்று வரும்பொழுது இந்தப் பலவீனம் வலைக்குறிப்புகளைப் பலனற்றதாகச் செய்துவிடுகிறது.
இருந்தும், தமிழில் அறிவியல், வணிகம், விளம்பரம், பொருளாதாரம், தகவல் நுட்பம், சட்டம்/நீதி, போன்ற துறைகளைப் பற்றி பொதுவில் எழுத அவற்றில் அன்றாடம் வரும் செய்திகளையட்டி விவாதிக்க ஒரு தளத்தின் தேவை முக்கியமானதாக இருக்கிறது. பல நண்பர்கள் பல சந்தர்ப்பங்களில் இதன் தேவையைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் வலைக்குறிப்புகள் எதிலிருந்து கிளைத்துவந்தனவோ அதுவே தமிழில் மிகவும் தேவையான ஒன்றாகத் தோன்றுகிறது. அந்தவகையில் அமைக்கப்பட்ட முயற்சிதான் “சங்கம்” (பெயர் தற்காலிகமானது, நல்ல பெயரை வரவேற்கிறோம்).
சங்கம் தளத்தில் என்னென்ன சாத்தியம் என்று விரித்துச் சொல்லுமுன் அதன் அமைப்பைப்பற்றி கொஞ்சம். இது திறமூலச் செயலிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தளம் (LAMP – Linux, Apache, MySQL, PHP). இதை இயக்கும் பொதி போஸ்ட்ந்யூக், இது அடிப்படையில் ஒரு உள்ளடக்க மேலாண்மை நிரலி. அதாவது, அதிகம் தொழில் திறமை இல்லாதவர்களும், தரவுத்தளத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட (தகவலை, அதை வழங்கும் முறையிலிருந்து பிரிப்பது, தேடல் மற்றும் எண்ணற்ற முறைகளில் வகைப்படுத்தல் இவற்றைச் சாத்தியமாக்கல்) உயர்தொழில்நுட்ப இணைய தள அமைப்பு. இதைத் தமிழ்ப்படுத்தித் தந்திருப்பவர். முருகபாண்டியன் பாரதி. (குழுக்களுக்கென்று உருவாக்கப்பட்ட இதுபோன்ற மேலாண்மை நிரலிகளிலிருந்து தனி நபர்களுக்காகக் கிளைத்தவையே வலைக்குறிப்பு நிரலிகள்).
இனி சங்கம் பற்றி; ( http://www.tamillinux.org/sangam )
இங்கே பலதரப்பட்ட அறிவார்ந்த துறைகளும் சாத்தியம். தற்சமயம் இயற்பியல், தகவல்நுட்பம், உயிர்த்தொழில்நுட்பம், வேளாண்மை, பெண்ணியம், சட்டம் போன்ற சில தலைப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இவைதவிர வேண்டிய தலைப்புகளை நீங்கள் கேட்க உருவாக்கித்தரவியலும். இந்தத் தலைப்புகளில் உங்கள் முழுக்கட்டுரைகள், செய்தித் தகவல்கள், போன்றவற்றை உள்ளிடலாம். இந்தக் கட்டுரைகள்/செய்திகள் மீது உறுப்பினர்கள் கருத்துச் சொல்லமுடியும், மேலதிகத் தகவல்களை இணைக்கமுடியும், தொடர்புள்ள இணைய தளங்களைச் சுட்ட முடியும். சுருக்கமாகச் சொல்லப்போனால் இது slashdot.com என்று ஆங்கிலத்தில் பெருவெற்றிபெற்ற ஊடாடல் மையத்தை முன்மாதிரியாகக் கொண்டது.
வலைக்குறிப்புகளில் பரிச்சமுள்ளவர்களுக்கு இந்தத் தளம் புழங்க இலகுவானதாக இருக்கும்.
நீங்கள் நேரடியாக உறுப்பினர் ஆகமுடியும். உங்களைப் பற்றிய தகவல்களை உள்ளிட்டு விழைந்தவுடன் கடவுச்சொல் மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு மேலாண்மை நிரலியால் அனுப்பப்படும். பிறகு இந்தத் தளம் உங்கள் கைகளில். (தயவு செய்து பெயரை ஆங்கிலத்தில் தேர்ந்தெடுக்கவும், தரவுத்தள அமைப்புகள் இன்னும் தமிழ் ஏலுமாக்கப்படவில்லை).
முதன்முறையாக அமைக்கப்பட்ட தளம் என்பதால் சில சிக்கல்கள் இருக்கின்றன (உதாரணமாக, தமிழில் தளம் தெரிய UTF-8 குறியீட்டை நீங்கள் ஒவ்வொருமுறையும் தெரிந்தெடுக்க வேண்டியிருக்கிறது). விரைவில் இவற்றைக் களைந்து பயன்பட இலகுவானதாக மாற்றுவோம். இதைத் தவிர இந்தத் தளத்திற்கு வராமலேயே உள்ளீடும் முறையையும் பரிசோதித்து வருகிறோம்.
இந்தத் தளம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
முகவரி: http://www.tamillinux.org/sangam
அன்புடன்
சங்கம் நிர்வாக் குழு
நன்றி வெங்கட்.
சங்கத்தில் போய் என்னைப் பதிவு செய்து கொண்டேன். நல்ல பெயர் தான். இதுவே இருப்பது எனக்குச் சரியே. ஒரு பத்து பேர் உதவிக்கு வேண்டும் என்று முன்னர் கேட்டிருந்தீர்கள். எனது பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
UTF-8 குறியீட்டை நீங்கள் ஒவ்வொருமுறையும் தெரிந்தெடுக்க வேண்டியிருக்கிறது
>>
Is there are problem including information? how is the html page generated? by php or static? In either case it’s easy to include the meta tag.
Please see this post in Wiki by Selvaraj
http://tamillinux.org/tamilblog/index.php?pagename=SettingContentType
‘சங்கமம்’ என்ற பெயர் நன்றாக இருக்கிறதா..??
சங்கம் – தமிழ் பெயர் இல்லை என்று நினைக்கிறேன்.
மற்றும் தியேட்டர் பெயர் போலவும் , ராஜ்கபூர் படமும் ஞாபகம் வருகிறது.
ஈ-சங்கமம்-னு ஒன்னு ஏற்கனவே இருக்கு (காசி கூட வலைப்பதிவு பத்தி எழுதறாரே).
சங்கம் – தமிழ்ப் பெயர் இல்லையா ??!! மதுரையில சொன்னா அடிக்க வந்துரமாட்டாங்களா ? தமிழ் வளர்த்த முத்தமிழ்ச்சங்கம் ?
Hi Venkat
I can help if there is any kind of coding needed to be done. Let me know if there is no one or not enough already.
Navan
Navan; Great relief. I need a lot of help. Can you register yourself there and let me know the login (venkat at rogers pulli com). I will give admin privileges and from there we can go. This should be truely collective effort. These days, I am hard pressed for time.
i am sorry venkat, i dont know how to help since i am not a computer guy!
சுந்தரவடிவேல், எல்லோரும் தொழில்நுட்பத்தில்தான் உதவ வேண்டும் என்பதில்லையே. நீங்கள் கட்டுரைகளையும் செய்திகளையும் சேர்ப்பதன்மூலம் தளத்தைப் பயனுள்ளதாக்கலாமே. இதற்கு வலைக்குறிப்பதைவிட அதிக அனுபவம் தேவையில்லை.
சுந்தர், நான் பெயரைத் தேடிக்கொண்டிருந்தபொழுது, தமிழ் வரலாற்றில் பல்துறை அறிஞர்கள் பங்குபெற்ற இடத்திற்குப் பெயர் என்ன என்பது. அந்த சமயம் என் மனதில் தோன்றியது கடைச்சங்கம். (சங்கம் என்பது வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்த சொல்தான், ஆனால் இலக்கணம் – லக்க்ஷணம், இலக்கியம் – லக்க்ஷியம் போல அதுவும் தமிழில் அசைக்கமுடியாத சொல்தான்).
ராஜ்கபூரை விடுங்கள். “சங்கத்தில் பாடாத கவிதை, அங்கத்தில் யார் தந்தது” என்ற அருமையான இளையராஜா பாடலை நினைவிருக்கிறதா?
An article by me on Science and Intellectual Property Rights (in Tamil) is offered for inclusion in Sangam.If interested please contact me.
ரவி, நீங்கள் நேரடியாகவே அங்கே உங்கள் கட்டுரையை உள்ளீடலாம். முதலில் உறுப்பினராகப் பதிந்துகொள்ளுங்கள். பின்னர் கட்டுரையைச் சேருங்கள். காத்திருக்கும் கட்டுரை நிர்வாக அனுமதியுள்ளவர்கள் கண்களில் பட்டவுடன் அது தளத்தில் அனுமதிக்கப்படும். (தற்சமயம் நானும் நவனும் நிர்வாக உரிமை கொண்டுள்ளோம், நிர்வாக உரிமை வேண்டிய பிறர் எனக்குத் தனியஞ்சலில் எழுதவும்).
இன்றைக்கு ஒரு மருத்துவச் செய்தி உள்ளிடப்பட்டிருக்கிறது. விவாதிக்கலாமே!
வெங்கட்,
நானும் உடனடியாக எதுவும் செய்ய முடியாததற்கு வருந்துகிறேன், ஆனால் விரைவில் பிஎச்பில்
கோடிங் ஆரம்பித்துவிடுவேன். இப்பதான் எலோ வேர்ல்டு ஆரம்பித்திருக்கிறேன்.
பொறுக்க வேண்டுகிறேன்..
விவாதமா, நான் ரெடி..(இங்கு மரியாதையை கடைபிடிப்பேன், நண்பர்களின் வட்டம் என்பதால்)
Venkat, i registered twice so far, but i havent yet got my password. why?
வெங்கட், நானும் மூன்று முறை என்னைப் பதிந்திருக்கிறேன், ஆனாலும் ஒன்றும் தரமாட்டேன் என்கிறது. என்ன செய்தால் வழிக்கு வரும் சங்கம், என் குட்டித்தங்கம்?
காசி, எல்லோருக்கும் கடவுச் சொல் சென்றிருக்கிறது. (சுந்தரவடிவேல் கூட இன்று மாலை மறுமுறை பதிந்து பெற்றதாக எழுதியிருந்தார்). உங்கள் ஹாட்மெயிலில் தனியஞ்சல் எழுதியிருக்கிறேன்.
வெங்கட்,
உங்கள் தனி அஞ்சலைப் பார்த்து உள்ளே புகுந்துவிட்டேன். ஒரு கருத்து இட்டுள்ளேன். இனி ஜமாய்க்கலாம். நன்றி.