• கீரவாணி (எ) மரகதமணி

    by  • November 23, 2004 • இசை • 10 Comments

    அடுத்ததாக என்னுடைய தெலுகு பாடல் தெரிவு ஒன்று. தமிழுக்கு அடுத்தபடியாக இந்திய மொழிகளுக்குள்ளே நான் அதிகம் கேட்பது தெலுகு பாடல்களைத்தான். ஐஐஎஸ்ஸியில் படித்த காலத்தில் வளாகத்தை ஒட்டி, கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தொலைவில் மத்திகெரே என்ற இடத்தில் விமானப்படையைச் சேர்ந்தவர்களுக்காக மனோரஞ்சன் என்ற திரையரங்கு ஒன்று இருந்தது. இது விமானப்படையினருக்காக நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை, ஐஐஎஸ்ஸி மாணவர்களைத்தான் அதிகம் காணமுடியும். வாரத்தில் இரண்டு நாட்கள் தமிழ், ஒரு நாள் தெலுகு, ஒரு நாள் கன்னடம், ஒரு நாள் ஆங்கிலம், ஒரு மலையாளம், ஒரு ஹிந்தி என்று திரையிடுவார்கள். (சமயத்தில் இரண்டு ஹிந்தியும் ஒரு தமிழும் வரும்). அந்தக் காலங்களில் இரவு ஆய்வகத்தில் லேசரைத் துவக்கிவைத்துவிட்டு அது சூடுபிடித்து சமநிலைக்கு வரவேண்டும் என்ற காரணத்தைச் சொல்லிக் கொண்டு நானும், Furnace சூடாக வேண்டும் என்று மெட்டலர்ஜியில் இருக்கும் நண்பனும், ஜெல்லில் டிஎன்ஏ இறங்க வேண்டும் என்று genetic engineeringல் இருக்கும் நண்பனும், கணினியில் நிரலை ஓடவிட்டுவிட்டு ஏரோஸ்பேஸில் இருக்கும் இன்னொருவனும், இப்படி ஒரே மாதிரியான காரணங்களைச் சொல்லிக்கொண்டு அரையாகவும், முழுதாகவும் நிறைய படங்களை கணக்கு வழக்கில்லாமல் பார்த்திருக்கிறோம்.

    பாடல் : அம்மாயி முத்து இவன்டே
    பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.சித்ரா
    படம்: க்ஷண க்ஷணம்.
    இசை: எம். எம். கீரவாணி

    ஸ்ரீதேவி, ஜெயப்ரதா, திவ்யபாரதி, தொடங்கி ஷில்பா ஷெட்டி, தபூ வரை நடிப்பில் கோடி காட்டி.. சீ. கொடிகட்டிப் பறந்த காலம் அது. அதே போல சிரஞ்சீவி, நாகர்ஜுனா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா என்று ஒரு பட்டாளமே தூள் பறத்திக் கொண்டிருந்தது. இடையில் சிரஞ்சீவியிடம் போனவாரம் அடிவாங்கிய அதே கோஷ்டி அடுத்தவாரம் விஜயசாந்தியிடம் அடிவாங்குவார்கள். துரத்தித் துரத்தி தெலுகுப் படங்களைப் பார்த்த காலம் அது. இன்னொரு முக்கிய காரணம் தெலுகில் இளையராஜாவும் கோலோச்சிக் கொண்டிருந்தார். சாஹர சங்கமா, ஸ்வாதிமுக்த்யம் என்று ஒரு பக்கமும், ஸ்டூவர்ட்புரம் போலீஸ்ஸ்டேஷன், தர்ம§க்ஷத்ரம், பொப்பிலி ராஜா என்று இன்னொருபுறமும் வூடுகட்டி அடித்துக் கொண்டிருந்தார் ராஜா.

    * * *

    இடையில் எம். எம். கீரவாணி என்றொரு இளைஞர் வந்தார். அல்லாரி ப்ரியுடு என்ற திரைப்படத்தின் மூலம் அரங்கேறிய கீரவாணியின் முழுப்பெயர் மரகதமணி கீரவாணி. ஆமாம், தமிழில் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு அழகன், வானமே எல்லை போன்ற படங்களுக்கு இசையமைத்தவரும் இவர்தான். ஹிந்தியில் கரீம் என்ற பெயரிலும் இசையமைத்திருக்கிறார். தெலுகில் 1990 தொடக்கம் 1996 வரை வருடத்திற்குச் சராசரியாக 22 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவற்றில் பெரும்பாலானவை மாபெரும் வெற்றிப் படங்கள்.

    கீரவாணியைத் தூக்கி நிறுத்திய படம் க்ஷண க்ஷணம். ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெங்கடேஷ், ஸ்ரீதேவி நடித்த நல்ல பொழுதுபோக்குப் படம். (இதன் பாதிப்புதான் மணிரத்னத்தை ராம்கோபால் வர்மாவுடன் இணைந்து திருடா திருடா என்ற படத்தை இயக்கத் தூண்டியது). வித்தியாசமான இசையுடன் ஆறு நல்லபாடல்கள் ஷன ஷனத்தில் இருந்தன. இவற்றுள் என்னைக் கவர்ந்த பாடல் இன்றைய தெரிவு. அருமையான இழையோடும் இசை. வழக்கம் போல எஸ்.பி.பியின் வளமான குரல், ஈடுகொடுக்கும் சித்ரா. பாடலின் இடையில் வரும் கிடார் இசை அற்புதம்.

    10 Responses to கீரவாணி (எ) மரகதமணி

    1. Icarus Prakash
      November 23, 2004 at 11:33 pm

      லாயல்ட்டி மாத்தினதுக்கு வன்மையாக கண்டிக்கிறேன். :-) இருந்தாலும் எனக்குப் புடிச்ச படம் என்பதால் பொழைச்சுப் போங்கோ… :-) இதிலே எனக்குப் பிடித்த பாட்டு, 'சலி சம்ப்பகுன்ன ச்சமக்குலோ சலி கிந்த கிச்சிந்தி…. " என்ற ஒரு பாட்டு. சூப்பர் பீட்டு பாட்டு. ஆக்சுவலா, க்ஷணக் க்ஷணம், ரொம்ப ஜாலியான படம். இந்தியில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த சமயத்தில்,. சும்மா ஒரு சேஞ்சுக்காக வந்து இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்து விட்டுப் போனார் ஸ்ரீதேவி,. லாஜிக்கெல்லாம் பார்க்காமல் பார்த்தால், நல்ல பொழுது போக்குச் சித்திரம். அவர் எப்பேர் பட்ட திறமையான நடிகை என்பதை, அவர் இப்படத்தில் பயந்து நடுங்கும் காட்சிகளைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

      பிகு : இளையராஜாவின் கன்னட படங்கள் பத்தியும் எழுதி, பாட்டு எடுத்துப் போடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.. to start with, நம்மூர மந்தார ஹ¥வே…. அதுக்கு பிறகு கீதா

      .வேணா, வெங்கட் வாழ்கன்னு கோஷம் போடறேன்

    2. November 24, 2004 at 1:24 am

      க்ஷணம் க்ஷணம்தானே தமிழில் `என்னமோ நடக்குது' என்று டப் செய்யபட்டது. `தனிமை ராத்திரி இனிமையம்மா..' `மச்சினிக்கு வயசு வந்து மாசம் எட்டாச்சு..!' போன்றவை தமிழிலும் ஹிட். மரகதமணிதான் இசை என்று இப்போதுதான் தெரிந்தது.

    3. November 24, 2004 at 1:33 am

      க்ஷணம் க்ஷணம் எல்லாவித கிண்டலுடன் (உதாரணமாய் இந்த `மச்சினிக்கு..' பாட்டு(தெலுன்கில் நினைவிலில்லை) வரும் இடம்) எடுக்கபட்ட படம். மிக ஜோக்கான வில்லன். படம் முழுக்க எள்ளலான காமெடி. பல இடங்களில் ராம்கோபால் வர்மா மற்ற மசாலாக்களிடமிருந்து வித்தியாசம் காட்டியிருப்பார்-அது குறித்த கிணடலுடன். (உதாரணமாய் வில்லன் ஸ்ரீதேவி மீது கத்திவைத்து மிரட்டும் போது, வெங்கடேஷ் துப்பாக்கியை நெற்றியில் வைப்பது, வெங்கட்ரேஷ் தான் திருடனான கதையை சொல்வது (`அம்மா அபரேஷனுக்கு பணமில்லாம..) நகைச்சுவை உணர்வே அறவே இல்லாத மணிரத்தினத்தின் திருடா திருடாவை ஒப்பிட முடியும் என்று தோன்றவில்லை.

    4. Icarus Prakash
      November 24, 2004 at 2:16 am

      ரோசா… இது நியாயமா ராசா? வர்மா என்னமோ சீரியசாய்த்தான் எடுத்தார். அந்த வில்லன் காரக்டர் ( பரேஷ் ராவல்) எல்லாம் பாக்க ஜோக்கா இருந்தாலும் ' கித்னே ஆத்மி தே' ன்னு கர்ஜனை செஞ்ச கப்பர் சிங்கு மாதிரி பக்கா வில்லன் காரக்டர் தான். அதுலே வர டூயெட்டெல்லாம், satire எல்லாம் கிடையாது. RGV எனக்குத் தெரிஞ்சு satire பண்ண ஒரே தெலுங்குப் படம், சினிமா கடத்தல்காரர்களை நையாண்டி பண்ணி எடுத்த 'மனி' ( money). அதென்ன , போற போக்கிலே மணிரத்னத்துக்கு ஒரு இடி? வெச்சிக்கிறேன்

    5. November 24, 2004 at 3:09 am

      நண்பா இகாரஸ், மணிரத்தினம் பத்தி நல்லதா ஏதாவது சொன்னா உங்களுக்கு சந்தோஷம் வரும்னா சொல்றேன். அவர் டெக்னிகலா செஞ்சதை, அதுக்கு முன்னாடி யாரும் (தமிழில்) செய்யாத வகையில் சில காட்சியமைப்புகளை தந்தது- நாயகன் படத்தில் செஞ்சதை-உதாரணமா ரெட்டியோட ஆட்கள் சரண்யாவை காலிபண்ணி அடக்கம் செய்யும் நேரத்தில் கமலின் முகபாவ மாற்றங்களையும், இளசின் இசையையும் மட்டும் வைத்து, கமல் பழிவாங்கும் முடிவுக்கு வந்ததை அறிவுருத்துவது. இன்னும் இப்படி நிறய சொல்லலாம். நான் சொல்ல வந்தது, மணிரத்தினத்தின் நகைச்சுவையை, அக்னி நட்சத்திரம் வீ.கே.ராமசாமி-ஜெனகராஜாகட்டும், இன்னும் இ.திருடாதேவாகட்டும் என்ன கண்ராவி நகைச்சுவை! வெங்கட் இங்கே திருடா..திருடா..பத்தி சொன்னதாலே சொல்லதோன்றியது.

      மனி பார்க்கவில்லை. ஆனால் பொதுவாகவே ரா.கோ.வ. படங்களில் ஒரு கிண்டல்/நையாண்டியோடு கூடிய ஒரு ஜாலியான காட்சியமைப்பை பார்க்கமுடியும் என்பதே அடியேனின் அபிப். க்ஷணம் க்ஷணத்தில் படம் முழுக்கவே, திருடா..திருடா அப்படி அல்ல என்றும். வேறமாறி தோணுச்சுனா இங்கேயே அவுத்து வுடுங்களேன். எதுக்கு பின்னாடி வச்சுகணும்?

    6. J. Rajni Ramki
      November 24, 2004 at 4:48 am

      தெலுகுவில் எனக்கு புடிச்ச பாட்டு, போன வருஷத்து ஹிட், ஹீரோயின் காவேரியை நினைச்சு ஹீரோ ரவி தேஜா பாடுற 'பெண்ணல்ல ஹோய்..ஹோய்…' படத்தை பத்தின விவரங்களை யாராவது சொன்னா தேவலை!

    7. November 24, 2004 at 4:51 am

      தெலுங்கில்தான் படம் பார்தேன், சரியாய் புரிந்துகொண்டேனென்றால் இந்த "சலி சம்ப்பகுன்ன ச்சமக்குலோ சலி கிந்த கிச்சிந்தி…. " (அதான் `மச்சினிக்கு' ) பாட்டிற்கு முன் `ரொம்ப நேரமா பாட்டெ இல்லாம போரடிக்குதுன்னு சொல்லி காட்டுசீனில் கிண்டலாய் அந்த பாட்டு வரும். அது போல படம் முழுசும் வரும் வசனங்களைதான் சொன்னேன் -மற்ரபடி satire எல்லாம் இல்லை.

    8. November 24, 2004 at 5:09 am

      ரோஸா வஸந்த் – மணிரத்னத்தின் நகைச்சுவை உணர்வு உலகப் பிரசித்தி பெற்றது :) . இன்னொரு விஷயம் தெரியுமா? திருடா திருடா படத்தின் திரைக்கதை ராம்கோபால் வர்மா-தான்.

      சலி சம்பகுன்ன – என்னுடைய வரிசையில் ரொம்பப் பின்னாடிதான். அம்மாயிக்கு அடுத்தது அந்தனந்த எத்தா – துள்ளும் இனிமையான இசை. இந்தப் பாடலில் கிட்டத்தட்ட வெங்கடேஷ்க்கும் ஸ்ரீதேவிக்கும் போட்டியே நடக்கும். கட்டக் கடைசியில் ஆ அம்மாயி காருவை ஒரு ஒரமாக நிற்கவைத்துவிட்டு வெங்கடேஷ் ஆடித் தீர்த்துவிடுவார். க்ஷண க்ஷணத்தில் ரோ.வ சொன்னதுபோல் அற்புதமான எள்ளல் படம் முழுவதும் வரும். வில்லன் டப்பு எக்கட என்று பல இடங்களில் சலித்துக் கொள்வார். படத்தின் முதல் காட்சியே நன்றாக இருக்கும். என்னைப் பொருத்தவரை இந்தப் படத்திற்கு இசை மிகவும் துணையாக இருந்தது.

      தெலுகில் மசாலா சினிமாக்களைப் பகடி செய்து அடிக்கடி மசாலா படங்கள் வரும்; சக்கைபோடு போடும். உதாரணமாக ஒக்க ராதா இத்ரு கிருஷ்ணலு (தமிழில் ஹரே ராதா, ஹரே கிருஷ்ணா) படத்தில் பல என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் படங்கள் கிண்டலடிக்கப்பட்டிருக்கும். கமலஹாசனும், ஸ்ரீதேவியும் கடைசியாக இணைந்து நடித்த படம் என்று நினைக்கிறேன். தமிழில் இதுபோல எடுக்க முடியாது, நம்ம ஹீரோக்களுக்குத் தங்களைக் கிண்டலடிப்பதைப் பொருத்துக் கொள்ளமுடியாது. (கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் விஜயகாந்த் கோர்ட் வசனம், கமலஹாசன் அழுகை, ரஜினி ஒற்றைவரி என்று எத்தனை இருக்கிறது கிண்டலடிக்க, இதையெல்லாம் விணாக இழந்துகொண்டிருக்கிறோம்). நம்ம ஊரில் அக்மார்க் மசாலா எடுத்தாலும் ஹீரோ கடைசியில் குண்டடிபட்டு உபதேசம் பண்ணி ஹீரோயினைக் கட்டிக் கொண்டுதான் படத்தை முடிக்க வேண்டும். திருடா திருடா படத்தில் இதெல்லாவற்றையும் ராகோவ போட்டு மிதித்திருப்பார். முடிவு நன்றாக இருக்கும்.

    9. November 24, 2004 at 1:37 pm

      இந்தப்பாடலின் ஆரம்ப இசை (prelude) பால் மாரியட் (Paul Mauriat http://songs.allofmp3.com/mcatalog.shtml?groupname=paul%20mauriat&albumname=serenade… )என்பவரின் ஒரு பீஸிலிருந்து சுடப்பட்டிருக்கிறது. அந்த பீஸை ஸெரனேட் (Serenade) என்ற அவரின் ஆல்பத்தில் கேட்டிருக்கிறேன். பீஸின் பெயர் ஞாபகம் இல்லை.
      கீரவாணி ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவருக்கென்று ஒரு பாணி உண்டு. தமிழில் ஏனோ அவரை பாலச்சந்தர், வசந்த் போன்றவர்கள் தவிர மற்றவர் ஆதரிக்கவில்லை.

    10. November 28, 2004 at 11:29 pm

      ஹரி – நான்கு நாட்களாக இந்த Serenade ஆல்பத்தைத் தேடினேன். இன்றைக்கு உள்ளூர் பொது நூலகத்தின் வேறொரு கிளையில் இருப்பதாகக் கண்டுபிடித்தேன். இது அங்கிருந்து என் வீட்டுக்கருகில் உள்ள நூலகத்திற்கு இன்னும் ஒரு வாரத்தில் வந்துவிடும். இதில் சுட்டது தெரிந்தால், சுட்டுகிறேன் :) . தகவலுக்கு நன்றி!

      இதே படத்தில் இன்னொரு பாடலான "சலி சம்பகுன்ன" வின் ஆரம்பம் கூட ஒரு பிரபல பாப் ஆல்பத்தில் இருக்கிறது. (ஆனால் வெறும் ஜும்பாரே, போன்ற தெவச மந்திரங்கள்தான். பாடல் இல்லை).

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *