கல்பாக்கம் அணு உலைக்கு ஆபத்து?
by வெங்கட் • December 27, 2004 • அறிவியல்/நுட்பம் • 3 Comments
நேற்றைய ட்சூனாமியினால் கல்ப்பாக்கம் அணு உலைக்குப் பெரிய பாதிப்புகள் இருக்கலாம் என்று வதந்திகள் வந்தன. இதற்கு முக்கிய அடிப்படை அணு உலை நிறுத்தப்பட்டதுதான். (பொதுவில் அணு உலைகளைச் சாதாரணமாக நிறுத்திவிட மாட்டார்கள். உலையை நிறுத்துவதற்கும், துவக்குவதற்கும் நிறைய எத்தனங்கள் தேவைப்படும்).
இந்த வதந்திகளுக்கு ஒரு முக்கிய அடிப்படை, பிரதமர் மன்மோஹன் சிங் கல்பாக்கம் உலையை நேரடியாகப் பார்வையிடுவார், அதன் சேதங்களை ஆராயக் குழு அமைக்கப்படுகிறது என்று பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த செய்திகள்தான். மன்மோஹன் சிங் அக்டோபர் மாதத்தில்தான் கல்பாக்கம் வந்துபோனார். கடந்த சில மணி நேரங்களுக்கு முன்வந்த தகவலில் பரவலாகப் பேசப்பட்டதைப் போல எந்தச் சுவரும் இடிந்து விழவில்லை. அணு உலையை மூட முக்கிய காரணம், உலையைக் குளிர்விக்க உள்ளெடுக்கப்படும் கடல்நீரின் மட்டம் குழாய்களில் உயர்ந்ததுதான் என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்திய அணுசக்தித் துறையின் தலைவர் அனில் கக்கோட்கர் உலையை நேரடிப்பார்வையிட்டிருக்கிறார்.
கல்பாக்கம் குடியிருப்புகளில் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது. அணுநிலைய ஊழியர் ஒருவர் (திரு செல்வராஜ்) இறந்திருக்கிறார் என்று செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து இப்படிப் பலத்த உயிர்ச்சேதத்திற்கு இடையில் அணு உலை மாத்திரம் எப்படிச் சேதமடையாமல் இருக்க முடியும் என்று கேட்கிறார்கள். பொதுவில் அணு உலைகள் மிக வலுவாகக் கட்டமைக்கப்படிருக்கும். பல பாதுகாப்பு அமைப்புகள் இருக்கும். கல்பாக்கம் அணு உலை இந்தியர்கள் ஏற்கனவே அணு உலைகளில் பெற்ற முன்னனுபவங்களின் அடிப்படையில் கட்டப்பட்டது.
கல்பாக்கத்தில் இருக்கும் என்னுடைய நெருங்கிய நண்பர் மகாதேவனுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் விடுமுறையில் ஊருக்குச் சென்றிருக்கிறார். கல்பாக்கத்தில் சிலர் இருப்பவர்கள் இணைந்து நடத்தும் இணையதளமான கல்பாக்கம்.காம் சென்று பார்த்ததில் அப்படியெதுவும் சிக்கலாக இருப்பதைப்போல யாரும் எழுதவில்லை. அங்கிருக்கும் விவாதத் தளத்தில் நண்பர்கள்/உறவினர்கள் தொடர்பு விட்டுப் போனதைத் தொடர்ந்து சிலர் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
ஒரு முன்னெச்சரிக்கைக்காக அணுசக்தித் துறை பிரதமர் பார்வையிடுவார் என்று சொல்லியிருந்தால் அதை நாம் மகிழ்வுடன் வரவேற்க வேண்டும். அணு உலைகளைப் பொருத்தவரை எந்தவிதமான முன்னேற்பாடும் விரயமில்லை. திரும்ப உலையைத் துவக்கும்பொழுது மிகுந்த கவனத்துடன், சேதங்களை அனுமானித்துச் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். அணு சக்தி எந்தவிதத் தவறுகளையும் மன்னிப்பதில்லை.
வெங்கட், தலைப்பிலே ஒரு கேள்விக்குறியைப் போட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ("…ஆபத்து ?")
இல்லாவிட்டால், அது ஒரு நிகழ்வைக் குறிப்பதாய்த் தோற்றம் அளிக்கிறது.
மற்றபடி, எனது பெயர் தாங்கிய ஒருவர் இறந்து போயிருக்கிறார் ?
Venkat,
I have updated some information in my blog with some first hand information.
செல்வராஜ், ஆமாம் அந்தச் சந்தேகக் கேள்விக்குறி மிகவும் முக்கியம். தெருட்டியதற்கு நன்றி
சுரேஷ், படித்துவிட்டு எழுதுகிறேன்.