• கடவுள் பாதி, மிருகம் பாதி

    by  • June 25, 2004 • கனடா • 0 Comments

    dog_weapons.png பல சமயங்களில் நம்பமுடியாத விஷயங்கள் நடக்கின்றன. நேற்று முன்தினம் டொராண்டோ நகரில் ஒரு மாபெரும் துக்க தினமாக மாறியிருக்கவேண்டியது ஒரு நாயினால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

    கனடாவின் கிழக்கு மாநிலமான நியூ ப்ரன்ஸ்விக்கிலிருந்து மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவன் ஒரு கார் நிறைய ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் ஏற்றிக்கொண்டு டொராண்டோ நகருக்கு வந்திருக்கிறான். இலக்கு எதுவுமில்லாமல் பொதுமக்கள் சந்தோஷமாக இருக்கும் கூட்டத்திற்குச் சென்று பலரையும் சுட்டுத்தள்ளும் உத்தேசம் அவனுக்கு இருந்திருக்கிறது. நகரின் கிழக்குப் பகுதியிலிருக்கும் ஒரு பூங்காவிற்குச் சென்று தன்னுடைய துப்பாக்கிகளில் வெடிமருந்துகளை பொதிக்கப்போகும் சமயத்தில் பூங்காவிலிருந்த ஒரு நாய் அவனிடம் சென்று விளையாடியிருக்கிறது. நாயுடன் விளையாடிய அவனுக்கு மனது மாறிப்போயிருக்கிறது. இப்படி ஒரு நாயால் அன்பு காட்ட முடியுமென்றால் நான் மட்டும் ஏன் மனிதர்களைச் சுட்டுத்தள்ள வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. நீண்ட நேரம் போலிஸைத் தேடி அலைந்திருக்கிறான். கண்ணில் பட்ட ஒரு போலிஸ்காரரிடம் போய்ச் சரணடைந்து ஆயுதங்களை ஒப்படைத்திருக்கிறான்.

    அவனுடைய காரில் தொலைநோக்கிகள் பொருத்தப்பட்ட இரண்டு பெரிய துப்பாக்கிகள், ஒரு குறுந்துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, ஒரு கோடரி, வேட்டைக் கத்தி, எறிகத்தி என்று ஒரு பெரிய ஆயுதக்கிடங்கே இருந்திருக்கிறது. காரில் கிட்டத்தட்ட 6,300 துப்பாக்கி ரவைகள் இருந்திருக்கின்றன. சரணடைந்தபொழுது அவனிடம் முழுமையாக ரவைகள் பொதிக்கப்பட்ட தானியங்கித் துப்பாக்கி இருந்திருக்கிறது. (வெற்றுக் கைத்துப்பாக்கியுடன் கைது செய்த போலீஸ் நடுக்கத்துடன்தான் அவனுக்கு விலங்கு மாட்டியிருக்கிறார்).

    இதை முதலில் உள்ளூர் வானொலிகளில் கேட்டபொழுது என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் இப்பொழுது இது உண்மையான சம்பவம் என்று போலீஸ் சொல்லியிருக்கிறது. பிடிக்கப்பட்ட ஆயுதங்களின் படத்தையும் போலீஸ் வெளியிட்டிருக்கிறது.

    பல சமயங்களில் மென்மையான உணர்வுகளுக்கும் அரக்கத்தனத்திற்கும் இடையே இருக்கும் இழை மிகவும் மெல்லியாதாகத்தான் இருக்கிறது. இந்த சமயத்தில் ஒரு நாயின் கனிவு எல்லைக்குக் கீழே இழுத்துவந்திருக்கிறது.

    0 Responses to கடவுள் பாதி, மிருகம் பாதி

    1. பாலாஜ&#300
      June 26, 2004 at 2:31 am

      வெங்கட் இது நல்ல பதிவு. குறிப்பாக //மென்மையான உணர்வுகளுக்கும் அரக்கத்தனத்திற்கும் இடையே இருக்கும் இழை மிகவும் மெல்லியாதாகத்தான் இருக்கிறது//

      இது உணர்ந்தறியப்பட வேண்டிய ஒன்று.

      நன்றிகள்!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *