ஒரு வருடம்
by வெங்கட் • July 22, 2004 • பொது • 0 Comments
இன்றுடன் நான் வலைக்குறிப்பு எழுத ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியிருக்கிறது. சத்தியமாக ஒரு வருடத்திற்கு முன்னால் என்னால் இதைத் தொடர்ந்து செய்யமுடியும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் இப்பொழுது கிட்டத்தட்ட தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாகிப்போயிருக்கிறது. இந்த வலைக்குறிப்பின் பயன் என்ன என்று நான் யோசித்துப் பார்த்தபொழுது எல்லாவற்றிலும்கூட முக்கியமானதாகத் தோன்றியது எனக்குக் கிடைத்திருக்கும் நண்பர்கள். பத்ரி, காசி, குமரகுரு, பரி, பா.ராகவன், சுந்தரவடிவேல், தங்கமணி, பாலாஜி-பாரி, பாஸ்டன் பாலாஜி, ‘என் மூக்கு’ சுந்தர், ஐகரஸ் பிரகாஷ், டைனோ என்று பல நண்பர்கள் எனக்கு அறிமுகமானது வலைக்குறிப்புகளின் வாயிலாகத்தான். இந்த நட்புகள் தொடரும், தொடரவேண்டும் என்பதே என்னுடைய இந்த நேரத்து நம்பிக்கையாகவும் விழைவாகவும் இருக்கிறது.
ஒருவகையில் இந்தக் குறிப்புகள் என்னுடைய எழுதும் பழக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உதவியிருக்கின்றன. இவற்றில் தொடராக நான் எழுதிய ஒன்றிரண்டு கட்டுரைகள் பின்னர் என் குவாண்டம் கணினி புத்தகத்தில் இடம்பெற்றன. கடந்த இரண்டு வருடங்களாக இருந்துவரும் வேலைப்பளுவினிடையே இப்படியொரு பழக்கத்தை எனக்கு நானே சுமத்தியிருக்காவிட்டால் இந்தக் கட்டுரைகள் எழுதப்படிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.
நான் எழுதிய இந்தக் குறிப்புகளின் மீது பாரபட்சமில்லாத விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. டைனோ, என் ‘மூக்கு சுந்தர்’ போன்றவர்களும் கடந்த சில வாரங்களில் ரவி ஸ்ரீனிவாஸ், ரோஸா வஸந்த் போன்றவர்களும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள். இவை நான் எழுதுவன உற்றுநோக்கப்படுகின்றன என்று தொடர்ச்சியாக எனக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மேம்போக்காக எழுதாமல் கவனம் செலுத்த இவர்கள் உதவியாயிருக்கிறார்கள். இவர்களுக்கு என் நன்றிகள். தொடர்ச்சியான வாக்குவாதங்களுக்குப் பிறகு இந்த நண்பர்களில் சிலருக்கு என்னையும் என் நோக்கங்களைப் பற்றியுமான புரிதல் கிடைத்திருக்கும் என்பது என் நம்பிக்கை (இன்னும் இல்லை என்றால் வரும் நாட்களை நம்பிக்கையோடு எதிர்நோக்க வேண்டியதுதான்). எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதன்றி வேறொன்றுமில்லை எனக்கு.
வரும் நாட்களில் என்னுடைய வலைக்குறிப்புகளின் போக்கில் சில மாற்றங்களைச் செய்ய உத்தேசம். இப்பொழுதைக்கு தோற்றத்தில் மாத்திரம்…
நன்றிகளுடன் தொடர்கிறேன்.
வாழ்த்துகள்! இந்த தோற்றம் அழகாக இருக்கிறது.
அச்சச்சோ, நான் மாத்திக்கிட்டே இருக்கறச்சே பாதிலியே பாத்துப்புடீக்களே! இப்பத்தான முடிச்சேன்.
வாழ்த்துகள் வெங்கட். நீங்கள் எழுதும் குறிப்புகளை ஒன்றுவிடாமல் படித்துவருபவன் என்கிற முறையில் ஒரு விஷயத்தை மிக கவனமாக கவனித்துவந்தேன். அது, உங்கள் மொழி சார்ந்த அக்கறை. உங்களது ஆரம்பக்காலப் பதிவுகளில் கையாளப்பட்டிருந்த மொழிநடைக்கும் இப்போது எழுதும் மொழிக்கும்தான் எத்தனை வித்தியாசங்கள்! எளிமை கூடக்கூட இந்தத் தமிழ்தான் எத்தனை அழகாகிவிடுகிறது! நீங்கள் இதனை கவனித்தீர்களா தெரியவில்லை. இப்போதெல்லாம் நீங்கள் எனக்குப் புரியாத விஷயங்களையே தொடர்ந்து எழுதினாலும் சுகமாகப் படித்துவிடமுடிகிறது என்னால். அதற்காகவும் ஒரு தனி நன்றி.
முந்தைய என் பின்னூட்டம் சரியாகப் பிரசுரமாகாததால் மீண்டும் இடுகிறேன்.:
வாழ்த்துகள் வெங்கட். நீங்கள் எழுதும் குறிப்புகளை ஒன்றுவிடாமல் படித்துவருபவன் என்கிற முறையில் ஒரு விஷயத்தை மிக கவனமாக கவனித்துவந்தேன். அது, உங்கள் மொழி சார்ந்த அக்கறை. உங்களது ஆரம்பக்காலப் பதிவுகளில் கையாளப்பட்டிருந்த மொழிநடைக்கும் இப்போது எழுதும் மொழிக்கும்தான் எத்தனை வித்தியாசங்கள்! எளிமை கூடக்கூட இந்தத் தமிழ்தான் எத்தனை அழகாகிவிடுகிறது! நீங்கள் இதனை கவனித்தீர்களா தெரியவில்லை. இப்போதெல்லாம் நீங்கள் எனக்குப் புரியாத விஷயங்களையே தொடர்ந்து எழுதினாலும் சுகமாகப் படித்துவிடமுடிகிறது என்னால். அதற்காகவும் ஒரு தனி நன்றி.
எழுதுவது..
சுவாரஸ்யமாய் எழுதுவது…
விஷயத்துடன் எழுதுவது……
இவை அனைத்தும் ஒரு கலை.
மேற்கூறியவை ஒருங்கே செய்ய முடிந்தால் தவம்.
அதைத் தொடர்ந்து செய்ய முடிந்தால் வரம்.
உமது தவம் தொடர வாழ்த்துக்கள்.
- அழியா அன்புடன் அருண்
சுவாரசியமான நண்பர்கள் கிடைப்பது வலைப்பதிவின் மிகப்பெரிய வரம். அதற்கு, முன்னோடியாக, என்னைப் பதியத் தூண்டிய வலைப்பதிவு உங்களுடையது. வாழ்த்துக்கள்.
என்ன என்ன மாற்றங்கள் வரப்ப்போகுது???
வெங்கட்,
வாழ்த்துக்கள். பாரா சொன்னதுபோல கடினமான விஷயங்களையும் எளிமையாக விளக்கும் உங்கள் நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.
//அருண்:..எழுதுவது..
சுவாரஸ்யமாய் எழுதுவது…
விஷயத்துடன் எழுதுவது……// நல்லாருக்கு:).
அன்புடன்,
-காசி
(பி. கு.: அண்மையில் வந்த மறுமொழிகளை முகப்பில் காட்டும்போது, இறுதியாக வந்தது முதல் வரியில் இருப்பது நன்றாயிருக்காது?)
இப்படி நண்பர்கள் லிஸ்டில் என் பேரைப் போடாமல், வருத்தப்பட வைக்கிறீங்களே! இது போங்கு1
உங்க பேச்சு கா
காசி
உங்கள் யோசனைக்கு நன்றி! செயல்படுத்தியிருக்கிறேன். இப்பொழுது கடைசியாக வந்த கருத்து முதலில்.
கார்த்திக்,
ஐய்யய்யோ! அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. நான் பட்டியல் போடல்ல. பதினோரு மணிக்குக் களைப்பும் தூக்கமுமாய் கிறுக்கிக் தள்ளியது அது.
நெறையா இருக்கு உங்கூட. சீக்கிரம் ஏதாவது ஒன்னு வெவகாரமா எழுதறேன், ஒரு அட்டைக்கத்தி சண்டை போடத் தயாரா இரு!
பாலாஜி,
வரவிருக்கும் மாற்றங்களில் கட்டாயம் உங்களுக்குப் பிடிக்கும் என்று எனக்கு நம்பிக்கையிருக்கிறது. தொழில்நுட்பத்தைத் தீர்மானம் செய்தவுடன் விரைவில்
வாழ்த்துக்கள் வெங்கட்!
பெரும்பாலான நாள்களில் அலுவலகம் வந்தவுடன் நான் பார்க்கும் முதல் வேலை தங்களின் வலைப்பதிவைப் படிப்பது தான். அந்த அளவிற்கு தங்கள் வலைப்பதிவுகள் பாதிப்பை ஏற்படுத்தி விட்டன. தொழில் நுட்பம், லினக்ஸ், திறந்த ஆனை மூலம் மற்றும் அறிவியல் என பல விஷயங்களை எளிதிற் புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் வலைப்பதிவு மூலம் தரும் தங்கள் பணி மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள். தங்களின் வலைப்பதிவில் குறிப்பிட்டனவற்றைத் தேர்ந்தெடுத்து புத்தகமாகக் கொண்டு வந்தால் வலைப்பதிவு பற்றி அறிந்திராதவர்களுக்கும் இணையத்தொடர்பு இல்லாதவர்களுக்கும் நல்ல விஷயமாக அமையும்.
venkat
cheers.
and clean layout.
arul
Having a comment count in the main page would be nicer with this nice layout
உங்கள் எழுத்துப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துகள்!
வெங்கட்,
நான் வலைப்பதிவு ஆரம்பிக்க ஒரு உந்துதலாக இருந்தது உங்கள் பதிவு. உங்கள் எழுத்தில் உள்ள எளிமை, ஆழம் (அதே சமயம் நகைச்சுவை) என்னை மிகவும் கவர்ந்தவை. அதே போல, அறிவியல், இசை, மொழி என்று எதுவானாலும் அதைப்பற்றி நீங்கள் எழுதும் ஆழம், என்னை போல மேம்போக்காக எழுதுபவனுக்கு ஒரு பாடமாகவே அமைகிறது. உங்கள் எழுத்துப் பயணம் மேன்மேலும் தொடர, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்புடன்,
சந்தோஷ் குரு
பி.கு : இந்தப் வலைப்பக்கத்தில், இந்தப்பதிவின் தலைப்பிற்கு மேல் உள்ள சுட்டிகள் மிகவும் சிறிய எழுத்துருக்களில் உள்ளன. அதைக் கொஞ்சம் பெரிதாக்கலாமே
pari, below the heading of each posted there is “Posted at 22:36 in General . | 0 Trackbacks | 16 Comments ” information which specifies the number of comments.
At the end of the left col. there is a collective statistics “This blog has had 284 entries and 849 comments posted to it since its inception.”
I do not know where else to add comment count!
do you mean just beside the entries in the 10 Recent posts?
Santhosh Guru – I guess you mean the size of
It took me about one and half hours to do this layout, template, stylesheet, etc. I am glad that many of you commented positively. I plan to put this template for download to other MovableType users [there aren't many in the Tamil Blog world
]
தங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள்.
தற்போது கூகிள் இணையதளம் வைரஸ் அட்டாக்கிற்கு உள்ளாகியிருக்கிறதே…கவனித்தீரா?
செல்வா.
Congratulations Venkat on completing a very successful first year. Wish you more success in the coming years and expect more essays from you. (When are u going to update the annexure site to your book
?).
-dyno
Congraturations Venkat !
Anbudan../
Jeya
Dyno, I have been slowly doing this, chapter by chapter. Now, I have at least half of the chapters have additional information. I need one burst of energy to do the remaining half.
வெங்கட்,
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
“அழ அழப் பேசுவா நம் மனுஷா..சிரிக்க சிரிக்க பேசுவா பிறர் ” என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களோ..??
அப்படிப் பார்த்தால் நான் பலருக்கு “நம் மனுஷா” லிஸ்ட்
அறிவியலோடு மற்ற சமாச்சாரங்களும் (எனக்காக) அவ்வப்போது எழுதுங்களேன்.
-மூக்கன்
எழுத்துப்பயணம் தொடர வாழ்த்துக்கள்
–
அன்புடன்,
அன்பு