• ஐஐடி என்ற மாயை

    by  • July 14, 2004 • பொது • 0 Comments

    பத்ரியின் வலைப்பதிவில் The IITians புத்தகத்தைப் பற்றிய அவரது விமர்சனத்தை முன்னிட்டு ஐஐடிகளைப் பற்றி பரபரப்பான விவாதம் நடைபெறுகிறது. பத்ரி குறிப்பிட்டிருக்கும் அந்தப் புத்தகத்தை நான் இன்னும் வாசிக்கவில்லை. எனவே அதைப் பற்றி கருத்து சொல்ல முடியவில்லை. அது எனக்குக் கிடைக்க நிறைய நாட்களாகும் என்று தோன்றுகிறது.
    நம்முடைய வழக்கப்படி இதையும் பார்ப்பனர்கள் பற்றிய அக்கப்போராக மாற்றிக்கொண்டிருக்கிறோம். சிலருக்கு எத்தனை முறை கேட்டாலும் “பார்ப்பான் ஒழிக” அலுப்பதில்லை. “தம்பி எங்க இன்னொரு தடவ ஒரக்க கத்திச் சொல்லு” என்று கேட்டு பூரித்துப் போகிறார்கள். எல்லா இடங்களிலும் ஒருமுறையாவது இதைச் சொல்லாவிட்டால் தூக்கம் வருவதில்லை).

    * * *
    இந்த விஷயத்தைப் பற்றி என்னுடைய கருத்துகளைச் சொல்வதற்கு முன் என்னுடைய அருகதைகள் பற்றி;

    ஊராட்சிப் பள்ளிக்கூடங்களில் தமிழ் வழி ஆரம்பக் கல்வி கற்றேன். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பிஎஸ்ஸி, எம்எஸ்ஸி படித்தேன், தொடர்ந்து தில்லி இந்திய நுட்பியல் கழகத்தில் (Indian Institute of Technology, Delhi) ஆராய்ச்சிக்குச் சேர்ந்தேன். நான்கு மாதங்களுக்குப் பிறகு, தில்லை ஐஐடியில் செய்யப்போகும் ஆராய்ச்சியில் முழுதுமாக நம்பிக்கை இழந்து பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science, Bangalore) சேர்ந்து, முனைவர் ஆராய்ச்சி முடித்தேன். தொடர்ந்து இந்தியா அணுசக்தித் துறையிலும், அயல்நாடுகளிலும் வேலைசெய்திருக்கிறேன். இடையில், இயன்றவரை இந்தியாவில்தான் வேலைசெய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் மூன்று ஐஐடிகளில் ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பித்தேன், (ஒரு முறை சென்னை ஐஐடியில் நேர்முகத் தேர்விலும் கலந்துகொண்டிருக்கிறேன்). இந்தப் பின்புலத்தில் ஐஐடிகளைப் பற்றி கருத்துச் சொல்வதற்கு எனக்கு ஓரளவுக்குத் தகுதியிருக்கிறது என்று நம்புகிறேன். (கவனிக்கவும், ஐஐடிகளைப் பற்றி நான் ‘கண்டிலனாயினும் கேட்டவன்’ என்ற ரீதியில் நான் சொல்லவில்லை, இவை இந்திய உயர்கல்வி நிறுவனங்களுடன் என்னுடைய நேரடியான தொடர்பினால் எழுந்த கருத்துக்கள்).

    முதலாவதாக, என்னுடைய முடிவு – என்னைப் பொருத்தவரை நான் ஐஐடிகளைத் தோல்வியாகவே கருதுகிறேன். ஒரு சிறிய விளக்கம் – தனிப்பட்டு ஐஐடியில் பயின்றவர்கள் யாரையும் பற்றிய என்னுடைய கருத்தாகக் கொள்ளவேண்டாம். ஐஐடியில் பயின்றுவிட்டு உலகை கைவசப்படுத்திய தனிப்பட்ட வெற்றியாளர்களை எனக்கு நன்றாகத் தெரியும். என்னுடைய கருத்து – நிறுவனம் என்ற ரீதியில் ஐஐடிகள் குறித்தானது. அவற்றுக்கு வரையறுக்கப்பட்ட இலக்கில், அவற்றின் இலட்சியங்களில் ஐஐடிக்கள் எந்த அளவிற்குத் தோற்றுப் போயிருக்கின்றன, ஏன் என்பவை குறித்தது.

    ஐஐடிகளின் நோக்கம்: ஐஐடிகள் இந்தியாவின் மூளைகளுக்குள்ளே மிகவும் உன்னதமானவற்றைப் பொறுக்கியெடுத்து அவற்றுக்கு முன்னேறிய நாடுகளின் துணையுடன் வடிவமைக்கப்பட்ட கல்விக்கூடங்களில் (ஐஐடி) இந்தியாவின் சிறந்த ஆசிரியர்களை வைத்துக் கொண்டு பட்டைதீட்டுவது. அப்படிப் பட்டைதீட்டப்பட்ட வைரங்கள் இந்தியாவின் அறிவியல் நுட்பத்தின் à®®ுதுகெலும்பாக மாற வேண்டும். அந்த நிலையில் தனியார், அரசமைப்பு உயர்நுட்ப நிறுவனங்களை இருபது, முப்பதாண்டுகளில் தொடங்கி ஐஐடி மாணவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

    ஆனால் நிலவரம் இதற்கு எந்த வகையிலும் அருகில் இல்லை. இதைப் பற்றி எழுதவேண்டுமானால் மிக மிக விரிவாக எழுதியாக வேண்டும். (போதுமான ஆர்வமும் நேர்மையான விவாதமும் இதனை அடியற்றி எழுந்தால் இதைப்பற்றி விரிவாக எழுத நான் தயார்). ஆனால் மறுபுறத்தில் இன்றைக்கு ஐஐடிகளின் வெற்றியாக முன்னிருத்தப்படுவதைப் பார்த்தால் எதிர்ப்பார்ப்புக்கு எவ்வளவு தூரம் விலகிப் போய் ஐஐடிகள் தோற்றுப்போயிருக்கின்றன என்று தெரியவரும்.

    1.தனிப்பட்ட சில மாணவர்கள் அமெரிக்க சிலிக்கான் பள்ளத்தாக்கில் பெரும் தகவல் நுட்ப நிறுவனங்களில் உயர்பதவிகளில் இருக்கிறார்கள். இதை என்னைப் பொருத்தவரை ஒரு சாதனையாகக் கருதமாட்டேன். ஐஐடி மாணவர்களிடையே உண்மையாக எதிர்ப்பார்க்கப்பட்டது அவர்கள் சுய சிந்தனையாளர்களாக, தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்பவர்களாக இருக்கவேண்டும் என்பதே. ஆனால் எனக்குத் தெரிந்தவரை ஐஐடி மாணவர்களில் சுயமாக ஒரு நிறுவனத்தை நிர்மாணித்து அதை முன்னெடுத்துச் சென்றவர்கள் (உதாரணம் வினோத் கோஸ்லா) எண்ணிக்கையைக் காட்ட கைவிரல்கள் போதும்.

    மாறாக ஜப்பானியர்களைப் பார்ப்போம். கிட்டத்தட்ட ஐஐடிகள் துவக்கப்பட்ட அதே காலகட்டத்தில்தான் அணுகுண்டுக்களால் நிரவப்பட்ட ஜப்பானும் நிமிர்ந்தெழத் தொடங்கியது. அங்கும் பல்கலைக்கழகங்களின் நோக்கங்களும் பயிற்று முறைகளும் மாற்றியமைக்கப்பட்டன. எப்படி ஒவ்வொரு ஐஐடியுடனும் கைகோர்த்துச் செல்ல ஒரு முதலாம் உலகநாட்டு கல்வியமைப்பு அடையாளம் காணப்பட்டதோ அதே மாதிரிதான் ஜப்பானிலும். ஆனால் இன்றைக்கு நாம் கேள்விப்படும் சோனி, டொயோட்டா, ஹோண்டா, பானாஸோனிக், ஷார்ப், என்ஈஸி, என்டிடி, மிட்சுபிஷி, சுமிட்டோமோ, கவாஸாகி, சுசுகி, இன்னும் எண்ணற்ற அற்புதங்கள் ஜப்பானிலிருந்து முளைத்தெழுந்த அதே காலத்தில் நாம் மைக்ரோஸாப்டில் எழாவது நிலை மேளாலர் பதவியைச் சிலாகித்துக் கொண்டிருக்கிறோம்.

    2. அமெரிக்காவில் சிறு நிறுவனத்தில் கண்ணாடிக்கூரையின் கீழ் குறுநில மன்னர்களாக அரசாட்சி செய்ய ஐஐடிகளுக்கு ஐம்பது வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. இதை எந்த வகையில் சாதனையாகக் கருதமுடியும்? இது மானாவாரி சாகுபடி, இதில் எந்த அறிவியல் முயற்சியும் இல்லை.

    3. விரல்விட்டு எண்ணக்கூடிய வினோத் கோஸ்லாக்களும் இப்படித்தான். மிகவும் சிக்கலான நுழைவுத் தேர்வை வைத்து அதில் வெற்றி பெறும் மிக அற்புதமான புத்திசாலிகளை ஒன்றாக ஒரு விடுதியில் நான்கு வருடங்கள் அடைத்துவைத்து அவர்களை வெளியே அனுப்பி வைத்தால் அவர்களிடமிருந்து பத்து சுயசிந்தனையாளர்களாவது தேறுவார்கள். இது புள்ளியியல் நிர்ப்பந்தம். இதில் ஐஐடிகளின் பயிற்று முறை என்ன செய்திருக்கிறது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    4. இந்தப் பத்து சிந்தனையாளர்களும் ஐஐடியின் அமைப்புச் சிக்கல்களையெல்லாம் மீறி மிகுந்த சிரமத்தில்தான் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஐஐடியிலிருந்து வெளியே வந்து வெற்றிபெற்றவர்களில் 90% அமெரிக்காவில் கால்டெக், எம்ஐடி, கார்னெல், என்று உயர்தரப் பள்ளிகளில் கட்டாயம் பயிற்சி பெற்றிருப்பார்கள். இவர்களை ஐஐடியின் வெற்றியாகக் கணக்கெடுத்துக் கொள்வது அழுகுணி ஆட்டம்.

    5. ஐஐடியின் சர்வதேச வெற்றிகளாகக் குறிப்பிடப்படுபவையெல்லாம் மென்கலன் நுட்பத் துறையைச் சார்ந்தவை. ஐஐடிக்கள் வெறும் மென்கலன் பள்ளிகள் அல்ல. அங்கே பயிற்றுவிக்கப்படும் சிவில், மெக்கானிக்கல், போன்றவற்றில் எத்தனைபேர் உச்சங்களை எட்டியிருக்கிறார்கள் என்று கணக்கிட்டுப் பார்த்தல் ஐஐடியின் தோல்வி புலப்படும். இவற்றில் அறிவியல் துறைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம், இயற்பியல், வேதியியல், கணிதம் இவற்றில் ஐஐடியின் தரம் ஐஐஎஸி, டிஐஎ·à®ªà®†à®°à¯ (TIFR), ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், ரூர்க்கி, சில பிராந்தியப் பொறியியல் கல்லூரிகள் (ஆர்ஈசி), ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், மதுரை, புனே, பரோடா (கடைசி மூன்றும் உயிர்நுட்பத் துறையில் மாத்திரம்) இவற்றுக்கு அருகில் இல்லை.

    மென்கலன் துறைகளில் கூட ஐஐடி அளவுக்கு இந்தியாவின் வரிப்பணத்தை விழுங்கி ஏப்பம் விடாமல் – ஆப்டெக்கள் திறமையாகவே வெற்றிபெற்றிருக்கின்றன. இந்தியாவின் மென்கலன் தலைநகராகக் கருதப்படும் பெங்களூரில் (ஹைதராபாத்) ஐஐடி இல்லாததைப்பற்றி சிந்தித்துப் பார்க்கவும்.

    6. உயர்கல்வி பெற அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் செல்வது பல நாடுகளுக்கு வழக்கம்தான். சீனர், தாய், மலேயர், ஜப்பானியர், இந்தியர், எனப்பலரும் அமெரிக்காவிற்கு உயர்கல்வி பயிலச் செல்கிறார்கள். ஆனால் இவர்களில் பலரும் அமெரிக்காவில் நிறுவனம் நிர்மாணித்தாலும், தாய்நாடுகளுக்குத் திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகம். அல்லது இவர்களில் பலரும் தங்கள் அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்புகளைத் தாய்நாட்டில் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்தியர்களிடையே இது மிகவும் குறைவு. எனவே, அமெரிக்காவில் உச்சம் பெற்றவர்களால் இந்தியப் பொருளாதாரம் அதிகமாகப் பாதிக்கப்படவில்லை.

    7. இந்தியாவின் தற்பொழுதைய உன்னதமாகக் கருதப்படும் மென்கலன் துறையில் சாதனைபுரிந்த இன்போஸிஸ், டிஸிஎஸ், விப்ரோ, சத்யம் இப்படி ஒவ்வொரு நிறுவனமாக எடுத்துக் கொண்டு இவற்றில் எத்தனை ஐஐடிக்காரர்களால் துவக்கப்பட்டது என்று பார்க்கவும். இதேபோல பஜாஜ், வீடியோக்கான், டாடா, பார்தி டெலிகாம், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களில் எத்தனை ஐஐடிக்காரர்களால் துவக்கப்பட்டது, உயர்நிர்வாகம் செய்யப்படுகிறது என்று கணக்கிட்டுப் பார்க்கவும்.

    8. இன்னொரு புறத்தில் இந்திய அணுசக்தித் துறை, விண்ணாராய்சித் துறை, அகில இந்திய மருத்துவக் கழகம், மத்திய உயிர்நுட்பக் கழகம், ராணுவ அறிவியல் நுட்ப ஆராய்சிக் கூடங்கள், போன்றவற்றில் எத்தனை ஐஐடிக்காரர்கள் இப்பொழுதும் கடந்தகாலத்திலும் உச்சப் பதவிகளை வகித்திருக்கிறார்கள் என்று கணக்கிடவும். இதேபோல இந்தியப் பல்கலைக்கழகங்களில் எத்தனை துணைவேந்தர்கள் முன்னாள் ஐஐடிக்காரர்கள் என்று பார்க்கவும். BHEL போன்ற நிறுவனங்களில் ஐஐடிகளின் பங்களிப்பு எவ்வளவு என்று பார்க்கவும்.

    9. ஐஐடிகளின் ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் பதிப்பிக்கப்படுகின்றன என்றும், இவற்றின் தாக்கம் (Impact factor), நீடிப்புத் தன்மை (Longevity of reference), ஆராய்ச்சி முன்னெடுப்புத் திறன் (Citation) இவற்றைக் கணக்கிட்டுப் பார்த்தால் மிகவும் கேவலமாக இருக்கும். ஒவ்வொரு துறையில் அதன் முதன்மை ஆராய்ச்சி சஞ்சிகையாகக் கருதப்படுவனவற்றுள் (Example: Physics – Physical Review Letters) ஐஐடிகள் பதிப்புக்கு இடமேயில்லை. எனக்குத் தெரிந்தவகையில் Nature, Science போன்றவற்றில் ஐஐடிக்காரர்கள் பதிப்பத்ததே இல்லை.

    10. சராசரி இந்தியனின் வாழ்முறையை ஐஐடிக்காரர்கள் எந்தவகையிலாவது பாதித்திருக்கிறார்களா என்று பார்க்கவும். உதாரணமாக, சென்னையில் இருக்கும் நிரந்த குடிநீர்ப் பிரச்சனை எத்தனை ஐஐடி சென்னைக்காரர்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது? பால் குளிர்ப்பதனம், திறனுள்ள அறைக்குளிரூட்டிகள், நெல் சேமிப்பு, என்று ஐஐடிகளில் காப்புரிமைபெற்ற கண்டுபிடிப்புகள் எத்தனை வருகின்றன? குறைந்தபட்சம் இடியாப்பம் செய்யும் கருவி, சாய்த்து வடிக்கக்கூடிய ஆட்டுக்கல் (Tilting Wet Grinder), இப்படி ஐஐடிக்களின் மூளை சராசரி இந்திய வாழ்வின் ஒரு தினசரி அவலத்தைப் போக்க உதவியிருக்கிறதா?

    மென்கலன் துறையில் வெற்றி பெற்ற ஐஐடிக்காரர்கள் சராசரி இந்தியர்களின் பயனுக்கான மென்கலன் எதையாவது உருவாக்கியிருக்கிறார்களா?

    11. ஐஐடி சென்னை மாணவர்களில் எத்தனைபேர் அடுத்துள்ள கிண்டி தொழிற்பேட்டைக்குப் பொயிருக்கிறார்கள்? கிண்டி நிறுவனங்களில் எத்தனை ஐஐடியால் பிறந்தவை (IIT spin-off)?

    12. ஐஐடி மாணவர்களில் எத்தனைபேர் நேரடியாக அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்? ஹார்வர்டில் படித்த சிதம்பரமும், தயாநிதி மாறனும், அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த அப்துல் கலாமும் இந்திய அரசியலை மாற்றுவதைப்போல ஐஐடிக்காரர்களில் எத்தனைபேர் அரசியலை மாற்றியிருக்கிறார்கள்?

    13. சொல்லப்போனால் இந்தியர்களின் மென்கலன் வெற்றி என்பதே ஒரு மாயைதான். உலக அளவில் பெயர் சொல்லக்கூடிய இந்திய மென்கலன் எதுவும் கிடையாது. குறைந்த பட்சம் ஒரு நல்ல பகிர்கலன்கூட (Shareware) இந்தியர்களால் உருவாக்கப்படவில்லை. இந்தியர்கள் திறமையான கணினி வித்தகர்கள் என்று சொல்வது ஊரை ஏமாற்றுவது. தளையறு மென்கலன் (Software Libre), திறமூல (Open Source) உலகில் இந்தியாவின் நிலை கேவலமானது. இதில் ஐஐடிக்காரர்களின் பங்கு என்று காட்டமுயற்சிப்பது வெறுங்கையால் முழம்போடுவதற்குச் சமம்.

    இப்படி எந்த வகையில் பார்த்தாலும் எனக்கு ஐஐடிக்களின் இருப்பு தோல்வியாகத்தான் தோன்றுகிறது. மீண்டும் உறுதியாகச் சொல்கிறேன், ஒன்றிரண்டு ஐஐடிக்காரர்கள் தனிப்பட்ட முறையில் இதற்கு விதிவிலக்கு. (உதாரணமாக, சென்னையில் Prof. Ashok Jhunjhunwalla) ஆனால் இவர்கள் விதிவிலக்குகள். சொல்லப்போனால் இறுக்கமாக்கப்பட்ட, காலாவதியான பயிற்று வழிமுறைகளைக் கொண்ட, நிர்வாக அடுக்குகள் நிலைபெற்றுப் போன ஐஐடி என்னும் நிறுவனத்தை மீறி இவர்கள் இப்படிச் செயல்பட வேண்டியிருக்கிறது. ஐஐடிக்குள்ளே அசோக்கைப் போன்ற சிந்தனையாளர்களை ஒரு பொருந்தாத, கலகக்காரர்களாகத்தான் தோற்றமளிக்கிறார்கள்.

    எனக்குத் தெரிந்தவகையில் ஐஐடிகளின் இந்த அவல நிலைமைக்குப் பல எளிதான காரணங்கள் இருக்கின்றன. இவற்றை வரும்நாட்களில் பட்டியலிட முயற்சிக்கிறேன்.

    (மீண்டும், ஐஐடிகளின் வெற்றி தோல்விகளைப் பற்றிய எந்த புத்தகங்களையும் நான் இதுவரை படித்ததில்லை. சொல்லப்போனால் தனிக்கட்டுரைகளைக் கூட. எனவே என்னுடைய கருத்துகளெல்லாம் ஐஐடிக்களைப் பற்றி சிந்தித்தபொழுது எனக்கு நேரடியாகத் தோன்றியவை. இவற்றை மனம்போனபடி எழுதியிருக்கிறேன். என் கருத்துக்களை ஒழுங்கமைக்க முற்படவில்லை).

    0 Responses to ஐஐடி என்ற மாயை

    1. achimakan
      July 14, 2004 at 8:41 pm

      எனக்கு ஐ.ஐ.டி பற்றிய எந்த அறிவும் அனுபவமும் இல்லை. அறிவியல் மாணவனாய் இருந்த காலம் தொட்டு ஐ.ஐ.டி பற்றிய பிரமிப்பும் நமக்கு சரியாக வழிகாட்ட யாரும் இல்லாததால், இங்கெல்லாம் படிக்க முடியாமல் போயிற்றே என்ற ஏக்கமும் தான் இருந்தது.

      திறமை வாய்ந்த ஒரு மாணவனுக்கு இன்று இந்தியாவில் ஐ.ஐ.டிக்கு மாற்றாகப் பரிந்துரைக்க எந்தக் கல்வி நிறுவனமாவது இருக்கிறதா?

      ஐ.ஐ.டிக்கு வெளியில் நீங்கள் குறிப்பிடும் வெற்றியாளர்கள் கூடத் தனிப்பட்ட திறனால் வென்றதாகத் தான் கருத வேண்டுமேயன்றி அவர்கள் பயின்ற நிறுவனங்களின் வெற்றியாகக் கருதுவது எங்கணம்?

      தமிழகப் பல்கலைக் கழகங்களின் அவல நிலை பற்றியும் அங்கே நல்ல மாணவர்களும் உண்மையான ஆசிரியர்களும் படும் துயரங்களைப் பற்றியும் கடை நிலை ஊழியர் கூடக் குறு நில மன்னர் போலக் கோலோச்சும் அசிங்கமான நிலை பற்றியும் மூன்றாண்டுகள் படிக்கும் காலத்தில் ஒன்றிரண்டு தேர்வுகளில் கூடத் தேர்ச்சி பெறாத (மாணவர் என்ற போர்வையில் நடமாடும்) சமுதாய விரோதிகள் ஒரே முறை மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து விட்டுத் தேர்ச்சி பெற்று பட்டம் வாங்கி விடக் கூடிய ஊழல் மலிந்த நிலை பற்றியும் பக்கம் பக்கமாக எழுத முடியும்.

      ஐ.ஐ.டிக்கள் இவ்வளவு கேவலமாகவா செயலாற்றுகின்றன?

    2. Kasi
      July 14, 2004 at 9:25 pm

      ஆம். ‘வெற்றி பெற்ற’ ஐஐடி மாணவர்களை வைத்து, ஐஐடியின் நோக்கம் வெற்றி பெற்றதாகக் கொள்ள முடியாது. இவர்கள் கதையெல்லாம் போட்டுப் புத்தகம் போடுவது, தேர்தல் 2004 முடிவுகளை அலசிய மாலன் பாஜக-ஜெஜெ தோல்விக்கு வரிசைப்படுத்திய காரணங்கள் போலத்தான்.

      ஐஐடியால் ஒரு சாதாரண மாணவனை பட்டைதீட்ட முடியாது. ஆனால் அசாதரண மாணவர்களுக்கு ஐஐடியும் இல்லை என்றால், நம் கல்லூரி வாத்தியார்கள் கையில் சிக்கி அவர்கள் தங்கள் இயல்பான திறன்களையும் தொலைத்துவிடுவார்கள்.

    3. rosavasanth
      July 15, 2004 at 12:43 am

      I am not in a position to write anything in detail(for the next one month) in the internet. Venkat, can you show me(if possible by giving the link or by cutting/pasting the relevent part) where you have been called as a ‘pArapanma veRiyan’, just fopr narrating `how fish was insereted’ in your mouth. Thanks!- Rosavasanth.

    4. வெங்க&#297
      July 15, 2004 at 8:49 am

      ஆச்சிமகன் – நல்ல கேள்வி. திறமையான இந்திய மாணவர்களுக்கு நாம் இன்னமும் ஐஐடிக்களைத்தான் பரிந்துரைக்க வேண்டியிருக்கிறது. இதற்குக் காராணம், ஆலையில்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை. கட்டாயமாக இந்திய கல்வி நிறுவனங்களுள்ளே ஐஐடிக்கள்தான் உச்சம். ஆனால் உலக அளவில் அந்த உச்சம் மூன்றாம் நிலை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு உறைபோடக்கூட காணாது. தங்கள் தரத்தைத் தாழ்த்திக் கொள்வதால் தங்களைவிட குறைந்த மானியம் பெறும் பல்கலைக்கழகங்களின் நிலையையும் உயரவிடாமல் செய்கின்றன.

      கட்டயாம் ஐஐடிக்கள் இந்தியாவில் முதல் தரமானவைதான். ஆனால், அதற்குக் கொட்டப்படும் பணமும் உள்ளெடுக்கும் மாணவர் திறனும் அதிகம். நான் முன்னரே சொன்னதுபோல் அற்புதமான மூளைகளை ஒன்றாகச் சேர்த்து ஒரு வளாகத்தில் நான்கு ஆண்டுகள் அடைத்துவைத்து வெளியில்விட்டால் அவர்கள் கட்டாயம் பிரமிப்பூடும் விதத்தில் வெற்றி பெறுவார்கள். ஆனால், அவர்களை இந்த அளவிற்குத் தோல்வியடையச் செய்திருக்கிறது ஐஐடி கல்வி முறை.

      இதற்கு நேரடி நிரூபணம்: ஐஐடியை விட்டு வெளியே சென்றபிறகு – கால்டெக், கார்னெல், எம் ஐ டி கல்வி பெற்றபின் அதே ஐஐடி மாணவர்கள் மீண்டும் சுய சிந்தனையாளர்களாக முகிழ்த்தெழுவது. ஆனால் துரதிருஷ்டவசமாக, தம் பழைய கல்வி நிறுவனத்தின் மீதான பாசத்தால் ஐஐடி மாணவர்கள் இதை வெளியில் சொல்வதில்லை. உண்மையில் வெளியே சென்று வெற்றி பெற்ற ஐஐடி மாணவர்கள் ஐஐடி அமைப்பு முறையை காரசாரமாக விவாதிக்க வேண்டும். அப்படிச் செய்வதில்லை, ஏனென்றால் ஐஐடியில் கற்பிக்கப்படுவது குருபக்தி, சுய சிந்தனையல்ல.

      திறமையான மாணவர்களை ஐஐடிக்கள் வீணடிக்கின்றன. அவர்களுக்குடைய சுயசிந்தனைத் திறனை மழுங்கடிக்கின்றன. சமூகத்தினின்று அவர்களைத் தனிமைப்பட்டுப் போகச் செய்கின்றன.

    5. வெங்க&#297
      July 15, 2004 at 9:11 am

      Dear Rosa Vasanth,

      I am surprised that you have chosen an insigificant, moot statement from my lengthy blog to comment on :) which precisely is what I suggested to be avoided in this discussion.

      I want to keep this dialogue focused on the status of IITs and higher education system in India. I do not want to make this as another ‘paappaan’ bashing. We have plenty of other avenues for doing this.

      I will be grateful if you could constructively contribute to the theme. I have written about 13 points as to why and how IITs have failed. If you could comment on a couple of them, I will be glad. I am looking forward to that after your month-long break.

      That said, I do not have any intention to submit proofs as to how I was humiliated – now. After we have a meaningful and useful discussions about higher learning in India, I can entertain with those meaningless anecdotes. I will not shy away from Brahmins in IIT issue, but IMHO that is moot to the topic. (We heard it from the horses’ own mouth, didn’t we? Kasi and irama.ki have unequivocally mentioned that brahmins in IITs is not a big issue).

    6. karthikramas
      July 15, 2004 at 10:42 am

      அன்புள்ள வெங்கட்டு அண்னே! :)

      இது எதிர் வினையும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது. :)

      பத்ரியின் பதிவையும்,ரமனியையும் கேள்வியையும், அதன்பின் ரோசாவின் கேள்வியையும் படித்தவன் என்ற முறையிலும், ஐஐடியைப் பற்றி எந்த மண்ணும் தெரியாதவன் என்ற முறையிலும் இதை எழுதுகிறேன்.

      1. பத்ரி ஆரம்பித்தது ‘ஐஐடியன்கள்’ புத்தகம் சம்பந்தமாக.

      2. ரமணியின் கேள்வி, பத்ரி ‘அவாள்’ குறித்து எதும் எழுதுவாரா என்பது குறித்து? இதன் பின்னணி ‘சோக்.கல்ச்சர் குழும விவாதம் போல’ என்பது.

      3. ரோசாவின் கேள்வி/குறுக்கீடுக்கு , பத்ரியின் பதில் ‘ஐஐடி உருவாக்கும் அவாள் எல்லோரும் ஒரு மாதிரிதானே, அதில் வேற்றுமை பாராட்டவேண்டுமா?’ என்பதாய் இருந்ததால், ஐஐடியிலும், ஐஐடி ஹாஸ்டலிலும் “தலித்து” களின் (மீண்டும் சொல்கிறேன் “தலித்துகளின்”) நிலை சார்ந்த அல்லது நடத்தப்படும் விதம் குறித்து ஏதேனும் பத்ரி அறிவரா? என்பதய் இருந்தது.

      4. நீங்கள் எழுதியது, ஐஐடியின் நிர்வாகம் அது திட்டமிட்ட வெற்றியை அடையாமல் தோல்வியே கணிட்ருப்பது என்பது பற்றி. இதற்கு ரோசாவின் கேள்விக்கும் ஏதுவுத சம்பந்தமும் இல்லை. இது வேற சப்ஜெக்ட். அது வேற சப்ஜெக்ட்.

      5. எப்படி நீங்கள் ‘இச்லருக்கு பாபர்பான் ஒழிக என்றால்தான்’ என்று ஒரு சமூக அமைப்பில் நிலவுகிற

      னிலையைக் கொண்டு மேலோட்டமாய் எழுதமுடியுமோ,அது போலவே ரோசா , தான் கேள்விப்ப்டதன் பேரில்,

      ஐஐடியில் தலித்துகளின் நிளைமை கேவலாய் உள்ளது என்று கூட அவருக்கு எழுத சுதந்திரம் தருவீர்கள் என நம்புகிறேன். உண்மை நிலை நீங்கள் இருவர் சொல்வதற்கும் வேறக கூட இருக்கலாம். அதைக் கிளரிப்பார்த்தால் தான் தெரியவரும்.

      6. உங்கள் கட்டுரைக்கு ரோசா காண்ட்ரிபூட் பண்ணவேண்டும் என்பது எந்த விததிலும் ரெலவண்டாக இல்லை.

      அவர் எடுத்த களம் வேறு. நீங்கள் எடுத்துக்கொண்ட களம் வேறு. அப்படியே அவர் காண்டிரிபியூட் செய்தாலும் அதுவும் ‘கேள்விப்பட்டதன் பேரில்” இருக்கும் என்பது நீங்கள் சொல்லும் படியே உண்மையாக இருக்கலாம்.



      மனசாட்சி: அட ஐ ஐடியப் பத்தி பேசுறாங்க , உனக்கு என்னடா வேலை இங்க கார்த்திக்கு?? :)

    7. Pari
      July 15, 2004 at 12:11 pm

      வெங்கட்,

      கமெண்ட் வரிகள் ஒன்றின் மீது ஒன்று குதிரை ஏறுகின்றன :-)

      I think it happens only in IE. Probably there are some style definition like “line-height”, “line-spacing” is in the stylesheet(in class “comments-body”). Please change it.

    8. வெங்க&#297
      July 15, 2004 at 12:32 pm

      கார்த்திக் தம்பி :)

      நீ எழுதியிருப்பது எல்லாம் வாஸ்தவம்.

      அரசல் புரசலாகக் கேள்விப்பட்டதை வைத்துக் கொண்டு ரோஸா வஸந்த் ஐஐடியின் தலித்துகள் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று எழுத அவருக்குக் கட்டாயம் உரிமை உண்டு. அவருடைய உரிமையை மறுக்க நான் முயலமாட்டேன். நான் சொல்ல வந்தது – ஐஐடியின் வெற்றி என்ற ரீதியில் ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் அதன் வெற்றி தோல்விகளைப் பற்றி நேரிடையாக எழுதப்பட்ட ஒரு விமர்சனம் (பத்ரியுடையது) எப்படி பெயரிலியால் “இன்னாபா, ஐஐடில அவாள் ராஜ்யத்தைப் பத்தி அஞ்சு வருசத்துக்கு முன்னாடி எணையத்துல போட்டுத் தாக்கினாங்களே அந்தக் கதையப் பத்தி என்னா சொல்றே” ரீதியில் எடுத்துக் கொடுக்கப்பட்டு, பின்னர் ரோசா வஸந்தால் இந்தத் திசை திருப்பல் திருப்திகரமான முறையில் தொடுத்து முடிக்கப்பட்டிருக்கிறது. (திருப்திகரம்தான், பதிரியின் குறிப்புக்கு வந்த மொத்த விமர்சனங்களில் இது சம்பந்தப்பட்டது எத்தனை/எவ்வளவு என்று பார்க்கவும்).

      என்னுடைய ஆதங்கம் எல்லாவிதமான விவாதங்களும் இதேபோல் திசைதிரும்பிப் போகிறதே என்பதுதான். கட்டாயமாக, ஜாதி நம்மின் ஒரு கேவலம்தான். என்னைப் பொருத்தவரை தலித்துகளுக்கு இழைக்கப்ப்ட்ட, இழைக்கப்பட்டுவரும் கொடுமை நம்மின் கேவலங்களுக்குள்ளெ உச்சம். ஆனால் அதே சமயத்தில் ஒவ்வொரு விவாதமும் பார்ப்பான் கொடுமை என்ற ரீதியில் (கவனிக்கவும், இது துவக்கப்பட்ட பொழுது தலித்துகளுக்கு அநீதி என்ற ரீதியில் வரவில்லை, அவாள் ஆதிக்கம், குடுமி விரித்தாடுதல் போன்ற அற்புதமான அடைமொழிகளுடந்தான் வருகின்றது. அதாவது தலித்துகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு பார்ப்பான் தான் ஒட்டுமொத்த காரணம் என்பதைப் போல). இதே விவாதம் ஐஐடிகளில் தலித்துகளின் நிலை என்ற ரீதியில் துவங்கியிருந்தால் அதன் நோக்கத்தைப் பற்றி எனக்குச் சந்தேகம் வராது.

      பார்ப்பனீயத்தைப் பற்றி பேச்சு வரும்பொழுது புதிய பார்ப்பான்களைப் பற்றிய பேச்சும் கட்டாயம் வரவேண்டும். இதைத்தான் பத்ரி செய்தார். என்னைப் போன்றவர்கள் அடுத்த வேளை சோறு நிச்சயமில்லாமல் படித்த அதே வகுப்புகளில் பிறப்பின் ஒரே காரணத்தினால் மிராசுதாரின் பையன் தான் வாங்கும் உதவித்தொகையை இரண்டே மணி நேரத்தில் சாராயத்திற்கும், சினிமாவுக்கும் செலவிடுவதைப் பார்த்திருக்கிறோம். இந்த புதிய பார்ப்பனர்களைப் பற்றிய பேச்சை ஏன் தவிர்க்கவேண்டும்?

      பிறப்பின் ஒரே காரணத்தைக் காட்டி என் அடுத்தவீட்டில் வசித்த பேராசிரியர் ராமஷேஷன் கொலைசெய்யப்பட்டதையும் தொடர்ந்து அவருடைய குடும்பம் சிதைந்துபோனதையும் கண்டிருக்கிறேன். (இந்தச் சுட்டியில் திரிக்கப்பட்டிருப்பதைப்போல பேராசிரியர் இராமஷேஷன் ஒரு பிராண்ட் ஹிந்து அல்லர். சரித்திரம், இலக்கியம், சைவ சித்தாந்தம் போன்றவற்றில் அவருக்கு நேர்மையான தேடல் இருந்தது. அவரால் ஒரு துரும்புக்கும் துன்பம் வந்ததில்லை). அவருடைய கொலைக்குப் பின் ஒவ்வொருநாளும் என் குடும்பம் உயிருக்குப் பயந்து காலத்தைக் கடந்திருக்கிறது. தலித்துகளைப் போலவே பல பார்ப்பனர்களும் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையைச் சந்தித்திருக்கிறார்கள். புதிய பார்ப்பான்களைப் பற்றிய பேச்சு திசைதிருப்பல் கிடையாது.

      மற்றபடி நீயும் நானும் சொன்னதைப் போல – என் விவாதம் ஐஐடிகளின் தோல்வியைப் பற்றியது. ஐஐடிகளில் பார்ப்பனர் கொடுமைபற்றி கேள்விப்பட்ட திரு ரோஸா வஸந்த், அவற்றின் பிற நிலைகளைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பார் என்ற நம்பிக்கையுடன் தான் அவரை என் குறிப்பின்மீது நேரடி கருத்துக்களைச் சொல்ல வேண்டினேன்.

      அதே சமயத்தில் பின்னொரு நாளில் ஐஐடிகளில் சாதி நிலை குறித்து நான் பேசவும் தயார் என்று சொல்லியிருக்கிறேன்.

    9. வெங்க&#297
      July 15, 2004 at 12:35 pm

      My hyperlink to Prof. Ramaseshan’s murder is digested by MovableType; here is it

      http://www.hinduismtoday.com/archives/1988/01/1988-01-03.shtml

    10. வெங்க&#297
      July 15, 2004 at 12:54 pm

      Pari – So it is said, so it was done. Thanks.

    11. Thangamani
      July 15, 2004 at 1:06 pm

      வெங்கட், உங்கள் கருத்தோடு நான் மிகவும் உடன்படுகிறேன். சுயசிந்தனையாளனை உருவாக்குவதுதான் கல்வியின் ஒரே நோக்கம். ஆனால் அது ஐஐடியில் மட்டுமல்ல, இந்தியாவில் வேறேங்குமே சாத்தியமல்ல. நான் இதை விரக்தியிலோ, வஞ்சப்புகழ்ச்சியாகவோ சொல்லவில்லை. ஏனெனில் நமக்கு எல்லாமே சொல்லப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. நமது பொற்காலம் 5000 வருடங்களுக்கு முன்னேயே முடிந்துவிட்டதாக நம்புகிறோம். பழமையின் பாரம் அழுத்தி வளைந்துபோன முதுகோடு நம்மால் புதியதெதையும் பார்க்கமுடியாது. புதியதை தரிசிக்க முதலில் நமது கண்களை நம்பவேண்டும். பார்வையின் மீது மரியாதை வேண்டும். நீங்கள் சொன்ன ஜப்பான், சீனம் போன்ற நாடுகளுக்கு கட்டோடு தமது பழமையில் இருந்து விடுபட்டபின்னேதான் இந்த முன்னேற்றம் சாதியமாயிருக்கிறது. பழமையை பயன் படுத்திக்கொள்ளலாமேயன்றி வாழமுடியாது. நாம் வாழ்கிறோம். கம்யூனிசம், அணுகுண்டு, ஆணுறை, ஜீன்தெரப்பி இப்படி எல்லாமே நமக்கு வேதத்திலோ, குமரிகண்டத்திலோ ஏற்கனவே இருக்கிறது என்று நம்புகிறோம். இப்போது இப்படி அதிகம் நம்புகிறவர்கள் ஐஐடியிலும், ஐஐசியிலும்தான் இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன், பார்க்கிறேன். இதுதான் இந்தியாவின் மிகச்சிறந்த மூளைகளின் இலட்சணம்.

    12. karthikramas
      July 15, 2004 at 1:28 pm

      வெங்கட்டு அண்ணே :)

      பதிலுக்கு நன்றி, புதிய பார்ப்பனர்களைப் பற்றிய பேச்சு தவிர்க்கப்பட வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் அடுத்த வேளை சோற்றுக்கு கஷ்ட்டப்படும் நிறைய பிராமண் நன்பர்கள் எனக்கு இருந்ததுண்டு. இருக்கிறார்கள்.

      நான் கூட அடுத்த வேளை சோத்துக்கு, சோத்துக்கு என்ன அடுத்த வேளை தண்ணிக்கே 2 மைல் சைக்கிள் ஓட்டியவன். இது நான் சின்ன வயசில் செய்ததில்லை. நான் பொறியியல் பட்டம் முடித்தபின்னர். வேலைக்குப் போகும் சமயத்தில். எனவே நாம் இருவரும் ஒரே கட்சியில், இதைப்பொறுத்தவரை.

      1. ஐஐடியின் பெருமைகளைப் பற்றி பத்ரி எழுதும்போது ,அவரது ஹாஸ்டல் அனுபவத்தையும் பற்றி எழுதியுள்ளார்.

      //ஆனால் எப்படியோ, ஹாஸ்டல் வாழ்க்கையும், மற்ற மாணவர்களின் சகவாசமும் தான் இந்தத் திறமைகளையெல்லாம் வளர்த்துக்கொள்ளக் காரணம் என்று தோன்றுகிறது.//

      தலித்தைப் பற்றி, தலித் பற்றி அவரது அனுபவம் என்ன , அதைப்பற்றி எழுதுவீர்களா? என்று கேள்வி கேட்ககூடாது என்பது ஏன்? இது உங்களைக் குறித்த கேள்வி இல்லை! சமுதாயத்தில் பத்ரி போன்ற ஒருவரை பார்த்து கேட்கக்கூடாதா என்பது.

      2. இது மிகவும் வேறான திசையில் வாதத்தை செலுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

      3. ரோசாவின் தூண்டுதலால் என்று பத்ரியே மறுநாள் ஒரு பதிவு எழுதும்போது, அது இன்னும் வேறு சிலருக்கும் தெரிந்து கொள்ள உதவும்போது , திசை வேறானதாக இருக்கும்போது அதை அனுமதிப்பதில் தவறில்லை என்பது என் கருத்து! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

      4. உங்கள் பதில்படி, எழை பிராமணர்கள் இருப்பதை கணக்கில் கொள்வோம் என்றால் , நம் தமிழ் சமூகத்தில், எத்தனை ஏழைக் குடும்பங்கள் பிராமனக் குடும்பங்கள் எத்தனைக் குடும்பங்கள் தலித்த் குடும்பங்கள் என்று ஒரு சதவீத கணக்கு போட்டு , நியாத்தைச் சொல்ல முடியுமா? இது என் புரிதலுக்காக கேட்கிறேன். உங்களுக்கு ஏதேனும் சொல்ல இருக்கிறதா?

      5. இந்த விவாதத்தை பொறுத்தமட்டில். ஐஐடியின் தோல்வி பற்றி உங்களுக்கு நிறைய சொல்ல இருப்பது போல் , தலித் கொடுமைகளைப்பற்றி ரோசாவுக்கும் நிறைய சொல்ல இருக்கலாம். எனினும் இரண்டையும் கலக்காமல் இரண்டும் வேறு வேறு இழைகளில் விவாதிக்கப்படவேண்டும் என்பது என் விருப்பம். அம்புட்டுதேன்.

      என்னைப்பர்த்து ஐஐடி பத்தி எழுதுன்னு கேக்கமால் இருப்பீர்கள் என்ற நன்பிக்கையுடன் முடிக்கிறேன். ஏனெனில் எனக்கு ஒன்னும் தெரியாது. :)

      குழப்பத்தைத் தவிர்க்கலாம் என்றுதான் நான் எழுதினேன் , உதவியிருப்பேன் என நம்புகிறேன். வாய்ப்புக்கு நன்றி.

    13. Arun
      July 15, 2004 at 1:50 pm

      அன்புள்ள வெங்கட்,

      உங்களது கட்டுரைகள் எல்லாமே நன்றாக இருக்கின்றன. ஐ.ஐ.டி பற்றிய உங்கள் கேள்விகள் எல்லாம் மிக மிக நன்றாக இருந்தது. அதே போல், காசி சொல்வது போல், இதுவும் இல்லையென்றால்..என்ன தான்

      செய்வது என்ற கேள்வியும் எழுகிறது. பதிவின் நோக்கத்தை திசை திருப்பும் முயற்சிகள் பற்றியும், தற்கால பார்ப்பனர்களைப் பற்றி பேசாதிருத்தல் பற்றிய தங்கள் கருத்துக்களும்,

      உண்மையிலே என்னை வெகுவாய் பாதித்தது. பல பேருக்கு, இதைப் பற்றியெல்லாம் எழுத

      தயக்கம், நீங்கள் தைரியமாக எழுதியிருக்கிறீர்கள், நன்றியும், வாழ்த்துக்களும்!

      பின்குறிப்பு:- இந்த மறுமொழிகள் சரியாய் தெரிவதில்லை என்று நான் தான் முதலில் குறிப்பிட்டேன். ஆனால், நீங்கள் பரிக்கு நன்றி சொல்லியிருக்கிறீர்கள். இதை வன்மையாகக் கண்டிப்பதோடு, எனது பாராட்டுரையை முடித்துக் கொள்கிறேன். (பரி, மரியாதையா அந்த நன்றியை நியூஜெர்சிக்கு அனுப்பி வெச்சுடும், சொல்லிப்புட்டேன்)

    14. karthikramas
      July 15, 2004 at 2:20 pm

      ராமசேஷன் கொலைபற்றி:

      மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால்தான் ‘முதுகெலும்பற்ற’ சட்டம் என்று எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் நான் கத்துகிறேன். சட்டத்தைக் கேள்வி கேட்கவேண்டும் என்கிறேன். நமது துப்புக் கெட்ட சட்டத்தை வைத்துக் கொண்டு ஒரு சராசரியான கும்பம் வாழவது எத்தனை அபாயகரமானது என்று சொல்கிறேன். சட்டம்! அது பணக்காரனின் பாக்கெட்டுக்குள் பதுங்கும், ஏழையின் மேல் ஏறி மிதிக்கும். தூத்தெறி!

    15. வெங்க&#297
      July 15, 2004 at 3:08 pm

      கார்த்திக்,

      >தலித்தைப் பற்றி, தலித் பற்றி அவரது அனுபவம் என்ன , அதைப்பற்றி எழுதுவீர்களா? என்று கேள்வி கேட்ககூடாது என்பது ஏன்? இது உங்களைக் குறித்த கேள்வி இல்லை! சமுதாயத்தில் பத்ரி போன்ற ஒருவரை பார்த்து கேட்கக்கூடாதா என்பது.

      கட்டாயம் கேட்கலாம். கேட்க வேண்டும். ஆனால் அந்தக் கேள்வி எப்படி வந்து விழுகிறது என்று பார். அவாள் ஆதிக்கம், குடுமி தலைவிரித்தாடுவது… இத்யாதி வார்த்தைகளில். நேர்மையான கேள்வி: “பத்ரி, ஐஐடியில் பயின்றவர் என்ற முறையில் அங்கே தலித்துகள் நிலையைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அவர்களுக்கு அவமானம் இழைக்கப்படுவதாக நான் கேள்விப்படுவது உண்மையா?” என்ற வடிவில் வரும். ஆனால், துவக்கப்பட்டதும் முன்னெடுத்துச் செல்லப்பட்டதும் அக்கப்போர். அதையும் கௌரவமான முறையில் அறிவுபூர்வமாக அணுகியது பத்ரியின் சான்றான்மை, அறிவுசார் நேர்மை. இதில் உனக்கு மறுகருத்து இருக்கிறதா?

      >3. ரோசாவின் தூண்டுதலால் என்று பத்ரியே மறுநாள் ஒரு பதிவு எழுதும்போது, அது இன்னும் வேறு சிலருக்கும் தெரிந்து கொள்ள உதவும்போது , திசை வேறானதாக இருக்கும்போது அதை அனுமதிப்பதில் தவறில்லை என்பது என் கருத்து! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

      தாராளமாக, இப்படி எல்லா விவாதங்களையும் ஒரே திசைக்குத் திருப்பிவிட்டால் நம் புரிதல் நன்றாக வளரும். :) . சுஜாதா புறநானூறுக்குத் தவறான உரை எழுதியிருக்கிறார் என்பதை அவர் பார்ப்பனர் என்று தொடங்கித்தான் தொ.பரமசிவன் போன்ற கல்வியியளாலர்கள் முன்வைக்கிறார்கள்.

      குதர்க்கம் ஒரு புறமிருக்க, எனக்கே அதைப்பற்றி சில நாட்கள் கடந்து விவாதிக்க ஆர்வமிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறேனே! இது கட்டாயம் முக்கியமான ஒன்றுதான்.

      >4. உங்கள் பதில்படி, எழை பிராமணர்கள் இருப்பதை கணக்கில் கொள்வோம் என்றால் , நம் தமிழ் சமூகத்தில், எத்தனை ஏழைக் குடும்பங்கள் பிராமனக் குடும்பங்கள் எத்தனைக் குடும்பங்கள் தலித்த் குடும்பங்கள் என்று ஒரு சதவீத கணக்கு போட்டு , நியாத்தைச் சொல்ல முடியுமா? இது என் புரிதலுக்காக கேட்கிறேன். உங்களுக்கு ஏதேனும் சொல்ல இருக்கிறதா?

      கட்டாயம் என் குடும்பம் கொலைபற்றிய தினசரி பயத்தில் சில காலம் கழித்ததைப்போல எல்லா பார்ப்பன குடும்பங்களும் இருக்கும்/இருந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை. என்னைப் பொருத்தவரை தலித்துகள் மீதான கொடுமை கொடியது. ஆனால் அதற்கு பார்ப்பனர்களை மாத்திரமே சாடிக்கொண்டிருப்பது உண்மையாக தலித்துகளுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று விரும்புவர்களின் நோக்கமாக இருக்காது. இதில் சதவீதக் கணக்குக்கே இடமில்லை. தலித்துகளின் நிலை தொடர்ந்தும் வருத்தத்திற்குரியதாகவே இருக்கிறது.

      பத்ரி எழுதியிருந்ததைப் போலவே எனக்கும் ஒருகாலத்தில், கஷ்டப்பட்டு படித்தும் மருத்துவக்கல்லூரில் இடமில்லாத காலத்தில், சகமாணவர்களால் துன்புறுத்தப்பட்ட காலத்தில் வருத்தம், கோபம் எல்லாம் இருந்தது. ஆனால் இன்றைக்கு என்னால் ஒரு தலித்தின் மனநிலையுடன் எளிதில் ஒன்றிப்போக முடிகிறது. இதனால் என் இளைய உறவினன் அப்படிக் கோபப்படும்பொழுது அவனிடம் எனக்கு தலித் சார்பாக வாதிக்க முடிகிறது.

      ஏதோவொரு தலைமுறையில் என்னுடைய சந்ததியில் ஒரு தாத்தா தன்னுடைய சகமானுடனை அவனுடைய பிறப்பைக் காரணம்காட்டி மலம் சுமக்கப் பணித்திருப்பாரோ என்ற நினைப்பே எனக்கு அருவருப்பாகவும், ஆத்திரமாகவும், அவமானமாகவும் இருக்கிறது. ஆனால் இதை உணர்வு பூர்வமாக அணுகாமல், அறிவுபூர்வமான பரிகாரத்தில் ஈடுபடுவதுதான் நான் அந்தக அவமானத்தைப் போக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியாக இருக்கவேண்டும். தொடர்ந்த இடஒதுக்கீடுகளும், சலுகைகளும் தலித்துகளின் நிலையை இன்னும் மாற்றவேயில்லையே என்ற ஆதங்கம்தான் மிஞ்சுகிறது. அதைப் பற்றிய மனம்திறந்த உரையாடலுக்கு இன்றைக்கும் இடமில்லாமல் இருப்பது ஆசுவாசத்தைத் தருகிறது.

      இப்பொழுதைய உரையாடல் ஐஐடிகளைப் பற்றியது.

    16. வெங்க&#297
      July 15, 2004 at 3:21 pm

      அருண்,

      இதுவும் இல்லையென்றால் என்ற நிலைக்கு நம்மை நாமே ஏன் தாழ்த்திக் கொள்ள வேண்டும். ஐஐடிகளின் தரத்தைக் கட்டாயம் உயர்த்தியாக வேண்டும். இல்லாவிட்டால் மறு வடிவமைப்பு செய்ய வேண்டும் (இதைப் பற்றி விரிவாகப் பின்னொரு நாளில்). அதைவிட்டுவிட்டு, ஆஹா ஐஐடிக்குண்டோ ஈடு என்ற ரீதியில் புகழ்பாடிக்கொண்டிருப்பது நல்லதில்லை. நான் வேலைசெய்யும் டொராண்டோ பல்கலைக்கழகம் கனடாவில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ஆனால் இப்படியாரும் சிலாகித்து நிற்பதில்லை. இவர்கள் குறி, பிரின்ஸ்டன் தரத்தை மிஞ்சவேண்டும் என்பதில் இருக்கிறது.

      நன்றியில் மூன்றில் ஒரு பங்கு உங்களுக்கு:) . பரி நேரடியாக, போய் வரிகளுக்கு இடையில் இடைவெளியை மாற்று என்ற ரீதியில் பரிகாரம் சொன்னதால் சோம்பலின்றி அடுத்த நொடியில் செய்துவிட்டேன். எனவேதான் அவருக்கு மூன்றில் இரண்டுபங்கு.

    17. Prakash
      July 15, 2004 at 3:26 pm

      காலையில் இதை வாசித்ததும், உடனடியாக பதில் போட முடியாத வேலை பளுவை நொந்து கொள்ளத்தான் முடிந்தது. வழக்கம் போல இரவு வந்து, , 14 பின்னூட்டங்கள் என்று ஆர்வமாக நுழைந்ததும், விவாதம் செல்லும் திக்கினைப் பார்த்த்து அப்படியே ஆ·à®ªà¯ ஆகிப் போய்விட்டேன். யோசித்து வைத்திருந்ததெல்லாம் மறந்தே போச்சு. இதிலெல்லாம் தலை கொடுக்க எனக்கு தைரியமில்லை :-) உங்கள் மூலப்பதிவுக்கு மறுமொழியாக , நான் சொல்லவந்ததன் சாராம்சம் இதுதான், ” ஐஐடி என்பது ஒரு அட்டர் ·à®ªà¯à®³à®¾à®ªà¯à®ªà®¾à®© மாடல் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நிஜமாக அப்படித்தான் நினைக்கிறீர்களா? ஒரே ஒரு விஷயம் கூட நல்லது இல்லையா? ”

      [ அடுத்த முறையாவது திரி திசை மாறாமலிருக்க, உங்க ஊர் கும்பேஸ்வரனிடம் தான் வேண்டிக்கொள்ளணும் :-) ]

    18. karthikramas
      July 15, 2004 at 3:27 pm

      >>இதில் உனக்கு மறுகருத்து இருக்கிறதா?

      இல்லை.

      //அவாள் ஆதிக்கம்// என்பதைப் பற்றி சொல்ல எனக்கு ஒன்றுமில்லை! இந்த வார்த்தைகள் உங்களைப் புண்படுத்துவதாயின் நான் அதற்கு மன்னிப்பு கூட கேட்க முடியும்! ஆனால் தலித்தின் வலி கோடி மடங்கு ஆழமானது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. நான் ஆக்கப் பூர்வமான விவாதத்தைதான் விரும்புகிறேன். மீண்டும் நன்றி.

    19. வெங்க&#297
      July 15, 2004 at 3:36 pm

      வாங்க தங்கமணி,

      நல்ல கருத்து. இதை இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்.

      பாரம்பரியம் நம் முதுகை அழுத்தி நம் நேர்கொண்ட பார்வையை சிதைக்கிறது. இதைத்தான் சில நாட்களுக்கு முன்னால் நான் நண்பர் மதுரபாரதியின் கண்ணாடி பற்றிய கட்டுரைக்கு விமர்சனமாகச் சொன்னேன் (இலக்கிய ரீதியில் என்னுடைய மனதை அள்ளிக்கொண்டுபோன அந்தக் கட்டுரை அறிவியலைத் தொட்டிருக்க வேண்டாம் என்பது என் எண்ணம்). ஆனால் இதற்குக் காரணம், நம் பாரம்பரியத்தைப் பற்றி நாம் புரிதல் சரியில்லை என்பதுதான். சரியான புரிதல் வரும்பொழுது நம்மின் இருப்பும், இன்மையும், இழப்பும் தெளியத்தொடங்கும். ஆனால் இப்பொழுது இருப்பது எல்லாம் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு கைத்தட்டல் பெறும் கும்பல்கள்தான். கைவிளக்காக இருக்கவேண்டிய பாரம்பரியத்தை நாம் முதுகில் சுமக்கிறோம்.

      நான் இந்து என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் பல நண்பர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு உண்மையான அத்வைதம் பற்றியோ, லோகாயதம் பற்றியோ, திவ்யப் பிரபந்தம் குறித்தோ தேடல் கிடையாது. அவர்கள் தினசரி குளித்துவிட்டு அலுவல் கிளம்பும்பொழுது நெற்றில் நீறு இட்டுக்கொள்ளத் தவறுவது இல்லை. எனவே இந்துவாகிறார்கள். இவர்களிடத்தில் அணுவில் அக்னியைக் கண்டோம் நாம் என்றோ, அன்றே சொன்னான் வள்ளுவன் என்றோ ஏமாற்றல் சாத்தியமாகிறது.

      இதே மனப்பான்மையத்தான் இன்னும் நெருக்கமாக உயர்கல்வி நிறுவனங்கள் திணிக்கின்றன.

    20. Kasi
      July 15, 2004 at 3:43 pm

      //தங்கமணி: … கம்யூனிசம், அணுகுண்டு, ஆணுறை, ஜீன்தெரப்பி இப்படி எல்லாமே நமக்கு வேதத்திலோ, குமரிகண்டத்திலோ ஏற்கனவே இருக்கிறது என்று நம்புகிறோம். இப்போது இப்படி அதிகம் நம்புகிறவர்கள் ஐஐடியிலும், ஐஐசியிலும்தான் இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன், பார்க்கிறேன். இதுதான் இந்தியாவின் மிகச்சிறந்த மூளைகளின் இலட்சணம்…//

      பத்ரியின் பதிவில் நான் இட்ட மறுமொழியில் குறிப்பிட்டிருந்த அந்த (கேள்வித்தாள்) ஆசிரியர், தன் அலுவலக அறையை முருகன் கோயிலாகவே மாற்றியிருந்தார். இதில் தவறு ஒன்றுமில்லை என்றாலும், அறிவுக்கோயிலாக இருக்க வேண்டிய கல்விச்சாலையில் அத்தனை பகட்டாக வெளிப்படுத்தவேண்டியதா பக்தி? அவர் சித்த மருத்துவத்திலும் பெரும் ஈடுபாடு கொண்டவர். பலருக்கும் மூலிகைகளைப் பரிந்துரைப்பார். இப்போது இணையத்தளம் மூலம் ்கூட சித்த மருத்துவத்தைப் பரப்புகிறார். அவருடைய அதீத எல்லைகளாகவே இவை எனக்குப்பட்டன. இதை அப்படியே விரித்தால் தங்கமணி விவரிக்கும் அடுத்த அதீதம் (…வேதத்திலோ, குமரிகண்டத்திலோ ஏற்கனவே இருக்கிறது என்று…) ரொம்ப தூரத்தில் இல்லை என்பது புரிகிறது. அப்படியும் ஆட்கள் இருக்க வாய்ப்பு உண்டு. (பி.கு.: நான் முருகனுக்கோ, மூலிகைக்கோ எதிரியல்ல. அந்தப் பின்புலத்தில் இந்தக் காட்சிகள் பொருந்தவில்லை, அவ்வளவே)

    21. karthikramas
      July 15, 2004 at 3:56 pm

      அண்ணே, ஐஐடி பத்தி ஒரு கேள்வி. :)

      1. தொழில் நிறுவனக்களையும், அதன் தேவைகேற்ப பாடத்திட்டமுறை ப்யிற்சி முறைகளையும் மாற்றியமைத்து கொள்ளுதல் செய்யப்படுகிறதா? அப்படி செய்யப்டும் பட்சத்தில் இது ஒரு வெளி நிறுவனத்தால் (பாடி) செய்யப்டுமேயானால் வெற்றிடைதல் சுலபமாய் நடக்குமா?

      உதாரணாமாய், மென்கலந்துறையிலேயே, தனியார் நிறுவனங்கள் இத்த்னை இந்தியாவில் வந்த காலத்தில், அதற்கேற்ப தொழிற்கல்வியில் ஐஐடியில் மாற்றம் ஏற்படுத்தினார்களா? இல்லெயெனில் ஏன் செய்யவில்லை?

      கணினித் துறைக்கே(பணப்புழக்கம் இருக்கும்போதே) ரியாக்செய்யாத போது மற்ற துறைகளில் மாற்றம் எப்படி அமல் செய்ய முடியும்?

    22. karthikramas
      July 15, 2004 at 3:59 pm

      டிஸ்க்ளைமர்:

      இத்தனை எழுத்துபிழையுடன் நான் தட்டச்சு செய்யவில்லை. வெட்டி ஒட்டுதலில் வந்த வினை. பொறுத்தருள்வீர் பெருமக்களே!

    23. வெங்க&#297
      July 15, 2004 at 8:48 pm

      பிரகாஷ்,

      ஆமாம். யோசித்துப் பார்த்ததில் இந்தத் திசை திரும்பலுக்கு நானும் ஒரு காரணமாக (முக்கிய) இருந்திருக்கிறேன். ஐஐடிகளின் தரத்தைப் பற்றிப் பேசும்பொழுது பார்ப்பன ஆதிக்கம் என்று திசைதிருப்ப வேண்டாம் என்று என்னுடைய வலைக்குறிப்பைத் துவங்கியதன் மூலம் “மருந்தைக் குடிக்கும்பொழுது பசுமாட்டை நினைத்துக் கொள்ளாதே” ரீதியில் எதிர்மறையான பரிந்துரைப்பை முன்வைத்திருக்கிறேன். என்னுடைய மடத்தனத்தை இப்பொழுது யோசிக்கும்பொழுதான் புலப்படுகிறது. எனவே அந்தக் கிளைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்போம். நேரடியான விவாதங்களுக்கு வருவோம்.

      நான் ஐஐடி என்ற சோதனை (இதற்கான விலை எக்கச்சக்கம்) பெரிதும் தோல்வியே என்று எழுதியிருக்கிறேன் (நிறுவன ரீதியாக). உங்களுக்கு ஐஐடிகளால் சில நன்மைகள் விளைந்திருக்கின்றன என்று நம்பிக்கையிருப்பதைப் போலத் தெரிகிற்து. எதையெல்லாம் ஐஐடியின் சாதனை என்று கருதுகிறீர்கள் என்று எழுதுங்களேன்.

    24. வெங்க&#297
      July 15, 2004 at 9:02 pm

      காசி,

      உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் இத்தகைய அதீத பக்தி கொண்டு தங்கள் அலுவலங்களை மினி-கோயிலாக்குவதை நான் பிற நாடுகளிலும் கண்டிருக்கிறேன். இதைப் பற்றி நேரடியாக எதிர்மறையான கருத்துகள் சொல்ல முடியாது. ஆனால் அதே ஆசிரியர் “பிஸ்டனின் இந்த உயர்திறனுக்கு முருகன் அருள்தான் காரணம்” ரீதியில் வகுப்பறையில் பேசினால் அது விபரீதம். பிள்ளையார் சுழி போட்டு வரும் தேர்வுத்தாளுக்கு அதிக மதிப்பெண் என்று இறங்கினால் அதை நேரடியாக எதிர்க்க வேண்டும்.

      அற்புதமான குவாண்டம் அறிவியலாளர் டேவிட் பாம் (David Bohm) ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் நேரடியான தொடர்பில் இருந்தார். அதை ஒருபொழுதும் மறைத்ததில்லை. ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கு அறிவியல் (குறிப்பாக குவாண்டம் இயற்பியல் மீது) வெறுப்பு இருந்தது. ஆனால் டேவிட் பாம் அதை ஒருபொழுதும் தன் அறிவியலில் நுழைக்க முயலவில்லை. (கிருஷ்ணமூர்த்தியின் குவாண்டம் வெறுப்புக்குமுன் அவர் Time independent second order degenerative perturbation theory ஐப் படித்து வகைகெழு சமன்பாடுகளைத் தீர்க்க முயற்சி செய்தாரா என்பதைப் பற்றி எனக்குத் தெரியாது :) )

      இதேபோல அதியுன்னத நோபல் விஞ்ஞானிகளும் தங்கள் நிலைக்கு ஒவ்வாத வகையில் நாத்திகவாதத்தில் நேரடியாக ஈடுபடுவதைக் காணலாம். முக்கிய உதாரணம் ரிச்சர்ட் பெய்ன்மான். அவருடைய மற்றும் பரிணாமவியலாளர் ரிச்சர்ட் டாக்கின்ஸின் சில வகுப்பறை விளக்கங்களில் கடவுள் பற்றிய எதிர்மறையான கருத்துகள் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன. இதை எப்படி எடுத்துக் கொள்வதென்று தெரியவில்லை.

    25. karthikramas
      July 15, 2004 at 10:18 pm

      நான் முதல் கமண்ட்டில் சொன்னது போலவே,

      //சிலருக்கு எத்தனை முறை கேட்டாலும் “பார்ப்பான் ஒழிக” அலுப்பதில்லை. “தம்பி எங்க இன்னொரு தடவ ஒரக்க கத்திச் சொல்லு” என்று கேட்டு பூரித்துப் போகிறார்கள்.//

      இதைப்படித்துதான் எழுதவேண்டும் என எழுதினேன். உங்களை காயப்படுத்தும் எந்த நோக்கும் இல்லை!.

    26. rosavasanth
      July 16, 2004 at 12:11 am

      horrible! dear Venkat, this shows what kind of discussion is possible with you people. Badri wrote about the `avAL’ issue and I reacted briefly to that. If you think this diverts the main issue or if you are not interested in talking about this why do you respond to my reaction? It is you who mentioned the ‘fish issue’, but when I ask for a link (as you said it is in the internet) you talk about something else. I was not asking for a proof (as I have heard enough of such things, and I have learned how to read it), but i was only hoping to have an interesting reading on that(which will never be possible to you).

      I mentioned about my close relationship with IIT(and that my statement is based on that). I only said I never *studied* in IIT. I also mentioned that many things(like the word `shiddu’ I mentioned) I heard it myself. After all that you think I should ask Badri politely what he thinks about what I ‘heard’ through wind. (of course you have already assumed I can not have have a direct contact with Indian higher learning institutions). Would you ever the have honesty to examine(the psychology behind) all the interpretations you have made? Don’t you see the arrogance, when you insist me that I should see it this way and comment only on your 13 points(when I am not insisting that you or Badri should talk about what I am interested in, I mentioned more than once that I only wanted to show that there is an other side to what Badri says, and after all it is only a brief reaction to what Badri wrote).

      Your way of concluding is also very sceintific I believe(when you think it is proved when it comes from the ‘horse’s mouth’, and the way you decide what is horse’s mouth). Anyway you have really compelled me to take up this issue in detail(when I resume). Thanks for that. Also you have really provided another example how the ‘white mail’ works, how your pcychology works,. Thanks again for that.

    27. ravi srinivas
      July 16, 2004 at 10:48 am

      ஐ.ஐ.டி கள் குறித்த விவாதம்

      http://ravisrinivasblog.rediffblogs.com/

    28. -/பெயரி&#2
      July 16, 2004 at 4:31 pm

      வெங்கட்,

      “பெயரிலியால் “இன்னாபா, ஐஐடில அவாள் ராஜ்யத்தைப் பத்தி அஞ்சு வருசத்துக்கு முன்னாடி எணையத்துல போட்டுத் தாக்கினாங்களே அந்தக் கதையப் பத்தி என்னா சொல்றே” ரீதியில் எடுத்துக் கொடுக்கப்பட்டு,” இதன் மூலம் என்ன சொல்ல வருகின்றீர்கள்? எனக்குப் புரிவதை அர்த்தப்படுத்திலே அதை நீங்களும் எழுதியிருந்தால், நீங்கள் என் தன்னிலை விளக்கம் ஏற்றுக்கொள்ளவும் போவதில்லை. பத்ரியின் பதிவிலே சொன்னதைத்தான் என்னாலே மீளவும் சொல்லமுடியுமென்பதால், தன்னிலை விளக்கம் கொடுப்பதற்கு எனக்கும் அக்கறையில்லை. அவ்வளவுதான். நல்ல புரிதல். யாரும் இருக்குமிடத்திலே இருந்துகொண்டால், எல்லாம் சௌக்கியமே. நான் இணையத்திலே ஐஐடிக்கு எட்டியே இருந்திருக்கலாம். :-(

    29. வெங்க&#297
      July 17, 2004 at 7:45 am

      அன்பின் -/ ;)

      ரோஸா வசந்தை எனக்கு அதிகம் தெரியாது (இதற்கு முன்னால் தெரியவே தெரியாது). ஆனால், உங்களை நன்றாகத் தெரியும். நம்மிடையே இருக்கும் கருத்து விலகல்களை அப்படியே ஏற்றுக்கொண்டு நம்மிருவராலும் ஒருவர் சொல்வதை ஒருவர் கேட்கமுடியும் என்ற நம்பிக்கையில், தைரியத்தில் இதை எழுதுகிறேன். உங்களிடம் கொஞ்சம் உரிமையும் எடுத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் கூட.

      உங்கள் கேள்வி தலித்துக்களைப் பற்றியே இல்லை. ஐஐடியில் அவாள் ஆதிக்கம் பற்றியது (பத்ரியின் பதிலும் கூட). ஆனால் தொடர்ந்தும்வந்த கேள்விகள் தலித்துகளின் நிலைக்குப் பார்ப்பனர்கள்தான் காரணம் என்று வருகிறதல்லவா? உங்கள் கேள்வி உங்களுக்கு வேண்டுமானால் தனித்திருக்கலாம், ஆனால் மற்றவர்களுக்கு அது தொடர்ந்த, (தலித் அவலம் = = பார்ப்பன ஆதிக்கம்) என்ற இழையின் முதல் கேள்வியாக இருக்கிறதல்லவா? (நீங்கள் தலித்துகளைப் பற்றி நான் கேட்கவில்லை, நான் கேட்டது பிராமணர்களின் ஆதிக்கம் பற்றியது என்று உங்கள் பதிலில் பிரித்துச் சொல்லவில்லை).

      இதைக் கேட்டுக் கேட்டு நாம் அலுத்துபோகவில்லை? தலித்துகள் மீதான ஒடுக்குமுறைக்கும், தலித்துகளின் “இன்றைய” நிலைக்கும் நீங்கள் பார்ப்பனர்கள் மாத்திரம்தான் காரணம் என்று நம்புகிறீர்களா?

      மறுபுறம், நான் மேலெ காட்டியிருக்கும் வருத்தம்; என்னுடைய பதிலைத் தேவையில்லாமல் நான் “மருந்தைக் குடிக்கும்பொழுது மாட்டை நினைக்காதே” ரீதியில் எழுதியிருக்கிறேன். எனவே என் வலைக்குறிப்பில் தொடர்ந்த விவாதங்களுக்கு நான் பொறுப்பாகிறேன். என் விவாதத்தை யாரும் திசை திருப்பவில்லை, நானே அதற்குத் தூபம் போட்டுக் கொடுத்திருக்கிறேன். (என்னையறியாமலேயே). சில சமயங்களில் எழுதப்பட்ட வார்த்தைகள் நமக்குச் சொந்தமில்லாமல் போகின்றன. உங்கள் நோக்கத்திற்கு மாறாகவும் அப்படியாயிருக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?

      அப்படித்தான் என்றால் நாமிருவரும் ஒரே மாதிரியான தவறைச் செய்திருக்கிறோம் (நம் விருப்பமின்றியே). :)

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *