எரிகிற கொள்ளியில் எண்ணெய்
by வெங்கட் • December 28, 2004 • பொது • 11 Comments
கோபத்துடன்தான் நான் இதை எழுதுகிறேன். தமிழ்மணத்தில் மேய்ந்தபொழுது ஜாபர் அலி என்பவருடைய இந்த வலைப்பதிவு படிக்கக் கிடைத்தது.
1:102 அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் – நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவும், மிகக் கடினமானதாகவும் இருக்கும்
அல் குர்ஆன்: சூரா – ஹூத்.
தன்னுடைய வலைக்குறிப்பில் வழக்கத்திற்கு மாறாகச் சிவப்பு நிறத்தில் போட்டிருக்கிறார். யாருக்கு ஐயா இது? முழு மானிடத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறீர்களா? பிறர் மீது கரிபூசி உம் கையைக் கரியாக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் சிவப்பு புத்தரைத் தொழும் இலங்கையருக்கா, பரம்பொருளைத்தொழும் இந்தியருக்கா – இல்லை உலகின் மிகப்பெரும் இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவிற்கா? நாளை இந்த அழிவு உங்கள் சுற்றத்திற்கும் நேராது என்பது என்ன நிச்சயம். இல்லை அப்படி நேர்ந்தாலும் அன்றும் புத்தகத்தைச் சுட்டிக் கொக்கரிப்பீர்களா?
என்ன சொல்ல வருகிறார் இவர்? யார் மீது குறை சொல்கிறார்? ஐயா, இயற்கையின் சீற்றத்தை இறைவனின் தண்டனையாக மாற்ற முயற்சிக்காதீர்கள். இதைவிடக் கேவலம் ஏதுமில்லை. இது மனிதாபிமானத்துக்குரிய நேரம், புண்ணில் விரலைவிட்டு ஆட்டுவதற்கல்ல. எல்லா தண்டனைகளுமே இறைவனின் செயல்தான் என்றால் தண்டனையை நிறைவேற்றிக் கொண்டிருப்பதைத் தவிர அவனுக்கு வேலை ஏதுமில்லை. இறை என்று உண்டென்று நீங்கள் நம்புவீர்களானால் அந்த இறையை இப்படித் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் மூன்றாம்தர மனிதனுக்கு ஒப்பிடாதீர்கள்.
எல்லா இறைதூதர்களைப் போலவும் நபிகள் நாயகமும் தான் சார்ந்திருந்த சமூகத்தின் அவலத்தைப் போக்கத்தான் முயற்சி செய்தார். சிறு வயதில் நான் வானொலி கேட்கும் பாடல் இப்பொழுதும் நினைவிருக்கிறது “அருள் வடிவானவர் – எங்கள் நபிநாதர்”. காலம்-இடம் கடந்து வரிக்குவரி போதனைகளைப் பிய்த்தெடுத்து உதாரணம் காட்டாதீர்கள். உங்கள் பின்னூட்டத்தில் அபூ முஹை எழுதியிருப்பதைப் போல குழந்தைகள் என்ன தீங்கு செய்தார்கள்? இது இறைவன் செயல் என்று நம்புவீர்களானால் – இப்படி Carpet Bombing செய்யும் இறைவன் உங்களுக்குத் தேவையா என்று நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள். கண்மூடித்தனமாக தண்டனை நிறைவேற்றும் அந்த தெய்வம் நாளை உங்களைக் காப்பாற்றும் என்று என்ன அடிப்படையில் நம்புகிறீர்கள். அப்படிப்பட்ட இறைவன் தொழுதற்குரியவனா?
இது உங்களுக்கு மாத்திரம் எழுதியதில்லை. இந்த அனர்த்தத்தைக் காஞ்சிமடமோ, கத்தோலிக்கர்களோ திசைதிருப்ப முயன்றார்கள் என்றால் அவர்களுக்கும் இதுதான்; மானிடத்தை நிலைநாட்ட அப்படிப்பட்ட தெய்வத்தை அழிக்கலாம், எந்தத் தவறுமில்லை.
முடிந்தால் வேதனையில் இருப்பவர்களது துயரைத்துடைக்க ஏதாவது ஒரு வரி எழுதுங்கள், இல்லையென்றால் வாயை மூடிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே பிறரது வேதனையில் சுகம் கண்டுகொண்டிருங்கள். அறைக்குள்ளே காணும் சுய இன்பத்தைத் தெருவில் வந்து துய்க்காதீர்கள்.
தயவு செய்து எழுதுவதற்கு முன் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு எழுதுங்கள்.
தொடர்பான இன்னொரு கேவலச் செய்தி
http://www.dinamalar.com/2004dec29/imp46.asp…
எழுதினவன் கட்டாயம் ஒரு நாள் செத்துப் போயிடுவான் அப்படீன்னு நானும் ஆரூடம் சொல்லமுடியும். வெட்கம் கெட்ட நாய்கள்.
அதைப் பாராட்டி ஒருவர் தினமலர் ஆபீஸிக்கு லெட்டர் வேற போட்டாராம். பெருமையாய் பிதற்றிக் கொள்கிறார்கள்.
Venkat, I am surprised that a Nostradarmus connection hasn't been established yet!
நான் ஜாபர் அலி என்னும் க்ளோனை வன்மையாக கண்டிக்கிறேன். கர்தரை முன் வைத்து இதே போல் எதையும் சொல்லும் மற்ற க்ளோன்களையும் கண்டிக்கிறேன். "பெரியவாள உள்ள போட்டதுனாலத்தான் இப்படில்லாம் நடக்கிறது" என்று பரப்ப விரும்பும் நயவஞ்சகர்களை இதைவிட அதிகமாக கணிடிக்கிறேன்.
ஆனால் தினமலர் மேலே சொன்ன கேஸ்களுடன் சேர்த்தியல்ல, அந்த அளவிற்கு வன்மையாய் கண்டிக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் ஜாபர் அலியும், பெரியாவாளை பற்றி பரப்பும் கேஸ்களும், மக்களின்/ அரசின் செய்கைக்கான தண்டனையாக இதை (வக்ரத்துடன்) சொல்கிறது. தினமலர் சொல்வது ஜோசியத்தை முன்வைத்த வெறும் மூடநம்பிக்கை.
ரோஸா வஸந்த் – நான் எல்லோரையும் ஒரே அளவில்தான் கண்டிக்கிறேன்
என்னிடம் பாரபட்சமெல்லாம் கிடையாது. ஏன் இந்துக்களை மட்டும் அதிகம் கண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? அயோக்கியத்தனத்தைப் பரப்பும் அனைவரும் சமம்தானே? எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி உயர்வு?
அது கிடக்க, அப்படியே ஜோதிடம் என்றாலும் அதையும் நான் ஆபத்தாகத்தான் கருதுகிறேன். ஏனென்றால் இவர்கள்தான் பயத்தை வரவழைத்து மற்ற எல்லா மூடநம்பிக்கைகளையும் மனதில் துளிர்விடச் செய்கிறார்கள்.
என்னுடைய பழைய வலைக்குறிப்பு "ஜோதிடம் என்ற பம்மாத்து" படித்திருக்கிறீர்களா?
http://www.domesticatedonion.net/blog/?itemid=151…
ஜாஃபர் அலிக்கு,
மிகவும் விஷமத்தனமாக இருக்கிறது. என்னதான் சொல்கிறீர்கள்? செத்துப்போன அததனை பேரும் பாவிகளா? இது அவர்களுக்குத் தக்க தண்டனை என்கிறீர்களா? வக்கிரமாக இருக்கிறது இந்த சிந்தனை. இது மூட நம்பிக்கைகூட அல்ல, அடிமுட்டாள்தனம். இது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது.
என் பங்குக்கு:
http://kasiblogs.blogspot.com/2003_12_01_kasiblogs_archive.html#107108348091267978…
இது தினமலரின் இந்த துணுக்குக்கு நல்ல பொருத்தமாயிருக்கும்.
//ஏன் இந்துக்களை மட்டும் அதிகம் கண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?//
இந்துக்களை என்பதால் அல்ல! அப்படி ஒரு வாசிப்பு உங்களுக்கு சாத்தியமாகலாம். ஆனால் தினமலர் சொல்லும் ஜோசியம் கூட (ரொம்ப யோசிக்காவிட்டால்) இந்து மரபு சார்ந்ததுதானே!
பரப்புவதால், பரப்ப நினைப்பதால் – சில சுய லாபங்களை முன்னிடுவதாக நினைப்பதால் -அதற்கு பின் வஞ்சகம் இருப்பதாக நினைப்பதால் குறிப்பிட்டதை சற்று அதிகமாய் கண்டிக்க நினைக்கிறேன். ஜாபர் அலி, இப்படி சொல்வதால் தனக்கு லாபமில்லை, நஷ்டம் என்பது கூட அறியாத ஒரு க்ளோன், மத அடிப்படைவாதி என்று நினைக்கிறேன். அதனால்!
இது வெறும் தனிப்பட்ட கருத்து. ஒரு வந்தடைதல், வலியுறுத்தி சொன்னதல்ல.
தினமலர் எழுதியது விஷமத்தனமாக இருக்கலாம். மற்றபடி ஜோதிடம், 'மூடநம்பிக்கைகள்' என் கருத்துக்கள் வேறு. மற்றொரு சந்தர்பத்தில் பேசலாம். இப்போது வேண்டாமே!
இவரைப் போன்றவர்களுக்கு எப்பொழுது எதை எழுதுவது/சொல்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.
Religion is to teach people to love each other, and help each other. If we can not help, atleast we can pray for peace. Those who died are innocent, poor, workers population not the so called rich, parasites. Please for heaven sake dont call them sinners. If this is a punishment, then we dont need any religion.