• ஈழத்துக் கவிதைகளின் இசைவடிவம்

    by  • December 30, 2004 • இசை • 0 Comments

    தமிழில் திரையிசை சாரத மெல்லிசை முயற்சிகள் அதிகம் மேற்கொள்ளப்படுவதில்லை. என்னுடைய வங்காள நண்பர்கள் வங்கத்தில் நல்ல கவிஞர்களின் கவிதைகளுக்கு இசைவடிவம் கொடுத்து பாடல்கள் ‘ஷ¤கம் ஷொங்கீத்’ என்று பிரபலமாகின்றன. சொல்லப்போனால் ஒவ்வொரு பெங்காலிக்கும் ‘ரொபிந்த்ரொ ஷொங்கீத்’ என்று ரவீந்த்ரநாத் தாகூரின் பாடல்களின் இசைவடிவங்கள் பரிச்சயமானவை. மறுபுறத்தில் நம்மிடையே அற்புதமான இசைவடிவம் பெறத்தக்க பாரதி பாடல்கள் கொட்டிக்கிடக்க அவ்வப்பொழுது எதாவது ஒன்றிரண்டு திரைப்படத்தில் வந்தாலேயழிய நாம் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. பாரதிக்கே இந்த நிலை என்றபொழுது மற்ற கவிஞர்களின் இசைவடிவத்தைப் பற்றிய பேச்சே கிடையாது.

    நான் டொராண்டோ வந்தவுடன் எனக்கு இரண்டு இசைக் குறுவட்டுகள் கிடைத்தன. ஒன்று ரவீந்திரனின் இசையமைப்பில் வெளியான கண்ணீரும் குருதியும் காத்திருப்பும் என்ற வட்டு, மற்றது எஸ்.வி. வர்மனின் இசையில் வெளியான சேரனின் கவிதைகளின் இசைவடிவம் – காற்றோடு பேசு. என்னுடைய தமிழ் விஷன் தொலைக்காட்சி அறிவியல் நிகழ்ச்சியில் நான் எம்பி3 குறித்து விளக்கும்பொழுது, எஸ்.வி. வர்மன் ஒரு இசையமைப்பாளரின் கோணத்தில் தற்கால டிஜிட்டல் இசை நுட்பச் சாத்தியங்களைப் பற்றி விளக்கினார்.

    பாடல்:
    புலரும் வேளையில்

    தொகுப்பு: கண்ணீரும் குருதியும் காத்திருப்பும்
    பாடியவர்: வாணி ஜெயராம்
    இசை: ரவீந்திரன்
    பாடலாசிரியர்: வ.ஐ.ச ஜெயபாலன்

    கண்ணீரும் குருதியும் காத்திருப்பும் இசைத் தொகுதி, வ.ஐ.ச ஜெயபாலன், சேரன், பா.அ. ஜெயகரன் இவர்களின் கவிதைகளை உள்ளடக்கியது. இதன் உள்ளட்டையில் தயாரிப்பாளர் ராஜ் ராஜரத்தினம் இப்படிச் சொல்கிறார்;


    இப்பொழுது ஈழத்தமிழ் மக்கள் அனுபவித்து வருவது போன்ற துயரத்தையும் அவலத்தையும் இழப்பையும், நீண்ட காலத் தமிழ் வரலாற்றில் முன்னெப்போதுமே தமிழ் மக்கள் அனுபவித்தது கிடையாது. இது எமது வரலாற்றுப் பெருந்துயர். இந்தத் துயரூடாகவும் பாடல்கள் பிறக்கின்றன; கவிதைகள் எழுகின்றன; படைப்பின் வீச்சுகள் புத்தெழுச்சியில் மலர்கின்றன. இழப்பிலும் சுடர்விடுகிறது நம்பிக்கை.

    “கண்ணீரும் குருதியும் காத்திருப்பும்” என்னும் இந்த இசைத்தட்டு எமது துயரத்தையும் இழப்பையும் நம்பிக்கைகளையும் நுட்பமாகப் பதிவுசெய்த ஈழக்கலைஞர்களின் படைப்புகளைப் பாடல்களாகத் தருகிறது. இசை வடிவம் பெறுகிற ஈழக்கவிதைகளின் தனித்துவமான குரலையும் இந்த இசைத்தட்டில் நீங்கள் கேட்கமுடியும்.

    …:எமது காலத்தின் பதிவு மட்டுமல்ல. ஒருவழிப்பாதையாக இருந்துவரும் ஈழ-தமிழக கலை இலக்கியப் பாலம், இருவழிப்பாதையாகத் திறந்துவிடப்படுவதற்கான முயற்சிகள் இடம்பெறும் இவ்வேளையில், ஈழ-தமிழக கலைஞர்களி படைப்பாளிகளுக்கிடையேயான பரஸ்பர புரிந்துணர்வுக்கு முன்னேற்பாடாகவும் இது அமைகிறது

    ஆமாம், இது ஒரு அற்புதமான முயற்சிதான். பாடல்களைப் பாடியிருப்பவர்கள், இசைக்கலைஞர்கள் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் (தமிழர்கள் மாத்திரமல்லர்). பாடல்களுக்கு இசையமைத்திருப்பவர் ரவீந்திரன். திறமையான இசையமைப்பாளரான ரவீந்திரன் மலையாளத்தில் கிட்டத்தட்ட நானூறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவற்றில் ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, பரதம், போன்றவை மிகப்பிரபலமானவை. குளத்துப்புழா ரவி என்ற பெயரில் பாடகராக அறிமுகமானவர் ரவீந்திரன். தமிழில் எனக்குத் தெரிந்து ஒரே ஒரு படத்திற்குத்த்தான் இசையமைத்திருக்கிறார். இது சத்யராஜ், அம்பிகா நடித்த ரசிகன் ஒரு ரசிகை. இந்தப் படத்தின் பாடல்கள் (பாடி அழைத்தேன் – யேசுதாஸ், காற்றினிலே வரும் கீதம் – வாணி ஜெயராம்) மிக அற்புதமானவை. இருந்தும் ரவீந்திரன் தமிழில் அதிக வாய்ப்புகளைப் பெறவில்லை.

    இன்றைய பாடலைப் பாடியவர் வாணி ஜெயராம். வாணி ஜெயராம் குரலில் வயது தெரிகிறது. இருந்தாலும் திறமையான பாடகியின் குரலில் நல்ல கவிஞரின் பாடலைக் கேட்பதே பரவசத்தைத் தருகின்றது. இந்தத் தொகுப்பிலிருக்கும் பிற பாடல்களை சுனந்தா, ரவீந்திரன், வேணுகோபால், அருந்ததி, ராஜ் ராஜரத்தினம் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். பாடல்கள் சென்னையில் பதிவு செய்யப்பட்டு, கனடாவில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *