இசையால் வசமாகா இதயமெது
by வெங்கட் • November 18, 2004 • பொது • 7 Comments
என்னுடைய வலைக்குறிப்பில் ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்துகிறேன்.
இன்று தொடக்கம் அவ்வப்பொழுது நாம் மிகவும் இரசிக்கும் இசையை சில நிமிடங்கள் உங்களுடனும் பகிர்ந்துகொள்ளப்போகிறேன். முறையான சங்கீதப் பயிற்சி ஏதுமில்லாதவன் நான் (சங்கீத ஞானசூன்யம் என்பதைக் கௌரவமாக இப்படியும் சொல்லிக் கொள்ளலாம்). ஆனால் என்னுடைய வாழ்வில் எப்பொழுதும் இசை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. என் அம்மா எனக்குப் பாடிய தாலாட்டுகள் தெரியவில்லை. ஆனால் எனக்கு மூன்று வயதிருக்கும்பொழுதிலிருந்து நான் கேட்ட இசை எனக்கு இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. எண்ணெய் தேய்த்துக் குளிபாட்டும்பொழுது என் அம்மாவின் அபிமான பாட்கியான என்.சி. வஸந்த கோகிலத்தின் ஏன் பள்ளி கொண்டீரய்யா வரும், பூஜை முடிந்தவுடன் “ஜானகி குரு ரமணருக்கு” என்ற பாடல், அவ்வப்பொழுது சமையலின் இடையே சிறுகுரலெடுத்து காணி நிலம் வேண்டும், ஸ்ரீசக்ர ராஜ.. பாடுவாள்.
அப்பா… நல்ல தமிழிசைப் பாடல்களை எழுதி சுத்தானபாரதியாரின் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார். (வேதநாராயணன் தமிழ் வளர்க என்று சுத்தானந்த பாரதியார் என் அப்பாவின் நோட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்). என் அப்பாவின் சில பாடல்களை சீர்காழி கோவிந்தராஜன் கச்சேரிகளில் பாடியிருக்கிறார். அடுத்த இசைத்தட்டில் உங்கள் பாடலைப் பாடுகிறேன் என்று சொல்லியிருந்தவர் சில நாட்களுக்குள்ளே காலமானது என் அப்பாவின் துரதிருஷ்டம். கடுமையான இசை இலக்கணப் பித்தர் அவர். இலக்கணம் தவறாமல் பாடும் பாடர்களை மிகவும் நேசிப்பார். ஓரளவுக்கு வயலின் வாசிப்பார். ஒரு ஆஸ்திரியன் வயலின் வைத்திருத்ததாகச் சொல்லுவார், ஊரை விட்டு துரத்தப்பட்ட பொழுது இழந்தவற்றுள் இதுவும் ஒன்று. வாழ்க்கையின் சிக்கல்களாலு, தொடர்ச்சியான துக்கங்கள் தந்த அலுப்பினாலும், என்னுடைய சிறுவயதில் அப்பாவுக்கு இசை மீது ஒரு வெறுப்பிருந்தது. இதனால் நானோ என் சகோதரர்களோ முறைப்படி இசை பயில வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
அன்று தொட்டு இன்று வரை ஒரு பழக்கம் – பாடலைக் கேட்கும் பொழுது கூடவே தாளம்போடுவது. இது சிறிய வயதில் என்னுடைய (தாய்வழி) பாட்டியினால் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு துளிர்க்கும் ஆசைகள் முளையிலேயே அவளால் கிள்ளியெறியப்பட்டன. (எல்லோருக்கும் இருப்பதுபோல எனக்கு பாட்டியைப் பற்றிய இனிமையான நினைவுகள் அதிகம் இல்லை). பின்னர் இரண்டு பேண்ட் நெல்கோ டாபி ரேடியோதான் என்னுடைய இசை உலகம். காலையின் சென்னையில் வரும் அரங்கிசையாக இருக்கட்டும், பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சேவை இரண்டாக இருக்கட்டும். குளிக்க, படிக்க, தூங்க பாட்டுதான். நண்பர்களின் தோல் வாத்தியங்களில் (மிருதங்கம், ட்ரம்ஸ், டிரிபிள் காங்கோ) என் ஆசையைத் தனித்துக் கொள்வதுண்டு. படித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை பெங்களூர் பிரிகேட் ரோட்டில் இருந்த காபரே ஒன்றில் ட்ரம்ஸ் வாசிக்கத் தெரியும் வேலையிருக்கிறதா என்று கேட்டிருக்கிறேன் (·பெய்ன்மானை முதன் முதலில் தெரிந்து கொண்ட ஆர்வக் கோளாறு).
1978 லிருந்து 1994 வரை தமிழில் வந்த பாடல்கள் முதலடி கொடுத்துக் கேளுங்கள் 99 சதவீதம் அந்தப் பாடலின் முழு வரிகளும் எனக்கு மனப்பாடமாகத் தெரிந்திருக்கச் சாத்தியமிருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை இலக்கு இல்லாமல் கர்நாடக சங்கீதம் தொடங்கி, தமிழ், தெலுகு, மலையாளம், கன்னடம், என்று திரையிசை, ராக், ப்ளூஸ், ஜாஸ், என்று எதையும் விட்டுவைக்காமல் கேட்கும் வழக்கம் இருக்கிறது. பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் (அது பனிப்போர் காலம்) எனக்கு இசைத்தட்டுகள் கிடைக்கும். ஒருவகையில் ப்ராக் பில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா, ரஷ்ய “இலையுதிர் கால இலைகள்” என்று ஒருவகையில் அந்த சங்கீதம் என்மீது தினிக்கப்பட்டது.
பின்னர் ஐஐஎஸ்ஸி வந்தவுடன் பல நண்பர்கள் மூலமாக எல்லாவிதமான இசைக்கும் அறிமுகம் கிடைத்தது (அருள் – உங்கள் சார்லி பார்க்கர் கேஸட் இன்னும் என்னிடம்தான் இருக்கிறது, திரும்பத் தருவதாக உத்தேசமில்லை). என் ஐஐஎஸ்ஸி அறையில் மிகச் சக்திவாய்ந்த 3+3 பெரிய ஸ்பீக்கர்கள் கொண்ட கார் ஸ்டீரியோ இருந்தது. அந்தக் காலங்களில் அதுதான் ஐஐஎஸ்ஸியிலேயே சக்திகூடியது என்று நினைக்கிறேன். அதனால் யார் புதிய கேஸட் வாங்கினாலும் அது முதலில் என் அறையில்தான் இசைக்கப்படும்.
* * *
இப்பொழுது டிஜிட்டல் வடிவம் வந்த பிறகு ஒரு உத்வேகமே வந்திருக்கிறது. நேரடிப் பகிர்வு வந்து அது அமெரிக்க இசை வணிகர்களின் தூக்கத்தை கலைக்கும் வரையான இடைப்பட்ட இரண்டு வருடங்களின் வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல் பாடல்களை சேகரித்திருக்கிறேன். (இப்பொழுது கூட கூகிளின் சில இரகசியங்களைப் பயன்படுத்தி கொஞ்சம் அசமந்தமாக வலையில் பாடல்களைப் போட்டு வைத்திருப்பவர்களை அவ்வப்பொழுது நோண்டுவதுண்டு. தொழில் ரகசியம் வேண்டுவோர் தனிப்பட்ட முறையில் எழுதவும்). டெக்னோ, அவான் கார்ட் என்று எல்லா வகைகளையும் கொஞ்சம் பொறுக்கிப் போட்டுக் கொண்டு அவ்வப்பொழுது கேட்பதுண்டு. எல்லாமாகச் சேர்த்து இப்பொழுது கிட்டத்தட்ட 40-50 கிகா பைட் சங்கீதம் இருக்கிறது. வீட்டில் பிரத்தியேக இசை வழங்கு சேவையும் உண்டு. லினக்ஸில் இருக்கும் இதை வீட்டில் இருக்கும் நான்கு கணினிகளில் எதில் வேண்டுமானாலும் கேட்க வீட்டுக்குள்ளே ஒரு தனிவலை வைத்திருக்கிறேன்.
பலருக்கும் தெரியாத ஒரு விஷயம், நம் பென்ஸீன் பாலாஜியின் தூள்.டாட்.காம் -மின் பாட்டனாரான tfmpage.com துவக்குநர்களின் நானும் ஒருவன். இதுதான் தமிழ் இசையை முதன் முதலில் வலையில் வைத்த தளம்.
* * *
என்னுடைய மனதைக் கவர்ந்த பல பாடல்களை இசை வடிவங்களை இனி அவ்வப்பொழுது உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்றிருக்கிறேன். இதில் எந்தவிதமான வரையறைகளும் கிடையாது, ஒரு நாள் லஜ்ஜாவதியே, மறுநாள் பீம்சேன் ஜோஷி, தொடர்ந்து ஸ்காட்டிஷ் பேக்பைப்பர், அப்புறம் டெக்னோ, இடையில் தில்லானா என்று எதுவாக வேண்டுமானாலும் வரும். தூள்.டாட்.காமில் பாலாஜி இதேபோன்று அற்புதமாக, மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்துவருகிறார். தமிழ்த் திரையிசையின் சில உன்னத பாடல்களையும் அவற்றைப் பற்றிய விபரமும் தெரிய ஆவலாக இருந்தால் தினமும் ஒரு பாடல் கேளுங்கள். சரவணன், உதயா, ஸ்ரீகாந்த், என்று பல ஜாம்பவான்கள் அங்கே திரையிசையைப் பற்றி விவாதிப்பதைப் பார்க்கலாம். இது அதிலிருந்து சற்று மாறுபட்ட முயற்சி. தமிழ்த் திரையிசை கடந்தது, தனிப்பட்ட எனது விருப்பங்கள் (அல்லது விரும்பிக் கேட்கும் நண்பர்களின்), சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட இசைத்துணுக்குள்கூட வரும், சில சமயங்களில் விளம்பரங்களின் இசை.
அலைவரிசை நெருக்கடி கருதியும் வலையில் நேரடியாகப் பகிர்தலில் இருக்கும் சிக்கல் கருதியும் நான் உள்ளிடுபவை ரியல் ஆடியோ வடிவில் தரம் குறைந்தவையாக இருக்கும் (ஆனால் கட்டாயம் மோசமாக இருக்காது). குறிப்பாக நான் இடும் பாடல்களில் ஏதாவது வேண்டுமென்றால் என்னைத் தனிப்பட்ட முறையில் அணுகவும். இனி…
நல்ல விஷயம்! எனக்குப் பழைய பாடல்கள் மிகவும் விருப்பம். தினம் தினம் தூள்.காம் தளம்போய் ஒரு பாடலையாவது கேட்காமல் இருந்ததில்லை.
நல்ல பணி.
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
துளசி.
நீங்கள் டி.எ·ப்.எம் காரர் என்பது எனக்கு செய்தி. நிசமாவா? உங்கள் வலைப்பதிவுகளில் இசை சம்மந்தமான பதிவுகள் ஒன்றே ஒன்றைத் தவிர ( வி.குமார்) வேறு பார்த்ததாக நினைவில்லை. தூள்.காம் இன் ·போரம் தவிர, திரை இசை பற்றி வலைப்பதிவுகளில், அதிகம் எழுதப் படுவதில்லை. நீங்க எழுதுங்க. வரலாறு.காம் இணைய இதழில் , ராம் ( லலிதா) எழுதும் 'திரையில் மலர்ந்த ராகங்கள்' கட்டுரையை வாசித்தீர்களா?
[ நீங்கள், வெங்காயத்துக்கு வந்ததில் இருந்து, உங்கள் இணையத்தளம் வாசிக்க மிகவும் சிரமமாக இருக்கிறது. மற்ற இணையத்தளங்களை ஸ்க்ரால் செய்தால், லகுவாக ஏறும் இறங்கும் இல்லையா, ஆனால், உங்கள் தளம் மிகவும் முக்குகிறது. வாயிலே கூழாங்கல் போட்டுக் கொண்டு மேய்ந்தாலும், திக்கல் நிற்கவில்லை. என் கணிப்பொறியில் சிக்கல் இல்லை என்பதை கண்டு பிடித்து விட்டேன். ஆகையால் உங்கள் பதிவுகளை, cut ட்டி, வெட்டி, ஒட்டித்தான் படித்துக் கொண்டிருக்கிறேன். உடனுக்கு உடன் தொடர்வினை அளிப்பதும் சிரமமாக இருக்கிறது. பில்கேட்ஸ் மென்பொருள் பாவிக்கிற பாவிகளுக்கு உங்களிடம் இருந்து உதவி கிடைக்காது என்று கேள்விப்பட்டிருந்தாலும், எனக்காக ஏதாச்சும் செய்து, தளத்தை எளிதாகப் படிகிற மாதிரி செய்யுங்கள்]
அண்பு வெங்கட். இந்தப்பாடலை இறக்கிக் கொண்டேன். நன்றி. சென்ற பதிவிலும் எனது பின்னூட்டம் உள்ளது.
ம்ம். சரியான தொடர்தான். சார்லீ பார்க்கரை ஞாபகப்படுத்திட்டீங்க. இதுக்கு ஒரு ரிவெஞ் பதிவு போட்டேதான் தீரணும். ரெண்டு நாள் பொறுங்க.
பேசாம இந்த தொடருக்கு RBlock அபாயம்னு பேர்வைக்கலாம்.
அருள்
Venkat, I echo Prakash's comments. Scrolling your page is tough. Konjam layout simplify paNNunga.
Thanks for the plug to dhooL and SOTD. The dhooL forum is here: http://www.dhool.com/phpBB2/ .
Now that dhooL is no longer a part of tfmpage, I want to expand SOTD to include non-TFM songs, like ghazals. Looking back, the SOTDs over the last two and a half years have formed a considerable repository of good songs. I will talk to you about this in detail.
A coincidence: At IIT-M, I had one of the biggest stereo systems in our wing
தாங்கள் ஏன் Mozilla Firefox (http://www.mozilla.org/products/firefox/…)பயன்படுத்தி பார்க்கக்கூடாது? அதில் வெங்காயத்தின் பக்கங்கள் அனைத்தும் மிகப் பிரமாதமாக வருகிறது.
மு.கே.சரவணன்.
À¢Ã¸¡„¢ý ¸£ú ¸ñ¼ ÜüÚ ºÃ¢§Â. ¦Åí¸ð «¨¾ ºÃ¢ ¦ºöÂ×õ.
=þŠÁ¡Â¢ø ¸É¢
—————————-
[ நீங்கள், வெங்காயத்துக்கு வந்ததில் இருந்து, உங்கள் இணையத்தளம் வாசிக்க மிகவும் சிரமமாக இருக்கிறது. மற்ற இணையத்தளங்களை ஸ்க்ரால் செய்தால், லகுவாக ஏறும் இறங்கும் இல்லையா, ஆனால், உங்கள் தளம் மிகவும் முக்குகிறது. வாயிலே கூழாங்கல் போட்டுக் கொண்டு மேய்ந்தாலும், திக்கல் நிற்கவில்லை. என் கணிப்பொறியில் சிக்கல் இல்லை என்பதை கண்டு பிடித்து விட்டேன். ஆகையால் உங்கள் பதிவுகளை, cut ட்டி, வெட்டி, ஒட்டித்தான் படித்துக் கொண்டிருக்கிறேன். உடனுக்கு உடன் தொடர்வினை அளிப்பதும் சிரமமாக இருக்கிறது. பில்கேட்ஸ் மென்பொருள் பாவிக்கிற பாவிகளுக்கு உங்களிடம் இருந்து உதவி கிடைக்காது என்று கேள்விப்பட்டிருந்தாலும், எனக்காக ஏதாச்சும் செய்து, தளத்தை எளிதாகப் படிகிற மாதிரி செய்யுங்கள்]