• அருளின் “ஒரு சிலர்”

    by  • July 20, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    ஒரு அற்புதமான சிறுகட்டுரை அருள் செல்வனால் எழுதப்பட்டிருக்கிறது. “ஒரு சிலர்” என்ற தலைப்பில் இந்தியாவின் அடிப்படைத் தேவைகளை, அவற்றை நிறைவேற்றுவதில் இருக்கும் பிரச்சனைகளை நேரடியாக மோதி வெற்றிகண்ட நாயகர்களைப் பற்றிய தகவல் அது. பேராசைமிக்க வியாபாரத் தீயில் ஆகுதியாக வெந்துபோன பிஞ்சுகளைப்பற்றிய வேதனைக்கு மருந்தாக அருளின் கட்டுரை வந்திருக்கிறது.

    இன்றைக்கு அமுல் என்றால் “க்யா சீஸ் ஹை” என்று சொல்லி அண்ணாசாலையில் அவர்கள் வைக்கும் பாலூட்டிகளின் சாதனங்கள்தான் என்று இளைஞர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கனவை விரிய வைத்த குரியன் மறந்துபோகப்பட்டார்.

    எனக்கு நன்றாக நினைவிருக்கிறது; எட்டு வயதில் அரிசிகிடைக்காமல் ரேஷன் கடைக்கு அலைந்து மாவு கோதுமையும், மக்காச் சோளமும் வரிசையில் நின்று வாங்கியிருக்கிறேன். பின்னர் பத்து வயதில் அதேபோல் அலைந்து கருணா, ஐஆர்20 போன்ற வாயில் வைக்க முடியாத அரிசிகளையும் சுத்திகரிக்கப்படாத சோயா எண்ணெயையும் வரிசையில் நின்று பெற்றிருக்கிறேன். தொடர்ந்து அது ஐஆர் 8 ஆக உயர்ந்தது. இப்பொழுது என்னைப்போல சராசரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் மகன் நேரடியாகக் கடைக்குப் போய் பொன்னி அரிசியை வாங்கக் கூடும். இதன் பின்னால், சி.சுப்ரமணியத்தின் நிர்வாகம், எம்.எஸ். சுவாமிநாதனின் தொழில்நுட்பத் திறன், இந்திரா காந்தியின் தொலைநோக்கு போன்றவை இருந்தன.

    ஒரு காலத்தின் என் நண்பர்கள் வீட்டில் சொல்லகேட்டிருக்கிறேன்; “இன்னிக்கு ஞாயித்துக்கெழமல்ல, எங்கம்மா முட்டை தருவாங்க”. என் அம்மா இப்படிச் சொன்னதுன்டு “அவள்ளாம் பணக்காரா, பாலத் தண்ணி விடாமக் காய்ச்சுவா” (இது ஏற்கனவே வி. ஆர்.ஆர் பால்டிப்போவில் சரிவிகிதத்தில் தண்ணீர் விடப்பட்டு விற்கப்படும் பாலைப் பற்றிய பேச்சு). இப்படி அடிப்படை புரதத்தேவைகளைப் பற்றிய உரையாடல்கள், சொகுசைப்பற்றிய கனவுப் பேச்சுகளாக இருந்த காலம்போய் இன்றைக்குப் பாலையும் முட்டையையும் பதப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிய பேச்சுகள் வந்திருப்பதற்குப் பின் பி.வி.ராவ், குரியன்…

    என்னுடைய ஐஐடிபற்றிய கடந்தநாட்களின் வலைக்குறிப்புகளுக்கு அடியோடும் ஆதங்கத்திற்கு அருள் மறுவடிவம் கொடுத்திருக்கிறார். நம்முடைய இருப்புகள், தேவைகள் இவற்றைப் பற்றிய நிலவரம் தெரியாமல் இந்தியாவின் ஐஐடிக்களும், ஐஐஎஸ்ஸி போன்றவையும் முற்றாக விலகிபோனதைப் பற்றி விழித்தெழவேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு இந்தச் சாதனையாளர்களைப் பற்றியும் அவர்களது பாதைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள் வேண்டியது அவசியம். குட்டிச் சுவற்றில் உட்கார்ந்து கொண்டு பில் கேட்ஸைப் பற்றி சிலாகிக்கும் நம் இளைஞர்களுக்கு குரியன்களையும், ராவ்களையும் அறிமுகம் செய்ய வேண்டியது அவசியம்.

    அருள் இவற்றைப்பற்றியெல்லாம் நிறைய எழுதவேண்டும். இன்றைய தலைமுறைகளுக்கு உண்மையான நாயகர்களைப் பற்றிச் சொல்லவேண்டியதன் அவசியம் நிறையவே இருக்கிறது.

    0 Responses to அருளின் “ஒரு சிலர்”

    1. arul
      July 21, 2004 at 1:37 pm

      >>

      எனக்கு நன்றாக நினைவிருக்கிறது; எட்டு வயதில் அரிசிகிடைக்காமல் ரேஷன் கடைக்கு அலைந்து மாவு கோதுமையும், மக்காச் சோளமும் வரிசையில் நின்று வாங்கியிருக்கிறேன்.

      ——————–

      பரவாயில்லையே. மக்காச் சோள தோசை இன்னும் மறக்காது.

      இன்னும் குழந்தைக்கு பால் பவுடர் வேண்டுமென்றால், க்ளக்ஸோ ஒன்றுதான்.

      சப்பளை வந்தால், முதலிலேயே செட்டியார் கடையில் ரிசர்வ் செய்து வைத்திருந்தால் ஒரே ஒரு

      டப்பா கிடைக்கும். குழந்தைக்குத் தெரிகிறதா பாலைத் துப்பாமல் குடிக்கவேண்டும் என்று …

      நல்ல காலம் போங்கள். நீங்களும் எழுதுங்கள் வெங்கட். – அருள்.

    2. arul
      July 21, 2004 at 1:38 pm

    3. மூக்க&#298
      July 21, 2004 at 4:43 pm

      வெங்கட்,

      உங்களைப் போல தாய்நாட்டு விசுவாசம் கொண்ட விஞ்ஞானிகளை , இந்தியா சரிவர உபயோகிக்கவில்லையா, இல்லை இந்திய எல்லை கடந்து எங்கோ வாழ்வதால் எல்லோர்க்கும் தோன்றும்

      மதர்லேண்டோ ஃபோபியா உங்களுக்கும் தோன்றுகிறதா..??

      அருள் மட்டுமல்ல, நீங்களும் இது பற்றி நிறைய எழுத வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலர் மகனாய் பிறந்திருந்தாலும், நானும் கிருஷ்ணாயிலுக்கு ரேஷன் க்யூவில் நின்றிருக்கிறேன்.

      ரேஷன், கோயில் பிரசாதம், 1.50 ரூபா பெஞ்சு டிக்கெட், செங்கோட்டை பாசஞ்சர், முருங்கைகீரை, தண்ணி பால் எல்லாம் நம் தலைமுறை மத்திய வர்க்க அடையாளம்.

      இந்தியாவில், பீட்ஸாவிலும், பர்கரிலும் சுற்றிவரும் இந்தத் தலைமுறைக்கல்ல…

      நிறைய (இதுபோலவும் :-) ) எழுதுங்கள். என்னை அடையாளம் காண முடிவதால், எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

    4. மூக்க&#298
      July 21, 2004 at 4:44 pm

    5. வெங்க&#297
      July 22, 2004 at 6:41 am

      சுந்தர்,

      >உங்களைப் போல தாய்நாட்டு விசுவாசம் கொண்ட விஞ்ஞானிகளை , இந்தியா சரிவர உபயோகிக்கவில்லையா, இல்லை இந்திய எல்லை கடந்து எங்கோ வாழ்வதால் எல்லோர்க்கும் தோன்றும்

      மதர்லேண்டோ ஃபோபியா உங்களுக்கும் தோன்றுகிறதா..??

      இதில் எத்தனை சதவீதம் வெற்று ஏக்கம் எவ்வளவு உண்மையான விசுவாசம் என்பதைக்காண ஒருவரின் வெற்று புலம்பம்பல் – சமூகத்திற்குப் பயனுள்ள காரியங்களில் ஈடுபடுவது இரண்டையும் கவனித்தால் தெரியும். என்னைப்போன்ற கையாலாகாதவனுக்கு அறிவியல் கல்வி பரப்பல், தமிழில் மென்கலன் வடித்தல், மதுரைத்திட்டம் போன்றவைதான் உண்மையான வழிகள் என்று நம்புகிறேன். பணவுதவிகளைவிட இவை வருங்காலத்திற்கு ஏற்றவை என்பது என் தாழ்மையான எண்ணம்.

      இந்தத் தாய்நாடு இத்யாதி எல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும். தமிழ் லினக்ஸ்க்கு ஒருமுறை இப்படி அறிமுகம் எழுதினேன். “கணினி என்பது ஒரு வெறும் கருவி, இதன் மொழியை (ஆங்கிலம்) கற்றுக்கொண்டுதான் இதைப் பாவிக்கவேண்டும் என்பது சுத்தியலின் கைப்பிடிக்கேற்ப நம் கையைச் செதுக்கிக் கொள்வதைப் போன்றது. இந்தக் கருவியை அடக்கியாண்டு நம் மொழியைக் கற்றுக்கொள்ள வைப்பதுதான் உண்மையான திறமை. அது இல்லாதவரை நாம் தொழில்நுட்பத்திடம் தோற்றுப்போய்க் கொண்டிருப்பதாகத்தான் அர்த்தம்”. சமூக நோய்களைக் களையமுற்படுவதுகூட பல சமயங்களில் இப்படித்தான்.

      இதே அளவு கரிசனத்தை என்னால் வசிக்கும் நாட்டிடமும் (கனடா) காட்டமுடிகிறது.

      {ரொம்பப் பிரச்சார நெடியடிக்கிறதோ :) !}

    6. வெங்க&#297
      July 22, 2004 at 9:03 am

      அருள்,

      மக்காச்சோளத்தில் தோசை என்பதைவிட “சோளத்தட்டை” என்று பெயரிடப்பட்ட தடிமனான வஸ்துதான் எனக்கு மிகவும் பிடித்தது (அத்துடன் வற்றல் மிளகாய், வெங்காயம் இரண்டும் சேர்த்து அறைக்கப்படும் துகையல்). :) இன்றைக்கு ஸ்பைடர்மேன் பட அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்ட கார்ன்ப்ளேக்ஸ்தான் காலை உணவு. :(

      சுந்தர்,

      கிருஷ்ணாயில்-பாமாயில் தம்பதி சமேதராக ரேஷன் கடையில் வாங்கினால் புண்ணியமுண்டு :)

      கிருஷ்ணாயில் கிடைக்காத காலங்களில் மரத்தூள் அடுப்பு. கொஞ்சம் ஈரம் கலந்து சோடா புட்டியை வைத்து அந்த மரத்தூள் கோபுரம் கட்டுவது ஒரு கலை. இந்த அடுப்பைத் துவக்கினால் நிறுத்தமுடியாது. எனவே சமையல் துரிதமாக முடியும். 1984ல் என் முதல் காஸ் சிலிண்டரை சைக்கிளில் வைத்துக்கொண்டு வந்தபொழுது வீட்டு வாசலில் காத்து நின்ற என் அம்மாவின் முகம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஈன்றபொழுதினில் பெரிதுவக்கும் தாய்!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *