• அகத்தேடல் :: கூகிள் வழி – 2

    by  • October 19, 2004 • அறிவியல்/நுட்பம் • 2 Comments

    கூகிள் டெஸ்க்டாப் பயன்பாடு பற்றிய இரண்டாம் பகுதி

    இந்தத் தேடலைத் தருவதன் மூலம் மைக்ரோஸாப்டுடன் நேரடியாக மேசைத்தள உலகில் கூகிள் மோதுவதாகப் பலரும் கூறுகிறார்கள். மைக்ரோஸாப்ட் வரவிருக்கும் லாங்க்ஹார்ன் இயக்குதளத்தில் இந்த வசதி இருக்கும் என்று முதலில் அறிவித்தது. காலவரையறையின்றி பலமுறை ஏற்கனவே ஒத்திப்போடப்பட்ட லாங்க்ஹார்னில் இந்தத் தேடல் இருக்காது என்று சொல்கிறார்கள் (மைக்ரோஸாப்ட்க்கு இன்னும் இந்தச் சமாசாராம் வசப்படவில்லை). (நேற்று டைனோ எழுதியிருந்தபடி விண்டோஸ் 2000 லிருந்து “containing text” தேடல் மைக்ரோஸாப்ட்ல் இருக்கிறது. ஆனால் இது வெறும் மைக்ரோஸாப்ட் வேர்ட் கோப்புகளையும் வெற்று உரைக் கோப்புகளையும் மாத்திரமே அடக்கும்). லாங்க்ஹார்னில் மைக்ரோஸாப்ட் இலக்கு கிட்டத்தட்ட கூகிள் டெஸ்க்டாப்பை ஒத்தது – பொதுவில் கணினியில் இருக்கும் எல்லாவற்றையுமே தேடிக் கண்டுபிடிப்பது. (இந்த விஷயத்திற்குப் பின்னால் வருகிறேன்).

    மைக்ரோஸாப்ட்டுடன் நேரடியாக மோதுகிறது என்று கொண்டால், இது கூகிளின் அறியாமையைத்தான் காட்டவேண்டும். மைக்ரோஸாப்ட் வடிக்கும் வேர்ட், பவர்பாயிண்ட், அவுட்லுக் எக்ஸ்பிரஸ், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் போன்ற கருவிகளுக்கு அற்புதமான தேடல் இயந்திரத்தை வடிவமைத்து, அதையும் இலவசமாகக் கொடுத்திருப்பதன் மூலம் மைக்ரோஸாப்ட் கருவிகளின் செயல்பாட்டை நீட்டித்து அவற்றின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது கூகிள். இது நாளடைவில் மைக்ரோஸாப்ட்டுக்குத்தான் பலம் சேர்க்கும் (தன்னுடைய கருவியை கூகிள் இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருக்க, அதன் உதவியுடன் மைக்ரோஸாப்ட் இன்னும் அதிக ஆபீஸ் பொதியை விற்கும்). எனவே மைக்ரோஸாப்ட்டுடன் மோதுவதாக நினைத்துக் கொண்டு இதைக் கூகிள் செய்திருந்தால் அது மடத்தனம். மாறாக, பொதுவில் தங்களுடைய முக்கியத்துவத்தை அதிகரித்துக் கொள்ள என்பதாக கூகிள் இதில் இறங்கியிருந்தால் அது புத்திசாலித்தனமான செயல். அப்படியிருந்தாலும்கூட இது கூகிளின் வணிக முக்கியத்துவத்தைக் குறிப்பிடும்படியாக பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. பொதுவில் இந்தப் பயன்பாடு மைக்ரோஸாப்ட்டுக்குத்தான் நல்லது என்று தோன்றுகிறது. (என்னைப் போன்ற சிலர் லினக்ஸில் இருக்கும் – மைக்ரோஸாப்டில் இல்லாத வசதிகள் என்று பட்டியலிடுவதில் ஒன்றை மைக்ரோஸாப்டுக்குச் சாதகமாக கூகிள் நீக்கியிருக்கிறது).

    இதற்கு அடுத்த கட்டமாக கூகிள் தங்களுடைய உலாவியை வெளியிடும் என்று சிலரும், உடனடி தூதுவன் நிரலியை வெளியிடும் என்று சிலரும் நம்புகிறார்கள். மைக்ரோஸாப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஒரு சவம். அமைப்பிலும் செயல்பாட்டிலும் இது மோஸிலா உலகை நெருங்க முடியாது, தொடர்ந்தும் முதலிடத்தில் இருப்பதற்கு சந்தையின் சடத்துவம்தான் (inertia) காரணம். கூகிள் அங்கே குதித்தால் சமன்பாடுகள் விரைவில் மாறக்கூடும். தன்னுடைய இருப்பை உலாவி சார்ந்ததாக (browser-centric) கூகிள் வடித்துக்கொண்டுள்ளது. இந்த நிலையின் தனக்கேயான உலாவியை வடிவமைத்துக் கொண்டு, அவர்களுடைய அற்புதமான கருவிகளை மைக்ரோஸாப்ட் உலகில் செயல்படாமல் நிறுத்தினால் (இது சாத்தியம்தான், எக்ஸ்ப்ளோரரிலிருந்து வரும் கூகிள் தேடல்களுக்குப் பதிலைக் காட்டாமல் கூகிள்-உலாவியை இறக்கிக் கொள்ள அவர்கள் வற்புறுத்தக் கூடும். இன்றைய தினத்தில் தகவல்தேடலில் பலரும் கூகிளுக்கு அடிமை, எனவே அவர்கள் இலவச உலாவியைக் கட்டாயம் நிறுவார்கள்) கூகிள் மைக்ரோஸாப்ட்டின் கையை முறுக்கலாம். அந்த வகையில் கூகிள்-உலாவிக்கு இந்த கூகிள் மேசைத்தேடல் பயன்பாடு ஒரு முன்னோடியாக இருக்கக்கூடும்.

    கூகிள் டெஸ்க்டாப் எப்படி வேலை செய்கிறது? சுருக்கமாக – நிறுவும் பொழுது உங்கள் கணினியில் கூகிள் ஒரு சிறிய தேடல் இயந்திரத்தைப் பொருத்துகிறது. நீங்கள் உலாவியில் தேடலைத் துவங்கும்பொழுது உங்கள் தேடலை இரண்டு கூறுகளாக்கி அதில் ஒன்றை கணினியில் இருக்கும் இயந்திரத்திற்கு அனுப்பப்படுகிறது; ஏற்கனவே அட்டவணையிடப்பட்டு வைக்கப்பட்ட உங்கள் கோப்பு விபரங்களைக் கொண்டு சொந்தக் கணினிக்குள் தேடல் நடக்கிறது. மற்றதை கூகிள் தளத்தில் இருக்கும் இயந்திரத்திற்கும் அனுப்புகிறது. அங்கே இணையத்தை அட்டவணையிட்டு வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து வழக்கமான கூகிள் தேடலைப் போல உங்கள் கணினிக்கு விடை வருகிறது. கிடைக்கும் விடைகளை ஒன்றாக்கி உங்கள் உலாவியில் காட்டுகிறது. எனவே, உங்கள் கணினியில் இருக்கும் எந்தத் தகவலும் இணையத்தின் வழி அனுப்பப்படவில்லை. இந்த கூகிள் டெஸ்க்டாப் வெளியான சில மணிநேரங்களில் பலரும் தங்கள் பிரத்தியேக இரகசியங்கள் தேடல் கேள்வியுடன் கூகிளுக்கு அனுப்பப்படுகிறதோ என்று கவலைப்பட்டார்கள். அப்படியில்லை என்பதைக் கூகிள் தெளிவாக்கியிருக்கிறது. இதுதவிர சொந்தக் கணினியில் மாத்திரமோ, இணையத்தில் மாத்திரமோ தனித்தனியாகத் தேடுவதும் சாத்தியம்தான்.

    வேகம் – வேகம் – இதுதான் கூகிளின் தாரக மந்திரம். மைக்ரோஸாப்ட் இயக்குதளத் தேடலையும் கூகிள் டெஸ்க்டாப் தேடலையும் பயன்படுத்திப் பாருங்கள். கூகிள் கண்ணிமைக்கும் நேரத்தில் விடையைக் காட்டுகிறது. மைக்ரோஸாப்ட்டின் குறும்படம் பூதக்கண்ணாடியைச் சுழித்துக்கொண்டு காலம் கடத்துகிறது. பொதுவில் கூகிள் தேடலில் அதிக கோப்புகள் தென்படுகின்றன (இதற்குக் காரணம் அது மின்னஞ்சல், பவர்பாயின்ட் போன்ற அனைத்தையும் உள்ளடக்குவது).

    இனி இதன் குறைகள் கவலைகள் பற்றி -

    2 Responses to அகத்தேடல் :: கூகிள் வழி – 2

    1. October 20, 2004 at 8:53 am

      ஒரு மாதமாக தமிழ் லினக்ஸ் வலைப்பக்கத்தில் "Refresh" பொத்தானை அழுத்தி எனது தட்டச்சுப் பலகையில் F5 என்ற எழுத்துக்கள் அழிந்துவிட்டன. இப்பொழுதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது.

      > இந்தத் தேடலைத் தருவதன் மூலம் மைக்ரோஸாப்டுடன் நேரடியாக
      > மேசைத்தள உலகில் கூகிள் மோதுவதாகப் பலரும் கூறுகிறார்கள்.

      ஒரு விதத்தில் இது உண்மையே. கூகிள் மைக்ரோசாஃப்டிற்கு ஒரு பெரிய தலைவலியைக் கொடுத்திருப்பது உண்மையே. மைக்ரோஸாஃப்ட் லாங்ஹார்ன் இயங்குதளத்தின் முக்கியமான அம்சமாக அவர்கள் முன்னிறுத்தியிருந்தது அதன் மேம்பட்ட தேடல் வசதி. மேலும் அதற்காக அவர்கள் செய்துள்ள பிரம்மப் பிரயத்தனத்தையும் விளக்கியுள்ளார்கள் (புதிய கோப்பு வடிவம்(?) – file system). அவர்கள் அவ்வளவு கஷ்டமான விஷயம் என்று சொன்னதை கூகிள் வெறும் 400 கிலோ ஃபைட் அளவிலான நிரலி மூலம் தீர்த்தது மைக்ரோசாஃப்டின் முகத்தில் கரியைப்பூசியதற்குச் சமம். தற்பொழுது மைக்ரோசாஃப்ட் லாங்ஹார்னை விற்க வேறு ஏதாவது அம்சத்தை முன்னிறுத்த வேண்டும்.

    2. October 21, 2004 at 1:30 pm

      கண்ணன் – இதிலொன்றும் அதிசயமில்லை. மைக்ரோஸாப்ட் ஒரு மூளை செத்த நிறுவனம். 400 கி.பை யில் செய்ய வேண்டியதற்கு file system மாற்றத்தைப் பற்றி சிந்திப்பது அவர்களுக்குப் புதிதில்லை.

      ஆனால், என்னுடைய கருத்தில் இன்னும் மாற்றமில்லை. கூகிள் டெஸ்க்டாப் மைக்ரோஸாப்ட்க்குத்தான் உதவப்போகிறது. நானும் நீங்களும் 400 கி.பை, file system என்று மைக்ரோஸாப்ட்டின் அபத்தங்களைச் சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால் பொதுஜனத்திற்கு இதெல்லாம் தெரியாது (என்பது மைக்ரோஸாப்டிற்குத் தெரியும்). அதை வைத்துத்துத்தானே அவர்கள்காலத்தை (வெற்றிகரமாக) ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். கூகிள் இலவசமாகக் கொடுத்துக்கொண்டிருக்க மைக்ரோஸாப்ட் கொழுத்துக்கொண்டிக்கப் போகிறது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *