shankar_gingger.png
சென்ற வெள்ளிக்கிழமை டொராண்டோ Winter Garden Theatre ல் நடைபெற்ற ஷங்கர் & ஜிஞ்ஞர் இரட்டை இரட்டை-வயலின் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். உலகிலேயே டொராண்டோ நகரைக் காட்டிலும் பல்லின, பல்கலாச்சார நகரைப் பார்ப்பது கடினம். டொராண்டோ நகரில் மே மாதம் தெற்காசிய மாதமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதம் முழுவதும் பல இந்திய, பாக்கிஸ்தானிய, நேபாளி, திபெத்தியக் கலைஞர்கள் இசை, நாடகம், தொடங்கி பானை வனைதல், பட்டு நெசவு, உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகிறார்கள்.. இதற்குக் கனேடிய அரசாங்கம் தொடங்கி, மாநில அரசு, நகர நிர்வாகம், தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகம் என்று பலரும் ஆதரவு தருகிறார்கள். இப்படியரு அற்புதமான நிகழ்வைக் காணக் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

* * *
ஷங்கர் – ஜிஞ்ஞர் வயலினுக்குப் பக்க வாத்தியமாக சிவமணியின் ட்ரம்ஸ்ம், அநிந்தோ சட்டர்ஜியின் தபலாவும் இருந்தன. (நிகழ்ச்சியின் அமைப்புப்படி ஸ்வப்பன் சவ்துரி தபலா வாசித்திருக்க வேண்டும். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் ஸ்வப்பன் இல்லை என்று சொல்ல்விவிட்டார்கள். அந்த வகையில் எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். எனக்குப் பொதுவில் தாள வாத்தியங்களில் ஆர்வம் அதிகம். என் மனதைக் கவர்ந்த தபலா கலைஞர்களில் உஸ்தாத் அல்லா ரக்காவிற்கு அடுத்த இடம் ஸ்வப்பன் சவ்துரிக்குத்தான். மாதம் முழுவதும் டொராண்டோவில் பெரிய வித்வான்களுக்குப் பஞ்சம் இல்லை என்ற காரணத்தால் அநிந்தோ சட்டர்ஜியைத் துயில் எழுப்பி மேடையில் உட்கார வைத்துவிட்டார்கள்). பொதுவில் நிகழ்வு ஏமாற்றம் தருவதாகத்தான் இருந்தது. அழைத்து வந்து உட்கார வைக்கப்பட்ட அநிந்தொ அடிக்கடி எழுந்துப் போய்க்கொண்டிருந்தார். அதே போல ஷங்கர், ஜிஞ்ஞர், சிவமணி என்று ஒவ்வொருவராக பாடல்களுக்கு இடையில் காணாமல் போய்க்கொண்டிருந்தார்கள். என்ன காரணத்தினாலோ தெரியவில்லை. இது பார்வையாளர்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை. தொழில் ரீதியான கலைஞர்கள் இம்மாதிரி செய்யும்பொழுது அவர்களுடைய கலைத்திறம் பின்னுக்குத் தள்ளப்பட்டு பார்வையாளனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

பாடல்களில் வழக்கமான, பிரபலமான ஷங்கர் தயாரிப்புகள் எல்லாம் இருந்தன. இவற்றில் Sunrise, Voices from heaven, Revelations, Let’s go home அடங்கும். இவற்றினூடே ஷங்கரும் ஜிஞ்ஞரும் இணைந்து பாடிய Palaces, Memories, போன்ற பாடல்களும் அடக்கம். நிகழ்ச்சியின் ஆரம்பப்பாடலான சன்ரைஸில் வயலின்களின் நாதம் அற்புதமாக இருந்தது. இந்தத் துவக்கம் நிகழ்ச்சியைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்பைத் தர, பிற பாடல்கள் எல்லாம் ஏமாற்றிவிட்டன. வாய்ஸஸ் ப்ரம் ஹெவன் பாடலுக்கு அப்படியரு தலைப்பு ஏனென்று தெரியவில்லை. பாடல் முழுவது நம் தமிழக நாட்டுப்புற மெட்டுக்களும் அதிலிருந்து எடுக்கப்பட்ட படிமங்களுமாகத்தான் இருந்தது. இறுதியில் இந்தப் பாடல் இளையராஜாவின் ‘தேவன் திருச்சபை மலர்களே, வேதம் ஒலிக்கின்ற மணிகளே’ என்ற வரிகளுடன் முடிந்தது. இது ஷங்கர் இளையராஜாவுக்குச் செலுத்தும் மரியாதையாகத் தோன்றினாலும், இளையாராஜாவின் பல அருமையான வயலின் கலந்த பாடல்களும், பின்னனி இசையும், நினைவில் தோன்ற ஆதங்கம்தான் மிஞ்சி நின்றது.

சமீபத்தில் வெளியான Mel Gibson-னின் The Passion of the Christ திரையிசையில் பெரும்பங்கு ஷங்கர்-ஜிஞ்ஞருக்கு உண்டு. பாஷன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஷங்கரின் பெயர் இப்பொழுது பல கனேடியர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இவர்களின் வருகையும் அரங்கில் கணிசமான அளவிற்கு இருந்தது. ஷங்கர் ஏமாற்றாமல் படத்திலிருந்து ஒரு பாடலை வாசித்தார் (சுபபந்துவராளி ராகத்தின் சாயல் இருப்பதாகத் தோன்றியது எனக்கு. நான் படத்தைப் பார்க்கவில்லை, திரையிசையையும் இன்னும் கேட்கவில்லை). இதற்கு முன் வெளிவந்த தோல்விப்படமான Martin Scorsese -ன் The Last Temptation of Christ படத்திலும் ஷங்கர் வயலின் வாசித்திருக்கிறார் (திரையிசை – பீட்டர் கப்ரியேல்).

sivamani.png
அநிந்தோவின் தபலா முழு நிகழ்ச்சியிலும் ஒட்டாமல் தனியாக இருந்தது (அவரே நிகழ்ச்சியில் ஒட்டாமல் அவ்வப்பொழுது வெளியே சென்றுகொண்டிருந்தார்). சிவமணியை மிகவும் சிறிய வயதிலிருந்து பார்த்து வருகிறேன். இப்பொழுது கிட்டத்தட்ட பத்துவருட இடைவெளிக்குப் பிறகு இவரை நேரடி நிகழ்ச்சியில் பார்க்கிறேன். எந்த வித்தியாசமும் இல்லை (வெள்ளை சாமியார் உடை, தலையில் பந்தானா கட்டு போன்ற branding சமாச்சாரங்களைத் தவிர). மாற்றம் இல்லாததே ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. அதேமாதிரி நம்மூர் தாள வாத்தியங்களின் ஒலிகள் எல்லாவற்றையும் கொஞ்சம் தொட்டுத்தருகிறார். தபலா, கஞ்சிரா, உடுக்கு, பறை, உறுமி மேளம், மத்தளம் என்று புதிதாகக் கேட்பவர்களுக்குப் பிரமிப்பூட்டினாலும், நெடுநாளாகக் கேட்டுவருபவர்களுக்கு அயர்வாகத்தான் இருக்கும். அரங்கில் ஒரு தமாஷான சம்பவம் நடந்தது – சிவமணி தனி ஆவர்த்தனம் வாசிக்கும் பொழுது என் இருக்கைக்கு முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு வெள்ளைக்கார பெண்மனி கையில் மிகவும் சக்தி வாய்ந்த பைனாக்குலரை வைத்துக்கொண்டு சிவமணி என்னதான் (எப்படித்தான்?) வாசிக்கிறார் என்பதைத் தேடித்தேடி பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுதெல்லாம் அவருக்கு சிவமணி எழுப்பும் ஓசைகளில் நம்பிக்கையில்லாதது போலத்தான் தோன்றியது. வாசித்து முடித்தவுடன் நெடுநேரம் தலைக்குமேல் கைகளை உயர்த்தி தட்டிக்கொண்டிருந்தார்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் பயணக்குழுக்களில் ஷங்கர்-ஜிஞ்ஞர் பாடுவதாகச் சொல்லப்பட்ட palaces பாடலும் ஜிஞ்ஞர் பாடிய Memories பாடலும் ஒட்டுமொத்தமான ஏமாற்றத்தைத்தான் தந்தன. இருவருடைய குரலும் எந்தவிதத்திலும் உயர்வானதாக இல்லை. இரட்டை வயலின்களைக் கொண்டு நடந்த கச்சேரியில் தனி வயலினில் எந்தப் பாடலும் வாசிக்கப்படவில்லை. இது ஏமாற்றமாகத்தான் இருந்தது.

* * *

இப்பொழுதுதான் நான் முதன்முறையாக நேரடியாக ஷங்கர் இரட்டை வயலின் கச்சேரியைப் பார்க்கிறேன். என்னைப் பொருத்தவரை இது பெரிய ஏமாற்றம்தான். இதற்கு முன்னால் நான் மூன்று முறை பார்த்திருக்கும் ஷங்கரின் அண்ணன் எல்.சுப்ரமணியத்தின் பழைய கச்சேரிகள் நினைவில் வந்துபோகின்றன. சுப்ரமணியத்தை எதிர்ப்பார்த்துக்கொண்டு போனதால்தான் ஏமாற்றம் என்று நினைக்கிறேன்.

1994-ல் பெங்களூர் சவுடைய்யா அரங்கில் கேட்ட எல்.சுப்ரமணியத்தின் வயலின் இசை எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. ஷங்கரின் நிகழ்ச்சி விரைவில் மறந்துபோகும்.