வெ.சா டொராண்டோ கலந்துரையாடலில் கேட்கப்பட்ட சில கேள்விகள் குறித்து.

முதலில் பிரகாஷ் கேட்டிருந்தபடி கேள்வி -10; (கேள்விகளையும் பதில்களையும் நான் குறிப்பு எடுத்துக்கொண்டு எழுதவில்லை, என் நினைவிலிருப்பதை எழுத முயற்சிக்கிறேன். தவறுகளுக்கு நானே பொறுப்பு, மன்னிக்கவும்).

10. இன்றைய உலகில் ஆசிரியர் விருப்பம், வர்த்தக சாத்தியங்கள் என்பனவற்றைக் கடந்து ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் நேரடியாகத் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள இணையத்தின் மூலமான சாத்தியங்கள் படைப்பிலக்கியத்தின் போக்கை எப்படிச் செலுத்திவருகின்றது என்பதைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?

வெ.சா: ஆமாம். இணையத்தில் நெறையா நடந்துகிட்டு இருக்குபோலத் தெரிகிறது. நான் கொஞ்ச நாளாத்தான் பார்த்துகிட்டு வர்றேன். இப்பதான் மின்னஞ்சல் எழுதக் கத்துக்கிட்டு வர்றேன். பார்ப்பதற்கு வேண்டிய நிறைய விஷயங்கள் அங்கே இருக்கிறார்போல தெரிகிறது. ஆனால் இதைப் பற்றி சொல்வதற்கு எனக்கு பரிச்சயம் குறைவு.

இடையில் எழுத்தாளர் பூரணி மகாலிங்கம் குறுக்கிட்டு – முதல்ல இந்த கேள்வியைக் கேட்பவர் யார் என்று உங்களுக்குச் சொல்ல வேண்டும். இவர் கலாநிதி வெங்கட்ரமணன், தமிழ் கம்ப்யூட்டர் முயற்சிகளில், லினக்ஸ் என்று கேள்விப்பட்டிருப்பீர்களே, முனைப்பானவர்.

வெ.சா: ஓ, நீங்கதான் வெங்கட்ரமணனா? அப்ப என்ன, நான் உங்களை நேரடியா பாராட்டனும்னு கேட்டீங்களா?

நான்: இல்லை. பாராட்ட நான் என்ன செய்தேன்? நான் கேட்டது இலக்கியத்தைப் பற்றி. கேட்ட காரணம், தமிழ்ல பல கலை-இலக்கியத்துறைகளை ஒரு முழுமையான கண்ணோட்டத்துல நீண்ட காலமா விமர்சனம் செஞ்சுக்கிட்டு இருக்கீங்க. இந்த நிலைல இணையத்து மூலமாவும் நடக்கிற இலக்கிய முயற்சிகள் குறித்து நீங்க எங்கயும் எழுதினதா தெரியல. ரொம்பப் பெரிய அளவுல இல்லாட்டியும், குறிப்பிடும்படியா இருக்குன்னு நினைக்கிறேன். இதைப் பற்றிய உங்கள் கருத்தைத்தான் கேட்டேன். மத்தபடி இந்தக் கேள்வியக் கேட்கும்பொழுது என்னப்பத்தி நான் யோசிக்கவே இல்லை.

வெ.சா: இல்லை சும்மா சொன்னேன். உங்க புத்தம் கூட வந்திருக்கு போல இருக்கே. அது நீங்கதானா? எந்த பதிப்பகம்?

நான்: ஆமாம் அறிவியல் கட்டுரைத் தொகுதி. தமிழினி, ம்ம். யுனைட்டெட் ரைட்டர்ஸ்.

வெ.சா: நான் இன்னும் படிக்கல்ல. சிலர் உங்க புத்தகம் பத்தி சொன்னாங்க.

கட்டாயமா பல முயற்சிகள் நடக்கிறதா தெரியுது. முக்கியமா கனடாவுலேந்து ஆஸ்திரேலியாவரை பரவியிருக்கிற தமிழர்கள் இதுல நேரடியா ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பது முக்கியமான காரணம். இதுக்கு யாரு காரணம்னு நீங்க நினைக்கிறீங்க?

நான்: பரந்துபட்டு இருக்கிற தமிழர்களுக்கு இருக்கிற அடையாளத்தேடல்தான் காரணம்னு நினைக்கிறேன். அதுவும் தொழில்நுட்பம் மூலமா இது சாத்தியம் என்று தெரிந்தவுடன் கட்டாயமா இதோடத் தேவை அதிகமாகிறதுன்னு நெனைக்கிறேன்.

வெ.சா: யாருக்கு அடையாளத்தேடல் முக்கியமா இருக்கு? ஈழத் தமிழர்களுக்கு. அதுனாலதான் அவங்க இதெல்லாம் முனைப்பா செய்யுறாங்க. இந்தியர்களுக்கு இதுல அதிகம் தேவையில்லை. அவங்க முனைப்பா செஞ்சதுனாலதான் கம்ப்யூட்டர்ல தமிழ் வளர்ச்சி இந்த அளவுக்கு வந்திருக்கு.

நான்: இல்லை, இதுக்கு முக்கிய காரணம் இந்தியத் தமிழர்கள்கூடத்தான். ஆரம்ப காலத்துலேந்து.

வெ.சா: ஏன் குஜராத்திக்காரங்க செய்யமாட்டேங்கிறாங்க?

நான்: அவங்களுடைய அடையாளத் தேடல் பணத்துல இருக்கெறதா தெரியுது.

வெ.சா: அதுதான், இலங்கைத் தமிழர்களுக்கு அடையாளத் தேடல் இருக்கிறதுனால அவங்களால இந்த அளவுக்கு வளர்ச்சி ஏற்ப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் அங்கே அவர் சொல்வதைப்போல் இதற்கான ‘ஒட்டுமொத்தக்’ காரணம் ஈழத்தமிழர்கள் இல்லை என்று மறுத்துச் சொல்வதற்கு எனக்கு தெம்பு இல்லை. முதலாவதாக அவரே சொன்னதுபோல் வெ.சாவிற்கு இணையத்தில் தமிழ்பற்றி அதிகம் தெரியவில்லை. இரண்டாவதாக, இதைப்பற்றி நான் இன்னும் ஏதாவது சொல்லப்போக அவர் குதர்க்கமாக “ஆமாம் எல்லாம் நீங்கதான் செஞ்சீங்க அப்படீன்னு நான் ஒத்துக்கிறேன். விட்டுட்றீங்களா?” என்று சொல்லிவிட்டால் (சில கேள்விகளுக்கு அப்படித்தான் பதில் சொன்னார்) எனக்கு அவமானம் தாங்கமுடியாமல் போய்விடும். எனவே நான் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை.