ve_sa_toronto.pngநேற்று மதியம் டொராண்டோ, ஸ்கார்பரோ நகர்மைய அரங்கில் கலை, இலக்கிய விமர்சகர் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுடனான கலந்துரையாடலுக்குச் சென்றிருந்தேன். வரும் வியாழனன்று டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்காசியப் பிரிவு வழங்கும் இந்த வருடத்து ‘இயல் விருதை’ வெ.சா பெற்றுக் கொள்ளவிருக்கிறார். அது தொடர்பாக வந்திருக்கும் அவருடன் காலம் சஞ்சிகையின் சார்பாக நேரடி கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் கூட, தமிழ் இலக்கியப் புத்தகங்களின் விற்பனைக் கண்காட்சியும் இருந்தது. நிகழ்வுக்குச் சுமார் ஐம்பதிலிருந்து எழுபதுபேர் வந்திருந்தனர். மிகவும் சாதாரணமான முறையில் சொற்பொழிவுகள், தயாரிக்கப்பட்ட உரைகள் என்றெல்லாம் இல்லாமல் பார்வையாளர்களின் கேள்விக்கு திரு. வெ.சா நேரடியாகப் பதிலளித்தார். நிகழ்வின் தொடக்கத்திலேயே இது வாசகர்களின் கேள்விக்குப் பதிலளிக்க இயன்றவரை முயல்கிறேன் (பல கேள்விகளுக்கு உடனடியாக திருப்தியான வகையில் பதில்தருவது என்பது இயலாத காரியம் என்றும், இது தனிப்பட்டு தான் பதிலளிக்கும் நிகழ்வு இல்லையென்றும், பார்வையாளர்களுடனான கலந்துரையாடல் என்றும் வரையறுத்துக் கொண்டார்). எனவே, இலக்கின்றி பல கேள்விகள் முன் வைக்கப்பட்டன.

ve_sa_audience.pngகேள்விகளையும் பதிலையும் இயன்றவரை தொகுக்கலாம் என்றுதான் முதலில் எண்ணியிருந்தேன். ஆனால் இந்தக் நிகழ்விற்கென திரு. வெ.சா எந்தவிதமான புதிய விஷயத்தையும் சொல்லவில்லை. எனவே, மாதிரிக்காக சில கேள்விகளைத் தருகிறேன். பதில்களை வெ.சா-வின் கட்டுரைகளையும், புத்தகங்களையும் படித்திருப்பவர்கள் அறிவார்கள்.

1. ஈழத்து விமர்சகர் திரு. கைலாசபதியின் விமர்சனங்கள் குறித்து உங்களுடைய தற்பொழுதைய கருத்து என்ன?

2. பெண்ணிய இலக்கியத்தின் சொல்லாளுமை குறித்து என்ன சொல்ல விழைகிறீர்கள்?

3. திரு முத்துசாமியின் கூத்துப்பட்டறை தமிழக நாடக உலகிற்கு என்ன விதமான பங்கைத் தந்திருக்கிறது?

4. ஈழத்து நாடகங்களின் போக்கைப் பற்றிய வரலாற்று ரீதியான உங்கள் விமர்சனம் என்ன?

5. தமிழ் இலக்கிய உலகில் ஈழத்தின் பங்களிப்பு ஏன் போதுமான அளவு விவாதிக்கப்படுவதில்லை. உதாரணமாக, கவிதையைப் பற்றிய பேச்சில் ஒரு மாதிரிக்காக கூட நன்கு அறியப்பட்ட சேரன், ஜெயபாலன் இவர்களைக் கூட உதாரணம் சுட்டுவதில்லை. இப்படியான நிலைக்குக் காரணாமாக நீங்கள் எதைச் சொல்வீர்கள்?

6. நாட்டியக் கலையை மீட்டெடுப்பதில் ருக்மணி அருண்டேலின் சேவைகள் குறித்து

7. பாதல் சர்க்காரின் சேவைகள் குறித்து

8. ஆறுமுகத்தின் கருங்சுழி நாடகமும் அதைத் தொடர்ந்த படைப்புகளையும் குறித்தான் உங்கள் விமர்சனங்கள்

9. நீண்ட கால இலக்கிய விமர்சகர் என்ற வகையில் உங்களுடைய பார்வையில் தற்சமயம் தமிழ் இலக்கியம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறதா? ஒவ்வொரு பத்தாண்டுகளாங்களாக உங்கள் விமர்சன வரலாற்றைப் பிரித்துப் பார்த்தால் கடந்த பத்து, இருபது ஆண்டுகள் அதற்கு முந்தைய தலைமுறையுடன் எப்படி ஒப்பிடப்படலாம்?

10. இன்றைய உலகில் ஆசிரியர் விருப்பம், வர்த்தக சாத்தியங்கள் என்பனவற்றைக் கடந்து ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் நேரடியாகத் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள இணையத்தின் மூலமான சாத்தியங்கள் படைப்பிலக்கியத்தின் போக்கை எப்படிச் செலுத்திவருகின்றது என்பதைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?

11. இலக்கியத்தில் உள்வட்டம் – வெளிவட்டம் என்று நீங்கள் வரையறுத்ததைப் பற்றிய உங்கள் விளக்கம் என்ன?

(கேள்வி 9ம் 10ம் நான் கேட்டவை)

இந்தக் கேள்விகளுக்கு வெ.சா என்ன பதில் சொல்வார் என்பது அவருடைய விமர்சனங்களைத் தொடர்ச்சியாகப் படித்து வருபவர்களுக்குத் தெரியும். அதைத்தான் அதையும் சொன்னார். (இன்னும் சில கேள்விகள் நினைவில் இல்லை).

பொதுவில், தன்னுடைய விமர்சனம் தனிப்பட்டு நிற்பதாயும், தன் மனதிற்குப் பிடித்தது என்பதை மறைவின்றி தான் முன்வைப்பதால் பலருடைய கோபத்திற்கும் ஆளாக வேண்டியிருப்பதாகச் சொன்னார்.

இவற்றில் ஒன்றிரண்டு கேள்விகளுக்கான அவருடைய பதில்களையும் அவற்றின் மீது அங்கே நான் தெரிவித்த கருத்துகளையும் (குறிப்பாக கேள்வி எண் 5) வருகிற நாட்களில் எழுதுகிறேன்.