tfmpage.com இணைய தளத்தில் வி. குமார் – மலரும் நினைவுகள் என்ற தொடரை நண்பர் சரவணன் ஆரம்பித்திருக்கிறார். இந்தத் தொடரில் மறைந்த இசையமைப்பாளர் திரு. வி. குமார் குடும்பத்தினரின் (வி.குமாரின் மனைவி ஸ்வர்ணாவும் ஒரு திரைப்படப் பாடகி) உதவியுடன் சரவணன் வி.குமாரின் பழைய வானொலி நிகழ்ச்சிகள், பத்திரிக்கை பேட்டிகள், பாடல் பதிவின்பொழுது பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் இவர்களுடனான உரையாடல் என்று பல அரிய விஷயங்கள் இங்கே தொகுக்கப்படவிருக்கின்றன. இது ஒரு அருமையான முயற்சி, இதற்குத் தோள் (தளம்) கொடுப்பவர் நம் பாலாஜி. உலக அளவில் பிரபலமான பாடகர்களின் இதுபோன்ற விஷயங்களுக்குப் பெரும் வரவேற்பு இருக்கும். உதாரணமாக, ஜான் லென்னானும், பால் மெக்கார்ட்னியும் தங்களுக்குள்ளே பாடிப்பார்த்தவை, படிப்படியாக ஒரு மெட்டுக்கு மெருகேற்றியமை போன்றவை இப்பொழுதுகூட சிறு ஒலிக்குறிப்புகளாகக் கண்டெடுக்கப்பட்டு பிரபலப்படுத்தப்படுகின்றன. தமிழில் அப்படியெல்லாம் எதுவும் அதிகமாகக் கிடையாது. என் அண்ணனின் நெருங்கிய தோழர்களான திரைப்பட ஒளிப்பதிவு-இயக்கம் இரட்டையர் ராபர்ட்-ராஜசேகரின் (ஒருதலை ராகம் – ஒளிப்பதிவு, பாலைவனச் சோலை – ஒளிப்பதிவு, இயக்கம்) உதவியால் எனக்கு மூன்றாம் பிறை திரைப்படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடல் உருவான முழு வரலாறு கிடைத்தது. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் இருக்கும் அந்த ஒலிநாடாவில் கண்ணதாசன், கமலஹாசன், பாலுமஹேந்திரா, இளையராஜா, யேசுதாஸ் என்று ஒரு அற்புதமான கலைஞர்குழு தங்களுக்குள்ளே மனம்விட்டுப் பேசி ஒரு பாடலை உருவேற்றும் உரையாடல்கள் இருந்தன. அந்த உரையாடல்களில் இளையராஜா யேசுதாஸை “அண்ணா” என்று விளிப்பார். அதே போல டிக், டிக், டிக் திரைப்படத்தில் வரும் ‘பூ நடமிட’ பாடலை இளையராஜா, ஜென்ஸி ஆண்டனி, யேசுதாஸ் மூவரும் விவாதிக்கும் உரையாடலும் இருந்தது. இவையெல்லாம் ஒரு காலத்தில் என் அண்ணன் படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த (குறுகிய இடைவெளிதான்) சமயத்தில் விரக்தியுடன் வேறு நண்பர்களுக்கு இரவல் கொடுக்கத் தொலைந்துபோயின. அந்தக் காலங்களில் பலரிடமும் ஒலி நாடா பதிவுச் சாதனங்கள் கிடையாது. என் அண்ணன் இவற்றை மறுபிரதியெடுத்துப் பத்திரப்படுத்தவில்லை. தொடர்ச்சியான தோல்விகளால் பிரிந்து, சிதைந்துபோன ராபர்ட்-ராஜசேகருடன் என் அண்ணனுக்கு இருந்த தொடர்பும் போய்விட்டது. இவற்றின் இழப்பை என்னால் கட்டாயம் மறக்கமுடியாது.

இப்படியான சிறுபதிவுகள் சுவாரசியமானவை. பாப், ராக், ஜாஸ் உலகுகளில் இவைபோன்ற ஆரம்ப வடிவங்களில் பல இறுதியாக வட்டில் வெளிவந்த வடிவங்களைக் காட்டிலும் அற்புதமாக இருக்கக் கண்டிருக்கிறேன். இசையை ஆழ்ந்து அனுபவிப்பவர்களுக்கு இதுபோன்ற சிறிய சமாச்சாரங்கள் மிகவும் மகிழ்வைத் தரக்கூடியவை. சில சமயங்களில் இவற்றுக்கு வரலாற்று ரீதியான முக்கியத்துவமும் உண்டு. உதாரணமாக, பம்பாய் டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் (Tata Institute of Fundamental Research, TIFR) அரியக்குடி ராமாநுஜ ஐயங்கார், அறிவியல் அறிஞர்களிடையே கச்சேரிக்குமுன் நிகழ்த்திய உரை. ஒரு கச்சேரியின்பொழுது விஞ்ஞானி சி.வி.ராமன் இந்தியத் தாளவாத்தியக் கருவிகள் பற்றி நிகழ்த்திய சிறு சொற்பொழிவு என்று என்னிடம் சுவாரசியமான தொகுப்புகள் உண்டு.

தமிழ்த் திரையிசையிலிரும் இதுபோன்ற விஷயங்கள் தொகுக்கப்பட வேண்டும். நண்பர் சரவணன் அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

* * *
மறைந்த இசையமைப்பாளர் வி.குமாரைப் பற்றி பலருக்குத் தெரிந்திருக்காது. ஆனால் அவருடைய பாடல்கள் பலவற்றை, பலசமயங்களில் அவர்கள் இரசித்திருப்பார்கள். எனக்குப் பிடித்த இரண்டாவது வரிசை இசையமைப்பாளர்களில் வி.குமாரும் அடங்குவார் (என்னுடைய பிற தேர்வுகள் – மரகதமணி (தெலுகில் கீரவாணி), சமீபத்தில் மறைந்த மகேஷ் (நம்மவர்), விஜயபாஸ்கர், தேவேந்திரன்,…). வி.குமாரின் அற்புதமான சில பாடல்கள்:

1. மதனோற்சவம் ரதியோடுதான் (சதுரங்கம் – எஸ்.பி.பி, வாணி ஜெயராம்)
2. காதோடுதான் நான் பேசுவேன் (வெள்ளிவிழா – எல்.ஆர். ஈஸ்வரி)
3. உன்னிடம் மயங்குகிறேன் (தேன் சிந்துதே வானம் – யேசுதாஸ்)
4. வாழ்வில் சௌபாக்கியம் வந்தது (தூண்டில்மீன் – எஸ்.பி.பி, சுசீலா)
5. படைத்தானே ப்ரம்மதேவன் (எல்லோரும் நல்லவரே – எஸ்.பி.பி)
6. பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு (இவள் ஒரு சீதை – எஸ்.பி.பி)
7. சப்தஸ்வரம் புன்னகையில் (நாடகமே உலகம் – எஸ்பிபி, வாணி ஜெயராம்)
8. பகைகொண்ட உள்ளம் (எல்லோரும் நல்லவரே – யேசுதாஸ்)
9. பொன்னைநான் பார்த்ததில்லை (கண்ணாமூச்சி – எஸ்.பி.பி)
10. ஓராயிரம் கற்பனை (ஏழைக்கும் காலம்வரும், எஸ்.பி.பி)
11. உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது (நவக்கிரகம் – எஸ்.பி.பி, சுசீலா)

இந்தப் பட்டியல் எனக்கு உடனடியாக நினைவில் வந்த பாடல்களின் தொகுப்பு. இன்னும் பல அற்புதமான பாடல்களைத் தந்திருக்கிறார் வி. குமார். மெல்லிசை இழையோட இவர் வாத்தியங்களைக் கையாளும் பாங்கு மிகவும் அற்புதமானது. உதாரணங்களாக, மதனோற்சவம் பாடலில் வரும் கிடார் இசையும், உன்னிடம் மயங்குகிறேன் பாடலில் வரும் பியானோ இசையையும் சொல்லலாம். இன்றைய பரபரப்பு உலகில் உடனடி பிரபலங்களிடையே (ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ்,…) வி.குமாரைப் போன்ற அற்புதமான இசையமைப்பாளர்கள் மறக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் சரவணன் மேற்க்கொண்டிருக்கும் பணி மிகவும் பாரட்டப்பட வேண்டியது.

* * *
இறுதியாக, சரவணனைப் பற்றி: வளைகுடா நாடொன்றில் பணியாற்றும் இளைஞரான இவர் ஒரு நடமாடும் திரையிசைத் தகவல் களஞ்சியம். பாலசரஸ்வதியா, ஷ்ரேயா கோஷாலா, தண்டபாணி தேசிகரா, அட்நான் ஸாமியா – சரவணன் அறியாத தகவல்களே இல்லை. வெறும் தகவல் மாத்திரம் தரும் கிடங்கல்ல சரவணன், அற்புதமான இசை ஞானமும் கொண்டவர். இவர் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் தூள்.காம் தளத்தில் பாலாஜி அளிக்கும் தினம் ஒரு பாடல் திரியில் அற்புதமான, மறந்துபோன, அழிவிலிருக்கும் பாடல்களை அழகான தகவல்களுடன் வெளிக்கொண்ர்ந்து வருகிறார். இப்படியரு தகவல் தொகுப்பைச் செய்ய எனக்குத் தெரிந்த வகையில் சரவணனைவிடத் தகுதியானவர்கள் யாரும் கிடையாது.

என்னைப் போன்றவர்களின் அன்றாட நெருக்கடி வாழ்வினிடையில் ஒரு சில நிமிடங்கள் இசையால் நிறுத்திவைத்து, புதுத் தெம்பூட்டும் சரவணனுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.

மேலதிகத் தகவலுக்கு: http://tfmpage.com/forum/3842.00.37.21.html