இன்றைக்கு வாசித்துக் கொண்டிருந்த என்னுடைய நண்பரின் பழைய கவிதை இது. செல்வம் காலம் சிற்றிதழின் ஆசிரியராக இருக்கிறார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் வாழ்வைக் கவிதையாக்கிய முதல் சிலரில் ஒருவர் செல்வம்.

வியாகூலப் பிரசங்கம்

வெளிக்கிட்டு முப்பத்து மூன்றாம் நாள் வந்து சேர்ந்தேன் காலம் எல்லாம் நடந்தவன்போல

குடிவரவு அதிகாரி கடும்வெய்யில் கண்டவர்போல் சிவத்திருந்தார்.

தலித்தாய்ப் பிறந்து தமிழனாய் குனிந்து கறுப்பனாய் எனை உணர்ந்தேன்.

ஏன் வந்தாய்? என்றார் அக்கிரமம் தலைதூக்கி அன்பு தணிந்துபோன காலத்தில் பிறந்தவன் ஐயா, என்றேன் கல்லாகிப் பொல்லாகி இரும்பாகி கலிபர் ஐம்பதான காலத்தில் வாழ்ந்தவன்.

திரும்பவும் முறைத்து நீ ஏன் வந்தாய்? என்றார் அண்ணனும் தம்பியும் அடித்து அடுத்த வீட்டானும் அதற்கு அடுத்த வீட்டானும் துரத்த ஆர்ஆரோ பட்ட துயரெல்லாம் என் கதையாக அவர் கலங்கி

என்ன கொண்டு வந்தாய்? என்றபோது மூவாயிரம் ஆண்டு இழுத்து வந்த சிலுவை இருக்குது முப்பதாண்டுகளாய்ச் செய்த ஆணிகள் இருக்குதென்றேன். போய் நீ உன்னையே அறை என்று கை குலுக்கிக் கனடாவுள் அனுப்பி வைத்தார்

இங்கே, இலைகொண்ட கொடி ஆட என்னை அறைவேன் சிலுவையிலே.