ஷங்கர் சமத்தா ஒரு வாரம் எழுதிவிட்டு வால்நட்சத்திரம் போய்விட்டது என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார். அடுத்தது என் முறை. வாலுபோயி கத்தி வந்தது என்ற கதையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்று அவரவர்கள் இஷ்ட தேவதைகளை வேண்டிக்கொள்ளுங்கள்.

முடிந்தவரை இந்த வாரம் சுவாரசியமாக எழுத முயற்சிக்கிறேன்; உத்தரவாதம் ஏதுமில்லை. என்ன எழுத உத்தேசம்? எதற்காக என் வலைக்குறிப்பைப் படிக்க வருகிறார்கள் என்பதைப் பின்னூட்டத்தின் மூலம் கொஞ்சம் ஊகித்திருக்கிறேன். அப்படியே எழுத உத்தேசம். அதைத் தவிர எதை எழுதுவது எனக்கு மனநிறைவைத் தருகிறது என்பதையும் மனதில் கொண்டு துக்கினியூண்டு எனக்காகவும் எழுத ஆசை. எனக்கும் நட்சத்திர அந்தஸ்து கிடைத்ததைக் கொண்டாடவும்தான். ம்ம்…எப்படிக் கொண்டாடலாம்? தினமும் எனக்குப் பிடித்த பாடல் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளல்லாமா? இது வசதிதான், என் எழுத்தைச் சகிக்க முடியாதவர்கள் பாட்டைக் கேட்டுவிட்டு ஓடிப்போய்விடலாம். இதில் சில அபூர்வமான பாடல்கள் இருக்கும், சில மிகப் பிரபலமான பாடல்களை வித்தியாசமான கோணத்தில் விவரிக்க ஆசை. சமூகம், அறிவியல், இலக்கியம்,… என்று எழுத முயற்சிக்கிறேன். சில விவாதங்களையும் துவக்க ஆசை. சில அறிவிப்புகளும் வரலாம். வேறேதாவது வேணுமானா கேளுங்க, சட்டில இருந்தா அகப்பைல வரும்.

குறிப்புகளைச் சுவாரசியமாக்குவதில் என்னைக் காட்டிலும் என் பெட்டியில் வந்துவிழும் கருத்துகளுக்குத் திறமை அதிகம் என்று எனக்குத் தெரியும். எனவே மனதால் நினைத்து மெய்யால் செயல்படுத்தும் எல்லாவற்றையும் இங்கே வரும் வாசகர்களுக்கு அர்ப்பணித்து (பழியை உங்கள்மீது போட்டு) ஒதுங்கி உட்கார்ந்து கிறிஸ்துமஸ் விடுமுறையை அனுபவிக்க ஆசை.