sony_navi.pngமந்தமாக, கறுப்பு-வெளுப்பில் இருந்துகொண்டிருக்கும் ஒரு கருவியின் மீது சோனி போன்ற புத்திசாலி நிறுவனத்தின் பார்வைபட்டால் என்னவாகும்? உயிர் வரும், வண்ணம் காட்டும், பாட்டுப் பாடும். ஆமாம், இதுவரை வழிமாத்திரமே காட்டிக்கொண்டிருந்த உலகளாவிய இடங்காணும் கருவி இப்பொழுது சோனியின் கைபட்டு புத்திசாலியாக மாறிப்போயிருக்கிறது.

நேற்று ஜப்பானில் வெள்ளோட்டம் விடப்பட்ட சோனியின் நாவி வகை இடங்காணும் கருவிகளின் திறமையைப் படிக்க அற்புதமாக இருக்கிறது. பொதுவாக இடங்காணும் கருவியில் வரைபடங்களில் இருப்பதைப் போல கோடுகள்தான் தெரியும். லெக்ஸஸ் போன்ற கார்களில் பொருத்தப்பட்ட இந்த கருவிகள், காரைக் கிளப்பும்பொழுது போய்ச் சேரவேண்டிய இடத்தைச் சொன்னால் போதும் பாதையைக் காட்டிக்கொண்டே வரும். வலது புறம் திரும்பு, நேராகப் போ என்று வார்த்தகளிலும் வழிகாட்டும். ஆனால் சோனியின் இந்தக் கருவிகள் இவையெல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டன. கிட்டத்தட்ட கணினி விளையாட்டுகளில் வருவதைப்போல கட்டிடங்கள், பாலங்கள் போன்றவற்றின் உருவங்கள் முப்பரிமாணத்தில் தெரிய நாவி வழிகாட்டுகிறது. இடையே உங்களுக்குப் பிடித்தமான பெட்ரோல் கடை, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் தானியங்கி காசாளர் எந்திரம் போன்றவற்றை பல வண்ணங்களில் காட்டுகிறது. இதைத் தவிர இந்தக் கருவியுடன் காரின் பின்புறத்தில் பொருத்தப்படும் காமெராவை இணைக்கமுடியும், இது குறுகலான கார் நிறுத்தவிடங்களில் சிக்கலின்றி போய்ப் புகுந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கும். இன்னும் டிவிடி சினிமா, கணினி விளையாட்டு, பாட்டு போன்று கார் ஓட்டும்பொழுது எதையெல்லாம் தவிர்க்க வேண்டுமோ அவற்றையெல்லாம் இத்துடன் இணைத்துக் கொள்ள முடியும்.

இதில் இருக்கும் கடினவட்டைக் கழற்றி எடுத்துக் கொண்டு வீட்டில் போய் இன்னும் கொஞ்சம் பாடல்களை மாற்றிக் கொண்டு வரமுடியும், அல்லது புது ஊருக்குப் போகும்பொழுது அங்கிருக்கும் கட்டிடங்களைப் பற்றிய அமைப்பை எடுத்துக் கொண்டு போகமுடியும்.

மொத்தத்தில் கார் ஓட்டுவதை ஒரு கணினி விளையாட்டாக மாற்றிவிட்டார்கள். முக்கியமான ஒரு விஷயம்; இது லினக்ஸ் இயக்குதளத்தின் அடிப்படையிலானது. திறந்த ஆணைமூலமான லினக்ஸை பல பதிகணினி (embeded systems) சாதனங்களில் பயன்படுத்த சோனி, ஷார்ப், கென்வுட், பயோனீர், என்ஈஸி போன்ற நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து செயல்படத் தொடங்கியிருக்கின்றன. விரைவில் இன்னும் புத்திசாலி சாதனங்கள் வரக்கூடும்.

ஜப்பானிய சாதனங்களில் லினக்ஸ் பற்றிய என்னுடைய பதிவு

ஜப்பானிய செல்பேசிகளில் லினக்ஸ் பயன்பாடுபற்றிய என்னுடைய பதிவு.