கடந்த சில நாட்களாகத் தமிழ் வலைக்குறிப்பு விக்கியைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இந்த நிலையில் நண்பர்களிடமிருந்து ஒரு சிறு பின்னூட்டம் தேவைப்படுகிறது. Blog என்ற சொல்லுக்கு இணையாகத் தமிழில் நான் ஆரம்பம் தொட்டே வலைக்குறிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்திவருகிறேன். வேறு சிலர்கள் வலைப்பதிவு என்று பயன்படுத்துகிறார்கள். சொல்லப்போனால் வலைக்குறிப்புகள் முதலில் பிரபலமாக்கப்பட்ட பொழுது வலைப்பூக்கள் என்று சொன்னார்கள். இது கவித்துவமாக இருக்கிறது என்றும் முன்வைக்கப்பட்டது. இதன் அபத்தம் குறித்து அப்பொழுது சுட்டிக்காட்டினேன். மாலன், கண்ணன் உட்பட சிலர் வலைப்பூ என்ற வார்த்தையில் மும்முரமாக இருந்தார்கள். இப்பொழுது வலைக்குறிப்பு தொடர்பான தொழில்நுட்பங்களைத் “தமிழிலேயே” விளக்க அமைக்கப்பட்டுவரும் இந்த விக்கியில் எதைப் பயன்படுத்துவது என்று குழப்பம்.

என்னுடைய பழைய குறிப்பையும் அதுதொடர்பான வாதங்களையும் பார்க்க:

என்னைப் பொருத்தவரையில் தொழில்நுட்ப வார்த்தைகளைப் பயன்படுத்தும்பொழுது ஆகக்கூடியவரையில் துல்லியமாக இருக்க முயற்சிப்பது முக்கியம். ஏனென்றால் அது நேற்று, இன்று கடந்து நாளையும் பொருத்தமாக இருக்க வேண்டும். தமிழில் நுட்பங்களை எழுதத் தீவிர முயற்சி எடுப்பவர்களுக்கு இதன் அவசியம் புரியும். நானறிந்தவரை

பதிவு – Register, Record
குறிப்பு – Note, Log

உதாரணமாக, திருமணத்திற்கு நாள் குறிக்கிறோம் (அதன் நிச்சயமற்றதன்மை புரியும்; வைத்திருக்கும் நாள் மாறக்கூடும்). நாம் திருமணத்தை அலுவர் முன்னிலையில் பதிவு செய்கிறோம்(உறுதியானது). அதைப் பதிவு செய்பவர் பதிவாளர். இதேபோல சொத்தைப் பதிவு செய்கிறோம். நாம் ஒருவர் பேசும்பொழுது குறிப்பெடுத்துக் கொள்கிறோம். கிடங்கில் வேலை செய்யும் பணியாளர் மொத்தம் எத்தனை மூட்டை என்று குறித்துக் கொள்கிறார். பின்னர் அது பேரேட்டில் பதியப்படுகிறது.

Weblog or blog என்பதன் வரையறை : நொடியில் தோன்றும் எண்ணத்தை வலையில் போடுவது. அந்த வகையில் அது அதிகமாகச் சிந்தித்துச் செய்யப்படும் “வரலாற்றுப் பதிவு” அல்ல. அது உரத்த “சிந்தனைக் குறிப்புதான்”. இணையத்தில் தீர்க்கமாகப் பதிந்து வைக்க பிற வசதிகள் இருக்கின்றன. உதாரணமாக – வலைப்பக்கங்கள். பதிவு என்ற பயனாக்கத்தில் blog-ன் உடனடித்தன்மை விடுபட்டுப் போகிறது.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் அறிவியல் சோதனைகளைச் செய்யும் பொழுது வரும் எண்களைக் குறித்துக் கொள்வேன். பின்னர் அந்தக் குறிப்புகளை வகைப்படுத்தி, கணக்கீட்டின்பின் பதிவேட்டை ஆசிரியரிடம் சமர்ப்பிப்பேன். என்னிடம் குறிப்பேடு (Observation book, Log Book) பதிவேடு (Record Notebook) என்று இரண்டு இருந்தன. நானறிந்த வகையில் குறிப்புக்கும் பதிவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

இந்த வலைக்குறிப்பு விக்கி அமைப்பதின் பின் நின்று உதவியாக இருக்கும் காசியிடம் இதுபற்றி விவாதித்தபொழுது “பல மாதங்களாகப் பலர் வலைப்பதிவு என்று பயன்படுத்துகிறோம். இப்பொழுது இதை மாற்ற வேண்டாம்” என்று சொல்கிறார். எனக்கு இது போதுமான விளக்கமாகத் தோன்றவில்லை. இதை மறுபரிசீலனை செய்யத் தேவையிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது;

  1. இப்பொழுது தொழில்நுட்பங்களை விளக்க அமைக்கப்படும் விக்கி முழுவதும் தமிழில் அமைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் இதைத் துவக்கமாகப் பயன்படுத்த முடியும்.
  2. பரந்துபட்ட தமிழ் உலகில் நூறுபேர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகவும் மெலிதான வாதம். அதே போல சிலர் வலைக்குறிப்பு என்றும் பயன்படுத்தி வருகிறோம். பயனுக்காகச் சிலர் பயன்படுத்தி வந்தாலும் நாம் இன்னும் இதையெல்லாம் நுட்பமாகத் தமிழில் விளக்கத் தலைப்படவில்லை. இன்னும் புத்தகங்களிலோ, பாடநூல்களிலோ இது நுழையவில்லை.
  3. நான் சொன்னதுபோல நுட்பம் குறித்த வரையறைகள் காலங்கடந்தும் நிலையிலிருக்க வேண்டும். இன்றைய சௌகரியத்திற்காகவோ, மாற்றத்தைச் செய்ய சோம்பேறித்தனத்திற்காகவோ காலம் கடந்த தீர்க்கமான வரையறைகளைத் துறக்கக் கூடாது.
  4. வலைக்குறிப்புதான் தீர்க்கம் என்றில்லை. நான் குறிப்பு என்ற வார்த்தையின் பொருத்ததைச் சொல்லியிருக்கிறேன். நானறிந்த வரையில் பதிவு என்ற வார்த்தையின் பொருத்தத்தை யாரும் சொல்லவில்லை. நான் கேட்கும் பொழுதெல்லாம், மழுப்பலாகவே பதில் கிடைத்திருக்கிறது. சொல்லும் ஒரே பதில் “இப்ப போயி மாத்த வேணாமே”. இதுபோன்ற பழக்கம் செய்வதைத் திருந்தச் செய்ய முயற்சிக்கும் நமக்குத் தேவையா?
  5. இவை இரண்டையும் விடுத்த இன்னும் பொருத்தமான வார்த்தை இருக்கக்கூடும். அப்படி ஏதாவது உங்களுக்குத் தோன்றுகிறதா?

எனவே இது குறித்து உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். இதை ஒரு வாக்கெடுப்பாகக் கூட நடத்த முடியும். ஆனால் வலையில் நடத்தப்படும் வாக்கெடுப்புகளில் எனக்கு நம்பிக்கையில்லை. எனவே இதை ஒரு விவாதமாகவே முன்வைக்கிறேன். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.