<%image(1/20041223-varun_snow.png|512|384|Varun)%>

இந்த வருடம் பனிக்காலம் ஆரம்பமே பயங்கரமாக இருக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்னால் வெப்பநிலை (சீ.. இந்த ஊரில் குளிர்நிலை என்றுதான் சொல்ல வேண்டும்) -24 செல்சியஸாக இருந்தது, அன்றைக்கு காற்றின் பங்கையும் கணக்கெடுத்துக் கொண்டால் -34 செல்ஸியஸ் (என்னுடைய அமெரிக்க நண்பர்களுக்கு இந்த செஸ்சியஸ் புரிவது கஷ்டமாக இருக்கலாம், மன்னிக்கவும். இந்த பாரன்ஹீட் எப்பொழுதுமே எனக்குச் சிக்கல்தான், இது செல்ஸியஸைப் போல எளிதாக பூச்சியத்தில் உறைந்து நூறில் ஆவியாகிப் போவதில்லை). இது கடந்த வருடம் உச்சகட்ட குளிர் நாளில் வந்ததைவிட ஒரு செல்சியஸ்தான் குறைவு. பின்னர் நேற்று முன்தினம் இது பைத்தியக்காரத்தனமாக +6 செல்ஸியஸ்க்கு உயர்ந்தது. (நம்ம ஊரில் இரண்டு நாளில் 40 செல்ஸியஸ் மாறுவதைக் கண்டிருக்கிறோமா?), இது கிட்டத்தட்ட உறைபெட்டியிலிருந்து எடுத்து உலையில் போட்டதைப் போலத்தான்.

இன்று காலை கண்விழித்துப் பார்க்க வீட்டிற்கு முன்னால் பனி கொட்டிக் கிடக்கிறது. நான் வசிக்கும் தெரு ஒரு தனி வளைவு, எனவே இதில் தனியார் வாகனங்கள் வருவதில்லை. தனியார் வாகனத்தைப் போலவே நகராட்சியின் பனிதள்ளு வண்டிகளும் வருவதில்லை. நாளின் பெரும்பகுதி வீட்டைத் துப்புரவு செய்வதிலேயே கழிந்துவிட்டது. என்னுடைய வீட்டின் பனியை ஒதுக்கினாலும், தெருவில் முழங்காலளவு பனி இருந்ததால் தெருவைவிட்டு வெளியே போகமுடியவில்லை.

எது என்னவானால் என்ன, பிள்ளைகளுக்குக் கொண்டாட்டந்தான்.

<%image(1/20041223-vik_var_snow.png|512|384|Vikram Varun)%>

மதியம் வெப்பநிலை(?) பூச்சியத்திற்கு மேலே உயரத் தொடங்க, பெய்துகொண்டிருந்த பனி, பனிமழையாக மாறிவிட்டது. பனி மழையைப் போன்ற கொடுமை எதுவும் கிடையாது. நூற்றுக்கணக்கான மெல்லிய ஊசிகளைக் கொண்டு உடலில் குத்துவதைப் போல இருக்கும். உடல்முழுவதும் மூடியிருந்தாலும், முகத்தில் இதன் வலி தாளமுடியாது. பனிக்குப் பிறகு பெய்யும் மழையில் இன்னொரு பெரிய உபாதையும் உண்டு. தரைமுழுவதும் மொழுகிவிட்டதைப் போல பளபளவென்று மாறிப்போகும். இதனால் கார் ஓட்டுவது இன்னும் சிரமமாகும். நாம் ஒருபக்கம் திருப்ப கார் தன்வழியே போய்க்கொண்டிருக்கும். இதுதான் இன்னும் மூன்று மாதங்களுக்கு(காவது) இருக்கப் போகிறது. ஆனால் பனியில் வெளியே சென்று விளையாடுவது ஒரு பெரிய சுகம்தான். குழந்தைகளுடன் குழந்தையாக சட்டிவண்டியில் உட்கார்ந்து சறுக்குவதும், சரிவுகளில் உருளுவதும் ஒருவித தனிசுகம்.

பனியில் பலவகையுண்டு என்பது இந்த ஊருக்கு வந்துதான் தெரிந்தது. Snow, Snow Flakes, Snow Crystals, Rime, Graupel, Hail, Slush, Sleet, Powder, Crust, Ice. இன்னும் எங்கள் ஊரில் தன்ட்ரப் பிரதேசத்தில் வாழும் இன்னூயிட் மக்களிடையே காற்றால் அடித்துச் செல்லப்படும் பனி, காற்றில் இறங்கும் பனி இதற்கெல்லாம் தனிப்பெயர் உண்டாம். கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் தமிழர்கள் வாழும் இந்த ஊரில் இதைப் பற்றியெல்லாம் எழுத விரிவாகத் தமிழ் வார்த்தை கிடையாது. இதுவும் தமிழன் வசிக்கும் இடம்தான் என்றானபின் நம் மொழியில் இதையெல்லாம் எடுத்தாள்வதைத் தவிர வேறுவழியில்லை. இதுக்காவது நாம் வேர்ச்சொல்லைப் பதிற்றுப்பத்தில் தேடாமல் இருக்கவேண்டும்.