சேவைப்பொதி என்றால் எதோ இடியாப்பம் சமாச்சாரம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இது “ஆனாலும் கந்தை அதிலுமோர் ஆயிரங் கண்” என்று இரட்டைப் புலவர்கள் பாடியதைப் போன்ற துளையுள்ள மைக்ரோஸாப்ட் இயக்குதளங்களுக்கு அவ்வப்பொழுது பொத்தல்களை அடைக்க மைக்ரோஸாப்ட் தரும் ஒட்டுகளை (Patches) ஒன்றாகப் பொதியாக்கித் தருவதற்குப் பெயர்தான் சேவைப்பொதி (Service Pack). நேற்று மைக்ரோஸாப்ட் தன்னுடைய வின்டோஸ் எக்ஸ்பி இயக்கு தளத்திற்கு இரண்டாவது சேவைப்பொதியை வெளியிட்டிருக்கிறது. பல நாட்களாக (மாதங்களாக) இதோ வரப்போகிறது, அதோ.. என்று போக்கு காட்டிக்கொண்டிருந்த சேபொ-2 ஒரு வழியாக வந்திருக்கிறது. இதன் அளவு 250 மெகாபைட். (விண்டோஸ் 98 இயக்குதளத்தின் மொத்த அளவைவிட அதிகம்). மைக்ரோஸாப்ட் இந்தப் பொதியில் முக்கியமாக எந்த முன்னேற்ற சாதனங்களும் இல்லையென்றும், இயக்குதளத்தில் இருக்கும் பொத்தல்களை அடைப்பதுதான் இதன் முக்கிய வேலை என்று அறிவித்திருக்கிறது. அப்படியென்றால் 250 மெகாபைட் அளவிற்குத் தேவையான பொத்தல்கள் இருந்திருக்கின்றன என்றுதானே அர்த்தம்! (இது எல்லா ஒட்டைகளையும் அடைக்கும் என்று நம்பவேண்டாம், என்னுடைய கணிப்பில் இது பாதி ஓட்டைகளை அடைக்கும். கொஞ்சம் திறப்பு இருந்தாலும் பாதுகாப்பு அம்பேல்தானே, எனவே தலைவலிகள் உத்தரவாதமாகத் தொடரும்).

இந்த முறை மைக்ரோஸாப்ட் சேபொ-2 வெளியீட்டில் சில புதுமைகளைச் செய்திருக்கிறது. திறந்துவிடப்பட்ட நேற்று இது முக்கியமான நண்பர்களுக்கும் (OEM Partners), எம்எஸ்என் இணையச் சேவையை வாங்கியிருப்பவர்களுக்கும்தான் என்று சொல்லிவிட்டார்கள். அதாவது மற்றவர்கள் எல்லோரும் காத்துக்கிடக்க வேண்டும். பின் எனக்கு எப்படிக் கிடைத்தது என்கிறீர்களா? அதுதான் நேரடிப்பகிர்வு வலைகளின் (P2P Networks) அற்புதம்.

வெளியான சில மணிகளுக்குள்ளே இது நேரடி பகிர்வுவலைகளில் ஏற்றப்பட்டுவிட்டது. பிட் டாரண்ட் (Bit Torrent) என்று சொல்லப்படும் சிறு கருவியைப் பயன்படுத்த இது அடுத்த பத்து நிமிடங்களில் என் கணினியில். (இது எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி இன்னொருமுறை விரிவாக எழுத முயற்சிக்கிறேன்). சத்தியமாக மைக்ரோஸாப்ட்டே நேரடியாக இதை எடுத்துக் கொள்ளச் சொல்லியிருந்தால்கூட 250 மெகாபைட் பொதியை அரைமணிநேரத்தில் (தோராயமாக ஒரு மெகாபைட் இரண்டு நொடிகளில் என்ற வேகத்தில் இறங்கியது) இறக்க முடியாது. இதற்குக் காரணம், என்னைப் போன்று இறக்கிக் கொண்டிருந்த பலரின் கணினிகளும் எனக்கு வழங்கிக்கொண்டிருந்தன (என் கணினியும் இறக்கிக் கொண்டிருந்த அதே சமயத்தில் வழங்கு சேவையையும் செய்துகொண்டிருந்தது). இது நேரடி பகிர்வு வலைகளில் மாத்திரமே சாத்தியம். (இப்படியான உன்னத தொழில்நுட்பத்தை வழக்கம்போல அமெரிக்க பாடல்பதிவுக் கலைஞர்கள் குழுமமும், ஹாலிவுட்டும் சேர்ந்து சட்டவிரோதம் என்று அறிவிக்க வற்புறுத்த்திக் கொண்டிருக்கின்றன).

இன்னொரு வெளியீட்டுப் புதுமை. மைக்ரோஸாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி சே.பொ-1 வெளியிடும்பொழுது உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருப்பது சட்டபூர்வமானதா என்று சோதித்துவிட்டே அனுமதித்தது. (இது சட்டவிரோதமான நகல்கள் மேலதிக பயன்களை அனுபவிப்பதைத் தடுக்கும் முயற்சி). ஆனால் இந்த முறை உங்களிடம் திருட்டு நகல் இருந்தாலும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தாராளமாக அனுமதித்திருக்கிறது. காரணம், இந்த முறை பெரும்பாலும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள்தான் சேவைப்பொதியில் இருக்கின்றன. அதிகபேர் பாதுகாப்பாக இருந்தால், வைரஸ்களும், எரிதங்களும் (காசு கொடுத்து வாங்கியவர்களுக்கு) பரவுவது குறையும்தானே.

மற்றபடி இதை நிறுவிப்பார்த்ததில் எந்தவிதமான விசேஷ முன்னேற்றங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. முக்கியமாக தீயரண் நிர்வாகம் சேர்க்கப்பட்டிருக்கிறது. பலரும் அகலப்பாட்டை இணைய இணைப்பில் நாளெல்லாம் கணினிகளைச் சும்மா இணைத்துவைத்திருக்கையில் தீயரண் வசதி மிகவும் முக்கியமானது. வைரஸ் தடுப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் அதற்காக எந்தக் கருவியும் இல்லை. என்னுடைய கணினியைப் பரிசோதனை செய்துவிட்டு “நீங்கள் புத்தம்புதிய ஸிமான்டெக் (நார்ட்டன்) ஆண்டிவைரஸ் வைத்திருக்கிறீர்கள். சந்தோஷம்” என்று முதுகில் தட்டிக் கொடுத்ததுடன் சரி.

ஆனால், கணினி பாதுகாப்பிற்காக மைக்ரோஸாப்ட் செய்திருக்கும் இந்த முயற்சியை மனம் திறந்து பாராட்டத்தான் வேண்டும் (காலதாமதமாக நடந்திருந்தால்கூட).