என்னுடைய மூன்றாவது வலை-1 குறித்து இந்த வார வலைப்பூவில் ஐகரஸ் பிரகாஷ் தன்னுடைய கருத்தை எழுதியிருக்கிறார். பின்தொடர்தல் (trackback) போன்ற வலைக்குறிப்பு சாத்தியங்களை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை எனவே, அங்கே எழுதியதற்கு இங்கே கருத்து எழுத வேண்டியிருக்கிறது.
பிரகாஷ் சொல்லியது;

இது போன்ற ஒரு சக்தி மிகுந்த ஊடகத்தை, ” எண்ணங்களைப் பதிவு ” செய்வது என்ற ஒரு குறுகிய நோக்கத்தில் கட்டிப் போடுதல் தகுமா? எண்ணங்களைப் பதிவு செய்தல் என்பது தவறான ஒன்றல்ல. ஆனால், இந்த வலைப்பதிவுகளின் முக்கியப் பயனாக அதைக் குறிப்பிடுவது தான் சற்று நெருடலாக இருக்கிறது.

. . .

(இதனைப்பற்றிய செய்தி ஒன்றைப் பார்த்தேன் ). வலைப்பதிவுகளின் சாத்தியங்கள் பற்றி, அவர் எழுதியிருக்கும் கட்டுரையைப்பார்த்ததும், நாம் எப்போது இது போல தமிழில் செய்யப் போகிறோம் என்ற ஏக்கம் பிறந்தது. ஆனால், blogs are for personal use என்பதாகத்தான் வெங்கட் கருதுகிறாரென்று நினைக்கிற போது, அது எனக்கு சற்று நெருடலாகத் தான் இருக்கிறது.

நான் சொன்னது,

அப்படியிருக்க பல பேர் சேர்ந்து வலைக்குறிப்பது, ஒரு பொதுவிஷயத்திற்கு வலைக்குறிப்பைப் பயன்படுத்துவது, இதெல்லாம் வலைக்குறிப்புகள் இல்லையா? பதில் பெரும்பாலும் இல்லை என்பதுதான். ஆனாலும் ஒரு சில குழுக்கள் இதைத் திறம்படச் செய்துவருகின்றன.

சொல்லப்போவது எல்லாம் இதிலிருந்து சற்றும் விலகப்போவதில்லை. என்னுடைய கட்டுரையிலேயே நான் பலர் ஒன்று சேர்ந்து தேரிழுக்கும் விஷயத்திற்கு வேறு பொருத்தமான கருவிகள் இருப்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
ராஜேஷ் ஜெயின் கூட என்ன சொல்கிறார் என்று பாருங்கள்;

While websites that are updated regularly are the starting point, CEO weblogs can amplify the message. A CEO weblog helps build direct communication channels to prospective partners and helps the SME to distinguish itself from others, based on its knowledge of the industry in which it is operating.

அதாவது, அது நிர்வாக முதல்வரின் தனிப்பட்ட கருத்தோட்டம்தான். இந்த இடத்தில் நிர்வாகி தொழிலாளர்களுடன் ஊடாடலுக்கோ, தன்னுடைய இணை நிறுவனங்களுக்கு தன் மனவோட்டங்களைக் காட்டவோ வலைக்குறிப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நாலு நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து எழுதுவதற்குப் பெயர் வலைக்குறிப்பு இல்லை. அதன் பெயர், மன்றம். மன்றத்தில் பலர் பல உபதலைப்புகளில் எழுதலாம், ஆனால் மன்றத்திற்கென பொதுவாக ஒரு இலக்கு உண்டு. உதாரணமாக, tamillinux.org இணையத்தில் நிறுவப்பட்டிருக்கும் Forum, தமிழில் லினக்ஸ் பயன்பாடுகள், பயனர் உதவிகள், தேவைகளைக் கேட்டல், நுட்பங்களைப் பகிர்ந்தல் என்று பல உபதலைப்புகளில் எழுதப்படும், இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு மட்டறுத்துனர் இருப்பார். ஆனால் Forum முழுமைக்குமான அடிக்கருத்து தமிழ்-லினக்ஸ். இங்கே தக்காளி விலைபற்றிய விபரங்களை எதிர்பார்க்க முடியாது.
அதேபோல அந்த நிர்வாகி வலைக்குறித்ததையெல்லாம் வைத்துக்கொண்டு தன்னுடைய வர்த்தகத்தை வழிநடத்திவிட முடியாது. உண்மைதான், நிர்வாகி “இன்றைக்கு க்ஷ நிறுவனத்தை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆசாமிகள் மசிமாட்டேன் என்கிறார்கள். வேலைக்கு நிறைய ஆட்களை வைத்திருக்கும் அவர்களை வாங்கலாமா என்று முடிவு செய்யவில்லை. ஆனால் அவர்கள் தொழில்நுட்பம் முன்னேறியது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்” என்று எழுதிவிட்டால், அடிமட்ட ஊழியருக்கு அடுத்த இரண்டு மாதத்தில் ஆட்குறைப்புக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பது தெரிந்துபோகும். ஆனால் அதைத் தாண்டி ஆட்குறைப்பு நடத்தும்பொழுது சம்பந்தப்பட்ட ஊழியரை தன்னுடைய பொந்துக்கு வரச்சொல்லி கைகுலுக்கி அனுப்புவதுதான் உத்தமம். ஆசாமி தனக்கு வேலைபோனதை வலைக்குறிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ரீதியில் வலைக்குறிக்க முற்படக்கூடாது.
* * *
வலைக்குறிப்புகளைச் சமுதாய முன்னேற்றத்திற்கு அதிகம் பயன்படுத்தமுடியாது? ஏன். பொதுநோக்கு கருதி ஒன்றைச் செய்தால் அதில் முக்கியமான வசதி தகவல் எளிதில் அள்ளி எடுக்க ஏற்றதாக இருக்க வேண்டும். அதாவது மதுரைத் திட்டத்தில் போய்த் தேடினால் உடனடியாக உங்களுக்கு ஆசாரக்கோவை துள்ளி விழவேண்டும். ஆனால் என்னுடைய வலைக்குறிப்பில் போய் நான் மூன்றுவண்ண டிஜிட்டல் காமெராவைப் பற்றி என்ன எழுதினேன் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுப் பாருங்கள். அதன் சிரமம் புரியும். இத்தனைக்கும் என்னுடைய வலைக்குறிப்பில் இன்றைக்கு வலைக்குறிப்பின் அணைத்துத் தொழில்நுட்பச் சாத்தியங்களும் உண்டு (செய்தியோடை, பின்தொடர்தல், மாதவாரி ஆவணம், தலைப்பு-ரீதியில் தகவல் அமைப்பு, உள்ளுக்குள்ளேயே இருக்கும் தேடல் இயந்திரம்…). நான் இதுவரை கிட்டத்தட்ட 225 இடுகைகளைத்தான் எழுதியிருக்கிறேன். கிட்டத்தட்ட 500 பின்னூட்டங்கள் மாத்திரமே. இதே, என்னளவு வீரியமுள்ள பத்துபேர் சேர்ந்து செய்தால் அங்கே இருக்கும் தகவல் எந்த அளவில் பெருகியோடும். அது மாத்திரமல்லாது, வலைக்குறிப்பு என்பது அதையும் தாண்டி விரிவது; பின்தொடர்தல் மூலம் பல வலைகள் ஒன்றுடன் ஒன்றாக இணையும். அதில் முகிழ்ந்து எடுக்க முயன்றால் ஆசுவாசம்தான் மிஞ்சும்.
ஏன்? வலைக்குறிப்பின் பலம் என்னவோ, அதேதான் பலவீனமும்கூட. அதாவது வலைக்குறிப்பேற்றம் செய்ய எந்தவிதமான தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை. (உங்களில் யாராவது w.bloggar நிரலியைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? அது என்னுடைய பாட்டிக்குக் கிடைத்திருந்தால் பாவக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், தாமரைக்கிழங்கு, மனத்தக்காளி, சுண்டைக்காய், குமுடிக்காய் என்று “தினம் ஒரு வத்தல்” (தகவல்) எழுதி இடதுகையாலேயே வலையேற்றிவிடுவாள். வலைக்குறிப்பு எழுதுவதற்கு மதியம் வரும் மெகா தொடர்களை இயக்குவதற்கு மேல் அதிக தொழில்நுட்ப அறிவு தேவையில்லை). அப்படி எழுதிக் குவிக்கப்படும் குப்பையில் தகவல்கள் தேடுவதற்கு ஜெயலலிதா அமைச்சரவையில் மந்திரியாய் இருப்பதைவிட அதிகப் பொறுமை தேவை. எனவே, பொதுநலத் திட்டம் வலைக்குறித்து முன்னேறாது.
எதேச்சையான எண்ணங்களைக் குறிப்பது என்று சொன்னேன். அதற்குப் பொருள் தனிப்பட்ட எண்ணங்கள் மாத்திரம் என்பதில்லை. நான் ஏற்கனவே சொன்னதுபோல் ஒரே அலைநீளத்தில் உள்ள என்னுடைய நண்பர்களிடம் நான் கால-வெளி எல்லைகளைக் கடந்து ஊடாடுவது. இந்த இடத்தில் எந்த விஷயத்தை நான் பகிர்ந்துகொள்கிறேன் என்பது என் சட்டியில் இருக்கும் சரக்கைப் பொருத்தது. எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு எழுதித்தள்ளுவதில்லை. அதற்கு ஒரு இலக்கு வரையறுத்துக் கொள்கிறேன்; தலைப்புகளை இட்டு, அவற்றில் எழுத முற்படுகிறேன். என்னிடம் தொழில்நுட்பத்தைப் பற்றியும், இலக்கியம் குறித்தும், ஜப்பானை முன்வைத்தும் பொதுவில் பேச சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை என் சக நண்பர்களிடம் உரக்கக் கூறுகிறேன். அலைநீளமுள்ள நண்பர்கள் அவர்களது ஒத்திசைவையும், மறுதலிப்பையும் பின்னூட்டங்களாக இடுகிறார்கள். சில நேரங்களில் என்னுடைய அடுத்த வலைக்குறிப்பு என் நண்பனிடமிருந்து கிடைக்கும் பின்னூட்டத்தால் வழிநடத்திச் செல்லப்படுகிறது. வேறு சில சந்தர்ப்பங்களில் “பத்ரி எழுதியிருக்கிறார், அதைப்பற்றி…” ரீதியில் இரண்டு நாட்களுக்கு பத்ரியின் எண்ணவோட்டங்களால் என்னுடைய குறிப்பு முற்செலுத்தப்படுகிறது. இப்படி வரையறுத்துக்கொண்ட தலைப்புகளுக்குள்ளேயே ஒருவித இயற்கையான சீரோட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்னுடைய வலைக்குறிப்பு. பெரும்பாலான சமயங்களில் எழுதப்பட்ட சிலநாட்களுக்கு என்னுடைய வலையண்மையில் சலனங்களை ஏற்படுத்திவிட்டு ஓய்ந்துபோகிறது. அவ்வளவு மாத்திரமே. அதேபோல எனக்கு வரையறுத்துக்கொண்ட சில தலைப்புகளுக்கு வெளியே நிகழ்வுகள் வரும்பொழுது அவை பெரும்பாலும் என் வலைக்குறிப்பில் இடம்பெறாமலேயே போய்விடுகின்றன (த்ரிஷாவின் நாய்க்குட்டி, பெப்ஸி உமாவின் குடும்பச் சிக்கல் மருத்துவம், இங்கே கனடாவில் Avril Lavigne வெளியிட்ட புது ஆல்பம், …).
இவற்றிலிருந்து காலம் கடந்தும் படிக்கப்பட வேண்டும் என்று நான் கருதுபவையெல்லாம், உருவியெடுக்கப்பட்டு, உருவேற்றப்பட்டு இணைய இதழ்களுக்குப் போகின்றன. காரணம் வலைக்குறிப்பின் நிரந்தரமின்மைய நான் உணர்வது. அதை திண்ணையில் போட்டால் வேறு விதமான வாசகர்களால் படிக்கப்படும் என்ற நம்பிக்கை; அவர்களையும் சேர வேண்டும் என்ற விருப்பம். ஒரு சில சமயங்களில் என்னுடைய வலைக்குறிப்பைப் பெயர்த்தெடுத்து நண்பர்கள் இந்தியாவிலிருந்து வரும் சஞ்சிகைகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள் (அதாவது என்னுடைய வலைக்குறிப்பின் வீச்சைக்கடந்து வெளியேயும் ஒரு குறிப்பிட்ட விஷயம் படிக்கப்படவேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது). ஆனால் நான் சொன்னதுபோல் இவையெல்லாமே, தன்னிச்சையாக organic-ஆக நிகழும் செயல்கள். ஆனால் இந்திய சஞ்சிகைக்குப் போவதற்காக மாத்திரமே நான் ஒரு வலைக்குறிப்பை நடத்த முற்படுவது அபத்தம்.
இந்த இடத்தில் “I called my sweetie tonight, poor guy he slogs for 15 hours in the valley. He said he is counting on the days to join me. cho-chweet yaa! I said, what to do? just a few days daa kanna!” ரீதியில் எழுதப்படுவதையெல்லாம் நான் வலைக்குறிப்பாகக் கருதுகிறேன் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இன்னும் சில பிரஹஸ்பதிகள், “Today is wednesday, It is very hot here, last week it was windy” – என்று பஞ்சாங்கக் கணக்கு எழுதுவதையும் தவிர்க்க வேண்டும்.
* * *
அப்படியென்றால் பொதுநலத்திட்டங்கள் அதோ கதிதானா? இல்லை மூன்றாவது வலையில் அவற்றுக்கு இன்னும் சிறப்பான வழிகள் இருக்கின்றன. அதையெல்லாம் வரும் பகுதிகளில் ஆராய உத்தேசம். ஆனால் அதற்கு முன்னால் வலைக்குறிப்பில் இருக்கும் எல்லா சாத்தியங்களையும் பார்த்துவிடுவோம்.