முடிவுமல்ல, ஆரம்பமுமல்ல

முடிவல்ல ஆரம்பம் என்று தலைப்பிட்டு நண்பர் மாலன் அவருடைய தேர்தல் வலைக்குறிப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் தாராளமயமாக்கும் காங்கிரஸ்க்குக் கம்யூனிஸ்ட்களைக் கொண்டு கால்கட்டுப் போட்டு இந்தியர்கள் ஒரு சித்தாந்தப் பரிசோதனையில் இறங்கியிருப்பதாக எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையின் மீதான என்னுடைய எண்ணங்கள் இதோ;

* * *

அன்புள்ள மாலன்

இந்திய மக்கள் ஏதோ கோட்பாடுகளின் அடிப்படையிலான சோதனையில், காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கால்கட்டைப் போட்டு இறங்கியிருப்பதைப் போன்ற தோற்றமளிக்கும் உங்கள் கட்டுரை வியப்பளிக்கிறது. உங்களுடைய ஊகங்களெல்லாம் மிகவும் சரிதான். நீங்கள் சொல்லியிருப்பதைப்போல கூர்ந்து அவதானிக்கும் எவரும் இதே முடிவுக்குத்தான் வந்திருப்பார்கள். ஆனால் அயல்நாட்டில் உட்கார்ந்துகொண்டு ஊடகங்களின் வாயிலாகவே இந்தியாவை உருவகிக்கும் என்னைப்போன்ற கையாலாகாதவர்களுக்கு இது மிகவும் சிரமம்தான். நீங்களே சொல்லியிருப்பதைப் போல நாயுடுவையும், வாஜ்பேயியையும் பற்றிய மிகவும் பொய்யான ஒரு பிம்பத்தைத்தான் அவை எம்மீது சுமத்தின. இருந்தும் இந்தத் தேர்தல் முடிவு எனக்கும் உள்ளுணர்வின் அடிப்படையில் தோன்றியதுதான். இனி முதல் வரியின் விளக்கத்திற்கு; இந்தியக் கம்யூனிஸ்டுகள் ஒன்றும் மார்க்ஸின், மாவோவின் சித்தாந்தங்களின் ஊறி அதற்காக உயிர்கொடுக்கும் உத்தமர்கள் அல்லர். (அப்படி ஒருவரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும் மறைந்துபோன மார்க்ஸிஸ்ட் திரு. ராமமூர்த்தி). தேர்தல் பண்டிட் சுர்ஜித் போன்றவர்களை வைத்துக்கொண்டு மார்க்ஸிஸ்ட் சோதனையில் இந்தியமக்கள் ஈடுபட்டால்... சிரிப்புத்தான் வருகிறது. அடிப்படையில் இந்தியாவில் கடந்த பத்துவருடங்களாகவும், இனி வரும் பத்து வருடங்களிலும் தராளமயமாக்கல்தான் ஆட்சி நடத்தும். வரும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு இது மிகவும் சுலபம். பழியெல்லாம் அமைச்சகம் அமைத்து ஒழித்துக்கட்டிய பா.ஜ.க மீது போட்டுவிட்டு அதே வழியில் தைரியமாகச் செல்லலாம். அதுதான் நடக்கப்போகிறது. எந்த கம்யூனிஸ்ட்களாலும் மன்மோஹன் - சிதம்பரம் விளைவின் வேகத்தைக் குறைக்க முடியாது; நிறுத்துவதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

வாஜ்பேயிக்கு ஒரு நல்ல மனிதர் பிம்பம் இருப்பது உண்மைதான். அவரும் அதற்குத் தகுதியானவர்தான். இப்படிப்பட்டவர்களின் இருப்புதான் இந்திய அரசியலின்மீது நம்பிக்கையளிக்கிறது. அதே நேரத்தில் திறமையான நிர்வாகமும், உண்மையான அக்கறையும், கறைபடாத கரங்களையும் கொண்ட மன்மோஹன், சிதம்பரம், ரங்கராஜன் குமாரமங்கலம், முரசொலி மாறன், கபில் சிபல், பிரமோத் மஹாஜன் (சொன்ன தகுதிகளின் கலப்பு விகிதம் இவர்களுக்குள்ளே மாறுபடும்) இவர்கள்தான் தாராளமயமாக்கப்பட்ட "இந்தியா இன்க்" நிறுவனத்தை வழிநடத்தும் மேளாலர்கள். இவர்கள்தான் நவீன இந்தியாவின் உண்மையான முகங்கள். இந்த இனமும் பெருகி வளர நாம் விழைய வேண்டும்.

முதலில் திருமதி சோனியாவைப் பிரதமாராக முன்னிருத்தியபொழுது எனக்கு அருவருப்பு வந்தது உண்மை. அந்த நிலையை என்னால் மனதில் உருவகித்துப் பார்க்கமுடியாமலே இருந்தது. ஆனால் ஐந்துவருட இடைவெளிக்குப் பிறகு, knee-jerk reaction ஆக இல்லாமல், சோனியா தேர்ந்தெடுக்கப்பட்டால் - அப்படித்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே. ஐந்து வருடங்களாகத் தோற்றுப்போன ஒரு கட்சியை - வளர்ந்துவரும் பிம்பம் கொண்ட பா.ஜ வுக்கு எதிராக, மாமனிதர் அடல்பிஹாரி வாஜ்பேயிக்கு எதிராக, முரளி மனோஹர் ஜோஷி போன்ற அராஜகக் கும்பலுக்கு எதிராக - நிமிர்ந்து நின்று வெற்றிக்கு வளர்த்தெடுத்திருக்கிறார் என்றால், அவரையும் ஒருமுறை சோதித்துப் பார்ப்பதில் தவறேயில்லை. அதுவும் நான் சொன்ன கடந்த பத்தாண்டுகள்-வரும் பத்தாண்டுகள் போக்கில் (இதை நான் மன்மோஹன் - சிதம்பரம் விளைவு என்று பெயரிடுகிறேன்), எந்தவித மாறுபாடும் இருக்காது என்பதால், இதையும்தான் பார்ப்போமே.

* * *

எந்தவிதமான சித்தாந்த ரீதியாகவும் நம் மக்கள் வாக்களித்துவிடவில்லை. எல்லாம் எரிச்சல் விளைவுதான். அதிலும் தமிழகம் கேவலமாகத்தான் இருக்கிறது. - ஐந்துவருடங்களுக்கு ஒருமுறை அலைபாய்ந்துகொண்டு சீறியெழும் தமிழர்களின் ஜனநாயக முதிர்ச்சியின்மை எனக்கு வெறுப்பைத் தருகிறது. இடது கை சேறை முகத்தில் பூசிக்கொள்வது, ஐந்து வருடங்களில் அது காய்ந்துபோக, உதிர்த்துவிட்டு வலதுகை மண்ணைக் கண்களில் கொட்டிக் கொள்வது என்று கேவலமாக இருக்கிறது நம் ஜனநாயகம். அகந்தையும், ஆணவமும் கொண்ட இரண்டே இரண்டு கேவலமான அரசியல்வாதிகளுக்கு மாற்றை கடந்த இருபது வருடங்களாக வளர்த்தெடுக்க வக்கில்லாமல் இருக்கும் நம்மைப் பார்த்தால் கோபம் வருகிறது.

தமிழகத்தைப் போலவேதான் ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் நடந்தேறியிருக்கிறது. இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் ஐம்பதாண்டு மத்திய போக்கை, உத்திரப்பிரதேசமும், ஹரியானாவும் நிர்ணயித்துக் கொண்டிருந்தன. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த உரிமை தென்னகத்திற்குக் கிடைத்திருக்கிறது (கேரளத்தைத் தவிர; ஒரு வகையில் பார்த்தால் மலையாளிக்களுக்கு மத்திய அரசைப்பற்றிய எந்தவிதமான ஆர்வமும் இல்லாததுபோலத்தான் தோன்றுகிறது). இந்தத் தேர்தலிலும் நாயுடுவும், ஜெயலலிதாவும் வாஜ்பேயிக்குக் குழிபறித்திருக்கிறார்கள். இந்த நிலையில் சற்றும் ஜனநாயக் முதிர்ச்சியில்லாமல் தமிழர்களும் தெலுகர்களும் ஒவ்வொரு தேர்தலிலும் மரத்திற்கு மரம் தாவுவது மத்தியில் அமையும் அரசாங்கத்தையும் நிர்ணயிக்கிறது என்பதால் இந்த முதிர்ச்சியின்மையின் விளைவு அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது.

0 Replies to “முடிவுமல்ல, ஆரம்பமுமல்ல”

  1. I think you hit it right on the head. Good analysis. To even ascribe a "collective thinking" to diverse groups of fractured electorate is plain wrong.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *