இன்றைக்கு வெளியான தகவலின்படி அமெரிக்காவில் மாசாசூஸெட்ஸ் மாநிலம் அதன் கூட்டாளிகளான பிற 7 மாநிலங்களுடன் அரசாங்க நிர்வாகத்திற்காகத் தாங்கள் தயாரிக்கும்/மாற்றியமைக்கவிருக்கும் திறந்த ஆணைமூல நிரலிகளைப் பகிர்ந்து கொள்வதாக அறிவித்திருக்கிறது. கிட்டத்தட்ட SourceForge.net மாதிரியில் அமைக்கப்படவிருக்கும் இந்த திறந்த ஆணைமூலப்பகிர்வு திட்டதில் கையப்ப்பமிடும் பிற அரசமைப்புகள் தங்களுக்குள்ளே கணினி பயன்பாடுகளைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

உதாரணமாக, தமிழகம் வாக்காளர் கணக்கெடுக்க ஒரு புதிய நிரலியைத் தயாரித்தால், கர்நாடகம் அந்த நிரலியை வாங்கிப் பயன்படுத்தமுடியும், அதை வைத்துக்கொண்டு அட்டவணையிலிருந்து தனி நபர்களுக்கு அடையாள அட்டை செய்யும் நிரலியை கர்நாடகம் தயாரித்தால், தமிழகம் அதைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். இப்படி அரசாஙகங்கள் ஒருவருக்குள்ளே ஒருவர் பகிர்ந்துகொள்வதால் மக்கள் வரிப்பணம் விரயமாகாமல் தடுக்க முடியும். மிக அருமையான திட்டம்.

ஆனால் மாசாசூஸெட்ஸின் இப்பொழுதைய அறிவிப்பில் சில குறைபாடுகள் இருக்கின்றன (ஆணைமூலங்களைப் பெறுபவர்கள் அதை வைத்துக்கொண்டு பணம் ஈட்டக்கூடாது என்று சொல்கிறார்கள், இதில் வரி வசூலிப்பது பணம் ஈட்டுவதாக வருமா என்று தெரியவில்லை). இது போன்ற ஆரம்பச் சிக்கல்களை எல்லாம் நடைமுறைக்கு வந்தபின்தான் களையமுடியும்.

இதுபோன்ற ஒரு திட்டத்தை இந்தியாவில் மாநிலங்கள் முன்னெடுத்தால் நன்றாக இருக்கும்.