ஒரு வகையில் இந்தப் பாடலைக் கொண்டு துவக்குவது Cliche ஆக இருக்கலாம். ஆனால் அதைப் போன்ற தயக்கங்களை எல்லாம் தாண்டி இதுதான் நான் அறிமுகப்படுத்தும் முதல்பாடல்.

எனக்குப் பிடித்த இசை என்று அறிமுகப்படுத்தும் பொழுது – நூறு சதவீதம் எனக்குப் பிடித்தது இப்படித்தான் இருக்கும் என்று காட்ட வேண்டுமல்லவா? பாடலைக் கேளுங்கள்

மடை திறந்து
இசை: இளையராஜா,
பாடியவர் – எஸ்.பி. பாலசுப்பிரமணியம்,
பாடலாசிரியர் – வாலி
படம் – நிழல்கள் (1980)

என் அபிமான இசையமைப்பாளரின் இசையில் என் மனம் கவர்ந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியது. என்னைப் பொருத்தவரை தமிழ்த் திரையிசை உலகில் ஒரு மைல்கல் இந்தப் பாடல். துவக்கத்தில் வரும் அந்த வயலின்கள், கிட்டார், ட்ரம்ஸ் அந்த நாட்களில் தமிழ் அறியாதது. ஒருவகையில் இது இளையராஜாவின் அடிமனதிலிருந்து எழுந்த மெட்டு. அந்த மாபெரும் இசைக்கலைஞனின் சுவாச மூச்சு இப்படித்தான் வந்திருக்க வேண்டும்.

இந்தப் பாடலைப் பற்றி பலரும் பல முறையும் எழுதிவிட்டார்கள். பொங்கிவரும் ஆரம்ப இசை, பேஸ் கிட்டாரின் பிண்ணனி, கோரஸ் குரல்கள், அலையலையாய் எழும்பும் வயலின்கள், இடையில் வரும் லீட் கிட்டாரின் ஆக்கிரமிப்பு, இப்படி இந்தப் பாடலைச் சொல்லிமுடியாது. இடைவெளியில் மேலெழும்பிச் செல்லும் கோரஸ் பெண்கள் குரல் அதற்கு எதிரிடையாகச் செல்லும் (Counterpoint) எஸ்.பியின் மடைதிறந்து வரிகள் அற்புதங்களில் ஒன்று.

பாடலுக்கு மெட்டெழுதுவதா மெட்டுக்குப் பாட்டெழுதுவதா என்று காலமாக விவாதித்திருக்கிறார்கள். ஆனால் மெட்டுடன் பாட்டு இணைந்துவருவ்தை இங்கே பார்க்க முடியும். திரையிசையின் உன்னத பாடலாசிரியர்களில் ஒருவர் வாலி.

புதுராகம் படைத்ததாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் இராச்சியம்
அமைத்தேன் … நான்..

பலமுறை என்னுடைய வெளிநாட்டு நண்பர்களிடம் பாப்புலர் இந்திய இசையை வரையறுக்க இந்தப் பாடலை நான் போட்டுக் காட்டியிருக்கிறேன். ராக், பாப், மேற்கத்திய கிளாஸிக்கல் இசை, கர்நாடக இசை, நாட்டார் இசை என்று எல்லாவற்றுக்கும் இருக்கும் எந்த வரையறையும் திரையிசைக்குக் கிடையாது. தடையேதும் இல்லாமல் எல்லாவற்றின் கூறுகளையும் ஒரே பாட்டில் கையாள முடியும். இதன் வீச்சை முழுவதும் செயல்படுத்திக் காட்டியவர் இளையராஜா. அதேபோல குரலில் எல்லா சாத்தியங்களையும் தொட்டவர் பாலசுப்ரமணியம்.

எஸ்.பி.பியைப் பற்றி – இன்னொரு நாள் விரிவாக.