பொய்யைக் கண்டுபிடித்தல்

பல சமயங்களில் பொய்யைப் பொய்யாலேயே எடுக்க முடியும். “நா இல்லப்பா அக்காதான்” என்று சொல்லும் சிறுவனிடம் “டேய், நாந்தான் பாத்துக்கிட்டே இருந்தேனே” என்று இன்னொரு பொய்யைச் சொன்னால், அடுத்ததாக ஒத்துக் கொள்வது நிச்சயம். பல சுடாத பொய்களை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இதற்குக் காரணம், பொய் சொல்பவர்கள் அடிமனதில் தங்கள் தவறைத் தாங்களே ஒத்துக் கொள்கிறார்கள். நாலு முறை “ஏன்டா வெயிட் போட்ருக்கே” கேள்விக்குப் பொய் சொல்லும் நபர் கட்டாயம் அடுத்தமுறை சாப்பாட்டில் கைவைக்கும் பொழுது ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்வார். இதையெல்லாம் பொய் என்று அறுதியாக நிரூபித்தாக வேண்டிய கட்டயாம் யாருக்கும் இல்லை.

பொய்யைக் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றைச் செய்தாகவேண்டும் என்ற ஆர்வம் அறிவியலாளர்களுக்கு இருந்து கொண்டேயிருக்கிறது. அப்படியான கண்டுபிடிப்புகளுக்குள் மிகவும் முக்கியமானது பாலிகிரா·ப் என்று சொல்லப்படும் கருவி. பொய் சொல்பவரின் உடலில் இரத்த அழுத்தம், வெப்பம், இருதயத் துடிப்பு, தோலின் விரைப்புத்தன்மை என அசாதாரண மாற்றங்களை அளந்து அவர் பொய் சொல்கிறார் என்று இந்தக் கருவி முடிவெடுக்கும். பல விசாரனைகளில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டாலும் இதன் நம்பகத்தன்மை இன்னும் தெளிவாக அறுதியிடப்படவில்லை. சமீப காலங்களில் பொய் சொல்பவர் மூளையில் ஏற்படும் மின்னோட்ட மாறுபாடுகளை அணுக்கரு காந்த ஒத்திசைவு (Nuclear Magnetic Resonance) என்ற கருவியின் மூலம் நேரடியாக அளக்க முயற்சி செய்துவருகிறார்கள். உயிர்த்தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் இலக்காகக் கொள்ளப்பட்ட முக்கிய துறைகளில் ஒன்று பொய்.

அறிவியலும் பொய்யும்

பொய்க்கு முற்றாக இடம் மறுக்கப்பட்ட ஒரு துறை உண்டென்றால் அது அறிவியல்தான். ஆதார நம்பிக்கைகள் என்று எதுவுமில்லாத அறிவியலில் எந்த வழியிலும் பொய் ஒத்துக் கொள்ளப்படுவதில்லை. முரண்பட்ட அறிவியல் அறிக்கைகள் நாள் தோறும் வருவதைப் பலரும் இதற்கு எதிர்வினையாகச் சுட்டக்கூடும். உதாரணமாக, இன்றைக்கு ஒரு அறிக்கை மது அருந்துவது தீமை விளைவிக்கும் என்று வரும், நாளை அளவோடு அருந்துவதன் நன்மையைச் சொல்லக்கூடும். இதின் எது உண்மை-பொய் என்று பலரும் வியப்படையக்கூடும். இங்கு “அளவோடு” என்ற வார்த்தையின் இடம் மிகவும் முக்கியமானது, இதுதான் உண்மை-பொய்யை நிர்ணயிக்கிறது. (இதற்கும் அரசியலில் பேரழிவு ஆயுதங்களைப் பற்றி மிகைபட பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அளவோடு என்ற முன்னடை இல்லாமல் மதுவின் நன்மைபற்றி பேசுவது அறிவியல் கிடையாது). தங்களுடைய வர்த்தகத்திற்குச் சாதகமாக நிறுவனஙகள் ஆய்வு முடிவுகளைத் திரித்துக் கூறுவதும் அறிவியலுக்குப் புறம்பானதுதான். மெய்யல்லாத வார்த்தைகளுக்கு அறிவியலில் இடம் கிடையாது.

அடிப்படை அறிவியல் உண்மைகள் மாறிக்கொண்டே இருப்பதாகப் பலரும் குற்றம் சாட்டமுடியும். உதாரணமாக இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை, ஒரு பருப்பொருளின் இடம்-திசை வேகம் இரண்டையும் தெரிந்திருந்தால் அந்தப் பொருளின் நிலையைத் துல்லியமாக உணரமுடியும் என்ற தீர்க்கமான நம்பிக்கை இருந்தது. இதற்கு செவ்வியல் அறுதிப்பாடு (Classical Determinism) என்று பெயர். குவாண்டம் இயற்பியல், சார்நிலைக் கோட்பாடுகள் இவற்றின் வருகைக்குப் பிறகு நிச்சயமின்மை (uncertainity) போன்ற கருத்துகள் அறிவியலில் இடம்பிடிக்கத் தொடங்கின. அப்படியென்றால் செவ்வியல் அறுதிப்பாடு பொய்யா என்று கேட்கலாம். இந்த இடத்தில் பருப்பொருளின் தன்மை முக்கியமானதாகிறது. நாம் அன்றாடம் வாழ்வில் புழங்கும் பெருமப் பொருள்களுக்கு (macroscopic matter) செவ்வியல் விதிகள் முற்றாகப் பொருந்துகின்றன. ஆனால் அணுக்களின் உலகில் நிச்சயமின்மை தலையெடுக்கிறது. எனவே செவ்வியல் இயக்கவிதிகள் ‘பொய்த்துப்’ போகவில்லை, மாறாக அணுக்களின் உலகில் அவை ‘நீர்த்துப்’ போகின்றன.

அறிவியலில் பொய்க்கு இடமில்லாமல் இருப்பதன் காரணம், முற்றறுதி உண்மை (absolute truth) என்று விஷயத்தை அது தன் எல்லையில் உட்படுத்தாமல் இருப்பதே. அறிவியலில் உண்மை என்பது நம் இன்றைய புரிதலின் அடிப்படியிலானது. அறிவியல் உண்மையை அடைய முற்படுவதில்லை. தொடுகோடாக உண்மையில் அருகாமைக்கு நம்மை இட்டுச் செல்கின்றன.

பொய்யின் இடத்தை முற்றாக அறிவியல் மறுப்பதே அதன் உயர்வுக்குக் காரணம். இந்த ஒரே காரணத்தினால்தான் மதவாதிகளும், அரசியலாரும் அறிவியலுக்கு அடிபணிய வேண்டியிருக்கிறது. உருண்டையான பூமி, அது சூரியனைச் சுற்றி வருகிறது, உயிரினங்கள் தோற்றுவிக்கப்படவில்லை, அவை பரிணாம வளர்ச்சியால் உருவெடுத்தவை என்று மதங்களும் தம் அடிப்படை நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மறுபுறத்தில் எந்தவிதமான நம்பிக்கைகளும் இல்லாமல் அறிவியல் உண்மையின் திறத்தை நாளுக்கு நாள் உயர்த்திக் கொண்டேயிருக்கிறது.

இவ்வுலகில் அறிவியலுக்கு இடமிருக்கும் வரை உண்மை – பொய் என்ற வரையறையை மாற்றியெழுத யாராலும் முடியாது.