பொய் என்பது என்ன? உண்மைக்குப் புறம்பானவற்றைக் கூறுவது, நிகழ்த்துவது அல்லது சுட்டுவது என்று வைத்துக் கொள்ளலாம். பொய்கள் இரண்டு வகைப்படும்; சுடும் பொய்கள், சுடாத பொய்கள். “எங்க வீட்டு சுந்தரி அற்புதமா கோலம் போடுவா” என்று அமெரிக்க மாப்பிள்ளைக்காக அம்மாக்கள் சொல்வதைச் சுடாத பொய் வகையில் சேர்க்கலாம். சுந்தரி சியாட்டிலில் கோலம் போடுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. அப்படியே அங்கே பிரமாதமாகக் கோலம் போடாமல் கிறுக்கித் தள்ளினாலும் அடுத்தவீட்டு அமெரிக்கப் பொம்பளை வந்து பார்க்கப் போவதில்லை. அப்படியே அவர் பார்த்தாலும் “ஓ வெரி ப்ரெட்டி” என்று கையைப் பிடித்து முத்தம் கொடுப்பதற்குத்தான் சாத்தியங்கள் அதிகம். அந்த அம்மணி நாலாவது வீட்டுக்குப் போய் “யூ நோ, சுண்டரி ஈஸ் வெரி பேட் அட் கொலம்” என்று முகவாய்க்கட்டையைத் தோளில் இடித்துக் கதை பேசச் சாத்தியங்கள் மிகவும் குறைவு. மறுபுறத்தில், வழக்கு நடக்கும்பொழுது ஜோடிக்கப்பட்ட சாட்சியங்களை வைத்துக் கொண்டு மரணதண்டனை வாங்கித்தரவும் பொய்கள் பயன்படலாம். அவை சுடும்.

வள்ளுவர் ஒருபடி மேலே போய் “புரை தீர்ந்த நன்மை பயந்தால்” பொய்யை உண்மையின் கணக்கில் எழுதலாம் என்று சொல்லிவிட்டார். அதாவது, ஒருவருக்கு அதனால் நன்மை கிடைக்கும் என்றால் (வேறு யாருக்கும் கெடுதல் இல்லாமல்) தாராளமாகப் பொய் சொல்லலாம். சாகப் போகிறார் என்று தெரிந்தவரிடம் பல நாட்கள் டாக்டர்கள், “ஒன்னுமில்லை சார், பாருங்க நீங்க ஜாம் ஜாம்னு எழுந்த நடப்பீங்க” என்று முடிந்தவரைச் சொல்லிக் கொண்டிருப்பதை வள்ளுவர் கணக்குப்படி அந்தப் பக்கத்தில் தாராளமாக வரவு வைக்கலாம். இதற்காக, தெரிஞ்சா எங்கப்பா வருத்தப்படுவார் என்று சொல்லிக் கொண்டு “இல்லப்பா சத்தியமா சிகரெட் பிடிக்கல்ல, சீச்சீ… நாம் போயி… இதெல்லாம்…” என்று மழுப்புவது கட்டாயம் “புரைதீர்ந்த” சமாசாரம் கிடையாது. ஆனாலும் அவரவர்கள் வசதிப்படி கணக்குப்புத்தகத்தின் கோட்டை இந்தாண்டையும் அந்தாண்டையும் நெகிழ்த்திக் கொண்டிருப்பது என்னமோ உண்மைதான்.

யார் பொய் சொல்கிறார்கள்?

எல்லோரும் சொல்கிறோம். அட, ஒத்துக்குங்க, நீங்களும்தான். பூமியில் மானிட ஜென்மம் எடுத்தவர்கள் புரைதீர்ந்த, தீராத வகைப் பொய்களைத் தினசரி சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சந்தோஷமான விஷயம் என்னவென்றால் இவற்றில் பெரும்பாலானவை சுடாதபொய்கள்தான். என்ன இப்ப ஒத்துக்கிறீங்களா?

பொதுவில் பொய் சொல்வது மட்டமான செயல் என்று கருதப்பட்டாலும் சமூகத்தில் பொய்கள் சொல்பவர்கள் சிறப்பான இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது பலராலும் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இவர்களில் அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் முக்கியமானவர்கள். சில சமயங்களில் இவை தொழில் தர்மமாகக் கருதப்படுகின்றன. தன்னுடைய கட்சிக்காரரைக் கரையேற்றுவதற்கு வழக்கறிஞர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். “நல்ல வூடு சார், ஒரு பொட்டு தண்ணி உள்ள வராது” என்று ஓட்டை வீட்டைத் தலையில் கட்டுவது வீட்டுத்தரகரின் தொழில் சாமர்த்தியம். இதேபோல விளம்பரத் துறை முழுவதும் பொய்யாலோ, அல்லது தவிர்க்கப்பட்ட உண்மைகளாலோ நிறைந்தது. பொய்யால் கட்டியெழுப்பப்பட்டது நடிப்புலகம். எனவே பொய் முழுவதுமாகத் தவிர்க்கப்பட வேண்டிய விஷயமில்லை. வள்ளுவர் கணக்கு, தொழில்தர்மம் இத்யாதி என்று பொய்களுக்கு லைசென்ஸ் உண்டு. இதை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் வாழ்க்கையில் முன்னுக்கு வருகிறார்கள். எனவே நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வரையறைக்கு உட்பட்டு பொய்சொல்லி பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

பொய்யும் சமயங்களும்

மனிதனை உய்விக்க வந்தவையாக அறியப்படும் சமயங்களிடையே பொய்யைப் பற்றிய ஒரு தீர்க்கமான முடிவு இல்லை. கிறிஸ்துவம்

ஆனால் கோழைகள், நம்பிக்கை இல்லாதோர், அருவருப்புக்குரியோர், கொலையாளிகள், பரத்தைமையில் ஈடுபடுவோர், சூனியக்காரர்கள், சிலைவழிபாட்டினர், பொய்யர் ஆகிய அனைவருக்கும் நெருப்பு கந்தகமும், எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும். இதுவே இரண்டாம் சாவு – (திருவெளிப்பாடு, 21:8, புதிய ஏற்பாடு) .

என்று உறுதியாகச் சொன்னாலும், பல இடங்களில் அது நெகிழ்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.உதாரணமாக ஒருவரை கிறிஸ்துவராக மாற்றுவதற்குப் பொய் சொல்வது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதேபோல ஒவ்வொரு மதமும் பொய்யைப் பற்றி இருதலையான கருத்துக்களைச் சொல்லுகின்றன. இஸ்லாத்தில் ஒருவர் உயிரைக் காப்பாற்ற, சமாதானத்தை அடைய, புனிதப் பயணத்தை மேற்க்கொள்ள பொய்சொல்லலாம் என்று ஹதீது இருக்கிறது. ஆனால் அங்கே அல்லாவிற்கும் முகம்மது நபிக்கும் பொய்யானவர்களுக்கு மன்னிப்புக் கிடையாது.

நான் இறைதூதர் சொல்லக் கேட்டேன்; “என் மீது பொய்யானவற்றைச் சுமத்துதல் என்னையல்லாதவர்கள் மீது சுமத்துதலுக்கு ஒப்பானதல்ல. எனக்கெதிராக வலிந்து பொய் சொல்லுபவர் நரகத்தீயில் தனக்கான இடத்தை நிச்சயத்துக் கொள்கிறார்” (ஷகீஹ் அல்-புக்ஹாரி 2.378 ) .

யூதர்களுக்குக்கூட பரிந்துரைக்கப்பட்ட பொய்கள் சில உண்டு; சாட்சி சொல்லும்பொழுது உண்மையைச் சொல்லாமல் விட்டுவிடலாம், ஆனால் ஒட்டுமொத்தமாகப் பொய் சொல்லக் கூடாது, பணக்காரர்கள் பொறாமையைத் தவிர்க்கப் பொய் சொல்லலாம், மதாச்சாரியாரின் (டோரா ஆசிரியர்) செலவுக்குப் பணம் வசூலிக்கும்பொழுது பெண்ணின் திருமணத்திற்காகக் என்று பொய் சொல்லலாம். குருக்களுக்கு என்றால் பணம் தராமல் போகக்கூடும், ஸப்பாத் தொழுகைக்கு வீட்டுப் பெண்கள் கிளம்ப நேரமானால், லேட்டாகிவிட்டது என்று பொய் சொல்லலாம் என்று கூட நடைமுறைக்கு ஏற்றபடி டோராவில் வரையறுக்கப்பட்டுள்ளது. நாட்டைக் காக்க ஷ்த்ரியர்களும், வியாபாரத்தில் வைசியர்களும் பொய் சொல்லலாம் என்று கீதை சொல்லுகிறது.நெகிழ்வு கொண்ட இந்து மதத்தில் பொதுவில் மறுதலையான கோட்பாடுகள் இறைந்து கிடக்கின்றன.

இப்படி நீதிநெறிகளைப் போதிப்பதாக வந்த மதங்கள்கூட பொய்யைப் பற்றி தீர்க்கமாக தவிர்க்கப்படவேண்டியது என்று சொல்லவில்லை. சில வகையான பொய்களை முற்றிலும் தடைசெய்யும் இறைநூல்கள், வேறு இடங்களில் பொய் சொல்ல அனுமதிக்கின்றன. ஒருவகையில் இந்த அனுமதி பொய் சொல்லுவதை ஊக்குவித்தல் என்றுதான் கொள்ள வேண்டும்.