இன்றைய தெரிவாக வருவது அதிகம் கவனிக்கப்படாத ஒரு பாடல்.

பாடல்: பூந்தென்றல் காற்றே வா வா
படம்: மஞ்சள் நிலா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், பி.சுசீலா

இளையராஜாவின் இசையமைப்பில் கே. ஜெயச்சந்திரன் அற்புதமான பாடல்கள் நிறைய பாடியிருக்கிறார். காற்றினிலே வரும் கீதம் (ஒரு வானவில் போல, சித்திரச் செவ்வானம்) தொடங்கி, புன்னகைமன்னன், (கவிதை கேளுங்கள்) வைதேகி காத்திருந்தாள் ஈடாக ஜெயச்சந்திரனுக்கேன்றே அமைக்கப்பட்டதைப் போன்ற பிரத்தியேகப் பாடல்கள் பலவற்றை இளையராஜா தந்திருக்கிறார். இவற்றுள் பல பாடல்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றவை. ஆனால் சில பாடல்கள் அதிகம் பேசப்படாமல் போயிருக்கின்றன. எத்தனையோ படங்களை தன்னுடைய இசையால் இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், ரஹ்மான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். மோசமான படங்களை தன்னுடைய இசையால் பிரபலமாக்கியதில் இளையராஜாவுக்கு ஈடு யாரும் இல்லை என்றே சொல்லலாம். இதற்கு சாட்சி வேண்டுமென்றால் சுதாகர், மோகன், ராமராஜன், ராஜ்கிரண் போன்றவர்களிடம் கேளுங்கள். இருந்தும் விதி யாரை விட்டது 🙂 அற்புதமான இளையராஜாவை விழுங்கி ஏப்பமிட்ட படங்களும் உண்டு. இது அந்த வகையில் ஒன்று.

ஜெயச்சந்திரன் – பி.சுசிலா ஜோடியும் நிறைய நல்ல பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்; பூவண்ணம் (அழியாத கோலங்கள் – சலீல் சௌத்ரி), மஞ்சள் நிலாவுக்கு (முதல் இரவு – இளையராஜா), பெண்ணல்ல நீயரு பொம்மை (சொந்தமடி நீ எனக்கு – வி. குமார்). எனக்கு மிகச் சில பெண் பாடகிகளின் குரலே பிடிக்கும். (மற்றபடி நான் கேட்கும் பெண் குரல் பாடல்களெல்லாம் இசையைக் கொண்டுதான்). பிடித்த பெண் பாடகிகளில் முதன்மையானவர் சுசீலா. அப்பழுக்கில்லாத குரல் அவருடையது. ஆனால் இந்தப் பாடலில் சுசீலாவின் குரல் கிட்டத்தட்ட ஜென்ஸி அல்லது பி.எஸ். சசிரேகாவின் குரலைப் போல மூக்கினால் பாடுவதைப் போல இருக்கிறது. குறிப்பாகப் பாடலின் துவக்கம்.

அற்புதமான இசை இந்தப் பாடலுக்கு – ஆரம்பத்தில் வரும் கிட்டார், ஸாக்ஸபோன் மற்றும் புல்லாங்குழல் இசைகளின் இழைவு மோனத்தில் ஆழ்த்தும். பாடலின் முழுவதும் கிட்டார், கீபோர்ட் மற்றும் புல்லாங்குழலின் இணைவு மிக நன்றாகப் பொருந்தியிருக்கிறது. குறிப்பாக இரண்டாவது சரணத்திற்கு முன்வரும் இடையீடு எனக்கு மிகவும் பிடித்தது.

முன்னரே சொன்னதைப் போல இது யாருடைய படம் போன்ற விபரங்கள் நினைவில் இல்லை. இருபது வருடங்களுக்குப் பிறகும் இந்தப் பாடலை என் மனதில் முழுமையாக நிறுத்துவது இளையராஜாவின் இசையும் ஜெயச்சந்திரனின் தனித்தன்மையான குரலும்தான்.