தமிழர்கள் பொதுவில் மொழிகடந்து இசையை நேசிக்கக் கற்றுக் கொண்டவர்கள். நான் சிறுவனாக இருந்தபொழுது மரோசரித்ரா, சங்கராபரணம் போன்ற படங்கள் மற்றும் பல ஹிந்திப் பாடல்கள் பிரபலமாக இருந்தன. (ஹிந்திப் பாடல்களுக்குப் பொதுவில் தேசிய அளவில் தூர்தர்ஷன் மற்றும் பல ஊடங்கள் வழியாக விளம்பரம் கிடைப்பதால் அவை தகுதிக்கு மீறி நாடு முழுவதும் முழங்குகின்றன). ஆனால் சங்கராபரணம் இசைத்தட்டுகள் தமிழகத்தில் விற்றதைப் போல பிற மாநிலங்களில் வேறெந்த மொழி இசைத்தட்டும் விற்றிருக்காது.

பாடல்: என்ன தவம் செய்தனை
படம்: திலக்கம் (மலையாளம், 2003)
பாடியவர்கள்: பேபி நிமிஷா, சின்மயி
இசை: கே. விஸ்வநாதன்
பாடலாசிரியர்: ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் (1700-1765)

பிற மாநிலத்திலிருந்து வரும் பாடல்கள் தவிர, தமிழ்த் திரைப்படங்களிலேயே முழுக்க முழுக்க வேற்று மொழியாலான பாடல்கள் பிரபலமாகியிருக்கின்றன. உதாரணமாக, சலங்கை ஒலி திரைப்படத்தில் வரும் பால கனகமய பாடல். எனக்குத் தெரிந்து இரண்டு தமிழ்ப்படங்களில் ஹிந்திப் பாடல்கள் (தமிழ்த் திரைப்படத்திற்கெனவே எழுதப்பட்ட பாடல்கள் இவை). ஒன்று வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வரும் “து ஹே ராஜா” (பாடியவர் ஜானகி, இசை எம் எஸ் விஸ்வநாதன்), நண்டு படத்தில் வரும் “ஹைஸெ கஹுன்” (எழுதிப் பாடியவர் பிபீ. ஸ்ரீனிவாஸ், இசை இளையராஜா). இப்படி முழுக்க முழுக்க வேறு மொழிப்பாடல்கள் இந்தியாவின் மற்ற மொழித் திரைப்படத்தில் நானறிந்தவரை இடம்பெறவில்லை. (ராமையா ஒஸ்தாவைய்யா பாடலில் வரும் ஒன்றரை தெலுகு வரியும், ஏக் துஜே கேலியே, மரோசரித்ராவில் வரும் “ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே”-யும் இதில் சேர்த்தியில்லை, முழுக்க முழுக்க ஒரு நிமிடத்திற்கு மேல் வேற்று மொழிப்பாடல் ஏதாவது இருக்கிறதா?)

இந்தக் குறையைப் போக்க சென்ற வருடம் மலையாளத்தில் திலக்கம் என்ற திரைப்படம் வந்தது. இதில் சின்மயி பாடிய ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடல் இன்றைய தெரிவாக வருகிறது.

ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள் அற்புதமான இசைக்கோர்ப்பு கொண்டவை. (தாயே யசோதா உந்தன், அலைபாயுதே கண்ணா, பால்வடியும் முகம்,ஆடாது அசங்காது வா கண்ணா…). கர்நாடக சங்கீதத்தைப் பற்றி அதிகம் தெரியாதவர்கள் கூட இந்தப் பாடல்களை அறிவார்கள். வேங்கடகவி 1700 முதல் 1765 வரை வாழ்ந்த பன்மொழி இசைப்புலவர். ஊத்துக்காடு கும்பகோணத்திற்கு அருகில் இருக்கிறது. ஊத்துக்காடு, மெலட்டூர் போன்ற கிராமங்கள் தமிழ்-சமஸ்கிருதம் கலந்த கலவையாக “பாகவத மேளா” என்ற நாட்டிய நடனக்கலையை (இதுவும் ஒருவகையில் நாட்டார் கலை என்று சொல்லலாமா?) வளர்த்த ஊர்கள். இங்கிருந்த மக்களுக்கு இசையையும் நாடகத்தையும் விட்டால் வேறெதுவும் தெரியாது. இவர்கள் பரம்பரையில் வந்தவர்கள் (சமீபத்திய உதாரணம் நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர்) மேடையில் பிரசங்கிக்கும் ஹரிகதை. நீடாமங்கலத்தின் கிருஷ்ணகானம் இசைப்பேருரையைக் கேட்டிருக்கிறீர்களா? அற்புதமாக இருக்கும். அது பெரும்பாலும் ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்களால் தொகுக்கப்பட்டது. சினிமாவின் வரவால் என் கண்முன்னே அழிந்த கலைகள் பொம்மலாட்டம், தெருக்கூத்து, குறவன்-குறத்தி நடனம், திருவிழாக்களில் நடக்கும் மேடைநாடகம்…, இவற்றுடன் ஹரிகதையும் ஒன்று. நாட்டார் கலைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று கன்னடியர்களிடமும் மலையாளிகளிடமும் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் யக்க்ஷகானத்திற்குப் பெரும் மதிப்பு இருக்கிறது.

இன்றைய பாடல் அற்புதமாக இசையமைக்கப்பட்டிருக்கிறது. பாடலைப் பாடிய சின்மயி கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் “ஒரு தெய்வம் தந்த பூவே” பாடல் மூலம் அறிமுகமானவர். தமிழைக் கொலைசெய்யும் பாடகர்களை ஊக்குவித்து, ஏ.ஆர். ரகுமான் செய்த எத்தனையோ பாவங்களுக்கு சின்மயி, ஹரிணி போன்றவர்களின் அறிமுகம் ஒரு பிராயச்சித்தம். முறையான சங்கீதப் பயிற்சியுள்ள சின்மயி அற்புதமாகப் பாடியிருக்கிறார்.

மலையாளத்தில் தரமான திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த ஜெயராஜ் என்ற இயக்குநர் திலீப் என்ற முன்னணி கதாநாயகனை வைத்து இயக்கிய வணிக முயற்சி என்று என் நண்பர்கள் சொன்னார்கள். படம் படு மோசம் என்று தீர்ப்பு. ஆனால் என்ன, இந்தப் பாடல் படத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்.