francis_crick.pngஉயிரின் வேதி அடிப்படையைக் கண்டறிந்த இரட்டையர்களில் ஒருவரான பிரான்சிஸ் கிரிக் 28 ஜூலை 2004 அன்று காலமானார். உயிர்பெருக்கத்தின் அடிப்படையாகவும், மரபின் மூலக்கூறாகவும் அறியப்படும் டிஆக்ஸிரிபோ நியூக்ளிக் அமிலம் (டிஎன்ஏ) (Deoxyribo Nucleic Acid, DNA) மூலக்கூறின் அமைப்பை ஜேம்ஸ் வாட்சனும் (James Watson) ஃபிரான்ஸிஸ் கிரிக்கும் (Francis Crick) பெப்ருவரி 1953ல் புரிந்துகொண்டு உலகிற்கு அறிவித்தார்கள். பிணைந்திருக்கும் இரட்டைப் பாம்புகளைப் போன்ற தோற்றமுடைய டிஎன்ஏ மூலக்கூறின் அமைப்பும் அது பிழையின்றி அற்புதமாகத் தன்னைத்தானே நகலெடுத்துக்கொள்ளும் திறத்தையும் வாட்ஸனும் – கிரிக்கும் அறிவிக்க மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) என்ற புதிய துறை உருவெடுத்தது. இந்தத் தலைமுறையில் நாம் பரபப்பாகப் பேசிக்கொள்ளும், நகலாக்கம், மரபியல் மருத்துவம், வளர்நிலைச் செல்கள், செயற்கை இனப்பெருக்கம், போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளும் அவை மனிதனின் வாழ்முறைகளை மாற்றியமைக்கும் விதத்திற்கும் டிஎன்ஏ குறித்த புரிதலே வித்திட்டது என்றால் அது மிகையில்லை. ஃபிரான்ஸிஸ் ஹாரி ஹாம்டன் கிரிக் (Francis Harry Hampton Crick) 1916, சூன் 8ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள நார்த்தாம்டனில் பிறந்தார். அவர் தந்தை தன்னுடைய முன்னோர்களைப் போலவே செருப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். கிர்க் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் இயற்பியலில் துறையில் உயர் அழுத்தங்களில் திரவங்களின் பண்புகளைக் குறித்து முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அந்த நேர்த்தில் இரண்டாம் உலகப்போர் துவங்க அவர் கண்ணிவெடிகள் குறித்த இராணுவ ஆராய்ச்சிக்கு மனமொப்பாமல் தடம்மாற வேண்டியிருந்தது. உலகப்போர் முடிந்தபின் அவருடைய ஆர்வம் உயிருள்ளவை – உயிரற்றவை இரண்டுக்குமான அடிப்படைகளை நோக்கித் திரும்பியது. அது குறித்த ஆய்வுகளில் மிகத் தீவிரமாக நடைபெற்ற கேவண்டிஷ் ஆய்வுக்கூடத்தில் (Cavendish Laboratory) புரத மூலக்கூறுகளின் அமைப்பைபற்றிய தன்னுடைய முனைவர் ஆய்வைத் தொடங்கினார். கிட்டத்தட்ட முப்பத்தைந்துவயதாகியும் அவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கவில்லை. இருந்தபொழுதும் கேவண்டிஷ் ஆய்வுக்கூடத்தில் அவருக்குப் பெரும் மதிப்பிருந்தது.

உயிரின் அடிப்படையைக் கண்டறிய டிஎன்ஏ மூலக்கூறின் அமைப்பைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பது விரைவிலேயே கிரிக்குக்குப் புலப்பட, புரதங்களைவிட்டுவிட்டு டிஎன்ஏ-மீது தன்னுடைய கவனத்தைத் திருப்பினார். இதற்கு அமெரிக்காவிலிருந்து 1951 இலையுதிர்காலத்தில் கேவண்டிஷ் வந்த ஜேம்ஸ் வாட்ஸனின் வருகை ஊக்கமளித்தது. கிரிக்கைப் போலவே வாட்ஸனும் டிஎன்ஏ மூலக்கூறின் மீது ஆவல் கொண்டிருந்தார். வாட்ஸனும் கிரிக்கும் ஒருவருக்கொருவர் விரைவிலேயே நெருக்கமானார்கள். இருவருக்கும் நேர்மையான ஆய்வுகளின் மீதான ஆர்வம், இளம் வயதின் இயல்பான முரட்டுத்தனம், பொறுமையின்மை போன்றவைப் பொதுவாக அமைந்திருந்தன.

அந்த நாட்களில் எக்ஸ்ரே கதிர்களைக் கொண்டு மூலக்கூறுகளின் அமைப்பை ஆராயும் எக்ஸ் கதிர் படிகஅமைப்பியல் (X-ray Crystallography) என்ற துறையில் கேவண்டிஷ் முன்னனியில் இருந்தது. இந்தத் துறையில் எக்ஸ் கதிர்களின் பயனைக் கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வில்லியம் ப்ராக் (William Bragg) அதன் தலைமைப் பொறுப்பிலிருந்தார். அவர் கீழே மாரீஸ் வில்கின்ஸ் (Maurice Wilkins), ரோஸலன்ட் ஃப்ராங்க்ளின் (Rosaland Franklin) போன்ற உன்னத விஞ்ஞானிகள் பல சிக்கலான புரதங்களின் வடிவமைப்புகளைக் கண்டறிந்தனர். இவர்களுடைய ஆய்வுகளின் பின்புலம் வாட்ஸனுக்கும் கிரிக்குக்கும் மிகவும் உதவியாக இருந்தது. அடிப்படையில் பிரான்ஸிஸ் கிரிக் ஒரு சோதனையாளர் கிடையாது; கருத்துமுறை சிந்தனையே அவரது பலம். அந்த நிலையில் வில்கின்ஸன், ப்ராங்க்ளின், மற்றும் அமெரிக்காவிலிருந்து லினஸ் பவுலிங் போன்றவர்களின் ஆய்வக முடிவுகளை ஆராய்ந்து புரிந்துகொள்வதே வாட்ஸன்-கிரிக் இரட்டையரின் வழிமுறையாக இருந்தது. இதற்கு இவர்கள் லினஸ் பவுலிங் (Linus Pauling) முறையில் காகிதக்கூழ் உருண்டைகள் (அணுக்கள்) குச்சிகளையும் (இணைப்புகள்) கொண்ட மாதிரிகளைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இந்த முறை கேவண்டிஷ் ஆய்வகத்தில் பிரபலமாக இருந்ததில்லை.

ஒரு முறை டிஎன்ஏ மூலக்கூறின் அமைப்பை நன்றாகப் புரிந்துகொண்டுவிட்டதாகச் சொல்லி ஆய்வகத்தின் பெருந்தலைகளான வில்லியம் ப்ராக், மாரிஸ் வில்கின்ஸ், ரோஸலன்ட் ப்ராங்க்ளின் இவர்களைக் கூப்பிட்டு வாட்ஸனும் க்ரிக்கும் விளக்கத் தொடங்கினார்கள். தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஃ ப்ராங்க்ளின் அதன் அபத்தத்தைச் சுட்டிக்காட்டினார். இது வாட்ஸனுக்கும் கிரிக்குக்கும் பேரிடியாக இருந்தது. இதுபோன்ற அபத்தங்களைத் தவிர்க்கவும் கேவண்டிஷ் கௌரவத்தைக் காப்பாற்றவும் கிர்க்கும் வாட்ஸனும் டிஎன்ஏ பற்றிய ஆய்வுகளில் ஈடுபடவேண்டாம் என்று தடுக்கப்பட்டார்கள். இது மேம்போக்காக இருந்தாலும் நடைமுறைப்படுத்தவில்லை. இதற்கு முக்கியகாரணம், ஆணாதிக்கக் கேவண்டிஷ் ஆய்வகத்தில் ரோஸலன்ட் என்ற பெண்மணியின் வளர்ச்சி பொறுத்துக்கொள்ளப்படவில்லை. எனவே ரோஸலண்ட் ஈடுபட்டிருந்த டிஎன்ஏ ஆய்வில் வேறு எந்த ஆண் முயன்றாலும் அது மறைமுகமாக ஆதரிக்கப்பட்டது.

அடிப்படையில் உறுதியான சோதனைகளிலும் கருத்தாக்கங்களிலும் நம்பிக்கை கொண்டிருந்த வாட்ஸன் கிரிக் இருவரும் ரோஸலண்ட் விமர்சனத்தை நேர்மையான முறையில் எடுத்துக்கொண்டு உத்வேகம் பெற்று உழைகக்த்தொடங்கினார்கள். இவர்களுக்கு கேவண்டிஷ் ஆய்வக எக்ஸ் கதிர் சோதனைமுடிவுகள் மிகவும் உதவியாக இருந்தன. அதே சமயத்தில் எர்வின் சார்காஃப் (Erwin Chargaff) என்ற அமெரிக்க ஆய்வாளரின் டிஎன்ஏ பற்றிய அடிப்படை விதியும் அவர்களுக்கு தங்கள் சிந்தனைகளை நெறிப்படுத்திக்கொள்ள உதவின. சார்காஃப் எல்லா உயிரினங்களின் டிஎன்ஏக்களிலும் அடினைன், தைமின், சைட்டொஸைன், குவானைன் (Adenine-Thymine-Cytosine-Guanine – ATCG) என்ற நான்கு மூலக்கூறுகளே அடிப்படையாக இருக்கின்றது என்பதையும், அவற்றில் அடினைன்-சைட்டொஸைன் (AT) சம அளவில் இருப்பதையும் , தைமின்-குவானைன் (CG) சமமாக இருப்பதையும் கண்டறிந்து விதிப்படுத்தியிருந்தார்.

விரைவிலேயே, அமெரிக்காவின் லினஸ் பவுலிங், தங்கள் சகாவான ரோஸலின்ட்ஃ ப்ராங்க்ளின் இவர்களை முந்திக்கொண்டு டிஎன்ஏ என்ற புதிரை வாட்ஸனும் கிரிக்கும் விடுவித்தார்கள். பிணைந்திருக்கும் இரண்டு பாம்புகள், அல்லது முறுக்கிவிடப்பட்ட ஏணியைப் போன்ற தோற்றத்தில் டிஎன்ஏ அமைந்திருப்பது உறுதியானது. இந்த ஏணியின் ஒரு கம்பத்தில் அடினைன் இருந்தால் மற்ற கம்பத்தில் அதற்கு இணையாக தைமின் இருக்கும். அதே போல சைட்டொஸைன்-க்கு இணையாக குவாணைன் அமைந்திருக்கும். இந்த அற்புதமான வடிவம் புலப்பட்டவுடனேயே மரபுக்கூறுகள் எப்படிஒரு உயிரியிலிருந்து அதன் குழந்தைக்குப் பரவுகிறது என்பது எளிதில் புலப்பட்டது.

dna_replication.png இனப்பெருக்கத்தின்பொழுது, ஒற்றைக் கருச்செல் பிரிந்து இரண்டாகும்பொழுது அதன் டிஎன்ஏ ஏணியின் இரண்டு கம்பங்கள் பிரிந்துபோகும். ஆனால் ஒரு கம்பத்தின் இணையாக இன்னொரு கம்பம் உருவாகும் பொழுது அதில் அடினைன்-தைமின், சைட்டொஸைன்-குவாணைன் இணைப்பு இருந்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதால் உருவாகும் இரண்டு செல்லிலும் மரபின் அடிப்படையான டிஎன்ஏ அப்பழுக்கின்றி தன்னைத்தானே சுயநகலாக்கம் செய்துகொள்கிறது. இதன் முலமாக மரபுக்கூறுகள் ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படுகிறது. இந்தச் சுயநகலாக்கத்தில் வரும் தற்செயலான பிழைகளே மரபில் மாற்றங்கள் நடைபெற வழிகோலுகிறன. அந்த மாற்றங்கள் உயிரிக்கு நன்மை பயக்கும் என்ற நிலையில் அது தக்கவைத்துக்கொள்ளப்படுகிறது (தீமையானது என்றால் அந்த உயிரினம் இனப்பெருக்கம் செய்ய வழியில்லாமல் அழிந்துபோகிறது). இதுவே சார்லஸ் டார்வின் பரிந்துரைத்த பரிணாமக் கொள்கையின் (Evolution) அடிப்படை.

இப்படி மரபுத் தொடர்ச்சி, மரபு மாற்றம், பரிணாமம் போன்ற பெருமக் கொள்கைகளை மூலக்கூறு அடிப்படியில் டிஎன்ஏவின் அமைப்பு பற்றி புரிதல் எளிதாக விளக்கியது. இதன் தொடர்பாக மூலக்கூறு உயிரியல், உயிர்த்நுட்பம், என்ற பல துறைகள் தோன்றி வளர்ந்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தை அணுக்களின் அமைப்புபற்றிய குவாண்டம் இயற்பியல் கொள்கைகள் விளக்கின. அந்தக் காலங்கள் இயற்பியலின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் இறுதி மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்நுட்பம் ஆகிய துறைகளின் பொற்காலத் துவக்கமாக அமைந்திருக்கிறது. இந்தப் பொற்காலத்தின் துவக்கத்திற்கு டிஎன்ஏ அமைப்பு மற்றும் தொழிற்பாடு குறித்த புரிதல்கள்தான் பெரிதும் உதவியிருக்கின்றன என்றால் மிகையில்லை.

டிஎன்ஏ என்ற மகத்தான வெற்றி மாத்திரமே கிரிக்கின் அறிவியல் சாதனை என்று சொல்லமுடியாது. தொடர்ந்தும் பல கருதுகோள்களையும் முடிவுகளையும் கிரிக் முன்வைத்திருக்கிறார். பல அடிப்படை உயிர்வினைகளைப் பற்றிய புரிதல்களை வழங்கியிருக்கிறார். இவற்றுள் மிகவும் முக்கியமானவை, இனப்பெருக்கத்தின்பொழுது மரபுக்கூறுகளை செல்லின் புறத்தே புரதம் தயாரிக்குமிடங்களுக்குப் பரிமாற்றம் செய்யும் தூதுவன்-ஆர்என்ஏ-வின் (Messenger RNS, mRNA) அமைப்பு பற்றிய விளக்கங்கள், அமினோ அமிலங்களின் செயல்பாடுகளை வழிநடத்தும் மூலக்கூறுகள் பற்றிய கருதுகோள். இந்தக் கருதுகோள் உயிர்வேதியியல் வல்லுநர்களிடையே பலத்த எதிர்ப்பைப் பெற்றது. இப்படி வழிநடத்தும் மூலக்கூறுகள் இருந்தால் இவற்றை எங்கள் வேதிவினைகளின் மூலம் கண்டறிந்திருப்போம் என்று அவரகள் சொன்னார்கள். தொடர்ச்சியான சோதனைகள் மூலம் கிரிக்கின் வழிநடத்து மூலக்கூறுகள் மற்றும் பரிமாறி ஆர்என்ஏக்கள் (Transfer RNS, tRNA) போன்றவை பற்றிய கருதுகோள்கள் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன.

1962ஆம் ஆண்டு மாரிஸ் வில்கின்ஸ், ஜேம்ஸ் வாட்ஸன், பிரான்ஸிஸ் கிரிக் மூவரும் மருத்துவத்திற்கான நோபெல் பரிசைப் பெற்றார்கள். தொடர்ந்து டிஎன்ஏ பற்றிய கண்டுபிடிப்பைப் பற்றிய வரலாற்றை ஜேம்ஸ் வாட்ஸன் புத்தக வடிவில் வெளியிட்டார். (The Double Helix, James D Watson, Signet Classics, 1969). இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயம் இப்படித் தொடங்குகிறது;

“I have never seen Francis Crick in a modest mood. Perhaps in other company he is that way, but I have never had reason so to judge him…”

இந்தப் புத்தகத்தின் வரிகள் நேர்மையான உண்மைகள் என்றாலும், பிரிட்டனின் அறிவியல் நடைமுறைகளுக்கு மாறாக சகஊழியரிடையேயான நடப்பைப் பொதுவில் விமர்சனம் செய்யமுயன்றது கிரிக்குக்கு கோபத்தை உண்டாக்கியது. தொடர்ந்து அவர்களிடையே பிளவு ஏற்பட்டது. இருவரும் தனித்தனி வழியே சென்றனர். ஆனாலும் இருவருக்கும் இடையேயான பரஸ்பர நட்பு ஒருபொழுதும் பாதிக்கப்படவில்லை. தன்னைவிடப் பத்துவயது இளையரான வாட்ஸனிடம் ஒருபொழுதும் மேலாதிக்கம் கிரிக் செய்யமுயன்றதில்லை. இது பின்னாட்களின் வாட்ஸனால் அன்புடன் நினைவுகூறப்பட்டது. பின்னாட்களில் வாட்ஸன் ஒரு அறிவியல் நிர்வாகியாக மாறினார். கிரிக் தொடர்ந்து முழுநேர விஞ்ஞானியாகவே ஆய்வகத்தில் தன்னுடைய நேரத்தைச் செலவிட்டார்.

கிரிக் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் ல ஹேயாவிலிருக்கும் ஸால்க் நிறுவனத்திற்கு (Salk Institute, La Jolla) மாறினார். அங்கே மனிதனின் பிரஞ்ஞைகள் (Human Consciousness) குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். பல முதல்தர விஞ்ஞானிகளைப் போலவே கிரிக்குக்கும் தன்னுடைய கண்டுபிடிப்புகளை சராசரி மனிதனுக்கு விளக்க வேண்டும் என்ற ஆர்வமிருந்தது. வாட்ஸனின் புத்தகத்தைப் போலவே டிஎன்ஏ கண்டுபிடிப்பைப் பற்றிய தனது பதிவை கிரிக்கும் எழுதினார் (What Mad Pursuit, Francis Crick). பிரஞ்ஞைகள் குறித்த ஆய்வுகள் The Astonishing Hypothesis என்ற நூலில் விளக்கப்பட்டது.

பின்னாட்களில் “செலுத்தப்பட்ட பெருவிதைப்பு” (Directed Panspermia) என்ற துறையில் தன்னுடைய கவனத்தைத் திருப்பினார். இது உயிர்களின் தோற்றம்பற்றிய சர்சைக்குரிய கருத்தாகும். ஜடமான சாதாரண மூலக்கூறுகளிலிருந்து தன்னைத்தானே நகலாக்கம் செய்துகொள்ளக்கூடிய உயிரிகள் எப்படித் தோன்றின என்பது குறித்து விஞ்ஞானிகளிடையே நிறைய கருத்துகள் இருக்கின்றன. பெரும்பாலோர் ஹைட்ரஜன், கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற சாதாரண அணுக்களின் தற்செயலான கலவையில் சுயநகலாக்கம் செய்யவல்ல மூலக்கூறு தோன்றியிருக்கக் கூடும் என்று நம்புகிறார்கள். இதற்கு மாறாக பிரான்ஸிஸ் கிரிக் போன்ற ஒரு சிறுபான்மையினர் உயிரின் அடிப்படைக் கரு பிரபஞ்சத்தின் வேறொரு மூலையில் இருக்கும் புத்திசாலி உயிரினங்களால் ஆளற்ற விண்கலத்தில் செலுத்தப்பட்டு பூமியில் விதைக்கப்பட்டிருக்கலாம் என்றும், இதைத் தொடர்ந்த பரிணாம வளர்ச்சியில் மனிதன் போன்ற புத்திசாலி உயிரிகள் உருவாயின என்றும் கருதுகிறார்கள். இந்தக் கருதுகோளுக்கு எந்தவிதமான சோதனை ரீதியான அடிப்படைகளும் கிடையாது. பூமியின் தோற்றத்திலிருந்தான காலம் தற்செயலாக சிக்கலான மூலக்கூறு உருவாகப் போதுமான அளவில் இல்லை என்பது கிரிக்கின் சித்தாந்தம். இதற்கான ஆய்வுகளில் தனது பிற்காலத்தைச் செலவிட்டார். இதன் கருதுகோள்களைப் பாமரர்களுக்கான Life Itself – Its Origin and Nature” என்ற நூலில் விளக்கியிருக்கிறார்.

இயற்கையின் பல விதிகளை மனிதன் புரிந்துகொண்ட நிலையில் அதனை மாற்றியமைக்கும் திறமை மனிதனுக்கு வாய்க்கத் தொடங்கியிருக்கிறது. இதன் மூலமாக செயற்கை இனப்பெருக்கம், நகலாக்கம் போன்ற சிக்கலான வழிகளில் இயற்கையை மாற்றியமைக்கும் திறமையும் நமக்கு வாய்க்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கான அடிப்படைகளைப் பலர் உருவாக்கியிருக்கின்றனர். உயிரின் அடிப்படை மூலக்கூறான டிஎன்ஏ பற்றிய புரிதலை நமக்களித்த பிரான்ஸிஸ் கிரிக் அவர்களுள் முக்கியமானவர்.