star_galaxy.pngஒரு பெரிய பார்ட்டி அதுலேந்து ஒரு சின்ன பார்ட்டி தனியா கழட்டிக்கிட்டுப் போவுது. அப்புறமா பெரிய பார்ட்டி அதுக்கு இருக்குற பலத்த வச்சு சின்னப்பார்ட்டிய இழுக்குது. சின்ன பார்ட்டி பெரிய பார்ட்டிக்கிட்ட வர்ற சமயத்துல அது சுக்கு நூறா செதறிப்போவுது. அதுல கொஞ்சத்த பெருசு தின்னு ஏப்பம் உடுது; செரிக்காமப் போனதெல்லாம் துப்புது. கொஞ்ச நேரத்துல பெரிய பார்ட்டி சின்ன பார்ட்டி எல்லாம் ஒன்னா மாறிப்பூடுது.

கிட்டத்தட்ட அடுத்து இந்தியாவில் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் பார்ட்டி நிலவரத்தைப் பற்றிய விஷயமாகத் தோன்றினாலும், இந்தப் பார்ட்டி நடப்பது கொஞ்சம் பெரிய அளவில். கொஞ்சம் பெரிய அளவில் அப்புடீன்னு சொன்னா போதாது; நாம சொல்ற சின்ன பார்ட்டியோட சைஸ் கிட்டத்தட்ட நம்ம சூரியனின் அளவு கொண்டது. பெரிய பார்ட்டி கிட்டத்தட்ட நம்முடைய சூரியனைப்போல 100 மில்லியன் மடங்கு பெரியது. ஆனா நடந்தது என்னமோ முதல் பாராவுல சொன்ன தின்னு ஏப்பம் வுட்ற கதைதான். * * *
விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் மூன்று செயற்கைக் கண்காணிப்புப் கோள்கள் தனித்தனியாக இதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. நடந்தது விண்ணியலாளர்களுக்கு இதெல்லாம் ஏற்கனவே புரிந்து போன சமாச்சாரம்தான். மாபெரும் கருங்குழிகள் (blackholes) தங்களுக்கு அருகில் இருக்கும் காற்றழுத்த மண்டலங்களைத் தன் பக்கம் சுழற்றி இழுத்து விழுங்கிவிடக்கூடியவை. இதற்குக் காட்சி ரீதியான நிரூபணமும் பலமுறை அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த நிரூபணங்களின் அடிப்படையில் அவர்கள் நீட்டியமைத்த கருதுகோள்; கருங்குழிகள் மாபெரும் நட்சத்திரங்களையும் அண்டங்களையும் கூட விழுங்கி ஏப்பம்விடக்கூடியவை. சென்ற வாரம் விண்ணில் சுற்றும் கணிப்புக்கோள்கள் இதைத்தான் மெய்ப்பித்திருக்கின்றன.

சென்றவாரம் நாஸாவின் சந்திரா எக்ஸ் கதிர் காட்சியகமும் (Chandra Observatory) ஐரோப்பிய விண்ணாராய்ச்சிக் கழகத்தின் எக்ஸ்எம்எம்-நியூட்டன் (XMM Newton) என்ற காட்சியகமும் கருங்குழி நட்சத்திரத்தைத் தின்று முடிக்கும் கடைசி நேரத்தில் ஏற்படும் எக்ஸ் கதிர்ப் பிழம்பைப் பதிவு செய்திருக்கின்றன. இந்தத் தரவுகளுடன் 1990, 1992 ஆம் ஆண்டுகளில் ஜெர்மனியின் ரான்ட்ஜென் செயற்கைக்கோள் பதிவுசெய்திருந்த தரவுகளை இணைத்துப் பார்க்கையில் இந்தப் பிரபஞ்ச விருந்துக்காட்சி மிகவும் துல்லியமாகத் தெளிவாகியிருக்கிறது.

சம்பந்தப்பட்ட கருங்குழி RX J1242-11 என்ற அண்டத்தினைச் சேர்ந்தது. பூமியிலிருந்து 700 மில்லியன் ஒளிவருடங்கள் தொலைவில் இருக்கிறது (விண்வெளியில் அண்டங்களுக்கிடையே உள்ள தொலைவை நம்முடைய மீட்டர், கிலோமீட்டர் சமாச்சாரங்களால் விவரித்துவிட முடியாது. ஒளி ஒரு வினாடிக்கு சராசரியாக 3 X 10^8 (அதாவது 3 போட்டு பக்கத்தில் எட்டு பூச்சியம் போடவேண்டும்) மீட்டர்கள் பயணிக்கக்கூடியது. அந்த ஒளி ஒரு வருடத்தில் {(60(வினாடி) X 60(நொடி) X 24(மணி) X 365 (நாட்கள்)} பயணிக்கும் தூரத்தை ஒரு ஒளிவருடம் என்று வரையறுப்பார்கள்). ஆக 700 மில்லியன் தொலைவில் நடந்தேறியிருக்கும் கலவரம்தான் இது (நல்ல வேளை நமக்குப் பக்கத்தில் இல்லை). சூரியன் அளவுள்ள நட்சத்திரத்தைக் கிழித்துக் கூறுபோட்டுத் தின்ன கருங்குழிக்குச் சில நாட்கள்தான் தேவைப்பட்டிருக்கிறது.

ஏன் கிழித்துக் கூறுபோட வேண்டும், அப்படியே மலைப்பாம்பு மாதிரி முழுதாக விழுங்கி செரித்துவிட முடியாதா? கட்டாயம் முடியும். ஏனென்றால் மாட்டிக்கொண்ட சூரியனின் அளவைப்போல் நூறு மில்லியன் மடங்கு பெரியது அந்தக் கருங்குழி. கிழிந்துபோனது மாட்டிக்கொண்ட சூரியனின் இயலாமைதான். இதைப் புரிந்துகொள்ள உங்களை ஒரு கருங்குழிக்குள் போட்டால் என்ன ஆவீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

கருங்குழிகள் பெரும்பாலும் நிறையத் தின்றுவிட ஆசை கொண்டவையல்ல. அவற்றுக்கும் டயட் சமாச்சாரம் எல்லாம் உண்டு. நீங்கள் உங்கள் பாதையில் போய்க்கொண்டிருந்தால் அதுபாட்டுக்குச் சமர்த்தாக உட்கார்ந்து கொண்டிருக்கும். ஆனால் தவறுதலாக அருகில் போய்விட்டால் அதனுடைய ஈர்ப்புவிசையில் கவரப்பட்டு உங்களுடைய வேகம் உந்தம் பெறும். நீங்கள் ஒரு காந்தத் துண்டு இரும்பை இழுப்பதுபோல உறிஞ்சப்படுவீர்கள். கருங்குழிகளின் ஈர்ப்புவிசை மிகவும் அதிகம். நீச்சல் வீரர்கள் குளத்தில் குதிப்பதுபோல முதலில் தலையை அருகில் கொண்டு சென்றீர்களானால், முதலில் அனுகும் தலை, காலைவிட அதிக ஈர்ப்புவிசையை உணரும். அந்த நிலையில், தலையும் காலும் வெவ்வேறு இழுக்கப்பட்டும் விசையில் மாறுபாடு இருப்பதால், உங்கள் இடுப்பு பிய்ந்து போகும். பின்னர் இதே சங்கதி தொடர்ந்து, நீங்கள் சுக்கு நூறாகச் சிதறிப்போவீர்கள் (எதற்கும் இன்றைக்கு இரவு படுக்கையில் தலையணைக்குக் கீழே வேப்பிலையையும், கரித்துண்டையும் வைத்துக் கொண்டுபடுங்கள். கெட்ட கனவுகள் வராமல் இருக்கும்).

கருங்குழிகள் தங்களிடம் வரும் எல்லாவற்றையும் விழுங்கிவிடக்கூடியவை. அவற்றின் மையத்தில் மிக அதிகமான ஈர்ப்புவிசைய் இருக்கும். எனவே கருங்குழியிலிருந்து எதுவும் வெளிய வரமுடியாது, இதில் தகவலும் உள்ளடக்கம். எனவே, கருங்குழிகளைப் பதிவு செய்யமுடியாது. ஆனால் கருங்குழிக்கு அருகில் வரும் எவையும் முன்பு சொன்னதுபோல் அதிக ஈர்ப்புவிசைக்கு ஆளாகி அவற்றின் திசைவேகம் அதிகரிக்கத்தொடங்கும். அப்படியான மாறும் திசைவேகத்தில் பயணிக்கும் நட்சத்திரங்களும் காற்றழுத்த மண்டலங்களும் பல விதமான நிறங்களை உமிழும். கருங்குழிகளின் அருகில் நடக்கும் ஒளிப்பிழம்புகளை வைத்துக்கொண்டுதான் குழிகளின் இருப்பு தீர்மானிக்கப்படுகிறது.

நிதானமான வேகத்தில் இந்தச் சூரியன் விழுங்கப்பட்டிருந்தால் கருங்குழியின் அருகில் தோன்றும் ஒளிப்பிழம்புகள் சீரானவையாக இருக்கும். மாறாக மூன்று விண்காட்சியங்களாலும் பதிவு செய்யப்பட்டவகையில் இந்த நிகழ்வு மிகவும் போராட்டங்கள் நிறைந்ததாக இருந்திருக்கிறது. அருகில் வந்த சூரியன் முடுக்கம் பெற்று சுழல்பாதையில் கருங்குழியை நோக்கி இழுக்கப்பட்டிருக்கிறது. பிறகு குழிக்கு அருகில்வந்தவுடன் அதனுடைய பாகங்களில் மாறுபடும் ஈர்ப்புவிசையால் அது கிழித்தெறியப்பட்டிருக்கிறது. அவ்வாறு பிளவுபட்ட பாகங்களில் ஒருசில கருங்குழியின் ஈர்ப்பு மண்டலத்தை விட்டு விலகி வெளியே தள்ளப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் இந்தக் காட்சி விண்ணாய்வாளர்களுக்கு மிகவும் அற்புதமாகத் தோற்றமளித்திருக்கிறது.

அதெல்லாம் சரிதான்; ராத்திரி படுக்கையில் தூங்கும்பொழுது கால்கள் இரண்டுபக்கமும் இழுபட, கழுத்து செங்குத்துத் திசையில் கழன்றோட நீங்கள் ஒரு நாள் கருங்குழியால் இழுபட்டுச் சிதற சாத்தியங்கள் எவ்வளவு? நம்முடைய பால்வீதி அண்டத்தில் கிட்டத்தட்ட நாலு மில்லியன் சூரியன்கள் இருக்கின்றன. அவற்றில் நம்முடைய சூரியன் கொஞ்சூண்டு விளிம்பில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. மையத்திலிருந்து தொலைவில் இருப்பதால் நம்முடைய நிலை கொஞ்சம் உறுதியானதுதான். மேலும், மற்ற அண்டங்களைப் போல இல்லாமல், பால்வீதி கொஞ்சம் அமைதியானது. (ஆரம்பகாலக் குழப்பங்கள் எல்லாம் அடங்கிவிட்டன). அது தவிர இழுத்துப்போட்டு கபளீகரம் செய்வதற்குப் பால்வீதி அருகில் இளிச்சவாய் சூரியன்கள் எதுவுமில்லை. இதெல்லாம்தவிர, எங்கோ 700 மில்லியன் ஒளிவருடங்களுக்கு அப்பால் நடப்பதே ஒளிப்பிழம்பாக நம்மால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நம்ம பேட்டையில் இதே மாதிரி கலவரங்கள் வந்தால் இன்னும் கண்கொள்ளாத காட்சியாக இருக்கும். அதை நம்மால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உணரமுடியும்.

உண்மை என்ன என்றால்; நம்ம பேட்டையில் அப்படி எதுவும் வானவேடிக்கை நடக்கவில்லை. எனவே உங்கள் தூக்கத்திற்கு நான் உத்தரவாதம். எதற்கும் ஒரு கொசுவர்த்திச் சுருளை ஏற்றிவைத்துவிட்டு சன்னலைச் சாத்திவைத்துவிட்டுப் படுங்கள்.