தொழில்நுட்பத்தை எப்படித் தடுக்கக்கூடாது என்பதற்கு அமெரிக்காவில் இசைவணிகர்கள் மற்றும் ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் மிகச்சிறந்த உதாரணங்களாக இருந்துவருகின்றன. உதாரணங்களாக, எம்பி3 வடிவ இசைக்கோப்புகளுக்கு அமெரிக்க இசைவணிகர்கள் எப்படியெல்லாம் தடைபோட முயற்சித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதேபோல டிவிடியில் சங்கேதங்களைத் தகர்த்த ஒருவர் அதைப்பற்றி சொல்லப்போக அவர்மீது வழக்கு தொடரப்பட்டு அவர் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டார் என்பதும் வரலாறு (தரக்குறைவான சங்கேதங்களைத் தயாரித்துவிட்டு, அதை யாரவது தகர்த்தால் அவர் குற்றவாளி என்பதுபோல நடத்தும் பம்மாத்துகள் தொழில்நுட்பத்தை எந்த அளவிலும் முன்னெடுத்துச் செல்லப்போவதில்லை). இது ஒருபுறமிருக்க தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு பிபிஸி இப்பொழுது உதாரணமாகச் செயல்படத் தொடங்கியிருக்கிறது. நான் ஆகஸ்ட் 2003ல் வலைக்குறித்த BBC Creative Archive உட்பட தனது அன்றன்றைய நிகழ்ச்சிகளை எப்படி கணினித் தொழில்நுட்பத்தின் மூலம் தன்னுடைய நுகர்வோர் பல வழிகளில் எளிதாகப் பயன்படுத்தலாம் என்று பிபிஸி முயன்றுவருகிறது.

இதன் முதல் கட்டமாக, பிபிஸி தன்னுடைய நிகழ்ச்சி நிரல்களை டிஜிட்டல் வடிவில் தரும். இது பதினைந்து நாட்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும். அதாவது வரும் வாரம், கடந்த வாரம் என இரண்டு வாரங்களுக்கான அனைத்து பிபிஸி நிகழ்வுகளும் கோப்புகள் பிணைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் வடிவில் வெளிவரும். ஏற்கனவே முடிந்து போன நிகழ்ச்சிகளை உடனடியாக உங்கள் கணினியில் இறக்கிக் கொள்ளமுடியும், வரவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க உங்களுக்கு நேரம் கிடைக்காது என்று உணர்ந்தால், உடனடியாக அதைப் பதிவு செய்துகொள்வதன் மூலம் ஒளிபரப்பானபிறகு தானாக உங்கள் கணினியில் வந்துவிடச் செய்யமுடியும்.

இந்த இடத்தில்தான் பிபிஸி புத்திசாலித்தனமாக நேரடி வலையமைப்புகளைப் பயன்படுத்துகிறது. அதாவது நான் ஒரு நிகழ்ச்சியை இறக்கிவைத்திருந்தால் நீங்கள் என்னிடமிருந்து அதை இறக்கிக்கொள்ளமுடியும். பிபிஸி கணினிகளுக்குப் போகத்தேவையில்லை. இப்படி வழங்கும் பணியை பகிர்ந்து தன்னுடைய நேயர்களிடம் மாற்றிவிடுவதால் பிபிஸியின் வழங்கிகள் அதிகச் சுமையில்லாமல் இருக்கமுடியும். இறக்கப்பட்ட நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட காலத்திற்கு மாத்திரம்தான் பார்வையிடத் தகுந்தவையாக இருக்கும். பிறகு காலாவதியாகிவிடும். இந்த முறையில் தனிநபர்கள் பிபிஸியின் அனைத்து சொத்துக்களையும் பதுக்கிவைத்துக்கொள்வது தடுக்கப்படுகிறது. இப்படியான காலாவதி கெடு நிகழ்ச்சிகளுக்கு ஏற்றபடி மாறும், மெஹா சீரியல்களான சோப்நாடகங்கள் இரண்டு வாரஙகளிலும், தகவல் பயன் அதிகமுள்ள அறிவியல் நிகழ்ச்சிகள் இரண்டு மாதங்களிலும் காலவதியாகும்படி அமைக்கப்பட்டும்.

இப்படி நேயர்கள் தங்களுக்குள்ளே பரிமாறிக்கொள்ளவும், இறக்கிக்கொள்ளவுமான நிரலியை பிபிஸியே வடிவமைத்துத் தரவிருக்கிறது. இந்த நிரலி தனி நபர்கள் அவர்கள் கணினியில் இருக்கும் தகவல்களை ஒழுங்கமைத்துக் கொள்ளவும், (காலக்கெடு விபரங்கள், இறக்கிய தினம் வரிசைப்படுத்தல், தங்களுக்கு முக்கியமான வரிசையில் ஒழுங்கமைத்தல்), பிறருக்குப் பரிமாறும் முறைகளை நெறிப்படுத்தவும் உதவும். இந்த நிரலியில் பயன்படுத்தப்படவிருப்பது P2P, Peer to Peer என்று அறியப்படும் நேரடிப்பரிமாறி முறை. இதைத்தான் காஸா, மார்பியஸ் போன்ற நிரலிகள் பயன்படுத்துகின்றன. இதே காஸா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்கள் எல்லோரும் தெய்வ குற்றம் செய்பவர்கள் போன்ற பிரச்சாரஙகளில் அமெரிக்க இசைவணிகர்கள் பில்லியன் கணக்கில் டாலர்களைச் செலவளித்து வருகின்றனர்.

அமெரிக்க வணிகர்கள் நேர்மையான முறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முயற்சிக்க பிபிஸியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது.

சொல்ல மறந்துபோனேனே, இந்த நிகழ்ச்சி இறக்கங்கள் எல்லாம் பிரிட்டனுக்குள்ளேதான் சாத்தியம் (முறைதானே, பிபிஸி அவர்களது வரிப்பணத்தில்தானே நடக்கிறது). இங்கே கனடாவில் கனேடிய ஒலிபரப்புக் கூட்டமைப்பு கிட்டத்தட்ட பிபிஸியின் நெறிமுறைகளில்தான் செயல்பட்டு வருகிறது என்பதால் எங்களுக்கும் இப்படியான வசதி கிடைக்கும் என்று நம்பமுடிகிறது.