விழித்திரையில் லேசர் அலகி மூலம் கூடுதல் படங்கள்

laser_retinal_scanner_concept.jpg மைக்ரோவிஷன் என்ற நிறுவனம் நாம் கண்ணால் காணும் காட்சிகளுடன் கூடவே, மேலதிக விபரங்களையும் விழித்திரையில் நேரடியாகச் சேர்க்கும் கருவியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

உதாரணமாக, நாம் ஒரு காரின் இயந்திரத்தைப் பார்க்கிறோம். அதிலிருக்கும் பாகங்களின் வடிவமைப்பு மற்றும் பெயர் அத்துடன் கூடவே காட்டப்பட்டால் எப்படியிருக்கும். இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புரியவேண்டுமா, மருத்துவர் ஒருவரின் குடலைத் திறந்து சிகிச்சை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக, குடலில் இருக்கும் புற்றுநோயை நீக்கும் அறுவை. அப்பொழுது அவர் பார்த்துக்கொண்டிருக்கும் குடலின் மீது சற்று நேரத்திற்கு முன் எடுத்த எக்ஸ்.ரே படம் கூடவே தெரிந்தால் எப்படியிருக்கும். (சில சமயம் விகடன் தீபாவளி மலர்களில் கடவுள் படங்களின் மீது ஒருவித ‘வெண்ணெய்த்தாள்’ இணைக்கப்பட்டிருக்கும். அந்த வெண்ணைத்தாளில் சில மந்திரங்கள் அல்லது பாடல்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இப்படி நேரடியாகக் காணும் காட்சியுடன் மேலதிகத் தகவல்களை நேரடியாக கண்களில் சேர்ப்பதுதான் மைக்ரோவிஷனின் உத்தி. laser_retinal_scanner_scheme.gifஇது எப்படிச் சாத்தியமாகிறது? கண்களில் ‘திரையிடப்பட வேண்டிய’ வரைபடத்தை ஒரு கணினி உருவாக்கும். பயனர் கண்ணாடியில் ஒரு சிறிய கருவி பொருத்தப்படும். அதிலிருக்கும் செலுத்தியில் அந்தத் தகவல் (கிட்டத்தட்ட கணினி விழியத்தில் VGA Adapter தரும் தகவல்களைப் போல) வந்து சேரும். பெரும்பாலும் கோட்டு வரைபடங்களாகத்தான் இந்தத் தகவல்கள் இருக்கும் (உதாரணமாக, ஒரு கார் எஞ்சினின் வரைபடம்). அங்கிருக்கும் லேசரை X-Y திசைகளில் விரைவாக நகர்த்துவதால் அந்தக் கோடுகள் உருவாக்கப்படும். அந்தத் தகவல் சில ஆடிகள் மற்றும் வில்லைகளின் உதவியால் சரியான அளவிற்கு மாற்றப்பட்டு கண்ணின் விழித்திரையில் திரையிடப்படும்.

ஏன் இப்படிச் செய்யவேண்டும்? புதிதாக கார் பழுதுபார்த்தலைக் கற்றுக்கொள்ளும் ஒருவருக்கு, அடிக்கடி புத்தகத்தைத் திறந்து வரைபடத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கும். என்ன இருந்தாலும் வரைபடத்தில் குறைந்த அளவில், இருபரிமாணத்தில் பார்ப்பதை வைத்துக்கொண்டு புரிந்துகொள்வது கஷ்டம்தான். அதற்குப் பதிலாக இயந்திரத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது அந்த வரைபடம் காட்சியளித்தால் அவர் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்தானே. இதைத் தான் ஹோண்டா பயிற்சி நிலையம் மைக்ரோவிஷன் உதவியுடன் செய்கிறது.

இன்னும் மேலே சொன்னதுபோல் மருத்துவர்கள் சிகிச்சையளிக்கும் பொழுது உதவிக்கு வரைபடங்கள், அல்லது இரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை போன்ற தகவல்களை அளித்து உதவமுடியும். கடலுக்குள் தேடும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சோனார் மூலம் கிடைக்கும் தகவல்களை வரைபடங்களுடன் கூட நேரடியாக அளித்து உதவமுடியும். இராணுவத்தில் நிலவரைபடத்தை கண்களில் காட்டி செல்லும் திசையை நேரடியாகப் புரிந்து கொள்ளச் செய்யமுடியும். இப்படிப் பல வழிகளில் இது உதவியாக இருக்கும்.

லேசரைப் பயன்படுத்தக் காரணம் என்ன? லேசர்களுக்கு சில அதி உயர் பண்புகள் உண்டு, அவை சாதாரண ஒளிக்கதிர்களைப் போல விரிவடைந்து திறனை இழப்பதில்லை. ஒரு மெல்லிய இழைபோல நேர்க்கோட்டில் அதிக இழப்பில்லாமல் பயனிக்கும். அவற்றுக்கு மிக அதிக தொலைவு ஒப்புமை (Directional Coherence or Temporal Coherence) இதன் மூலம் இவற்றை துல்லியமாக ஒரு திசையில் செலுத்தமுடியும். இன்னும் முக்கியமான விஷயம், லேசர்களின் இந்த ஒப்புமை திறத்தால் இவற்றை மிகச் சிறிய புள்ளியில் குவிக்கமுடியும் (Diffraction-limited focusing). எனவே விழித்திரை போன்ற அவ்வளவு சிறிய துல்லியமான இடத்தில் திரையிட லேசர்களை விட்டால் வேறு வழியில்லை.

இப்படி நேரடியாக லேசரை கண்களுக்குள் பாய்ச்சுவதால் ஆபத்தில்லையா? பொதுவில் லேசர்கள் ஆபத்தானவைதான். ஆனால் இங்கு ‘அலகிடும் லேசர்கள்’ (Scanning Lasers) என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் மிகவிரைவாக ஆடியைத் தொடர்ச்சியாகத் திருப்புவதன்மூலம் லேசரின் திசையை மாறிக் கொண்டேயிருக்கும். நம் கண்களுக்கு ஒரு புள்ளியில் பார்வையைக் குவிக்கும் திறன் 0.25 நொடிக்கு மேல் கிடையாது (வேறு வார்த்தைகளில் சொன்னால், கால் நொடிக்குமேல் நம்மால் ஒரு திசையில் பார்த்துக்கொண்டிருக்க முடியாது, விழிக்கோளம் அசைந்து மாற்றிவிடும்). இந்த அலகிடும் முறை, கண்ணின் சிமிட்டல் திறன் (Blink Response) இரண்டையும் கொண்டு கண்ணின் எந்த ஒருபகுதியிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் லேசர் பாயமல் பார்த்துக் கொள்ள முடியும். இதன் மூலம் அவற்றின் ஆபத்து தவிர்க்கப்படும். என்ன சிக்கலாக இருக்கிறதா? இதே முறையில்தான் நம் அங்காடியில் பார்கோட் அலகிடும் கருவிகள் செயல்படுகின்றன.

இந்தக் கருவிக்கு வருங்காலத்தில் நிறையப் பயன்கள் இருக்கும்.

* * *
இனி கொஞ்சம் தனி விஷயம். கிட்டத்தட்ட இதேபோல ஒரு கருவியை ஒரு நிறுவனத்திற்கு வடிவமைக்கும் முயற்சியில் இப்பொழுது நான் இருக்கிறேன். நான் வடிவமைத்துக் கொண்டிருப்பது கொஞ்சம் வித்தியாசமானது. இதன் பெயர் விபரம் காட்டும் தலைக்கவசம் (Helmet Mounted Display). சில மாதங்களுக்கு முன்னால் பார்முலா-1 கார் பந்தய வீரர் மிகைல் ஷ்உமாக்கர் (Michael Schumacher) ஒரு புதிய தலைக்கவசத்தைச் சோதித்துப் பார்த்தார். அவருடைய பார்வை நேராக இருக்க, காரின் வேகம், இயந்திரச் சுழற்ச்சி போன்ற முக்கிய தகவல்கள் அவருடைய பார்வையில் நேரடியாகச் சாலையில் தெரியுமாறு காட்டப்பட்டன. இதனால் வேகமாகச் செல்லும்பொழுது காரின் நிலவரம் தேடி அவர் கண்களைச் சாலையிலிருந்து எடுக்கவேண்டிய அவசியமில்லை. அவருக்கு இந்தக் கவசம் மிகவும் பிடித்துப் போயிருப்பதாகச் சொல்கிறார்கள். விரைவில் அவருடைய தம்பியும் இன்னொரு பந்தய வீரருமான ரால்·à®ªà¯ ஷ்மாக்கரும் (Ralf Schumacher), மெக்ளாரன் காரோட்டி டேவிட் கூத்தார்ட் (David Coulthard) -ம்கூட இதுபோன்ற கவசங்களைச் சோதித்து வருகிறார்கள். இந்தக் கவசங்களை உருவாக்கும் நிறுவனம் ஜெர்மனியைச் சேர்ந்த Schuberth என்ற நிறுவனம். பார்முலா-1 கவசம் என்றால் என்ன விலை என்பதை அறிந்துகொள்ளமுடியும்.

kopin_display.jpgஇப்பொழுது நான் ஈடுபட்டிருக்கும் வடிவமைப்பு இதேபோன்ற கவசத்தைச் சராசரி ஸ்கீயிங் ஆர்வலர்களுக்கும் கைக்கெட்டும் வகையில் விலையைக் குறைத்துச் செய்வது. மலைச் சரிவில் அதிவேகத்தில் இறங்கிக்கொண்டிருப்பவர் தன்னுடைய வேகம், இருக்குமிடம் (GPS) போன்ற விபரங்களைக் கவசத்தில் நேரடியாகக் காட்டும் முயற்சி. இதில் நான் பயன்படுத்தும் கருவிகளுக்குள்ளே என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது 1.1 செ.மி அளவுள்ள திரைதான். அதாவது கிட்டத்த உங்கள் கட்டைவிரல் நகத்தில் கணினியின் முழுத்திரையையும் காட்டும் உத்தி. இதைத் தயாரிப்பவர்கள் கோப்பின் என்ற நிறுவனம். இதற்கு மேல் இதைப் பற்றி நான் இங்கே எழுதினால், எனக்குப் பணம் கொடுக்கும் நிறுவனத்தினர் என்னைத் தொலைத்துவிடுவார்கள்.