<%image(1/20041120-bharathi.png|125|166|பாரதி)%>

மகாகவி பாரதிக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக என்னுடைய அடுத்த இசைத்தெரிவு.

பாரதியாரின் அற்புதமான பாடல்களில் ஒன்று நல்லதோர் வீணை செய்தே. இதைக் காலம்காலமாக நம் இசைக்கலைஞர்கள் எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

முழுக்க முழுக்க பாரதியின் பாடல்களைக் கொண்டு உருவான படம், ஏழாவது மனிதன். தமிழில் அதிகம் கவனிக்கப்படாமல் பல அற்புதமான இசைக்கலைஞர்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள், இவர்களின் முக்கியமானவர் எல். வைத்தியநாதன் (மற்றவர்களும் என் வரிசையில் வருவார்கள்). உலகப் புகழ் பெற்ற தன்னுடைய சகோதரர்கள் எல். சுப்ரமணியம், எல். சங்கர் இவர்களுக்கு இணையான இசைத்திறமை உடையவர் எல்.வி. தமிழில் மிகச் சில படங்களிலேயே இசையமைத்திருக்கிறார். மறக்கமுடியாத படம் ஏழாவது மனிதன், படத்தில் திரைக்கதையோட்டத்திற்கு இணையாகப் பொருத்தமாக எடுக்கப்பட்ட பாரதியின் பாடல்கள் கோர்க்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பாடலையும் வெவ்வேறு பாடகர்கள் பாடியிருப்பார்கள். மகாகவி பாரதியின் குலவாரிசான ராஜ்குமார் பாரதி கச்சேரிகளில் தமிழைசைக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆரம்பகாலங்களில் அற்புதமான கச்சேரிகள் சிலவற்றை கும்பகோணத்தில் கேட்டிருக்கிறேன்.

<%media(music/20041120-nallathOr_ezhavathu_manithan.rm| இசை: எல்.வைத்தியநாதன்)%>
பாடியவர்: ராஜ்குமார் பாரதி
படம்: ஏழாவது மனிதன்

இந்தப் பாடலின் ஒற்றை வரிகூட திரைப்படத்தில் காட்சிக்கு ஏற்றபடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது

<%media(music/20041120-nallathor_veenai_ore_oru_kiramaththiley.rm| இசை: இளையராஜா)%>
பாடியவர்: கே. சித்ரா
படம்: ஒரே ஒரு கிராமத்திலே

பாரதியின் வாழ்க்கை திரைப்படமான பொழுது மீண்டும் இதே பாடலுக்கு இளையராஜா மறுவடிவம் கொடுத்தார். மகாகவி எழுதிய பாடலை அவருடைய வாழ்க்கைக்கு ஏற்றபடி பயன்படுத்திய விதம் நன்றாக இருந்தது. இந்தப் படத்தை நான் கொஞ்சம் தூங்கி வழிந்துகொண்டு (மறுநாள் குறுந்தகடைத் திருப்பித் தரவேண்டும்) பார்த்ததில் படத்தைப் பற்றிய நினைவுகள் தெளிவாக இல்லை. அடுத்தமுறை இந்தியாவுக்குப் போகும்பொழுது குறுந்தகடு அல்லது டீவீடி கிடைக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. கட்டாயம் இன்னொருமுறை பார்க்க வேண்டும்.

<%media(music/20041120-nallathOr_veenai_bharathi_illayaraja.rm| இசை: இளையராஜா)%>
பாடியவர்கள்: இளையராஜா, மனோ
படம்: பாரதி

இந்தப் பாடல் திரையிசையில் மாத்திரமல்லாமல் பிற வடிவங்களிலும் வந்திருக்கிறது. மெல்லிசையில் பலரும் முயன்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் முதலில் பாம்பே ஜெயஸ்ரீ. இந்தப் பாடலில் பல இடங்களில் பாம்பே ஜெயஸ்ரீ தமிழைக் கொலை செய்வது வேதனையாக இருக்கிறது. (ஷிவ ஷக்தியைப் பாடும் நல்லகம் கேட்பதைக் கூட ஒத்துக் கொள்ளலாம், ஆனால் ஷக்தியைச் ஷொல்லடி என்று கேட்பது)? பொதுவில் கர்நாடக இசைப் பாடகிகளுக்கே இந்த ச, ஸ, ஷ குளறுபடி இருக்கிறது. இது டி.கே. பட்டம்மாள், எம்.எஸ். சுப்புலெட்சுமியில் தொடங்கி இன்று வந்த ஜெயஸ்ரீ, ஷ்ரேயா கோஷால் வரைத் தொடருகிறது. பெரும்பாலான ஆண் பாடகர்கள் ஓரளவுக்குச் சரியாகவே பாடுகிறார்கள். உன்னி கிருஷ்ணனுக்குக் கொஞ்சம் உதைக்கும்.

<%media(music/20041120-nallathor_bjeyashree_atma.rm| இசை: {தெரியவில்லை})%>
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
தொகுப்பு: ஆத்மா,

உன்னி கிருஷ்ணன் பாடிய வடிவமும் உண்டு. எம்.எஸ். விஸ்வநாதன் கூட தனி முயற்சியாக இதற்கு இசையமைத்திருக்கிறார். நன்றாக வந்திருக்கிறது.

<%media(music/20041120-Nalladhoor_Veenai_unnikrishnan.rm| இசை: எம்.எஸ். விஸ்வநாதன்)%>
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்
தொகுப்பு: ஆனந்தராகம்

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு முயற்சி. அமெரிக்காவிலிருந்து இசையமைக்கும் இளைஞர் (வலைக்குறிப்பு பக்கமெல்லாம் கூட வந்துபோகிறார் என்று நினைக்கிறேன்) ஸ்ரீகாந்த் மஹாகவி என்ற ஒரு அற்புதமான குறுந்தகடை வெளியிட்டிருக்கிறார். இதில் எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா, ஸ்ரீனிவாஸ் என்று பல முன்னணி திரையிசைக் கலைஞர்கள் பாடியிருக்கிறார்கள். (இவரைப் பற்றி விரிவாக இன்னொரு நாள்). இதிலிருக்கும் நல்லதோர் வீணை பாடலை ஸ்ரீனிவாஸ் பாடியிருக்கிறார். சற்று வித்தியாசமான இசையமைப்பு. கணினி மூலம் பதிவு செய்து சில குரல்மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கின்றன.

<%media(music/20041120-nallathOr_veeNai_srikanth_srinivas.rm| இசை: ஸ்ரீகாந்த்)%>
பாடியவர்: ஸ்ரீனிவாஸ்
தொகுப்பு: மஹாகவி

ம்ம்.. எல்லாவற்றையும் சொல்லியாகிவிட்டது, இனி கிளைமாஸ்க்குப் போகலாமா. என் மனதிற்குப் பிடித்த வடிவம், இதோ

<%media(music/20041120-nallathOr_veeNai_varumaiyin_niram_sigappu.rm| இசை: எம்.எஸ். விஸ்வநாதன்)%>
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
படம்: வறுமையின் நிறம் சிவப்பு

நேற்றைய என்னுடைய முதல் தெரிவாக வந்த நிழல்கள் படப்பாடலுக்கு நேரடிப் போட்டியாக வந்த திரைப்படம் வநிசி. தெரிந்தோ தெரியாமலோ அப்பொழுது தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் என்று அடையாளம் காணப்பட்ட இருவர் வேலையில்லாத் திண்டாட்டம் என்ற கருத்தை மையமாக வைத்து ஒரே சமயத்தில் படங்களை எடுத்தார்கள். (இதற்கு முக்கிய காரணமும் இருக்கிறது எண்பதுகளின் துவக்கம் இந்தியாவில் வேலைவாய்பு மிகவும் குறைவாக இருந்த காலம். பாலச்சந்தரின் படத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி, பிரதாப் போத்தன் என்று நட்சத்திரங்கள் இருந்தார்கள், மாறாக, நிழல்கள் அதிகம் பிரபலமாகாத ரவி, ரோஹினி, சந்திரசேகர் என்று இருந்தது. நிழல்கள் படம் முழுக்க ஒரே சோகம் அப்பியிருக்கும். மாறாக, வறுமையின் நிறம் சிவப்பில் கொஞ்சம் நகைச்சுவை இருந்தது. எல்லாவற்றையும் விட நிழல்கள் சோகத்தில் முடியும், வநிசி-யில் ஒரு தீர்வு இருந்தது.

வநிசியில் மகனைக் காணமல் ஏங்கும் பூர்ணம் விஸ்வநாதன், அவனுக்குப் பிடித்த பாரதி பாடலைப்பாடி அப்படியாவது திரும்ப வரமாட்டானா என்று தேடுவார். பாடல் காட்சியில் பூர்ணத்தின் நடிப்பு மிகையில்லாமல் பொருத்தமாக இருக்கும்.

சொல்லத் தேவையில்லை, விஸ்வநாதனின் ஆர்ப்பாட்டமில்லாத அதே சமயத்தில் மிக மிக பொருத்தமான அற்புதமான இசை. எஸ்.பி.பியின் தேன் கலந்த குரல். ஏக்கம், பரிதவிப்பு, ஏமாற்றம் இவை எல்லாவற்றையும் பாடல் முழுவதும் இழையோடவிட்டிருப்பார்.

விசையுறு பந்தினைப் போல் என்ற வரியை இன்னொருமுறை கேட்டுப் பாருங்கள்.