என்னுடைய வழக்கமான கனேடியத் தமிழ் வானொலி வாராந்திர நிகழ்ச்சியில் விஞ்ஞானச் செய்திகளுக்குப் பிறகு இடம்பெறும் விஞ்ஞான அலசல் என்ற பகுதியில் “நோஸ்ட்ராடமஸ்ம் அறிவியலும்” என்ற தலைப்பை எடுத்துக் கொண்டோம். (பெரும்பாலான நிகழ்ச்சிகள் இப்பொழுது நேயர்கள் வழங்கும் தலைப்பிலேயே நடக்கத் தொடங்கிவிட்டன, இது நேயர்களிடையே பெருகிவரும் ஆர்வத்தைக் காட்டுகிறது). கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் வரை நடக்கும் இந்தப் பகுதியில் திரு. விஜே குலதுங்கன், திரு. மாறன் செல்லையா இவர்களுடன் நானுமாகச் சேர்ந்து எடுத்துக்கொண்ட தலைப்பை (கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்கு) எங்களிடையேயான உரையாடல் மூலம் விளக்குவோம். தொடர்ந்து நேயர்கள் தொலைபேசிமூலம் நேரடியாகக் கேள்விகளைக் கேட்க விடைகளைத் தருவோம். சில சமயங்களில் எங்களிடையே போதுமான தகவல் இல்லாத நேரங்களில் அடுத்த வாரத்தில் அதற்கான விடைகளைத் தருவோம்.

சென்ற வாரம் நோஸ்ட்ராடமஸின் ஆரூடங்கள் என்று சொல்லப்படுவனவற்றில் இருக்கும் அபத்தங்களை விளக்கினோம். தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புகளில் முதல் நான்கு அல்லது ஐந்து நேயர்கள் எங்கள் விளக்கங்களைப் பாராட்டியும், உற்சாகமாகக் கூடுதல் தகவல்களையும் ஆரூடங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். தொடர்ந்து ஓரிருவர் எந்தவிதமான கூடுதல் தரவுகளும் இல்லாமல் இதில் இருக்கும் நம்பிக்கைகளை நீங்கள் கேலி செய்வது கூடாது என்று தொனிக்க பேசிவிட்டுப் போனார்கள் (நிகழ்ச்சியில் எந்த வகையிலும் கேலி தொனிக்கவில்லை என்பது நிச்சயம்). கடைசியாக ஒருவர் வந்து “நீங்கள் இப்பொழுது இவற்றுக்கான அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இல்லை என்று சொல்வது உங்கள் அறிவியலின் இயலாமையைத்தான் காட்டுகிறது. ஆரூடங்களின் நிகழ்வுகளை விளக்க உங்கள் அறிவியலால் முடியவில்லை”. என்ற ரீதியில் நீண்ட நேரம் பேசிவிட்டு இறுதியாக ஒன்றைச் சொன்னார். “ராமாயணத்தில் புஷ்பக விமானம் விளக்கப்பட்டிருக்கிறது. இதையும் நீங்கள் இல்லை என்று மறுக்கிறீர்கள். அப்படியான ஒரு வாகனம் அந்தக் காலங்களில் புழக்கத்தில் இல்லாதிருந்தால் எப்படி அதைப்பற்றி இவ்வளவு சர்வசாதாரணமாக எழுதிவிட்டுப் போகமுடியும்?” என்று கேட்டார். அதற்கு நான் “உதாரணமாக, இப்பொழுது டைனோசார்கள் உயிர்ப்பில் இல்லை. இவற்றைப் பற்றிய கதைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் புஷ்பக விமானங்கள் போலில்லாமல் டைனோசார்கள் ஒருகாலத்தில் ஜீவித்திருந்ததற்கு அடையாளமாக அவற்றின் எலும்புக்கூடுகள் நிறைய இடங்களில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, கடந்த காலத்தில் டைனோசார்களின் இருப்பு நிச்சயமாகிறது. ஆனால் இதைப்போலில்லாமல் புஷ்பகவிமானம், வேண்டாம், அதுதொடர்பான ஒரு சில பாகங்கள்கூட நம்மூரில் அகழ்ந்தெடுக்கப்படவில்லை. மேலும் புஷ்பக விமானத்தைவிட எளிமையான பிற தொடர்பான சாதனங்கள் நம் வரலாற்றில் தொடர்ச்சியாகப் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரம் இல்லை. எனவே, புஷ்பக விமானத்தின் கடந்தகால இருப்பைப்பற்றிய எண்ணங்கள் முற்றிலும் புனைவாகிப் போகின்றன”, என்று சொன்னேன்.

அதற்கு அவர், “இல்லை புஷ்பக விமானங்களின் பாகங்களை இன்னும் அகழ்ந்தெடுக்க முடியாமை உங்கள் தொழில்நுட்பத்தின் குறைபாடாகத்தான் கொள்ளப்பட வேண்டும். எனவே, அது இல்லை என்றாகும்வரை அது உண்மை என்பதுதான் என் தீர்ப்பு” என்ற ரீதியில் கூறினார்.

அறிவு வளர்ச்சியின் ஆதாரத்தூணே சந்தேகிப்பதுதான். இல்லாத ஒன்றை இருப்பதாக உருவகம் செய்துகொண்டால் அதன் மீது கட்டப்படுவன புனைவுகளாத்தான் அமையமுடியும். மாறாக, ஒன்றைப்பற்றிய கருத்து வரும்பொழுது அது இல்லை என்று சந்தேகித்து, அந்த சந்தேகத்தைத் தீர்க்கமான சோதனைகளாலும் கண்டுபிடிப்புகளாலும் படிப்படியாகப் போக்குவதே அறிவு வளர்ச்சியை உறுதிசெய்யும். கருதுவதையேல்லாம், கேள்விப்படுவதையெல்லாம் நேரடியாக உண்மைகள் என்று வரித்துக் கொண்டால் அதற்கு மேல் அவற்றைப் பற்றிய நம் அறிவை, நம் புரிதலை முன்னெடுத்துச் செல்லமுடியாது.

* * *

பொதுவில் நேரடி அறிவியல் தலைப்புகளாக இல்லாமல் இதுபோன்ற பொய்யறிவியலைப் பற்றிய நிகழ்ச்சிகளும் வானொலியில் அவ்வப்பொழுது தேவைப்படுகின்றன. ஒரு புறத்தில் நேரடியாக அறிவியல் பற்றிய அறிவை வளர்ப்பதுடன் மறுபக்கத்தில் அறிவியல் சாயம் பூசப்பட்டு விலைபோகும் நம்பிக்கை சமாச்சாரங்களைப் பற்றிய எதிர்முறை கண்ணோட்ட நிகழ்ச்சிகளையும் அவ்வப்பொழுது சேர்த்துக்கொள்வது ஓரளவுக்கு நல்ல பலன் தருகின்றது என்றே சொல்லவேண்டும். இதைப் போல சர்வரோக நிவாரணி எண்ணெய் (இந்தியாவிலிருந்து ஒருவர் இங்கே வந்து அமோகமாக விற்றுவிட்டுப் போனார்), வாஸ்து சாஸ்திரம், அதிர்ஷ்டக் கற்கள் என்று பெய்யறிவியல்களை இலக்காக்கும் நிகழ்ச்சி வருங்காலத்தில் பத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் வழக்கமான அறிவியல் தலைப்புகளுடன் சேர்த்துக்கொள்ளும் உத்தேசம் இருக்கிறது. பொதுவில் இதுபோன்ற தலைப்புகள் அக்கப்போர்களாகப் போய்முடிந்தாலும் ஒன்றிரண்டு விஷயங்களாவாது தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பதன் மூலம் உரைக்க வாய்ப்பிருக்கிறது.

இயற்பியல் பேராசிரியர் ரிச்சர்ட் பெய்ன்மான் ஒருமுறை இப்படிச் சொன்னார் “பொய்யறிவியல்களைப் பற்றிய அக்கப்போர்களில் கலந்துகொள்ளாமல் அறிவியலாளர்கள் ஒதுங்கிப் போகக்கூடாது. ஏனென்றால் பொய்யறிவியலுக்கு இருக்கும் பணபலம், மற்றும் அதிகாரச் சார்புகள் இவற்றின் மூலம் பொதுமக்களின் வரிப்பணம் இவற்றில் நிறைய திசை திரும்பிப் போகிறது. இப்படி சராசரி குடிமகனின் பேருழைப்பு விழலுக்கு நீராயப் போகாமல் காக்கவேண்டிய கடமை சமூக சிந்தனையுள்ள ஒவ்வொரு அறிவாளிக்கும் தேவை. எனவே, தைரியமாக இதுபோன்ற வாதங்களில் பங்குபெறுங்கள். இவற்றை வெற்றி தோல்வி என்றோ, வெற்றுப் பேச்சென்றோ கருதாமல் ஒரு சமூகக் கடமையாக எண்ணிக் கொள்ளுங்கள். இல்லையென்றால உண்மையான அறிவியலின் வளர்ச்சி இதுபோன்ற மூடத்தனங்களால் தடைபட்டுப் போவது நிச்சயம்”