2004 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் உடற்கூறியல் துறைகளுக்கான நோபெல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் ஆக்ஸெல் (Richard Axel, Columbia University) மற்றும் லிண்டா பக் (Linda Buck, Fred Hutchinson Cancer Research Center, Seattle and Howard Hughes Medical Institute) இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. மனிதனின் வாசனை உணர்திறன் மற்றும் நாசியின் செயல்பாடு குறித்த புரிதலுக்காக இந்தப் பரிசு இருவருக்கும் சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மனித மரபணுக்களில் மூன்றில் ஒருபங்கு இந்த மோப்பச் செயலில் ஏதாவது ஒருவகையில் தொடர்புகொண்டிருப்பதாக இவர்கள் ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்துள்ளது.

<%image(1/20041024-med_laureates04.jpg|259|136|Richard Axel and Linda Buck)%>

நாசியின் செயல்பாடு

மூக்கில் இரண்டு துவாரங்கள் உள்ளன, இவற்றுக்கு நாசித்துளைகள் (Nostrils) என்று பெயர். இந்த நாசித்துளையை ஒரு மெல்லிய சுவர் (Septum) போன்ற தடுப்பு பிரிக்கிறது. மூக்கின் பின்னால், நம் முகத்தின் மையத்தில் நாசிக்குழி (Nasal Cavity) இருக்கிறது. இது தொண்டையுடன் தொடர்பு கொண்டது. நாம் சுவாசிக்கும் பொழுது உள்ளிழுக்கப்படும் காற்று நாசிக்குழியின் மேல் சுவரைச் சென்றடைகிறது. மோப்பச் புறச்சவ்வு (Olfactory Epithiliam) என்றழைக்கப்படும் ஒருவித படலம் அதை மூடியிருக்கிறது. இந்தப் புறச்சவ்வில் பல இலட்சம் மோப்ப வாங்கிகள் (Olfactory Receptors) இருக்கின்றன. இவை மிகவும் சிறியவை. இவையே வாசனையை அறிந்து மோப்ப நரம்பு (Olfactory Nerve) வழியாக மோப்பக் கிழங்கிற்குக் (Olfactory Bulb) உணர்த்துகின்றன. மோப்பக் கிழங்கு மூளைக்கு மிக அருகே இருக்கிறது. இங்கிருந்து வாசனை பற்றிய உணர்வுகள் மூளையின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வாசனை அடையாளம் காணப்படுகிறது.

<%image(1/20041024-smelling.gif|250|220|smelling)%>

ஒவ்வொரு மோப்ப வாங்கிச் செல்லும் ஒரே ஒரு குறிப்பிட்ட வாசனையை அறிவதற்கான திறமையைக் கொண்டது. எனவே ஒவ்வொரு வாங்கியாலும் சில வாசனைகளை மாத்திரமே அறியமுடியும். ஒரு வாசனையை அறிக்கூடிய எல்லா வாங்கிகளும் மோப்பம் அறிந்தவுடன் மூளைக்குத் தங்கள் தகவல்களைக் கடத்துகின்றன. இந்தத் தகவல்கள் மூளையில் ஒட்டு மொத்தமாகத் தொகுக்கப்பட்டு அடையாளம் காணப்படுகிறது.

வாசனையின் முக்கியத்துவம்

மனிதனின் பல உடற்கூறியல் செயற்பாடுகளுக்கு வாசனைகளை அடையாளம் காணுதல் மிகவும் முக்கியமானது. உதாரணமாக, நல்ல உணவின் வாசனையால் செரிமான உறுப்புகள் தூண்டப்படுகின்றன. உணவின் வாசனையை நுகர்ந்தவுடனேயே குடலில் உணவைச் சீரணிக்கத் தேவையான நொதியங்கள் உற்பத்தியாகத் தொடங்குகின்றன. இன்னும் சில உயிரினங்களில் ஆரம்பகால ஜீவிதம் வாசனையையே சார்ந்திருக்கிறது. உதாரணமாக, பிறந்த உடன் கண்மூடியிருக்கும் நாய்க்குட்டிகள் மோப்பத்தின் உதவியுடனேயே தாயின் முளைக்காம்புகளை அடையாளம் காணுகின்றன. இன்னும் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை, ஏன் மனிதனில் உடலுறவைத் தூண்டுதல் முதலான செய்ற்பாடுகளில் வாசனைகள் பெரும்பங்கை வகிக்கின்றன.

வாசனையின் நிரந்தரம்

என்னுடைய சிறு வயதில் என் அப்பாவின் நண்பர் ஒருவர், தினமும் வீட்டுக்கு வருவார். என் அம்மாவிடம், “அப்பிடியே ரோட்டோரம் போயிக்கிட்டிருந்தேன், ஒங்க காப்பியோட வாசனை வந்தது. சார், இருக்காறா?” என்று கேட்டுக் கொண்டு வருவார். என் அப்பா அந்த நேரத்தில் வீட்டில் இருப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு என்பது அவருக்குத் தெரியும். “பரவாயில்லங்க, நா அப்பொறமா சாரைப் பாத்துக்கிறேன். ஒரு அரை டம்ளர் காப்பி கொடுங்க” என்று கேட்டு வாங்கி சாப்பிட்டுவிட்டுப் போவார். இதில் விசேடம் என்னவென்றால் அவர் ‘ரோட்டோரம்’ போய்க்கொண்டிருப்பது பெரும்பாலும் மோபெட்டிலாக இருக்கும். மிகக் குறுகிய அவகாசத்திலும் மனிதனின் மோப்பச் செயற்பாடு மிகவும் சிறப்பாக நடக்கிறது.

இன்னும் என்னுடைய சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் மதிய உணவு சமயத்தில் சமைக்கப்படும் சோள ரவை உப்புமா தீய்ந்துபோகும் வாசனை எனக்கு இப்பொழுதும் நினைவில் இருக்கிறது. இதுபோல எத்தனையோ வருடங்கள் கழித்து கோவிலில் இருக்கும் வௌவால் புழுக்கைகளின் நாற்றம், கோடி வீட்டு நீலகண்டன் மாமாவின் மேல்துண்டு நாற்றம் என்று பலவும் பசுமையாக நினைவில் நின்றுபோகின்றன.

இன்னும் சிலபேருக்கு ஒரு முறை சாப்பாட்டில் வந்த அழுகல் தேங்காய் நாற்றத்தால் காலத்திற்கும் தேங்காய்த் துவையல் மீது வெறுப்பு நிரந்தரமாகிப் போகின்றது. பல நேரங்களில் தீயும் வாசனை போன்றவை நம் பாதுகாப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.

வாசனை வாங்கிகள்

நம் புலன்களின் செயற்பாடுகளில் மோப்பம்தான் முதன் முதலாக மூலக்கூறு அடிப்படையில் உணர்ந்தறியப்பட்டது. இதில் இந்த வருடம் நோபெல் பரிசு பெறும் ஆக்ஸெல் மற்றும் பக் இருவரின் பங்களிப்புகளும் மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. நம் மரபணுக்களில் மூன்றில் ஒரு பங்கு மோப்பச் செயலுடன் தொடர்புகொண்டவை என்பது இவ்விருவராலும் நிறுவப்பட்டுள்ளது.

மூக்கில் இருக்கும் வாசனை வாங்கிகள் ஒவ்வொன்றும் புரதங்களுடன் தொடர்பு கொண்டவை. ஆனால் இவற்றுக்கான அளவிலும் புரதத் தொகுதிகளிலும் பெரிய மாறுபாடு உண்டு; இதுவே இவை ஒவ்வொன்றும் விசேடமான வாசனைகளால் ஏன் எழுப்பப்படுகின்றன என்பதற்குக் காரணம். ஒவ்வொரு வாங்கிகளும் ஒரு குறிப்பிட்ட வகையான அமினோ அமிலங்களின் சங்கிலியால் செல் சவ்வுடன் பிணைக்கப்படுகின்றன. இந்தச் சங்கிலிகளின் மறு முனையுடன் வாசனை தொடர்புள்ள மூலக்கூறுகள் இணைய முடியும்.

<%image(1/20041024-odorant_eng.gif|557|514|Olfactory Function)%>

வாசனைகள் ஒவ்வொன்றும் பல வாசனைதரும் மூலக்கூறுகளால் ஆன தொகுப்புகளே. இவற்றிலிருக்கும் ஒவ்வொரு வாசனை மூலக்கூறும் வெவ்வேறு வாசனை வாங்கிகளைத் தூண்டக் கூடியவை. இது மூளையில் கலவை சங்கேதத்தை உருவாக்குகிறது, இந்தக் கலவை ஒரு குறிப்பிட்ட வாசனை வகையாக (அழுகல் நாற்றம், பூமணம், புகைச்சல்,…). இதைப் போல கிட்டத்தட்ட பத்தாயிரம் வெவேறு வகையான வாசனைகளை நம்மால் அறியமுடியும்.

மனிதனைவிட நாய்களும் எலிகளும் மோப்பத்திறன் அதிகமுள்ளவை. இதற்குக் காரணம், மோப்பப் புறச்சவ்வின் பரப்பு (எனவே மொத்த வாசனை வாங்கிகளின் அளவு) இந்த விலங்குகளில் அதிகமாக இருக்கிறது.

வாசனையின் மரபுக்கூறு

ஆக்ஸெல், பக் இவர்களின் கண்டுபிடிப்பின்படி ஒவ்வொரு வாசனை வாங்கியும் தனித்தனியான மரபுக்கூறுடன் தொடர்பு கொண்டவை. இது மிகவும் ஆச்சரியமான விஷயம். இதைத் தவிர இவர்கள் இருவரும் ஒரே மாதிரியான வாசனைகள் குறிப்பிட்ட வாசனை வாங்கிகளை மட்டுமே தூண்டி எழுப்புவதையும் துல்லியமாக சோதனைகள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். இது மோப்பத்தில் மாத்திரமல்லாது பிற புலன்களின் தொழிற்ப்பாடுகளுக்கும் ஓரளவு பொருந்துவதாக தற்பொழுது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் ஆக்ஸெல், பக் இருவரின் கண்டுபிடிப்புகளும் பொதுவில் விலங்குகளின் புலன்களைப் பற்றிய அடிப்படை புரிதலுக்கு இட்டுச் செல்லக்கூடியவை.