குரல் வளத்திற்கு உதாரணம் காட்ட வேண்டுமென்றால் உலகெங்கும் போய் தயக்கமில்லாமல் காட்ட விரும்பும் ஒரே பாடகர் பாக்கிஸ்தானின் நுஸ்ரத் ஃபடே அலிக் ஹான். அடிக்கட்டையிலிருந்து உச்சஸ்தாயி வரைக்கும் மைக்ரோஸெகன்ட் இடைவெளியில் துள்ளி எழக்கூடிய ஒரே பாடகர் நுஸ்ரத். தன்னுடைய நாற்பத்தெட்டாவது வயதில் 1997ல் இவர் இறந்து போனது இசை உலகிற்குப் பெரிய இழப்பு என்றால் மிகையில்லை.

பாடல் : தயாஹர் யே-இஷ்க் மே
பாடியவர் : நுஸ்ரத் பஃடே அலிக் ஹான் மற்றும் கவ்வாலி குழுவினர்
தொகுப்பு : ஷாப்பாஷ் (ரியல் வோர்ல்ட், 1993)

பதினான்காம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய சூஃபி இஸ்லாமிய சங்கீதத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர் நுஸ்ரத் (கவ்வாலியைத் தோற்றுவித்தவர் அமீர் குஸ்ரூ என்றும் சிலர் சொல்வார்கள்). சூஃபிக்களின் பாடல்கள் பெரும்பாலும் இறைவனைப் போற்றியோ அல்லது இறையடியார்களைப் போற்றியோ பாடப்பட்டிருக்கும். இந்தக் கவ்வாலி பாடல்களில், சூஃபி வழக்கப்படி ஒன்பது பேர் பங்கு பெறுவார்கள். இவர்களில் ஒருவர் முதன்மை பாடகராக இருப்பார். ஒருவர் தபலா வாசிக்க, மற்றவர் டோல் இன்னொருவர் டோலக் வாசிக்க மீதம் எல்லோரும் கைத்தட்டல் மூலம் தாளத்தில் சேர்ந்து கொள்வார்கள். முதன்மைப் பாடகரோ அல்லது இன்னொருவரோ ஹார்மோனியத்தை வாசிப்பார்கள். பாடல்கள் பெரும்பாலும் தலைமைப் பாடகரின் ஒன்றிரண்டு வரி ராக அறிமுகத்துடன் தொடங்கும், பின்னர் மெதுவாக தபலா, டோலக் போன்ற வாத்தியங்கள் சேர, கூடவே கைத்தாளங்களும் இணைந்து கொள்ளும். பின்னர் வழக்கமான சாஸ்தீரிய சங்கீதத்தைப் போல ராக ஆலாபனை இடம் பெறும், இந்த இடத்தில் ஒரு முக்கியமான வித்தியாசம், பின்னணிப் பாடகர்களும் ஆலாபனையில் பங்கெடுப்பார்கள்.

பொதுவாக பிற சங்கீதங்களில் பாடகர்கள் தங்கள் குரல்வளையை மாத்திரமே பயன்படுத்தி ஸ்வரஙக்ளைப் பாடுவார்கள். ஆனால் கவ்வாலியில் பாடகர்களில் நெஞ்சுக்கூட்டிலிருந்து காற்றை இயக்கிப் பாடுவார்கள், இதன்மூலம் இவர்களால் அதிக அதிர்வெண்களுக்குத் தாவமுடிகிறது. ஆனால் என்ன இருந்தாலும் நெஞ்சுக்கூட்டின் அதிர்வைக் கட்டுப்படுத்துவது குரலைக் கட்டுப்படுத்துவதைக் காட்டிலும் சிக்கலாதுதானே, அதனால் கவ்வாலியில் சில நேரம் அபஸ்வரங்கள் தலைகாட்டும். ஆனால் இது சூ·பி உலகில் ஒத்துக் கொள்ளப்பட்டதுதான். அவர்கள் சங்கீத்ததை தங்கள் இருதயத்திற்கு மிக அண்மையானதாகக் கருதுகிறார்கள்.

கவ்வாலிக்கு எனக்கு அறிமுகம் கிடைத்தது சிறிய வயதில் தார்வார்ட்-குல்பர்க்கா வானொலியிலிருந்து வரும் இரவு எட்டுமணி நிகழ்ச்சிகள் மூலமாகத்தான் (இதில்தான் நான் மராத்திக்காரர்களின் லாவணியைப் பற்றியும் தெரிந்து கொண்டேன்). அண்டை அயலாரின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே (இது என்னடா ஒரே அபஸ்வரமா இருக்கு, இத்தப்போய் கேட்டுண்டு இருக்கே) என் அப்பா தவறாது கவ்வாலி கேட்பார். அப்பொழுது ஓரளவுக்கு இதன்மீது கவர்ச்சி இருந்தது. பின்னர் நுஸ்ரத் அலிக் ஹானின் பாடல்களைக் கேட்டபின் இதை இரசிக்கத் தொடங்கினேன். இப்பொழுது ஸ்ப்ரி சகோதர்கள், ஹான் உட்பட கொஞ்சம் கவ்வாலியும் என் தொகுப்பில் இருக்கிறது. இந்தோரில் (மத்திய பிரதேஷ்) ஒரு வருடம் வசித்த பொழுது இரண்டு கச்சேரிகளை நேரில் கேட்டிருக்கிறேன்.

இன்றைக்கு என்னுடைய தெரிவாக வரும் பாடல் நுஸ்ரத்தின் “ஷாப்பாஷ்” இசைத் தொகுப்பில் இருக்கிறது. பாடலில் நுஸ்ரத்தின் கூடவே அவர் சகோதரரும் இருக்கிறார். நுஸ்ரத்தின் மறைவிற்குப் பிறகு அவரது மருமகன் இப்பொழுது கவ்வாலி சங்கீதத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். நுஸ்ரத்திற்கு ஆரம்பத்தில் கவ்வாலி பாடுவதில் ஆர்வமே இருந்ததில்லை என்பார்கள். பின்னர் ஒருமுறை இந்தியாவில் ஆஜ்மீரி தர்ஹாவிற்குச் சென்று அங்கே சூஃபி இசையைக் கேட்டபிறகுதான் அவருக்கு இது நம்முடைய சங்கீதம் என்ற உணர்வு வந்ததாம். இறந்து போவதற்கு சில வருடங்கள் முன்பாக நுஸ்ரத் பீட்டர் கப்ரியேல், எர்த் ட்ரைப், மைக்கேல் ப்ரூக் போன்றவர்களுடன் இணைந்து பாட ஆரம்பித்திருந்தார். இவரது அகால மறைவு கவ்வாலியை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் முயற்சியை நிறுத்தியிருக்கிறது.

நுஸ்ரத்தின் பல பாடல்கள் திரைப்படங்களில் திருடப்பட்டிருக்கின்றன. மிகமிகப் பிரபலமான “தூ சீஸ்படிஹே மஸ்த் மஸ்த்” பாடல் நுஸ்ரத்தின் “தம் மஸ்த் கலந்தர் மஸ்த் மஸ்த்”-தின் திருட்டு வடிவம். அதே போல தமிழில் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் சிற்பி சார் நுஸ்ரத்திடமிருந்து சுட்டதுதான் “மாமா நீ மாமா, புத்தம்புதுப் பாட்டு” என்று கார்த்திக்கும் கவுண்டமணியும் பாடும் பாடல். ஆனால் நுஸ்ரத்தின் குரலைக் கேட்டவர்களுக்கு மனோ போன்றவர்கள் இதைப் பாட முயற்சிப்பதன் அனர்த்தம் புரியும்.